காதலர் தினம் அவசியமா? அநாவசியமா? - கருத்து யுத்தம்!

காதலர் தினம்  அவசியமா? அநாவசியமா? - கருத்து யுத்தம்!

காதலர் தினம் - அவசியமே!

டம்பரம் இல்லாத காதலர் தினம் கண்டிப்பாக அவசியம்.  நம் காதலை கணவன், மனைவி ஒருவருக்கொருவர் உணர்த்திக் கொள்ள கிடைத்த அற்புதமான தருணம் என்று எண்ணி, ஒரு சிறிய பூவைக் கொடுத்து "ஐ லவ் யூ" என்று சொல்லும்போது அங்கு காதல் மலர் மலர்வதுடன் வாசமும் பாசமும் நேசமும் கண்டிப்பாக வீசத்தான் செய்கிறது.  இப்படிப்பட்ட காதலர் தினம் கண்டிப்பாக வேண்டும்.

- பிரகதாநவநீதன், மதுரை

-----------------

காதல் என்ற மூன்றெழுத்துக்கு இருக்கும் ஈர்ப்பு சக்தி அதிகம். அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். காதல் கண்மூடித்தனமாக வரக்கூடாது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மனதார நேசிக்கும் தருணமாக அந்தக் காதலைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக அமைய வேண்டும். மேலோட்ட காதலாக, உடல் சார்ந்த காதலாக இல்லாமல் மனம் ஒன்றிய  காதலாக கருத்தொருமிக்க காதலாக அமைத்துக் கொண்டால் காதலர் தினம் அவசியமே.

- ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

-----------------

ரசபுரசலாக இருந்த காதல், காதலர் தினத்தன்று வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டு விடுவதால் பெற்றோர்கள் அதைப் பக்குவமாக அணுகி, திருமணம் நடத்தி வைக்க வசதி இருக்கிறது. மேலும், காதலர் தினத்தன்று பரிசளிப்பதற்காக பூக்கள், சாக்லேட், வாழ்த்து அட்டைகள், பரிசு கூப்பன்கள், துணிமணிகள், தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என்று அவரவர்களின் வசதிக்கேற்ப  மார்க்கெட்டில் அதிகப் பொருட்களை வாங்குவதால் வியாபாரம் சூடு பிடிக்கிறது. இதனால், ஆசியாவில் வியாபார ரீதியாக பொருட்கள் விற்பனையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது.  காதலர்கள் சந்தோசம் அடைவதுடன், பல தரப்பினரும் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த நாளாக காதலர் தினம்  வளர்ச்சி அடைந்துவிட்டதால் இது அவசியமே! காதலர்கள் பகிரங்கமாக மகிழ்ச்சி அடையும் தினம் காதலர் தினமே! 

- இந்திராணி தங்கவேல், சென்னை

-----------------

ணம், பாசம், பந்தம், பதவி என்ற எல்லாவற்றையும் உதறி எறியும் துணிவு, ஆற்றல் காதலுக்கு மட்டுமே உண்டு. மலரைப் போன்று உண்மையான காதலும் ஒருமுறைதான் மலரும். காதல் என்பது உணர்வுபூர்வமான ஆழமான ஈடுபாடு.  அந்த உணர்வு ஆனந்தத்தைத் தருகிறது. அதைக் கொண்டாடுவதில் தவறு இல்லை. காதலர் தினம் காதலிப்பவர்கள் மட்டுமன்றி கல்யாணமான கணவன், மனைவியும் ஒருவர் மீது மற்றவர் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த கொண்டாடலாம். ஆனால், நம் கலாச்சாரத்துக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

- ராதிகா ரவீந்திரன். சென்னை

-----------------

காதலர் தினம் அவசியம் என்பதே எனது கருத்து. ஏனெனில் காதல் என்பது காதலில் இருக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே சொந்தமென்பதில்லை. காதலை ப்ரொபோஸ் பண்ணுவது மட்டுமே அந்நாளில் அவர்களுக்கான தனித்துவமான விஷயமாக இருக்கலாம்.  மற்றபடி, கல்யாணமான கணவன் மனைவிக்குள்ளும் காதல் இருக்கும். அதைக் கொண்டாட ஆவல் இருக்கும். அந்தக் குறிப்பிட்ட நாளில், ஒருவருக்கொருவர் பரிசளித்து, வெளியில் சென்று விருந்துண்டு பின் ஒரு திரைப்படம் பார்க்கவோ அல்லது பீச்சுக்கோ சென்று அன்பைப் பரிமாறி மனமகிழ்வோடு நாளைக் கழிப்பது இன்பம். காதலிப்பவர்களுக்கு ஜாதி மத வேறுபாடு, ஸ்டேட்டஸ் போன்ற  பல பிரச்னைகள் இருக்கும். அவற்றையெல்லாம் மறந்து, எல்லை மீறாமல் அந்த நாளை கொண்டாடி மகிழ்வதில் தவறேதுமில்லை.

- ஜெயகாந்தி மகாதேவன், சென்னை

.

