ஜப்தி

ஜப்தி
Published on

எம்.ஜி.ஆர். நகரின் மூன்றாவது தெருவிற்குள் நுழையும்போதே சவாரி செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மாதிரி குணசேகரனின் நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.

வங்கி கிளார்க்காகவே இருந்திருந்தால் நிம்மதியாய் இருந்திருக்கலாம். பாழாய்ப்போன பிரமோஷன் வாங்கி ஆபீசராகி, வங்கி கிளை மேனஜராகவும் ஆனபிறகு ஈவிரக்கம் இன்றி சட்டம் சொல்கிற பணியைச் செய்துதானே தீரவேண்டும்? குணசேகரனுக்கு அதுதான் முதல் அனுபவம் வேறு.

‘கோர்ட்டு தீர்ப்பளித்த வழக்கில் இப்போதைக்கு வேண்டாமென்று எவ்வளவு நாட்கள்தான் காரணமின்றி வங்கியின் நடவடிக்கையைத் தள்ளிப் போடமுடியும்?’ வங்கி அட்வகேட் ஜப்தி நடவடிக்கைக்கு அமீனாவை நியமிக்கச் செய்து நாளையும் குறித்து அனுப்பிவிட்டார்.

சொன்னபடியே கோர்ட்டு அமீனா தெருத் திருப்பத்தில் , அயர்ன் செய்யும் தள்ளுவண்டியின் அருகில் ஜப்தி நடவடிக்கைத் தாளை நீளவாக்கில் மடித்துக் கையில் வைத்தபடி காத்துக் கொண்டிருந்தார்.

குணசேகரன் வண்டியை அவர் அருகில் போய் நிறுத்தினார்.

பெயரை உறுதிப்படுத்திக் கொண்டு அமீனா அவரது வண்டியில் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்.

பிரதிவாதியின் பெயர்: திருப்பதி

தந்தையின் பெயர்: டில்லி பாபு

வயது : 48

செலுத்த தவறிய தொகை : ரூ. 68,365/- எனும் குறிப்புகளுடன் திருப்பதியின் முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இந்த இடம் எனக்கு அத்துப்படி சார். வருசத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது இந்த ஏரியாவுக்கு ஜப்திக்குன்னு வருவேன்..’’ என்றார் அமீனா உற்சாகமாக.

‘இதிலென்ன சந்தோஷம் வேண்டிக்கிடக்கு?’என்கிற மனநிலையில் குணசேகரன் இருந்தார்.

மேடிட்டு நடுவில் குவிந்திருந்த தெரு. வேட்டியின் கரைபோல தெருவின் இருபுறமும் அழுத்திப் போடப்பட்ட கோடு போல நெளிந்து செல்லும் சாக்கடை... அங்கு வாழும் மனிதர்களைப் போல் தேங்கிப் போன கழிவுநீர்.

வீட்டு சாக்கடை அடைத்துக் கொண்டு பொங்கி வழிந்து தெருவின் குறுக்கே ஓடி எதிர் சாக்கடையில் புகும் கழிவுநீர். அதற்கென்று உருவான திடீர் ஓடை. அதில் வண்டி இறங்கி ஏறிச் செல்கையில் சாக்கடை நீர் காலில் தெளித்த அருவருப்பு.

இரண்டு நிமிட பயணத்தில்,“சார். இந்த அட்ரஸ்தான்..” கையைக் காட்டினார் அமீனா. வண்டியை ஓரமாக சாய்த்து நிறுத்தினார் குணசேகரன்.

“சார்.நீங்க இங்கியே இருங்க.. நான் போய் விசாரிக்கிறேன்” என்றபடி கையிலிருந்த பேப்பருடன் வாசலை நோக்கி அமீனா நடந்தார்.

வாசல்படியில் நின்று கொண்டு “திருப்பதின்னு யாராவது இருக்காங்களா?”

உள்ளே டிவியிலிருந்து சினிமாப் பாடல் உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது. அதை விடவும் அவர் தன் குரலை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம்.

