இதைச் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பிரபஞ்சமே அழிந்துவிடும்...

அத்தியாயம் - 9
இதைச் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பிரபஞ்சமே அழிந்துவிடும்...

கடவுள் துகள்

ஜெனிவா நகரில் செர்ன் (CERN) அறிவியல் ஆய்வு மையத்துக்கு சென்றிருந்தேன்.

ஜெனிவாவில் பொதுபோக்குவரத்து இலவசம். செர்ன் ஊருக்கு கடைசி பஸ் நிலையம். ‘செர்ன்’ என்ற பெயரிலேயே பஸ் நிலையம் உள்ளது. பேருந்தில் ஏறி அங்கே போய் இறங்கியதும் உருண்டையான ஒரு கோளமும், அதன் அருகே மிக சாதாரணமான கட்டிடமும் வரவேற்றது. உலக நாடுகளின் கொடிகள் வெளியே பறந்துகொண்டிருந்தன.

செர்ன் வாசலில் நடராஜர் சிலை இருக்கும் என சொல்லியிருந்தார்கள். ஆனால், அப்படி எதுவும் காணோம். அது மிகப்பெரிய கேம்பஸ் எனவும், நட்ராஜர் சிலை வேறு இடத்தில் உள்ளது எனவும் பிறகு தெரிந்துக்கொண்டேன்.

உள்ளே போனதும் சுற்றுலாவுக்கு பதிவு செய்துகொள்ளவேண்டும் எனவும், கைடு ஒருவர் செர்ன் அறிவியல் ஆய்வு மையம் முழுக்க உங்களை அழைத்து சென்று காட்டுவார் எனவும் சொன்னார்கள். கட்டணம் இல்லை. ஆனால், கூட்டத்தை பொறுத்து சிலமணிநேரம் காத்திருக்கவேண்டும். ஆன்லைன் பதிவு எல்லாம் கிடையாது. அங்கே போய்தான் பதிவு செய்துகொள்ளவேண்டும். இரண்டு மணிநேரம் ஆகும் என்றார்கள். "நானே சுற்றி பார்த்துக்கறேன்" என சொல்லி உள்ளே போனேன்.

வாசலில் கிப்ட் ஷாப் வைத்து "ஐ லவ் செர்ன்" என சொல்லி டி-சர்ட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். செர்ன் என்பது சர்வதேச நாடுகளின் அணு ஆராய்ச்சி மையம். 118 நாடுகளுடன் பார்ட்னர்ஷிப்பில் உருவானது.

‘செர்ன்’ என்பது அடிப்படையில் துகள் ஆராய்ச்சி நிறுவனம். செர்னுக்கு கீழே பூமியில் 27 கிமி நீள குழாய் ஒன்று உள்ளது. அதில் ஒளிவேகத்தில் ப்ரோடான்களை செலுத்துவார்கள். பூமியில் உள்ள அனைத்துமே ப்ரோடான்களால் ஆனவைதான். ப்ரோட்டான்கள் ஒளிவேகத்தில் ஒன்றுடன், ஒன்று மோதி வெடிக்கையில் உருவாகும் துகள்களை ஆராய்ச்சி செய்வதுதான் இதன் நோக்கம்.

இப்படி கிடைத்த துகள் ஒன்றுதான் "கடவுள் துகள்" எனும் "ஹிக்ஸ் போஸான் துகள்". பெருவெடிப்பின் சமயம் உருவானதாக கருதப்படுவதால் இந்த பெயர். அதன்பின் செர்னில் தான் மீண்டும் உருவாகியுள்ளது. ஆய்வுக்கு மின்சாரம் ஏகப்பட்ட அளவில் தேவைப்படுகிறது. ஜெனிவா நகரின் ஒட்டுமொத்த மின் தேவை எத்தனையோ, அது செர்னுக்கும் தேவைப்படுகிறது. அத்தனை மின்சாரத்துக்கு எங்கே போக? ஜெனிவா, பிரான்சு நாட்டின் எல்லையோரம் இருப்பதால், செர்னுக்கு மின்சாரம் கொடுக்கும் முழு பொறுப்பும் பிரான்சினுடையது. பிரான்சில் அணு உலை மின்சாரம் இருப்பதால் மிந்தட்டுப்பாடு இல்லை.

