கலைஞர் எப்போதுமே கலைஞர்தான்! | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
கலைஞர் எப்போதுமே கலைஞர்தான்! | கலைஞர் 100
Published on

கலைஞரும் நானும்:

செ. இளங்கோவன், முன்னாள் துணை ஆசிரியர், கல்கி

கல்கியின் “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தின் கீழ் கல்கி ஆற்றிய சமூகப் பணி குறிப்பிடத் தக்கது. கல்கியில் துனையாசிரியராகப் பணியாற்றியவர் செ. இளங்கோவன். அவர், அத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அனைத்து மாவடங்களுக்கும் விரிவாகப் பயணம் செய்தவர். சாமானிய மக்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலரையும்சந்தித்து பேட்டி கண்டு, கல்கியின் “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தின் பெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்.

கலைஞர் 100 பகுதிக்காக மூத்த பத்திரிகையாளர் செ. இளங்கோவன் கலைஞருடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:

நாற்பதாண்டுகளுக்கு மேற்பட்ட என் பத்திரிகையுலக வாழ்க்கையில், நான் அதிகமுறை சந்தித்துப் பேசிய அல்லது பேட்டி கண்ட ஒரே அரசியல் தலைவர், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்தான். அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, எத்தனைமுறை சந்தித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

அவர் முதல்வராக இருந்தபோது காணப்பட்ட நீண்ட பேட்டி ஒன்றின்போது நடந்த சம்பவம் இது. அவருடைய பார்வை பட்டியலின மக்களின்மேல் அவ்வளவாகப் படுவதில்லையா என்பது போன்ற ஒரு கேள்வி அது. அதற்கு, ‘அப்படியெல்லாம் இல்லை. இதோ இப்போதுகூட ‘அந்த’ அதிகாரியை தலைமை அதிகாரியாக பதவியுயர்வு கொடுத்து நியமித்திருக்கிறோமே…’ என்பது கலைஞருடைய பதில்.

கலைஞரின் இந்த நீண்ட பேட்டியைக் ‘கல்கி’யில் வெளியிட்டபோது, பட்டியலின மக்கள் சம்பந்தமான கேள்வியை மட்டும் பிரசுரித்துவிட்டு, ‘இதற்கான கலைஞரின் பதில் அடுத்த வாரம்” என்று பிரசுரித்து விட்டோம்.

இதைப் படித்த அந்த அதிகாரிக்கு அது தான்தான் என்பது புரிந்துவிட்டது. தன்னைப் பற்றி கலைஞர் என்ன சொல்லியிருப்பாரோ என்ற பதற்றம்…. அவரால் இருப்புக் கொள்ள முடியவில்லை. எனக்கு போன் செய்தார்.

‘கலைஞர் என்ன சார் சொன்னார்….பட்டியலினத்தைச் சார்ந்தவன் என்பதாலேயே எனக்குப் பதவியுயர்வு கொடுக்கப் பட்டதாகக் கலைஞர் சொல்லியிருந்தால், எனக்கு என் துறையிலும் சக அதிகாரிகளிடமும் மரியாதையே இருக்காது சார்…அவர் அப்படிச் சொல்லியிருந்தால் நீங்களே அவரிடம் பேசிச் சரி பண்ணுங்க சார்…’ என வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

நான் ஆசிரியர் கி. இராஜேந்திரனிடம் பேசினேன். ‘அந்த அதிகாரி சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீங்கள் இது பற்றிக் கலைஞரிடமே பேசுங்கள்..’என்றார்.

இதையெல்லாம் போனில் பேசினால் சரிப்பட்டு வராதென்று, நான் நேரிலேயே சென்று கலைஞரிடம் பேசினேன். ‘இதற்கெல்லாமா நீங்கள் நேரில் வரவேண்டும்? போனிலேயே கேட்டிருக்கலாமே…’என்ற கலைஞர், ‘என்கீழ் பணி புரியும் ஓர் அதிகாரியைப் புண்படச் செய்வதோ அவரை அவமானப்பட வைப்பதோ என் நோக்கமல்ல. அதனால் இதில், என் பதில் எப்படியிருந்தால் அந்த அதிகாரி சந்தோஷப்படுவாரோ அப்படி நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள்..’ என்றார்.

