இந்தியாவின் 7 மிகப்பெரிய புலிகள் காப்பகங்கள்!

இந்தியாவின் 7 மிகப்பெரிய புலிகள் காப்பகங்கள்!

இந்திய வனப்பகுதியின் சின்னமாகப் பார்க்கப்படும் கம்பீரமான வங்காளப் புலிகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சரணாலயங்கள் குறித்து இந்தியா மகத்தான பெருமை கொள்கிறது. இந்தப் பதிவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஏழு புலிகள் காப்பகங்கள் பற்றிய விரிவான தகவல்களைக் காணலாம்.

1. நாகார்ஜூன்சாகர் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்: 

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அமைந்துள்ள இந்த மிகப்பெரிய காப்பகம் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியது. இதன் பரப்பளவு தோராயமாக 2595 சதுர கிலோ மீட்டர்களாகும். இப்பகுதியானது மலைகள், பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளால் வகைப்படுத்தப்படுகிறது. இது புலிகளுக்கு மட்டுமின்றி சிறுத்தைகள், புள்ளி மான்கள் போன்ற பிற வனவிலங்குகளுக்கும் வாழ்விடமாகத் திகழ்கிறது. இதுதான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் மிகப்பெரிய புலிகள் காப்பகம். 

2. அம்ராபாத் புலிகள் காப்பகம்: 

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள அம்ராபாத் புலிகள் காப்பகம் சுமார் 2166 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இவ்விடம் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள், புல்வெளிகள் மற்றும் பாறை நிலப்பரப்புடன் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ளது. இந்த காப்பகத்தில் புலிகள் ஆரோக்கியமாக வசித்து வருகின்றன. மேலும் அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாக்க தொடர்ந்து பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகள் தவிர இந்திய சிறுத்தைகள், இந்தியக் காட்டெருமைகளுக்கு இந்தக் காப்பகம் தங்குமிடமாக உள்ளது. 

3. நம்தபா புலிகள் காப்பகம்: 

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள நம்தபா புலிகள் காப்பகம் சுமார் 1807 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு அழகிய பல்லுயிர்ப் பெருக்க இடமாகும். புலிகள், பனிச் சிறுத்தைகள் மற்றும் பல அழிந்து வரும் உயிரினங்களுக்கு சிறந்த வாழ்விடத்தை வழங்கும் பசுமையான இடமாக இது திகழ்கிறது. இந்த இடம் சவாலான நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால் இந்தியாவில் மிகக் குறைவாக ஆராயப்பட்ட புலிகள் காப்பகங்களில் ஒன்றாக உள்ளது. 

4. சுந்தர்பன் புலிகள் காப்பகம்: 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுந்தர்பன் டெல்டாவில் பரவியுள்ள சுந்தர்பன் புலிகள் காப்பகம், யுனெஸ்கோவின் மிகச்சிறந்த உலக பராமரிப்பு தளம் என்ற புகழ்பெற்ற புலிகள் வாழ்விடங்களில் ஒன்றாகும். இது ஏறக்குறைய 1699 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு, தனித்துவமான சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புக்கு பிரபலமானது. இங்குள்ள புலிகள் உப்பு நீரில் நீந்தவும் வேட்டையாடவும் பழகிக்கொண்டன. இந்த சுந்தரவனக் காடுகளில் உப்பு நீர் முதலைகள், புள்ளி மான்கள் மற்றும் பல பறவை இனங்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகளும் உள்ளன. 

5. மேகாட் புலிகள் காப்பகம்: 

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மேகாட் புலிகள் காப்பகம் சுமார் 1500 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது அடர்ந்த காடுகள் மற்றும் புல்வெளிகள் கொண்ட மலைப் பாங்கான நிலப்பரப்பை உள்ளடக்கியது. இந்தக் காப்பகம் புலிகள், இந்திய சிறுத்தைகள், இந்திய காட்டு நாய்கள் மற்றும் பல உயிரினங்களுக்கு பொருத்தமான வாழ்விடமாக இருக்கிறது. இந்த இடம் அதன் வளமான பல்லுயிர் மற்றும் சமூக அடிப்படையிலான பாதுகாப்பிற்கு புகழ்பெற்றதாகும். 

6. சத்புரா புலிகள் காப்பகம்: 

இந்த காப்பகம் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1339 சதுர கிலோமீட்டரில் கரடு முரடான நிலப்பரப்பு, ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் அடர்ந்த காடுகளைக் கொண்டுள்ளது. இங்கு புலிகள் சிறுத்தைப் புலிகள், காட்டுப்பன்றிகள் மற்றும் இந்திய கவுர் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அதன் தனித்துவமான நிலப்பரப்பிற்காகவே வசிக்கின்றன. இங்கிருக்கும் சுற்றுச்சூழல் பயணிகளின் வருகையை அதிகம் ஊக்குவிப்பதால், பார்வையாளர்களுக்கு இப்பகுதியின் இயற்கை அழகை அனுபவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

7. இந்திராவதி புலிகள் காப்பகம்: 

சுமார் 1258 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மைக்கல் மலைத்தொடரில் (Maikal Hills) பரவியுள்ள இந்த புலிகள் காப்பகம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் குறைவாக ஆராயப்பட்ட இடங்களில் ஒன்றாக இருக்கிறது. மத்திய இந்தியாவின் ஒரு முக்கியமான பாதுகாப்பு பகுதியாக இருக்கும் இவ்விடத்தில் புலிகள், சிறுத்தைப் புலிகள், சோம்பல் கரடிகள் மற்றும் பல வகையான பறவைகள் இருக்கின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com