வானவியல் மற்றும் அணுவியல் துறையில் அடிப்படை உண்மைகளை தன் கண்டுபிடிப்புகள் மூலம் எளிமையாக அறிந்து கொள்ள வழி வகுத்தவர். "சாகா" ஈகுவேசன் எனும் புகழ்பெற்ற ஜோதிட கலையில் உலவும் சமன்பாட்டை உருவாக்கியவர். அஸ்ட்ரானமியின் டார்வின் என்றழைக்கப்படும் விஞ்ஞானி மேக்நாத் சாகா 1893ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி அன்றைய பிரிக்கப்படாத பங்களாதேஷ் டாக்காவின் அருகே உள்ள சியாத்தாலி என்ற கிராமத்தில் பிறந்தார். "மேக்நாத் "என்றால் " தொடர் இடி முழக்கம் " என்று பொருள். இவர் ஒரு புயல் நேரத்தில் பிறந்தாராம். பலசரக்கு கடை நடத்திய ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்.
தன் கிராமத்தில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று ஆரம்ப கல்வியை முடித்தார். தனது 8 ம் வகுப்பில் டாக்கா மாகாணத்தில் முதல் மாணவராக தேர்வு பெற்றதால் அரசின் உபகாரச் சம்பளம் பெற்று டாக்கா சென்று உயர் படிப்பை படித்து கல்லூரியில் சேர்ந்தார். அந்த நேரத்தில்தான் பிரிட்டிஷ் அரசு வங்காளத்தை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வங்க பிரிவினை எதிர்ப்பு போராட்டம் கொழுந்து விட்டு எரிந்தது. கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1900களில் அவர் வெறும் காலில் ரோட்டில் நின்று கொண்டு வங்காளத்தை மத அடிப்படையில் பிரிட்டிஷார் பிரிப்பதற்கு எதிர்த்துப் போராடினார்.
இதனால் அவர் கல்லூரியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அதனால் ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து 1909 ம் ஆண்டில் கிழக்கு வங்காளத்தில் மெட்ரிக் தேர்வில் முதல் மாணவராக தேர்வானார். பின்னர் 1911 ல் கல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்து இந்தியாவின் முதல் ஆஸ்ட்ரோபிசிஸ்ட் ஆனார்.
அதன் பின்னர் எம். எஸ். சி கணிதப் படிப்பில் சேர்ந்து அதில் இரண்டாம் இடத்தில் தேர்வானார். முதல் இடத்தை பிடித்தவர் சத்தியோந்திர போஸ். நிதி துறை தேர்வு எழுத அனுமதி கேட்டார். ஆனால் அவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதால் அனுமதி மறுக்கப்பட்டது. தன் வாழ்நாளை கழிக்க டியூசன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் கணிதத் துறையில் பேராசிரியராக பணியாற்றினார். அங்கு அப்போது இருந்த துணை வேந்தர் முகர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயற்பியல் துறைக்கு மாறினார். அதில் 1918 ம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார்.
1921 ல் "தெர்மல் ஐனோசேஷன் " தியரியை கண்டுபிடித்தார். இதுதான் இந்தியாவில் அஸ்ட்ரோ பிரிக்ஸ் துறை உருவாக பின்நாளில் காரணமாயிற்று. இன்று வரை ஆஸ்ட்ரோ பிசிக்ஸில் விஞ்ஞானிகள் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளிக்கற்றைகளின் தன்மை குறித்து பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. ஒளியின் தன்மை, வெப்பநிலையை வைத்து பல புதிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது கண்டுப்பிடிப்புகளை கண்டு வியந்து நோபல் பரிசு-க்கு பல முறை பரிந்துரைக்கப்பட்டும் சாகாவுக்கு கிடைக்கவில்லை.
சாகாவின் நட்சத்திரங்கள் பற்றிய கட்டுரை "என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா" வில் வெளியாயிற்று. சர். ஆர்தர் எடிங்டன் சாகாவின் தியரி உலகின் தலைசிறந்த 12 வானவியல் ஆய்வு கட்டுரைகளில் ஒன்று என்று புகழ்ந்தார். இதன் பின்னர் சாகா இங்கிலாந்து சென்றார். அங்கிருந்து ஜெர்மனி சென்றார். அங்கே புகழ் பெற்ற இயற்பியல் மேதைகள் ஐன்ஸ்டீன், பிளாக் போன்றவர்களை சந்தித்தார். அங்கேயே ஜெர்மன் மொழியை நன்கு கற்றார். ஒளியின் அளவை கண்டறியும் (weight of sun light) கருவியை கண்டு பிடித்து உலகப்புகழ் பெற்றார். இதனால் கல்கத்தா யூனிவர்சிட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
பின்னர் 15 வருடங்கள் அலகாபாத் யூனிவர்சிட்டியில் பணிபுரிந்தார் 1938 ல் ராயல் சொசைட்டி உறுப்பினராக லண்டனில் சேர்ந்தார். இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் 1950 ல் டாக்டர் சாகா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அணு ஆராய்ச்சி துறை டைரக்டர் ஆனார்.மேகநாத் சாகாவின் சமூக சேவை ஆர்வம் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றது. மக்களுக்கு நேரடியாக தொண்டுகள் செய்ய 1952 இல் பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று எம். பி ஆனார்.
மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நாடாளுமன்றத்தில் அரசாங்கம் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்டார். மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கச் சொல்லி போராடினார். அணு ஆராய்ச்சியில் அரசாங்கம் ஒளிவு மறைவு இல்லாமல் மக்களுக்கு உண்மைகளை சொல்லவேண்டும் என வலியுறுத்தினார். அறிவியலை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்றார். அறிவியல், தொழில் துறை அனைத்திலும் பிற வல்லரசு நாடுகளின் அடிமையாக இல்லாமல் இந்தியா சுதந்திரமாக விளங்க வேண்டும் என்றார்.
சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். அவர் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தின் தலைமை கட்டடக் கலைஞராகவும் கருதப்படுகிறார்.