
விருதுநகரில் பிறந்தவராம்,-வெற்றி
வாகை பல சூடியவராம்
அரும்பணிகள் புரிந்தவராம் இந்திரா
அன்பைப் பெற்றவராம்
கருமை உருவம் கொண்டவராம்- நீள
கரங்கள் உடையவராம்
அருமைத் திட்டங்கள் தந்தவராம் -உயரம்
ஆறடிக்கு மேல் வளர்நதவராம்
அணைகள் பல கட்டியவராம்- அன்பும்
ஆற்றலும் திகழ்ந்தவராம்
துணையாய் ”வைரவன்” – முழுத்
துண்டைத்தோளில் அணிந்தவராம்
முனைப்பாய் செயலாற்றி – முதலில்
மதிய உணவு தந்தவராம்!
அணைக்கும் தாயுள்ளம் கொண்டு – கல்வி
ஆலயங்கள் கட்டியவராம்
பதவிகள் பல துறந்தவராம் – படிக்காத
மேதையென வலம் வந்தவராம்
உதவும் குணமும் கொண்டவராம் –நல்ல
பண்புகளால் உயர்ந்தவராம்
ஆதரவில்லா எளியோர்க்கு – என்றும்
அயராது உழைத்தவராம்
இதயத்திலென்றும் நிற்பவராம் – எளிமை
இனிமை கருப்புச்சூரியன் வாழியவே!
-கே. அசோகன்