இதிகாச / புராண காதலர்கள்

இதிகாச / புராண காதலர்கள்

இதிகாச காதல் 

ஓரக் கண்ணால் ஒரு சேதி! 

சீதையை திருமணம் செய்யும் முன், ராமன் வில்லொடித்த சத்தம் மிதிலை நகரெங்கும் கேட்டது.

அப்போது சீதை மனம் துடித்தது.'ஒடித்தவனும், தான் கண்ட ராமனும் வேறு வேறானவனர்களாக இருந்து விட்டால் ' என்று எண்ணியதும்  ஒரு கணம் மூச்சற்று  போனாள். பதற்றம் தொற்றிக் கொண்டது. நீலமாலை என்னும் சேடிப்  பெண் சீதையிடம் ஓடி வந்தாள்.

மகிழ்ச்சியில் ஆடிப் பாடினாள். வில்லொடித்த  தசரதன் மைந்தனைப் புகழ்ந்தார். "அவர் பெயர் ராமன்' என்று அவள் சொன்னதும் தான் சீதைக்கு போன உயிர் திரும்பி வந்தது.

அவள் சொன்னாலும், தானே நேரில் ராமனைக் கண்டால் தான் சந்தேகம் தீரும் என்ற எண்ணம் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

ஆனால் அதற்கான சந்தர்ப்பம் மணமேடையில் தான் வாய்த்தது. மணமகளாக வந்த சீதை மணமகனின் அருகில் அமர்ந்தாள்.

வளையலை சரி செய்வது போல, ஓரக்கண்ணால் பார்த்தாள். வெட்கம் தொற்றிக் கொண்டது. ராமனும் தன் அன்பை வெளிப்படுத்தினார். அப்போது சீதை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

- ஆர்.ஜெயலெட்சுமி,

திருநெல்வேலி டவுண்.

-------------- 

காதலின் அத்வைதம்

மன்மதன் என்ற சொல்லுக்கு மனதிலிருந்து பிறந்தவன் என்று பொருள்படும். இவனது மனைவி ரதிதேவிதான் உலகிலேயே மிகவும் அழகான பெண் என்றும் கனிந்த காதலின் சின்னமாக திகழ்வதும் அவனே என்றும் போற்றப்படுகிறாள்.

மன்மதன்  தன் கைகளில் மணக்கும் மலர் அம்புகள் மற்றும் கரும்பு வில்லை ஏந்தியவாறு வசந்த காலத்தில் தென்றல் தேரேறி காதலி ரதியுடன் வலம் வரும்போது   அங்கே சிவபெருமான் பெருந்தவம் செய்து கொண்டிருக்கிறார். தவம் செய்த சிவபெருமான் மனதில் காம உணர்வை ஏற்படுத்த மன்மதன் சிவபெருமான் மீது கணைத்தொடுக்கிறார். தவம் கலைந்த சிவபெருமான் கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறக்க மன்மதன் எரிந்து சாம்பலாகிறார் அப்போது மன்மதனின் காதல் மனைவி இறைவனிடம் முறையிட அவளது கண்களுக்கு மட்டுமே புலப்படுமாறு காமனை சிவபெருமான் உயிர்ப்பிக்கிறார் 

அதாவது உடல்ரீதியான காமத்தை எரித்து மனரீதியான உள்ளன்பையும் காதலையும் உயிர்ப்பிக்கும் விதமாக உடலற்ற ரூபமாக மன்மதன் திகழ்கிறார். இவ்வாறு முறைப்படுத்தப்பட்ட காதலை அழகாக உரைக்கிறது நமது இதிகாசங்கள். 

காமம் இல்லா காதல் புனிதமானது என்பது நிதர்சனம். இதுவே காதல் அத்வைதமும் கூட.  அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.  

- அன்புக்கரசி பாலசுப்ரமணியன்,

மேடவாக்கம்.

 -------------- 

இதிகாச புராண காதலர்கள் சிலர்

* கண்ணன் ராதை காதல் தெய்வீக காதல். புகழ் பெற்ற காதல். பிருந்தாவன், மதுரா பகுதிகளில் கண்ணன் ராதை காதலை சொல்லும் விதத்தில், ஹோலி பண்டிகை 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக பாடல்கள் பாடுகின்றனர். 

* மிதிலை நகரில் கண்களால் நோக்கி காதலிக்க தொடங்கினர் அண்ணல் ராமனும், சீதையும்.

* வேடனாய் வந்து வள்ளியை காதலித்தான் முருகன்.

* அன்னப்பறவையை தூது அனுப்பி காதல் செய்தனர் நளனும், தமயந்தியும்.

* துவாபர யுகத்தில் அர்ஜுனன் – சுபத்திரை; அபிமன்யு - வத்சலா காதல், உறவு முறையில் பிறந்தது.

* பாண்டவர்களில் ஒருவனான பீமனும், அசுரப் பெண்மணி இடும்பியும் காதலித்து, கடோத்கஜன் என்ற மகனை பெற்றனர்.

- எஸ். ராஜம், 

திருச்சி

 -------------- 

புராண காதல்

காதலின் கடவுளர்!

புராணக்கதைகளில் ரதி மன்மதன் தம்பதியர்   வெகுவாக பேசப்படுவார்கள்.

அசுரர்களை அழிக்க சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் ஒரு மகன் பிறக்க தேவர்கள் வேண்டுதலுக்கு மன்மதன் என்கிற காமன் ஈஸ்வரன் மேல் கரும்பு வில்லில் மலர் கணை ஏற்றி விட தவத்தில் இருந்தவர்  நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து விடுகிறார்.ரதியின் வேண்டுகோளுக்கிணங்க அவள் கண்களுக்கு மட்டும  தெரியும்படி உயிர்பித்து விடுகிறார்.

திருமால் கிருஷ்ணராக அவதரிக்கும்போது மன்மதன் ப்ரத்யுமனன் என்ற பெயரில் மகனாகவும் ரதி மாயாதேவியாக  மன்மதனை மணப்பதாக புராணம். 

இந்நிகழ்ச்சி  காமன் பண்டிகை காமன் தகனம் என்று மாசி மாதத்தில் தமிழகத்தில் பல இடங்களில்  கொண்டாடப்படுகிறது.வட இந்தியாவில்  இப்பண்டிகையில் ஒருவருக்கொருவர்  கலர் பொடிகளைப் பூசிக் கொண்டாடுகிறார்கள். 

காதலின் கடவுளாக வர்ணிக்கப்படும் மன்மதன்  ரதியை வணங்கி வருவதால்  சந்தோஷமான மணவாழ்வு அமையும்  என்று கூறுவார்கள்.

- ஷெண்பகம் பாண்டியன், 

சத்துவாச்சாரி.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com