**********

.

காதலர் தினம் - அனாவசியமே! 

 "தேவையில்லை காதலர் தினம்

 "காதலர் தினம்" கொண்டாடுவது கண்டிப்பாகத் தேவை இல்லாத ஒரு கலாசாரம்தான் என்பது என்னுடைய கருத்து. மேல் நாட்டு பழக்க வழக்கங்கள் எதுவும் பழம்பெரும் நாடான பாரத நாட்டுக்கு ஒத்து வராது. இலைமறை காய்மறையாகத்தான் தமிழ்ப் புலவர்கள் தங்கள் செய்யுள்களில் காதலைக் கையாண்டு எழுதி இருப்பர். உங்கள் அன்பானவர்களுக்கு நன்றி சொல்ல, பரிசுகளைப் பரிமாறிக்கொள்ள காதலர் தினம் என்று ஒருநாள் மட்டும் போதுமா?

யோசித்துப் பாருங்கள்... வருடத்தின் 365 நாட்களும், நினைத்த நேரத்தில் நம் அன்பை அவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே... மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என்று ஆ... ஊ...னா ஒவ்வொன்றுக்கும் ஒரு தினம் கொண்டாடுவது தேவையா?

வெளி ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல்… உங்கள் மனதுக்கு நெருக்கமான அன்பானவர்களுடன், அது அம்மாவாக, குழந்தைகளாக, கணவராக அல்லது காதலராக யாராக இருந்தாலும், உங்கள் உண்மையான காதலை முழுமனதுடன் ஒவ்வொரு ஷணமும் வெளிப்படுத்துங்கள். இதுவே என் அன்பான வேண்டுகோள்!

- ஜெயா சம்பத், சென்னை

 -----------------

யது பார்த்து, ஜாதி பார்த்து, மதம் பார்த்து,  வருவதில்லை காதல்.  அதற்கு கண்கள் இல்லை, அதனால்தான் அது கண்மூடித்தனமான காதல். அதற்கு ஒரு தினம்.  என்ன கண்றாவித்தனம்? கயவா்கள் கூட்டம் அதிகமுள்ள இந்தக் காலத்தில், காதலே ஓர் ஆபத்தான பயணம்தான்.  அதிலும் டீன் ஏஜில் ஏதோ ஒரு இனம்புரியா ஈா்ப்பு சக்தியால் வருகிற மெச்சூரிட்டி இல்லா காதல். அதற்கு ஒரு விழா வேறு! தேவையில்லா நண்பா்கள் கூட்டம்,  ஆட்டம், பாட்டம், ஆடம்பரம் ஆா்ப்பாட்டம், கலாச்சார மீறல், ஹம்பக், பின்னா் எல்லை மீறுதல். இதையெல்லாம் காதலா் தினத்தில் செய்ய வேண்டுமென ஏதாவது எழுதப்படாத விதி இருக்கிறதா?  காதல் புனிதமானது. ஆனால், காதலா் தினம் வேஸ்ட்! சுத்த வேஸ்ட்!’

- நா.புவனாநாகராஜன், செம்பனார்கோவில்

----------------- 

காதல் இன்றி இவ்வுலகு இல்லை. தினமும் காதலெனும் அன்பை ஏதேனும்   ஒன்றின் மீது அது குழந்தையாகவோ அல்லது செல்லப்பிராணியாகவோ, அல்லது வாகனமாகவோ அல்லது நம் பெற்றோராகவோ அல்லது நம் குழந்தையாகவோ அல்லது பேரக்குழந்தையாகவோ அல்லது இனிய பாடலாகவோ அல்லது ஒரு நல்ல திரைப்படமாகவோ அல்லது நம் நண்பனாகவோ இருக்கும் ஏதேனும்  ஒன்றின் மீது   காண்பிக்காமல்   இவ்வுலகில் எவராலும்  வாழ முடியாது. அப்படி இருக்கும் போது அதற்காக தனியாக  ஒரு நாளை வைத்து இளைய தலைமுறையினர் தங்கள்  மனதைக் கெடுத்துக்கொள்ள ஏன்  வாய்ப்புத் தர வேண்டும்.  எனவே, வேண்டாம் அதற்கென்று தனியாக ஒரு நாள். ஒரு வருடத்தில் அனைத்து நாளுமே ஏதோ ஒருவகையில் காதலர் தினம்தான்.

- வைரபாலா, ராஜமன்னார்குடி  

----------------- 

காதல் என்பது உணர்வுபூர்வமானது. அதை உலகறியச் செய்வதில் எந்தவொரு அவசியமும் இல்லை. இருபாலருக்கிடையிலான காதல் என்பது தினம் தினம் மலர வேண்டும். அத்திப்பூ பூத்தார்போல் காதலர்  தினத்தன்று மட்டும் போலியாக உருவாகக்கூடாது. இரு உள்ளங்களும் இணைந்து, புரிந்து நடந்து, விட்டுக்கொடுத்து... வாழும் காதலர்களுக்குத் தனிப்பட்ட காதலர் தினம் என்று ஒன்றுமில்லை. அவர்களுக்கு எல்லா தினமும் காதலர் தினமே!