“திருப்பதின்னு யாராவது இந்த வீட்டுல இருக்கீங்களா?”

உள்ளிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான் இடுப்பில் நழுவிக் கொண்டிருக்கும் டவுசரை இடதுகையால் பிடித்துக் கொண்டு. அவனது கண்களில் புதியவர்களைக் கண்ட மிரட்சி.

“யாரு நீங்க?”

அவர் அதற்கு பதில் சொல்லவில்லை. “உங்கப்பாருதானே திருப்பதி?”

“ஆமாம்.. அதுக்கென்ன?”

“அமீனா வந்திருக்கேன்னு சொல்லுப்பா?”

அவர்களது பேச்சுவார்த்தை உள்ளிருந்த திருப்பதியின் மனைவிக்கு கேட்டிருக்கவேண்டும்.

“யாருப்பா வாசல்ல.. கறிக்கடை பாயா?.. காசு இல்லன்னு சொல்லு.. உங்கப்பன் சம்பாரிச்சுட்டு வந்தாத்தான்..”

அமீனாவிற்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு உதடுகளின் தடைகளைத் தாண்டி புன்னகையாக வெளிவந்தது.

“தம்பி.. நான் கறிக்கடை பாய் கிடையாது.. கோர்ட்டுலேர்ந்து அமீனா வந்திருக்கேன்னு அம்மாகிட்ட சொல்லு..”

பையன் செய்தியைத் தாங்கி கிடுகிடுவென்று உள்ளே ஓடினான். அவன் உள்ளே சென்ற சில நொடிகளில் திருப்பதியின் மனைவி வெளிப்பட்டாள். டிவி கேளிக்கை நிகழ்ச்சியின் பாதியில் எழுந்து வந்ததில் அவள் முகத்தில் கோபம் கலந்த வருத்தம் தெரிந்தது.. சரிவர சீவப்படாத தலைமுடி. தோடுகள் அற்ற மூளியாய் காதுகள். கழுத்தும் மூளியாகவே இருந்தது.

‘மஞ்சள்கயிற்றையும் அடகு வைக்க முடியுமா என்ன?’

சற்றே நைந்து போயிருந்த முந்தானைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி, “உள்ளே வாங்கய்யா.. வாசலிலே நின்னுக்கிட்டு இருக்கீங்களே?” என்றாள்.

“நான் கோர்ட்டு அமீனாம்மா.. வீட்டுக்குள்ள எல்லாம் வரமாட்டேன்.. நான் வீட்டுக்குள்ள வந்தா வீடு வெளங்காதுன்னு சொல்லுவாங்க..” அமீனாவின் குரலில் தான் செய்யும் பணியைக் குறித்த வருத்தம் தெரிந்தது.

“இல்லாங்காட்டியும் வீடு விளங்கிடுமா என்ன?” என்னும் போதே அவர் பின்னால் நிற்கும் குணசேகரனைப் பார்த்தாள்.

“அவரு யாருங்க..?”

“அவருதான் கடன் கொடுத்த பாங்க் மேனேஜர்.. “

குணசேகரன் தொடர்ந்தார்.

“தவணை கட்டலை.. வட்டியும் சரியாக் கட்டல.. பல தடவை நோட்டிசு கொடுத்தோம்.. அதுக்கும் பதில் இல்லை. கோர்ட்டுல வழக்கு போட்டு இப்போ எங்க பக்கம் தீர்ப்பு வந்திருக்கு. அறுபத்தெட்டாயிரம் சில்லரை கட்டாததினால் வீட்டு பொருட்களை ஜப்தி பண்ணி எடுத்துக்கிட்டு போகப்போறோம்..” சொல்லி முடிப்பதற்குள் குணசேகரன் வியர்த்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்து ஒரு நோட்டம் விட்டார்.

என்றைக்கோ அடிக்கப்பட்ட சுண்ணாம்பு காலத்தின் கோலத்தில் நிறம் மாறியிருந்தது. பல இடங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து செங்கல் வரிசை புலப்பட்டது.