‘மாற்றிய பிறகு உங்களிடம் போனில் படித்துக் காட்டவா சார்…” என்றேன்.

‘தேவையில்லை. உங்கள் மேலும் ‘கல்கி’ பத்திரிகையின் மேலும் எனக்கு முழு நம்பிக்கையிருக்கிறது…’ என்றார் கலைஞர்.

அதன்படியே கலைஞரின் பதிலை கலைஞரின் பதில் போலவே கொஞ்சம் மாற்றிப் பிரசுரித்திருந்தோம். அதில் அந்த அதிகாரிக்கு ஏக மகிழ்ச்சி.

கலைஞருக்கு?

சண்முகநாதனுக்கு போன் செய்து கேட்டேன். ‘தலைவரிடம் நீங்களே பேசுங்கள்…’ என்று லைன் கொடுத்தார்.

‘மிகச் சரியாக வந்திருந்தது. அது சரி…அந்த அதிகாரி எதுவும் சொல்லவில்லையா? அதுதானே முக்கியம்…’

‘அவருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார்..’ என்றேன்.

‘என்ன போடப் போகிறோம்னு அவர்கிட்டே முன் கூட்டியே சொல்லியிருந்தீங்களா’

‘இல்லை சார்…உங்களிடமே சொல்லாதபோது, அவரிடம் மட்டும் எப்படி சார் சொல்வேன்?’

சிரித்தபடியே, ‘அவ்வளவுதானே…சரி…’ என்றார் கலைஞர்.

கலைஞர்மேல் எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் கலைஞர் எப்போதுமே கலைஞர்தான்.

இப்படிச் சொல்வதற்கு என்னிடம் அனுபவபூர்வமான ஒரு காரணமும் இருக்கிறது. இப்போது போலவே, அந்தக் காலத்திலும் கோபாலபுரம் இல்லத்தில் பல புகைப்படங்கள் இருக்கும். பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பல்வேறு காலகட்டங்களில் கலைஞர் இருக்கும் - சரித்திர நிகழ்வுகளைக் கூறும் படங்கள் அவை. அவற்றில் ஒரேயொரு புகைப்படம் மட்டும் தனித்துக் காணப்படும். அண்ணாவின் முகம் மட்டும் குளோசப்பில் பெரிய அளவில் இருக்கும் படம் அது. மூன்று நான்கு நாள் தாடியுடன் அண்ணாவின் முகம் இயல்பாகக் காட்சியளிக்கும். யாரையும் சுண்டியிழுத்துச் சில விநாடிகளாவது பார்க்கத் தூண்டும் படம்.

கலைஞருடனான சந்திப்பெல்லாம் முடிந்து கிளம்பும் ஒவ்வொரு முறையும், அந்தப் படத்தை என்னையறியாமல் நானும் பார்ப்பேன். அதைப் பார்க்கும் கலைஞர் ஒரு குழந்தையைப்போல் உற்சாகமாகி விடுவார். ‘அண்ணாவின் இந்தப் படத்தை எடுத்தவர் யார் தெரியுமா? ஹாரி மில்லர். (அந்தக் காலத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் புகைப்படக்காரராகப் பணியாற்றியவர்) அவர் எடுத்த இந்தப் படம்போல் வேறு யாரும் அண்ணாவை எடுத்ததில்லை…’ என்று ஒவ்வொரு முறையும் புதிய உற்சாகத்துடன் சொல்வார் கலைஞர். காரணம், தமிழ் அவருடைய பேச்சாக இருந்தாலும் ‘அண்ணா’ என்கிற மந்திரச் சொல்தான் அவருடைய மூச்சாக இருந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com