முதுகு வலி வராமல் தடுக்க கவனத்தில் கொள்ள வேண்டிய 14 விஷயங்கள்...!

அக்டோபர்-16 உலக தண்டுவட தினம்!
முதுகு வலி வராமல் தடுக்க கவனத்தில் கொள்ள வேண்டிய 
14 விஷயங்கள்...!
Published on

நாம்  இரண்டு கால்களில் நிற்பதற்கும், நெஞ்சை நிமிர்த்தி பேசுவதற்கும், நேராய் நின்று நடப்பதற்கும் நமது முதுகு தண்டுவடமே பிரதானம். குனிந்து நிமிர்ந்து பணியாற்றினாலும், நின்று நடந்து பணியாற்றினாலும் முதுகு தண்டுவடமே முக்கியத்துவம் பெறுகிறது. மனிதன் ஒருவனுக்கு மட்டுமே முதுகெலும்பு நிமிர்ந்து நின்று செயல்படுகிறது. முதுகு தண்டுவடம் ஒரே எலும்பால் ஆனது கிடையாது. 33 எலும்புகளின் தொடர் சங்கிலி. பிறக்கும்போது 33 எலும்புகளாக இருக்கும். பின் அது 20 ஆக மட்டுமே ஆகிவிடும்.

வழக்கமான உணர்வுகள் எல்லாமே பெரு மூளைக்கு  அனுப்பட்ட பின்புதான் உணரப்படுகிறது. எதிர் செயல் தூண்டப்படுகிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் சில வினாடி நேரத்திற்குள் நடந்துமுடிகிறது. ஆனால் கொதிக்கும் நீரில் கை பட்டால், கையானது, வெடுக்கென்று மூடிக்கொண்டு விடுகிறது. இது போன்றவை பெரு மூளையின்  கட்டுப்பாட்டில் நிகழ்வதில்லை. இதை அனிச்சை செயல் என்பார்கள். இவை அனைத்துக்கும் பெரு மூளையின் கட்டளைக்கு காத்திராமல் தண்டுவடம் அவசரகால நடவடிக்கையாக மூளை போலவே செயல்படுகிறது.

மொத்த ஜனத்தொகையில் 20 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறையாவது முதுகு வலியால் பாதிக்கப் படுகிறார்கள். அதில் 4 சதவீதம் பேர் மிகுந்த தொந்தரவுக்கு ஆளாகின்றனர். 50 வயதிற்கு மேற்பட்டவர்களே இதனால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள். காரணம் வயது கூடுகின்றபோது முதுகெலும்பில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் நெகிழ்வு திறனை இழப்பதால்தான்.

முதுகு வலி வராமல் தடுக்க எளிய பயிற்சிகளும், ஓய்வும் அவசியம். முதுகு வலி வராமல் தடுக்க சில முக்கியமான விஷயங்களை பற்றி முதலில் தெரிந்துகொள்வது நல்லது.

* நீண்ட நேரம் நின்றுகொண்டிருப்பது அதிலும் குறிப்பாக முதுகைச் சற்று வளைந்த நிலையில் வைத்து, நின்றுகொண்டிருப்பது முதுகு வலியை உண்டு பண்ணும். உதாரணமாக சமையல் அறையில் நிற்பது, துணி துவைப்பது. இது போன்ற செயல்களைச் செய்கின்றபோது ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்காமல்
இடையிடையே சிறிது நேரம் உட்கார்ந்தும், சிறிது தூரம் நடந்தும் வரவேண்டும்.

* கனமான பொருட்களைத் தூக்கும்போது நேராகக் குனிந்து தூக்க முயற்சிக்கக் கூடாது. கால்களை மடக்கிக் குத்துக்காலிட்டு அதன் பிறகுதான் தூக்க வேண்டும். பளுவான சாமான்களை தூக்கிச் செல்ல வேண்டும் என்றால் அவற்றை இரண்டு கைகளாலும் தூக்கி உடலோடு அணைத்தபடி எடுத்துச்செல்ல வேண்டும்.

* அலுவலகத்தில் மற்றும் வீட்டில் உட்காரும் நாற்காலி மிகவும் உயரமாக இல்லாமல் கால்கள் தரையில் படும்படி  இருக்க வேண்டும். உட்காரும் நாற்காலிகள் இருக்கைகள் முதுகு வளையாமல் நேராக உட்காருவதற்கு ஏற்றாற்போல இருக்க வேண்டும்.. இயன்ற வரை கைகளை வைத்துக் கொள்வது போன்றதாக இருக்கும்  நாற்காலி நல்லது.

* பெண்கள் குதியுயர்ந்த செருப்புகளை தவிர்த்து தட்டையான மெல்லிய செருப்புகளை பயன்படுத்த வேண்டும்.

* படுக்கின்ற படுக்கை நடுவில் தொய்வு  இல்லாமல் இருக்க வேண்டும். ஸ்பிரிங் கட்டில்கள், உயரமான ஸ்பாஞ்ச் மெத்தைகளை தவிர்த்து நல்ல திடமான மரக்கட்டில்களில் சிறிய உயரமுள்ள மெத்தைகளை பயன்படுத்த வேண்டும். படுக்கும்போது மல்லாந்து படுப்பது நல்லது.

* ஒரே ஒரு மெல்லிய தலையணையை பயன்படுத்த வேண்டும். மெல்லிய தலையணையை தலைக்கு வையுங்கள். காலுக்கு தலையணையை வைத்து முதுகுக்கு அழுத்தமில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* முதுகு வலிக்கு முக்கிய காரணம் மிகுந்த உடல் எடை. இயல்பாக இருக்க வேண்டிய எடையை விட 10 கிலோ கூடினால் முதுகு வலி வரும் வாய்ப்பு அதிகம். எனவே, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

* முதுகு வலி எல்லோருக்கும் வருவது சகஜம்தான். அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது. எப்போதும் போல உற்சாகமாக மற்ற அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.

* அடிக்கடி முதுகு வலி வந்தால் கடினமான வேலைகள் செய்வதை குறிப்பாக தோட்டத்தில் வேலை செய்வதை சில நாட்களுக்கு ஒத்திப் போடுங்கள்.

* கார் ஓட்டுகிற போதும் சாய்ந்து உட்காரும் பகுதியில் தொய்வு இல்லாமல் நேராக உட்கார ஏற்றபடி சீட்டை அமைத்துகொள்ள வேண்டும்.

* முதுகு வலி அதிகமாக இருக்கும்போது தவிர்த்து பிற நேரங்களில் மருந்து மாத்திரைகளை தவிருங்கள். அதிலும் குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துகளை தவிருங்கள். அவசியம் என்றால் பக்கவிளைவுகள் இல்லாத மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* தண்டு வட ஆரோக்கியமாக இருக்க சரியான தோரணையில் நிமிர்ந்து உட்காருங்கள், முதுகை வளைத்து உட்காராதீர்கள்.

* சரியான உணவுகளை எலும்புகளுக்கு பலம் சேர்க்கும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

* அடிக்கடி ஸ்ட்ரெச் டைப் உடற்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி செய்யுங்கள். இரவில் நன்றாக தூங்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com