அறையின் மூலையில் ஒரு மஞ்சள் பல்ப் தொங்கிக்கொண்டிருந்தது. மாவரைக்கும் மிஷினின் பின்ணணி ஒலியில் ஒரு சீலிங்பேன் சுழன்று கொண்டிருந்தது. அதன் கீழே கவிழ்த்து வைத்த கள்ளிப்பெட்டியின் மேல் ஒரு சிறிய கலர் டிவி மௌனமாக ஓடியபடி இருந்தது. பெயிண்ட் அடிக்கப்படாத டிரங்க் பெட்டியும் அதன் மீது அழுக்கு துணிகளுமாய் மற்றொரு மூலையில்.

ஆனால் அதையும் வீடென்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

குணசேகரனின் பார்வையைப் புரிந்து கொண்டவள் போல், “இருக்கிறதே இந்த சாமான் செட்டுத்தான்.. இதை ஜப்தி பண்ணி என்ன பண்ணப்போறீங்க?” என்றாள் திருப்பதியின் மனைவி.

அமீனா சற்றே காட்டமானார். “என்னம்மா.. பாங்க் மேனேஜர்கிட்ட இப்படியெல்லாம் துடுக்காப் பேசறீங்க.. உங்க வீட்டுக்காரரை வரச் சொல்லுங்க.. உடனே..” என்று படபடத்தார்.

“எங்க இருக்காரோ?” என்றவள் பையனை நோக்கி “டேய். உங்க அப்பாரு எங்க இருக்காருன்னு போய் தேடிக் கூட்டியா” என்றாள்.

அப்படியே புறப்படவிருந்த பையனைத் தடுத்து “டேய் சட்டையைப் போட்டுக்கிட்டு போடா..” என்றாள்.

பையன் ஒன்றும் புரியாத ஒரு உற்சாகத்தில் சட்டையைப் போட்டுக் கொண்டான். சட்டையின் பாக்கெட் கிழிந்து மடிந்து தொங்கிக் கொண்டிருந்தது. சட்டையில் இரண்டு பொத்தான்கள் மட்டுமே இருந்தன. மொத்தத்தில் அவன் சட்டைத்துணியைப் போர்த்திக் கொண்டு போவது போலிருந்தது.

சற்றே அமைதி நிலவியது. திருப்பதியின் மனைவி டிவியில் மௌனமாக ஓடிக்கொண்டிருந்த சினிமாவின் வசனங்களைப் புரிந்தவள் போல் அதில் ஆழ்ந்திருந்தாள்.

பக்கத்து வீடுகளிலிருந்து ஒன்றிரண்டு பேர் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனார்கள்.

குணசேகரன் அமீனாவைப் பார்த்து “என்னங்க.. போலீஸ் பாதுகாப்புக்கு ஏதாவது சொல்லணுமா.. ஏற்கெனவே லெட்டர் கொடுத்து வெச்சிருக்கோம்.. போன் பண்ணினா போதும்” என்றார்.

“சார் அதெல்லாம் பாத்துக்கலாம்.. போன வருஷம் இந்த தெருவுல ரெண்டு இடத்தில ஜப்தி பண்ணியிருக்கேன்.. அவங்கள்ள யாராவது என்னைப் பார்த்தா புரிஞ்சுப்பாங்க..” என்றார் அமீனா.

திருப்பதி வரும் வரையில் குணசேகரனுக்கு அந்த வீட்டினுள் நிற்பது பெரும் பிரயாசமாக இருந்தது. அந்த வீட்டின் ஏழ்மை அவரது வயிற்றைப் பிசைந்தது. பழந்துணிகளும், குப்பைகூளங்களுமாக அந்த அறையினுள் சுழன்றடிக்கும் நாற்றம் அவருக்கு குமட்டிக்கொண்டு வந்தது. தெருப்பக்கமாக வந்து நின்றார். தெருவில் ஓடும் வெப்பம் கலந்த சாக்கடை நாற்றத்திற்கு அவர் அதற்குள் சுலபமாகப் பழக்கப்பட்டிருந்தார்.

