சுதந்திர இந்தியா தன்னுடைய 77வது சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடவுள்ளது. நூற்றாண்டை நோக்கி செல்லும் இந்தியா சுதந்திர தினத்திற்காக லட்சகணக்கான தியாகிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்தான் 18 வயதே நிரம்பிய குதிராம் போஸ்.
நாட்டின் சுதந்திரத்துக்காக லட்சகணக்கான வீரர்கள் உயிர் தியாகம் செய்திருந்தபோதிலும், அவர்களில் குதிராம் போஸ் மட்டும் தனித்துவமான தெரிவதற்கு காரணம், அவரின் வயதுதான். 18 வயது நிரம்பிய இளைஞனின் கனவு என்பது கற்பனைக்குள் எட்ட முடியாதவை. ஆனால், அந்த வயதில் நாட்டின் விடுதலையை தன் வாழ்நாள் கனவாக சுமந்திருந்தான் குதிராம் போஸ்.
சுதந்திரத்திற்காக போராடிய குடும்பம்
ஒன்றுப்பட்ட வங்காளத்தின் மிதினாப்பூர் மாவட்டம் ஹபிப்பூர் கிராமத்தில் 1889ம் ஆண்டு பிறந்தவர் குதிராம் போஸ். அவரின் குடும்பமே நாட்டின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த குதிராம் போஸ்க்கு சிறுவயதிலேயே சுதந்திரா தியாகம் பற்றிக்கொண்டது. இதனையடுத்து வங்கத்தில் நாட்டின் விடுதலைக்காக தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருந்த அரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் சொற்பொழிவுகளை 13 வயதில் இருந்து கேட்டு வளர்ந்தார் குதிராம் போஸ்.
இதன்பின்னர் 1904ம் ஆண்டு மிதனாப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்த குதிராம் போஸ் நாட்டு விடுதலைக்காக தானும் ஏதாவது செய்யவேண்டும் என உறுதிகொண்டார்.அப்போதுதான் அவருக்கு சத்தியேந்திரநாத் போஸின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்திருந்த புரட்சியாளர்களின் அறிமுகமும் கிடைத்தது. பின்னர் யுகாந்தர் என்ற விடுதலை போராட்ட இயக்கத்தில் இணைந்த குதிராம் போஸ், அப்போது வங்கத்தில் பரவி இருந்த காலரா, மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்துவந்தார்.
இதற்கிடையில் 1905ம் ஆண்டு வங்காளத்தை இரண்டாக பிரிக்க கர்சன் பிரபு முடிவு செய்தார். இந்த விஷயம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எல்லா இடங்களிலும் ஆங்கிலேயேர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அந்த நேரத்தில் சுவாமி விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத் ‘ஜுகாந்தர்' நாளிதழில் எழுதிய கட்டுரையை, தேச துரோகமாக ஆங்கிலேயே அரசு கருதியது. இதனையடுத்து பூபேந்திரநாத் தத்யின் அச்சகம் ஆங்கிலேயே அரசால் கைப்பற்றப்பட்டது. அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையை மாஜிஸ்ட்ரேட் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட் வழங்கினார்.
பூபேந்திரநாத் தத்யின் கைது விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இது மட்டுமின்றி, வந்தே மாதரம் முழக்கத்தை எழுப்பிய 15 வயது மாணவருக்கு 15 பிரம்படிகள் என்ற கடுமையான தண்டனையை கல்கத்தா பிரசிடென்சி மாஜிஸ்ட்ரேட் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட் வழங்கினார். இந்நிலையில், 1906ம் ஆண்டு மேதினாப்பூரில் நடைபெற்ற கண்காட்சியில் சத்யேந்திரநாத் போஸ் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து வந்தே மாதரம் என்று அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை அச்சிட்டார். இந்த பிரசுரங்களை கண்காட்சியில் விநியோகிக்கும் பொறுப்பு குதிராம் போஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த குதிராம் போஸை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, அதே கண்காட்சியில் சுற்றிவந்த சத்யேந்திரநாத் போஸ் ஆங்கிலேயே காவலர்களிடம் ஏன் நீதிபதியின் மகனை பிடித்துவைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனை கேட்டவுடன் குதிராம் போஸை பிடித்திருந்த காவலர்களின் பிடி தளர்ந்தது. இந்த நேரத்தைதான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குதிராம், காவலரின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதன்பின்னர், நாட்டின் விடுதலைக்காக போராடி வந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கிவந்த, கல்கத்தா பிரசிடென்சி மாஜிஸ்ட்ரேட் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட் கொல்லும் பொறுப்பு குதிராம் போஸ்க்கும்,பிரஃபுல்லா சாகியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏற்கனவே தாக்குதலில் இருந்து தப்பித்த டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட்டை, இந்த முறை கொல்வது என முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து அவரது வாகனம் மீது குதிராம் போசும் அவரது நண்பர் சாஹியும் குண்டு வீசினர். அந்த வாகனத்தில் மாஜிஸ்திரேட் வரவில்லை. ஆனால் அதில் பயணம் செய்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். இந்த அதிரடித் தாக்குதல் ஆங்கிலேயரை உலுக்கிவிட்டது. மிகப் பெரிய அளவில் தேடுதல் வேட்டை தொடங்கியது. இவர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு 5 ஆயிரம் ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்டது.
இறுதியில் குதிராம் போஸ் பிடிபட்டார். அதிகாரிகளிடம் தான் குண்டு வீசிய காரணத்தைக் கூறியதோடு கிங்ஸ்போர்டின் குடும்பத்தினர் இறந்தது குறித்து வருத்தமும் தெரிவித்தார். விசாரணை நடைபெற்றது. தேச துரோக குற்றத்துக்காக இவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் குதிராம் போஸ் சிரித்தார். நீ எதையாவது சொல்ல விரும்புகிறாயா என்று நீதிபதி கேட்டதற்கு, வேண்டுமானால் உங்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறேன் என்று கூறினாராம்.
1908-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருக்கு வயது 18தான். கையில் பகவத் கீதையுடனும் வந்தே மாதரம் முழக்கத்துடனும் குதிராம் போஸ் எனும் மாவீரனின் உயிர் பிரிந்தது. அப்போது சிறைச்சாலைக்கு வெளியே இருந்த மக்கள் குதிராம் போஸ்க்கு வந்தே மாதரம் பாடலை பாடி பிரியாவிடையளித்தனர். நாட்டின் விடுதலைக்காக மிக சிறுவயதில் உயிர் தியாகம் செய்த குதிராம் போஸ் மறைந்து இன்றோடு 115 ஆண்டுகள் நிறைவடைகிறது.