இந்த வாழ்க்கைமுறை அவசியமா?

இந்த வாழ்க்கைமுறை அவசியமா?
Published on

ண்மையில்  டில்லியில் நடந்த மும்பை நகரப் பெண் ஷ்ரத்தா வாக்கரின் படுகொலை சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. செய்தியைப் படித்தவர்கள் சானல்களில் காட்சிகளை கண்டவர்களின் மனம் கனத்தது,  தன்னை காதலித்த பெண்ணை, கழுத்தை நெரித்து கொன்று, உடலை வெட்டி கூறு போட்டு, அதை பத்திரப்படுத்தி வைத்திருந்தது விலங்குகளுக்கு தினமும் இரையாக கொடுத்திருக்கிறான் ஒரு கொடூரன்.

“லிவிங் டுகெதர்” என்ற மேலைநாட்டு கலாசாரம் இந்தியாவிற்குள் ஊடுருவியதன் விளைவுதான் இது. இந்த வாழ்க்கை முறை குறித்து தெளிவான சட்டங்களோ, புரிதலோ யாருக்குமே இல்லை என்பதுதான் இங்கு வேதனையான விஷயம்.

லிவிங் டுகெதர் என்பது திருமணம் செய்யாமல், அதே நேரம் ஒரே வீட்டில் தம்பதி போல வாழும் ஒரு ஆண், பெண் வாழ்வியல் முறையாகும். இதற்கு கால வரம்பு கிடையாது. இன்று சேர்ந்து, நாளை பிரியலாம். மாதம், ஆண்டுக்கணக்கில் கூட வாழ்ந்து பிரியலாம். இதற்காக எந்தவிதமான இழப்பீடு அல்லது ஜீவனாம்சம் உட்பட எதையுமே முறைப்படி பெற முடியாது. பெண்கள் மீதான வீட்டு வன்முறை வழக்கு மட்டுமே பதிய முடியும். அதாவது வலிந்து தேடிப்போய் வாழுமொரு பாதுகாப்பற்ற வாழ்க்கை முறை,  பெரும்பாலும் ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களே இத்தகைய முறைக்குச் செல்கின்றனர்.

கடந்த 2013ல் லிவிங் டுகெதர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதிகள், ‘‘திருமணம் செய்து கொள்வதோ, செய்யாமல் இருப்பதோ, ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாகும். இந்தியாவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, சட்டத்தாலும், சமூகத்தாலும், ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை. இவ்வாறு சேர்ந்து வாழ்வது குற்றமல்ல. அதே நேரம் இது திருமண உறவு அல்ல’’ என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாழ்க்கை முறைக்கு தடையில்லை என்றாலும், முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். ப்ளே ஸ்டோர் சென்று டேட்டிங் ஆப் என தட்டிப் பார்த்தால். ஆயிரக்கணக்கான ஆப்கள் வருகின்றன. இவையெல்லாம் பாதுகாப்பானவையா, யார் நடத்துகின்றனர், நாம் தொடர்பு கொள்ளும் நபர் நம்பிக்கையானவரா என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல் வலைத்தளங்களில் சாட்டிங்கில் தொடங்கும் பழக்கம், இறுதியில் இம்மாதிரி மையான மரணத்தில் வந்து முடிகிறது.

இந்த கொலை பாதுகாப்பில்லாத ஒரு வாழ்க்கை முறையதான் லிவிங் டுகெதர் என்று வெளியுலகிற்கு எடுத்துச் சொல்கிறது.

ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் கூட, ஸ்ரத்தா போன்ற பெண்கள்  இம்மாதிரியான வலையில் சிக்கி ஒரு பாதுகாப்பற்ற சூழலில்தான் வாழ்ந்துள்ளார். அவரைப்பற்றிய தகவல்கள் கூட வெளியுலகிற்கு வராமல் பல மாதங்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது.

இன்று அனைத்துவிதமான குற்றச்சம்பவங்களுக்கும், வலைத்தளங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. டிக்டாக் ஆப்பை தடை செய்தது போல, மனித வாழ்வை சீரழிக்கும் டேட்டிங் ஆப்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்.

“லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை தொடர்பாக ஒரு தெளிவான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்” என்பதே பல இளம் பெண்களின், பெற்றோர்களின், சமூக அக்கறையுள்ளவர்களின் உடனடி எதிர்பார்ப்பு.

அரசுகள் ஆவன செய்யுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com