திருப்பதியின் மகன் வேகமாக ஓடிவந்தான்.

“அப்பா வரேன்னு சொல்லச் சொன்னாருங்க..”

“கோர்ட்டுலேந்து ஆபீசருங்க வந்திருக்காங்கன்னு சொன்னியா தம்பி?”

“பெரியவங்க வந்திருக்காங்கன்னு சொன்னேன்..” என்றபடி உள்ளே ஓடினான். டிவி மௌனவிரதத்திலிருந்து மீண்டு பாடலொன்றை உரக்கப் பாட ஆரம்பித்தது.

“சரியாப் படிக்க மாட்டேங்கறான் என் மவன்.. இப்படித்தான் பொழுதைக் கழிக்குது” என்று ஒரு அசட்டு சமாதானத்துடன் திருப்பதி மனைவி உள்ளே போனாள்.

சில நிமிடங்களில் ஒரு பழைய டிவிஎஸ் மொபட்டில் திருப்பதி வந்து இறங்கினான். இருவரையும் பாத்து கைகூப்பினான்.

அமீனாதான் ஆரம்பித்தார்.

“நீதானே திருப்பதி.. இவரு பாங்கு மேனேஜரு.. கடனைத் திருப்பிக் கட்டாததினால வீட்டுப் பொருட்களை ஜப்தி செய்யப்போறோம்.. நீயே வீட்டுல இருக்கிற பொருளையெல்லாம் எடுத்து வெச்சுருப்பா.. வண்டி நாங்க ஏற்பாடு பண்ணிக்கிறோம்..” என்றார்.

திருப்பதி ஒன்றும் பேசாமல் நின்றான்.

“இந்த வண்டியும் உன்னதுதானா.. அதையும் சேர்த்து தூக்கிட்டுப் போயிடுவோம்..” டிவிஎஸ் வண்டியைக் கைகாட்டினார் அமீனா.

“அய்யய்யோ.. இது பிரெண்டோட வண்டிங்க.. அவசரமா வந்து பையன் கூப்டான்னு எடுத்துக்கிட்டு வந்தேன்..”

“ஒரு நிமிசம்.. என் பொண்டாட்டிக்கிட ஒரு வார்த்தை சொல்லிட்டு வரேன்..” என்றபடி உள்ளே போனான் திருப்பதி.

கணவனும் மனைவியுமாய் போட்டுக்கொண்ட சண்டை வாசல் வரை பரவியது.

“இருக்கிறதெல்லாம் நாறத் துணியும் பேனும் டிவிப் பொட்டியும்.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போகட்டும்.. ஒரு கிழிஞ்ச புடவையை மட்டும் வெச்சிட்டு போகச் சொல்லு.. ஏன்னா நாமெல்லாரும் தூக்குல தொங்கறதுக்கு வேணும்ல.. விஷத்தை வாங்கறதுக்குக்கூட கையில காசு கிடையாது ..” என்று திருப்பதியின் மனைவி கத்துவது காதில் விழுந்தது.

அமீனா குணசேகரனை நிமிர்ந்து பார்த்தார். ‘இயக்குவது நீ.. நான் வெறும் இயந்திரம்தான்’ என்பது போலிருந்தது அவரது பார்வை.

உள்ளிருந்து ஆவேசத்துடன் திருப்பதியின் மனைவி வெளியில் வந்தாள். “ரெண்டு வருசம் தொடர்ந்து தீபாவளி சமயத்துல மழைத்தண்ணி கடைக்குள்ள புகுந்திடுச்சு.. மிஷினும் கெட்டுப் போயி.. கஸ்டமர் கொடுத்ததெல்லாம் நனஞ்சி நாசமால்ல போச்சு.. அவரு என்னாதான் பண்ணுவாரு.. அதுக்கு முன்னால நாங்க நல்லாத்தானே இருந்தோம்..” என்று கதறினாள்.

