தந்தையர் தினக் கொண்டாட்டத்தின் சுவாரஸ்யமான வரலாறு!

தந்தையர் தினக் கொண்டாட்டத்தின் சுவாரஸ்யமான வரலாறு!
Published on

ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியாவில் தந்தையர் தினக்கொண்டாட்டம் என்றொரு விஷயம் இருந்த சுவடுகள் ஏதும் வரலாற்றில் இல்லை.

ஆக, தந்தையர்களுக்கு (அப்பா மட்டுமல்ல தாத்தா, பெரியப்பா, மாமா, சகோதரர் என்று அப்பா போலவே பொறுப்புடன் பாசம் காட்டும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்) என்று ஒரு குறிப்பிட்ட நாளை ஒதுக்கி அந்த தினத்தில் அவர்களைக் கெளரவப்படுத்தும் வகையில் ஒரு கொண்டாட்டத்தை நிகழ்த்த வேண்டும் என்று தந்தையர் தினக் கொண்டாட்டத்தை முதலில் தொடங்கியவர்கள் ஐரோப்பிய வாழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களே!

கத்தோலிக்க ஐரோப்பாவில் தந்தையர் தினக் கொண்டாட்டமானது 1508 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் 19 ஆம் நாளை ஆங்கிலேயர்கள் புனித ஜோசப்பை நினைவுகூறும் பண்டிகை நாளாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள், கத்தோலிக்க மரபிலும், தெற்கு ஐரோப்பிய பாரம்பரியத்திலும் புனித ஜோசப் என்பவர் “இயேசுவின் தந்தையாகக் கருதப்படுகிறார். எனவே அந்த நாளை அவர்கள் தந்தையரை கெளரவிக்கும் தினமாகக் கருதி கொண்டாடத்தகுந்த நாளாக அறிவித்தனர். பின்னர் இந்த கொண்டாட்டமானது ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசியர்களால் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது.

இதிலிருந்து கத்தோலிக்க திருச்சபையானது 14 ஆம் நூற்றாண்டின் கடைசி வருடங்கள் அல்லது 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே செயின்ட் ஜோசப் தினத்தன்று தந்தையை கொண்டாடும் வழக்கத்தை தீவிரமாக ஆதரத்து வந்ததை நம்மால் உணர முடிகின்றது.

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் (ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் பரிசுத்த திரிமூர்த்தி ஸ்வரூபமாக கடவுளை வணங்கும் கிறிஸ்தவப் பிரிவு) தங்களது ஒரே கடவுள் கோட்பாட்டின் அடிப்படையில் தந்தையினர் தினக் கொண்டாட்டத்தை, செயின்ட் ஜோசப் தினத்தில் அனுசரித்து வந்தார்கள், காப்டிக் கொண்டாட்டமானது ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டமாக இருக்கலாம் என்கின்றன வரலாற்றுத் தரவுகள்.

இன்றைய காலகட்டத்தைப்போல தந்தையர் தினம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இன்றி தங்களது மத நம்பிக்கை சார்த்து புனித தந்தையைப் போற்றும் வகையில் இந்த நாளை கிறிஸ்தவ மதத்தினர் முன்பே கொண்டாடத் தொடங்கி விட்டிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் தான் மேற்சொன்னவை.

ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலும் கத்தோலிக்க மரபுகளுக்கு வெளியே அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படவில்லை என்பது நிஜம்.

20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலுமே உலகம் முழுவதும் அன்னையர் தினத்தைப் போலவே தந்தையர் தினமென ஒரு நாளைக் கொண்டாடலாமா வேண்டாமா என்பது ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வந்தது .

ஒருவழியாக 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெற்றோரில் ஆண் வர்க்கத்தையும் கொண்டாடும் வகையில், தந்தையர் தினப் பரிசுகள் மூலம் தந்தையர்களைக் கௌரவிக்கும் பொருட்டும், அன்னையர் தினத்திற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் இந்நாள் அமெரிக்காவில் கொண்டாட்டத்துக்கு உரிய நாளாக மாறத் தொடங்கியது.

தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கான முதல் முயற்சி 1908 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி மேற்கு வர்ஜீனியாவில் உள்ள ஃபேர்மாண்டில் மத்திய யுனைடெட் மெதடிஸ்ட் தேவாலயத்தில் கிரேஸ் கோல்டன் கிளேட்டனின் முயற்சியால் தொடங்கப்பட்டது. 1907 ஆம் ஆண்டில் சுரங்கப் பேரழிவில் சிக்கி இறந்து விட்ட தனது தந்தை மற்றும் அவருடன் அந்த விபத்தில் உயிரிழந்த ஏனைய தந்தையினரது நினைவைப் போற்றும் வகையில் கிரேஸ் இந்த முயற்சியை முன்னெடுத்தார். ஆனால், இது தொடர்ந்து கொண்டாடப்படவில்லை. நடுவிலேயே நின்று போனது . பின்னர் மற்றொரு முயற்சி 1911 ஆம் ஆண்டில் ஜேன் ஆடம்ஸால் மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் கூட தந்தையர் தினத்தை நகரம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்ற அவரது கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதாகவே தகவல்.

இறுதியாக, இன்றைய அதிகாரப்பூர்வ தந்தையர் தினக் கொண்டாட்டத்துக்கான முன்னெடுப்பு 1910 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள ஸ்போகேனில் உள்ள ஒய்எம்சிஏவில் சோனோரா ஸ்மார்ட் டாட்டின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது. மத்திய மெதடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் 1909 இல் ஜார்விஸ் அன்னையர் தினம் பற்றிய பிரசங்கத்தைக் கேட்டபின், தந்தையர் தினத்தைக் கொண்டாடும் யோசனையை அவர் மீண்டும் முன் வைத்தார்.

அதன் பின்னர், ஜூன் 19, 1910 அன்று பல்வேறு உள்ளூர் மதகுருமார்களின் ஆதரவால் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு தந்தையர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. தந்தையர் தின விடுமுறையை முறையாக அங்கீகரிக்கும் மசோதா 1913 ஆம் ஆண்டு காங்கிரசில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால், இரண்டு முறை இந்த முயற்சி நிராகரிக்கப்பட்டு பின்னர் 1966 ஆம் ஆண்டில், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வ தந்தையர் தினமாக அறிவித்து தந்தைகளை கௌரவிக்கும் முறையான பிரகடனத்தை வெளியிட்டார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் 1972 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தின் மூலம் அதை தேசிய விடுமுறையாக மாற்றினார்.

இன்று சமூகத்தில் தந்தையர்களின் பங்களிப்பை உணர்ந்து கௌரவிக்கும் நோக்கத்துடன் தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com