- நளினி ராமச்சந்திரன், கோயம்புத்தூர்

----------------- 

ம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சுக,  துக்கத்தில்,  உன்னோடு நான் எப்போதும்  உள்ளேன் என  அன்பானவர்கள் கைகொடுக்கும் ஒவ்வொரு தருணமும் காதலர் தினமாகவே கொண்டாடலாம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் பரிசளித்து விட்டு செல்வது தேவை இல்லை என்று தோன்றுகிறது. நம் அன்பை வெளிப்படுத்த  மலர் கொத்தோ, பரிசுகளோ தேவை இல்லை. ஆத்மார்தமான  அன்போடு கூடிய ஒரு புன்னகை பகிரும் ஆயிரம் பரிசுகளை..!

- பானு பெரியதம்பி, சேலம்

-----------------

டைம் பாஸ் காதலுக்கு வேண்டுமானால் காதலர் தினம் அவசியம். லிவிங் டு கெதர்,  இரு பெண்கள்,  இரு ஆண்கள் என பலவிதங்களில் காதல் வாழ்க்கையை வாழ நினைத்தாலும், ஜெயிப்பது என்னவோ நிபந்தனையற்ற, எதையும் எதிர்பார்க்காத  காதலே.  வணிக நோக்கத்தில் காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும், அன்றைய தினத்தோடு முடிந்து விடுவதா காதல்? காதலுக்கு எதற்குத் தனியாக ஒரு தினம்?  தினம் தினம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதானே காதல். மனதோடு பேசி, உயிரோடு கலந்து, உணர்வில் வென்று நிற்பதே காதல். அதை ஒரு நாளில் சுருக்கி விட முடியாது.

- மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்

----------------- 

காதலர் தினம் கொண்டாடுவது அவசியமே இல்லை. அன்று என் அம்மா அப்பா தாத்தா பாட்டி இவர்கள் எல்லாம் காதல் செய்யாமலாக இருந்தார்கள் எதையுமே இலை மறைக் காயாக செய்யும் போது அதற்கு மதிப்பு அதிகம். இந்த வருடம் மிக சந்தோசமாக காதலர் தினத்தை கொண்டாடும் தம்பதிகள் மறுவருடமே எனக்கு அவரைப் பிடிக்கவில்லை அவளை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தின் வாசலில் நிற்பதைப் பார்க்கும்போது இவர்கள் இப்படி சந்தோஷமாக காதலர் தினம் கொண்டாடவும் வேண்டாம்… அடுத்த வருடமே எனக்கு விவாகரத்து வேண்டும் என்று பிரிந்துச் செல்லவும் வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.

- நந்தினி கிருஷ்ணன், மதுரை 

-----------------

ப்பில்லா பண்டம் மட்டும் குப்பையிலே. இல்லை, அன்பில்லா குடும்பம்கூட குப்பையிலேதான். அப்பேற்பட்ட  வலிமை மிக்க அன்புக்கென்று, தனியாக ஒரு நாள் கொண்டாடுவது அநாவசியமே. அழகான, அமைதியான குடும்பத்திற்கு அன்பே ப்ரதானம். அந்த அன்பிற்கென்று ஒரு நாள் கொண்டாடுவது அனாவசியம். தினம்… தினம்... உணர்த்த வேண்டிய உணர்வு அது…

- ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்

-----------------

ரிமாற்றம் என்பது அன்பில் இருக்கவேண்டுமே தவிர பரிசளிப்பில் இருக்கவே கூடாது. பழங்காலத்தில் காதலர்கள் காதலிப்பது பெரும்பாலும் திருமணத்துக்கு பிறகே இருக்கும்.  இதனால் காதலர் தினம் என்பது கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.  இக்காலத்திலோ நொடிப்பொழுது காதல் பெரும்பாலும் பரிசினை பொறுத்து மற்றும் காதல் தொடர்வது... தொடர்பு விட்டுப்போவது பொறுத்தே நிகழ்கிறது,  இதனால் வருவது கடைசியில் வன்முறைத் தொடர்பான கொலைகள் மட்டுமே.

- வெ. ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்

----------------- 

யல் நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் பிள்ளைகள் தங்கள் சொந்த காலில் நிற்பதும் சுயமாக துணையைத் தேர்ந்தெடுப்பதும், காதல் கல்யாணம், விவாகரத்து  எல்லாமே சகஜம். நம் கூட்டுக்குடும்ப கலாசாரத்துக்கு இது ஒத்து வருமா? காதல் திருமணமாக இருந்தாலும்  இரு குடும்பங்களும் கலந்து பேசி சாதக பாதகங்களை ஆராய்ந்து, பெரியவர்கள் ஆசியோடு நடத்தப்படும்.அதனால் விவாகரத்து என்பதை உடனடியாக முடிவு செய்ய முடியாது.

- ஷெண்பகம் பாண்டியன்,  சத்துவாச்சாரி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com