காற்றில் அசைகிறதா ஐஃபில் டவர்?

ஐஃபில் டவர், பாரிஸ் – மார்ச் 31 ஐஃபில் டவர் தினம்!
ஐஃபில் டவர்
ஐஃபில் டவர்

பிரான்சு நாட்டின் தலைநகரம் பாரிஸ் என்று சொன்னவுடன் மனக்கண்ணில் வருவது, அந்த நாட்டின் நினைவுச் சின்னம் ஐஃபில் டவர். இதை வடிவமைத்தவர், அலெக்சாந்தர் குஸ்டாவ் ஐஃபில். இது முழுவதும் இரும்பு வலைப்பின்னல் முறையில் கட்டப்பட்ட 330 மீட்டர் (1083 அடி) உயர கோபுரம். இதன் உயரம் 81 அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உயரத்திற்கு சமம். 1889ஆம் ஆண்டு, இந்த கோபுரம் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. ஆகவே, மார்ச் 31ஆம் தேதியை “ஐஃபில் டவர் தினம்” என்று கொண்டாடி வருகிறார்கள். உலகில், வேறு எந்த நினைவுச் சின்னத்திற்கும், இதைப் போன்ற சிறப்பு தினம் கொண்டாடப்படுவதில்லை.

பிரான்ஸில் இந்த கோபுரத்திற்கு, பிரென்சு மொழியில் “லாடேம் டிஃபெர்” (தமிழில் இரும்பு பெண்) என்ற செல்லப் பெயர். பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாகவும், 1889ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கண்காட்சியில் பிரான்ஸின் தொழில் நுட்பத்தை உலகிற்கு எடுத்துக் காட்டும் விதமாகவும் ஒரு கோபுரம் கட்டுவதற்கு வடிவமைப்பு போட்டி நடத்தப் பட்டது. நூற்றிற்கும் மேற்பட்ட கட்டிடக் கலைஞர்கள் பங்கேற்றனர். குஸ்டாவ் ஐஃபில் பாரிஸின் மையப் பகுதியில் 1000 அடி திறந்த இரும்பு கோபுரத்தை முன் மொழிந்தார். அது அங்கீகரிக்கப்பட்டு, 1887ஆம் ஆண்டு கோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. 26 மாதங்களில் இந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச் சின்னம் ஐஃபில் டவர். 1930ஆண்டு வரை இதுதான் உலகிலேயே மிக உயரமான கோபுரம். ஒரு நாளைக்கு சராசரியாக 25000 பார்வையாளர்கள் வருகிறார்கள். வருடத்திற்கு சுமார் 90 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்.

ஐஃபில் கோபுரத்தில் மொத்தம் மூன்று தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் அருங்காட்சியகங்கள், கண்ணாடித் தளம், கண்காட்சிகள் நடத்துவதற்கு தேவையான வசதிகள், ஐஃபில் டவர் நினைவாக பொருட்கள் வாங்குவதற்கான கடைகள், உணவகங்கள் உள்ளன. இரண்டாவது தளத்தில் ஜூல்ஸ்வெர்னே உணவகம், கடைகள், பாரிஸ் எழிலைக் காண கண்காணிப்பு மேடைகள் உள்ளன. மேல் தளத்தில், கடல் மட்டத்திலிருந்து 276 மீட்டர் (905 அடிகள்) உயரத்தில் ஐரோப்பாவில் மிக உயரமான கண்காணிப்பு மேடை அமைந்துள்ளது. மேல் தளம் இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒயின் பார் மற்றும் குஸ்டாவ் ஐஃபில் அவர்களின் பணியிடத்தின் மாதிரி வடிவம் உள்ளது. பாரிஸ் மாநகரத்தை காதல் நகரமாக மாற்றியதில் இந்த கோபுரத்திற்கு பெரும் பங்கு உண்டு.