சரி, இந்த கடவுள் துகளால் என்ன பலன்?

நாம் காணும் பிரபஞ்சம் வெறும் 0.5% தானாம். நமக்கு கண்ணுக்கு தெரியாத சக்தி "டார்க் எனெர்ஜி" (கரும் சக்தி) என அழைக்கபடுகிறது. அது பிரபஞ்சத்தில் உள்ள சக்தியில் 69% ஆம். கரும் பொருள் பிரபஞ்சத்தில் 30%. நம்மால் கண்ணால் காணக்கூடிய பொருட்கள் எல்லாமே ஒளியுடன் ரியாக்ட் செய்வதால் (பிரதிபலிப்பு) நம்மால் அவற்றை காணமுடிகிறது. ஆனால் கரும் சக்தியும், கரும் பொருளும் ஒளியுடன் எந்த வினையும் புரிவதில்லை என்பதால் நம்மால் அவற்றை காணவோ, உணரவோ முடியாது.

இந்த கரும் சக்தி, கரும் பொருளின் ஆற்றலை பயன்படுத்த ஹிக்ஸ் போஸான் உதவும் என்கிறார்கள். சரியாக இதை பயன்படுத்தவில்லை என்றால் பிரபஞ்சமே அழிந்துவிடும் எனவும் ஒரு பீதி உண்டு. நாம் காணும் அனைத்தின் மூலமும் ஹிக்ஸ் போசான் என்பதால் தான் அது கடவுள் துகளாம்..

செர்னை சுற்றிபார்க்கையில் செர்னில் இருந்து டேட்டா இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் நேரடியாக பகிரப்படுவதை மேப்பில் காட்டினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. சும்மா ஆராய்ச்சி என்பதுடன் நிற்காமல் பல உலகநாட்டு மாணவர்களுக்கு பார்ட்டிக்கிள் பிசிக்ஸை எல்லாம் கற்றுக்கொடுக்கிறார்கள்.

உள்ளே டூரிஸ்டுகளுக்கு ஒரு நல்ல உணவகம் இருந்து ஹிக்ஸ் போசான் சாண்ட்விச் என்பது மாதிரி விற்றால் நல்லா கல்லா கட்டலாம். செர்ன் நிர்வாகத்தினர் கவனத்துக்கு.

ஆக, செர்ன் போனால் அந்த டூர் வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளவும். காலை எட்டு மணிக்கே அங்கே இருந்தால் தான் சீக்கிரம் டூர் வாய்ப்பு கிடைக்கும். 10, 11 மணிக்கு போனால் டூரிஸ்டுகள் சகட்டுமேனிக்கு குவிந்துவிடுவார்கள்.

செர்ன் சுற்றிபார்த்துவிட்டு இரவு உணவுக்கு பிரான்ஸ் சென்றேன். என்னடா ஸ்விட்சர்லாந்தில் இருந்து பிரான்சா என குழம்பவேண்டாம். ஜெனிவா நகரம் பிரெஞ்சு நாட்டின் எல்லையோரத்தில்தான் உள்ளது. நகர மெட்ரோ ரயிலை பிடித்தால் பிரான்சுக்குள் சென்றுவிடலாம். பிரான்ஸின் அன்னமாஸே நகரம் ஜெனிவாவின் அண்டை நகரம். பெரியதாக எந்த விசா கட்டுபாடுகளும் கிடையாது. 

அன்னமாஸி பிரான்ஸில் வசித்தபடி ஜெனிவாவுக்கு வந்து வேலை செய்துவிட்டு திரும்பும் ஸ்விஸ் மக்கள் உண்டு. அன்னமாஸி நகரில் ஒரு இலங்கை தமிழரின் உணவகத்துக்கு சென்று இந்திய உணவுகளை உண்டு மகிழ்ந்தேன். அவர் பிரான்ஸில் பிறந்தவராம். பெற்றோர் குடியேறியவர்கள். நன்றாக பேசினார்

 மறுநாள் கிரேக்கம் செல்லவேண்டியிருந்ததால் இரவு நேரத்துடன் படுத்து உறங்கி காலை ஆறுமணிக்கு கிரேக்கம் செல்லும் விமானத்தை பிடித்தேன். கிரேக்கத்தின் ஏதென்ஸை நோக்கி விமானம் பயணித்தது...

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com