இந்திய கனடா உறவு – வருவாய் குறையும் அபாயம்!

இந்திய கனடா உறவு – வருவாய் குறையும் அபாயம்!

ந்தியா, கனடா உறவில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சிக்கலினால், கனடாவின் தூதுவரக அலுவலர்களில் 41 நபர்களைக் குறைத்துக் கொள்ள வலியுறுத்தியது இந்தியா. தூதரக நபர்களைக் குறைத்துக் கொண்ட கனடா, பெங்களூர், சண்டிகர், மும்பாய் நகரங்களில், விசா வழங்கும் சேவையை நிறுத்தி வைத்துள்ளது. கனடா நாட்டின் விசா பெறுவதற்கு, இந்தியர்கள் புது டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தை அணுக வேண்டும்.

கனடா விசா கேட்டு 38000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், போதுமான நபர்கள் பணியில் இல்லாத காரணத்தால், இந்த வருட முடிவிற்குள், 20000 விசா விண்ணப்பம் மட்டுமே பரிசீலனை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கிறது கனடா அரசின் பத்திரிகைச் செய்தி. இதனால், அதிகமாகப் பாதிக்கப் படுபவர்கள், மேல் படிப்பிற்காக கனடா செல்ல விழையும், இந்திய மாணவர்கள்.

2022ஆம் வருடம், மேல் படிப்பிற்காக கனடா சென்ற இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 2,25,000. இவர்கள் பெரும்பாலும், ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் என்று மூன்று குழுக்களாகச் செல்கிறார்கள். கனடா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே, தவிர குறையவில்லை.

அடுத்த வருடம் ஜனவரியில் கல்லூரியில் சேருவதற்காக குறைந்த பட்சம் 75,000 மாணவர்கள் கனடா விசாவிற்கு முயற்சி செய்வார்கள். விசா கிடைக்காத காரணத்தாலும், இந்திய கனடா உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தாலும், பத்தாயிரம் மாணவர்கள் ஜனவரியில் மேல் படிப்பு படிக்கச் செல்ல முடியவில்லை என்ற நிலைமை ஏற்பட்டால், கனடா நாட்டிற்கு, இந்திய மாணவர்களால் கிடைகின்ற வருவாயில் பெருமளவு பாதிப்பு ஏற்படும்.

மேற்படிப்பிற்கு, கனடாவில் ஒரு இந்திய மாணவனின் சராசரி செலவு 16000 கனடா டாலர்கள் என்கிறது ஆய்வு. இதைத் தவிர மடிக்கணினி, தங்குமிடத்திற்கான செலவு, விமானக் கட்டணம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு மாணவன் செய்கின்ற மொத்த செலவு 70,000 கனடா டாலர்கள். 10,000 இந்திய மாணவர்கள் மேல் படிப்பிற்குச் செல்லவில்லை என்றால், அதனால் ஏற்படுகின்ற வருவாய் இழப்பு 700 மில்லியன் டாலர்கள். இதைப் போன்ற நிலைமை மே மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் ஏற்பட்டால், ஒரு வருடத்திற்கான வருவாய் இழப்பு 2100 மில்லியன் டாலராக உயரும்.

கனடாவின் பல பல்கலைக் கழகங்கள், இந்திய மாணவர்களை நம்பி இருக்கின்றன. மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அது பல பல்கலைக் கழகங்களின் வருவாயில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பெரும்பாலான இந்திய மாணவர்கள், கனடாவில் பகுதி நேர வேலை செய்து பொருளீட்டுகிறார்கள். கனடாவில், மக்கள் தொகை குறைவாக உள்ளதால், அவர்களுக்கு பணியிடங்களை நிரப்ப போதுமான ஆட்கள் இல்லை. அதனால், அன்னிய நாட்டிலிருந்து வந்து மேல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, வாரத்தில் 20 மணி நேரங்கள் வேலை செய்யலாம் என்று அரசு அனுமதி அளித்திருந்தது. அப்படியும் பணிகள் செய்ய போதிய நபர்கள் கிடைக்காத காரணத்தால் கனடா அரசு, மாணவர்கள் வேலை நேரத்தை இரட்டிப்பாக்கி, வாரத்தில் 40 மணி நேரங்கள் பணி செய்ய அனுமதி வழங்கியது. இந்த நிலையில், மாணவர்கள் வரத்து குறைந்தால், வேலை செய்வதற்கு போதிய நபர்கள் கிடைக்காமல், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம்.

நிலைமை, சீக்கிரம் சகஜ நிலைக்குத் திரும்புவது, இரு நாடுகளுக்குமான நல்லுறவு நீடிப்பதில் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com