காற்றை எதிர்க்கும் திறன் கொண்டு இந்த இரும்பு கோபுரம் கட்டப்பட்டிருந்தாலும், பெரும் புயலின் போது கோபுரம் அசைவதாகக் கூறுகிறார்கள். இந்த பிரம்மாண்டமான இரும்பு கோபுரம், ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் ஆறு அங்குலங்கள் விரிவடைகிறது. இரும்பு துருப்பிடிப்பதை தடுப்பதற்காக ஏழு வருடங்களுக்கு ஒரு முறை 60 டன் வண்ணப்பூச்சு செய்யப்படுகிறது. முதன் முதலில் 1999 புத்தாண்டன்று, 20000 விளக்குகள் பிரகாசிக்க வானத்தை ஒளிரச் செய்தது ஐஃபில் டவர்.

ஐஃபில் டவர்
ஐஃபில் டவர்

1964ஆம் வருடம், இந்த கோபுரம் வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1991ஆம் வருடம் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளம் என்று அங்கீகரிக்கப்பட்டது. தொலை தொடர்பு வசதிக்காக 1954ஆம் வருடம் கோபுரத்தின் உச்சியில் ஏரியல்கள் பொருத்தப்பட்டன. ஆகவே இந்த கோபுரம், ஒலிபரப்பு கோபுரம் என்ற பெயரைப் பெற்றது. ஐஃபில் டவர் பார்ப்பதற்கான கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் 1700 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது.

இந்த கோபுரம் கட்டுவதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. பொறியியல் வல்லுநர்கள் இது நகரின் அழகை சிதைத்து விடும் என்று கருதினார்கள். இந்த கோபுரம் கட்டும் போது, 20 வருடங்களுக்குப் பிறகு, இது முழுவதுமாகப் பிரித்து எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், 20 வருடங்களுக்குப் பிறகு, தனியார் கட்டுப்பாட்டிலிருந்த  கோபுரம் பிரென்சு அரசின் உடைமையாகியது.

1925ஆம் வருடம், இந்த கோபுரம் “காட்டுமிராண்டித் தனமான கட்டிடம்” என்றும் முற்றிலுமாக அகற்ற வேண்டுமென்றும் அரசிற்கு பத்திரிகைகள் மூலமாக மனுக்கள் பறந்தன. புகழ் பெற்ற ப்ரென்ஸ் எழுத்தாளர் கய் டே மோபசந்த் இதனை “ஒல்லியான பிரமிட்” , முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டியது என்றார். இதனால், இந்த கோபுரம் முழுவதுமாக கழற்றப்பட்டு இரும்பு விற்கப்படும் என்ற செய்தி பரவியது.

இதையும் படியுங்கள்:
அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தேன் மருத்துவம்!
ஐஃபில் டவர்

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஏமாற்றுப் பேர்வழி விக்டர் லஸ்டிக், தன்னை ப்ரென்சு அரசின் பிரதிநிதி என்றும், இந்த கோபுரத்தை விற்கும் முயற்சியில்தான் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டு பாரிஸ் நகரின் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கினார். அவர், ஆன்ட்ரே போய்சன் என்பவருக்கு, இந்த கோபுரத்தை 1.2 மில்லியன் ப்ரான்க் (4.2 மில்லியன் யுரோ, 11 கோடி ரூபாய்) விலைபேசி அதற்கான காசோலையை வாங்கிக் கொண்டார். அதற்கும் மேல் அரசாங்க அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுப்பதற்கு என்று 70000 ப்ரான்க் (200000 யுரோ, 2 கோடி ரூபாய்) பணமாக வாங்கிக் கொண்டு மறைந்து விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த போய்சன், மற்றவர்கள் ஏளனம் செய்வார்கள் என்று காவல் துறையில் இதைப் பற்றி புகார் தெரிவிக்கவில்லை. இரண்டாவது முறையாக, ஐஃபில் டவரை விலை பேச முயற்சித்தார் விக்டர். இந்த முறை, வாங்க வந்தவர், தான் ஏமாற்றப்படுவதாக சந்தேகப்பட்டு, காவல் துறைக்குச் சொல்ல, விக்டர் பிரான்சிலிருந்து தப்பித்து அமெரிக்கா சென்றார்.

ஒரு காலத்தில் மக்கள் வெறுத்த ஐஃபில் டவர், தற்போது பிரான்சு நாட்டிற்கு நிரந்தர வருவாய் தந்து கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com