திருப்பதி அவளை சமாதானப்படுத்த தோள்களை கைகளினால் அமர்த்தினான்.

அவள் தனது கைகளைத் தூக்கி அவனை உதறினாள். “என்னைப் பேச விடுய்யா..”

‘கடவுளே.. அவளது ரவிக்கையிலும் கிழிசலா..’ யதேச்சையான குணசேகரனின் பார்வையில் நெஞ்சம் பதறியது.

தலையை உதறிக்கொண்டே வெளியில் வந்தார் குணசேகரன்.

“என்னா சார் பண்ணப்போறீங்க..?” என்றார் அமீனா.

“கூட்டிக் கழிச்சுப் பாத்தா வண்டிச் செலவுக்கு கூட வராது போலிருக்கே..” என்ற குணசேகரனை நோக்கி, “ஆமா சார்.. ஆனா கோர்ட்டு ஜப்தின்னு சொன்னப் பொறவு இருக்கிற பொருளை சீஸ் பண்ணிட்டா, அதுக்கு என்ன மதிப்பிருந்தாலும் அத்தோட நடவடிக்கை முடிஞ்சிடும் .. அதுதான் சட்டம்..உங்களுக்கு தெரியாததா?” என்றார் அமீனா.

“ஆனாலும் மனசுக்கு கஷ்டமாயிருக்குங்க” என்ற குணசேகரன் சற்று யோசித்துவிட்டு, “வேணும்னா ஒண்ணு செய்யலாம். வீடு பூட்டியிருக்குன்னு எழுதி கோர்ட்டில் தாக்கல் பண்ணிடுங்க.. இந்த கேசு மறுபடியும் ஒரு ரவுண்டு போயிட்டு வரதுக்குள்ள ஒரு வருஷமாவது ஆயிடும்.. அப்ப என்ன நடக்குதோ அது நடக்கட்டும்..” என்றபடி வண்டியை நோக்கி நடந்தார்.

“சரி சார். உங்க இஷ்டப்படியே சொல்லிடறேன்...” என்றார் அமீனா. பின்னர் அவரே திருப்பதியிடம் போய் பேசினார். திருப்பதி அமீனாவையும் குணசேகரனையும் பார்த்து ஒன்று சேர கைகூப்பினான்.

அமீனா எப்போதும் போல் , பின்சீட்டில் அமர இருவரும் கிளம்பினர்.

“சார். என்னை அசோக்பில்லர் பஸ் ஸ்டாப்புல இறக்கிவிட்டுடுங்க. நான் நேரா பாரீஸ்கார்னருக்கு பஸ்சுல போயிடுவேன்...”

“சரிங்க... உங்க பேரு என்னன்னு சொல்லவே இல்லியே..”

“என் பேரு அமீனான்னு வெச்சுக்கோங்களேன்... ஆனா ஒண்ணு சார்... வீடு பூட்டியிருக்குன்னு எழுதச் சொன்னீங்களே... உங்களுக்கு பெரிய மனசு சார்...”

அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் போல் தலையை ஆட்டி ஆமோதித்துவிட்டு வண்டியில் புறப்பட்டார்.

கிளம்புவதற்கு முன்னர், “ மேனேஜர் சார். திருப்பதி என்ன தொழில் பண்ண பாங்குல கடன் வாங்கினாரு?” என்று கேட்டார் அமீனா.

பையனின் கிழிந்த டவுசரும், சட்டையும், திருப்பதி மனைவியின் கிழிந்த ரவிக்கையும் குணசேகரனின் கண்முன் வந்து போனது.

“திருப்பதி ஒரு தையல்கடை வெச்சு நடத்துவதற்காக பாங்குல லோன் வாங்கியிருந்தார்.”

சொல்லிவிட்டுப் புறப்பட அவரது மோட்டார் சைக்கிளின் படபட சப்தம் தொலைவில் மெல்ல மெல்ல கரைந்து போனது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com