கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.
ஜூன் 7, 1998 கல்கி இதழில் கலைஞர் பற்றி ஏராளமான வி.ஐ.பி.க்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அவற்றிலிருந்து சில துளிகள்:
பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் :
முதிர்ந்த அனுபவமும் நுட்பமான அறிவாற்றலும் நிர்வாகத் திறமையும் படைத்தவர் கலைஞர். கலைஞரின் பேச்சு, இசை நிகழ்ச்சி போல் கேட்பவரை வசப்படுத்தி விடும். கலைஞர் நடத்தும் கவியரங்கம் கேட்டு, ரசித்து மலைத்தவர்களில் தானும் ஒருவன்.
இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் :
ரத்தினச் சுருக்கமாய் சொல்லவா? நமது சி.எஸ். ஸுக்கு அடுத்து ரத்தினமான பாரத விருதினைப் பெறப் போகும் தகுதி நமது முத்தமிழ் அறிஞரைத் தவிர வேறு யாருக்கு உள்ளது?
சட்ட மன்ற உறுப்பினர் தீரன் :
மிகப் பிற்படுத்தப்பட்டோருக்குச் சாதகமானவராக மட்டுமல்ல; சாதனை களைச் செய்பவராகவும் இருக்கிறார் கலைஞர். மொழிப்போர் தியாகிகளைப் போல, சமூக நீதிப்போர் தியாகிகள் குடும்பத்துக்கும் நிதியுதவியும் பென்ஷனும் அளித்திருப்பது சாதனை!
முன்பு முதல்வராக இருந்த கலைஞருக்கும் , இப்போது முதல்வராயிருக்கும் கலைஞருக்கும் வித்தியாசமும் இருக்கிறது. இன்று எதிர்க் கட்சியினரும் பாராட்டுகிற வகையில் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வைக்கிறார் கலைஞர்.
எழுத்தாளர் அசோகமித்ரன் :
1952-ல் தமிழ்நாட்டிற்கு வந்தேன். இந்த 46 ஆண்டுகளில் எந்த நேரத்தில் அவரை அணுகினாலும் அந்த சமயத்தில் புதிதாக ஒரு புத்தகத்தை எழுதியிருப்பார். தினமும் இப்படி மொழியைக கையாண்ட தமிழ்ப் படைப்பாளி தமிழில் வேறு யாருமே இல்லை. இந்த இயக்கம் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது.
தொழிலதிபர் டி டி வாசு :
கட்சியைக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பதில் இவர் ஒரு காமராஜர். நிர்வாகத் திறமையில் இவர் ஒரு ராஜாஜி. நட்புக்கு இலக்கணமாகத் திகழ்வதில் இவர் ஒரு பெரியார்.
நடிகர் நாசர் :
அவருக்கு வேண்டுமானால் வயது எழுபத்தைந்து ஆகலாம். அவர் அறிவுக்கு? அரசியல்வாதியாய் – இலக்கியவாதியாய் - திரைக் கலைஞனாய் - ஆழமாய் அவர் பதித்த சுவடுகளுக்கு வயது ஏது? இருநூரு வருடங்களைத் தாண்டி முன்னோக்கிச் செல்கிறது கலைஞரின் அறிவுத்திறன்.
நடிகை, இயக்குனர், எழுத்தாளர் பானுமதி ராமகிருஷ்ணா :
ஆவர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இத்தனை வருடங்களாகக் கட்சியை ஒரு கட்டுக் கோப்பில் வைத்திருப்பது பெரிய விஷயம்தான். பல பிரச்னைகளைத் தாண்டி ஒரு உறுதியான நிர்வாகத்தை எப்போதும் தர முடியுமெனில் அது கலைஞர் ஒருவரால்தான் முடியும்.
தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் ஏகேஏ அப்துல் சமது:
தமிழகத்தில் வாழ்ந்த பெரியவர்கள் அத்தனை பேரையும் அரசியல் வேறுபாடு கருநாமல் போற்றிப் புகழ்வது கலைஞரிடத்தில் உள்ள ஒரு சீரிய பண்பு. தமது எழுத்தால் பேச்சால், கவிதையால், இலக்கியத்தால் நிர்வாகத் திறமையால் அழுத்தமான முத்தியைப் பதித்தவர்.
அவருக்கு மலர் சொரிபவர்களும் இருக்கிறார்கள்; கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆக, தமிழகத்தில் என்றும் பேசப்படும் தலைவராக கலைஞர் உயர்ந்து நிற்கிறார்.
புகைப்படக் கலைஞர் யோகா:
இருபது, இருபத்தைந்து ஆண்டு காலமாக அவரைப் புகைப்படமெடுத்து வருகிறேன். நெஞ்சுக்கு நீதி மூன்று பாகங்களுக்கும் நான் எடுத்த புகைப்படங்கள்தான் அட்டைப் படங்களாயின. அப்பாயின்ட்மென்ட் தந்துவிட்டால், போட்டோகிராபர்களுடன் ஒத்துழைப்பதில் அவருக்கு நிகர் அவரே! அவரைப் படமெடுத்த அனுபவங்களை பாக்கியமாகக் கருதுகிறேன்
பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் :
தமிழகத்தின் முத்த அரசியல்வாதிகளில் ஒருவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். மிகச் சிறிய வயதிலிருந்தே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, தமது உழைப்பாலும் திறமையாலும் தமிழகத்தின் முதல்வர் பொறுப்புக்கு உயர்ந்த பெருமைக்குரியவர். எழுத்தாற்றல் மூலமாக எழுச்சி உண்டாக்க முடியும்என்பதற்கு எமர்ஜென்சி காலத்தில் முரசொலியில் அவர் எழுதிய கலைஞர் கடிதமே சான்று.
முதல்வர் பொறுப்பில் இருக்கும்போது காட்சிக்கு எளியவராக இருக்கிறார் என்பது இவரை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. பல்லாண்டு காலம் அவர் வாழ்ந்து, பொது வாழ்வில் அவர் தொடர்ந்து தொண்டாற்றத் தேவையான ஆரோக்கியத்தை அருளுமாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
கல்கி 07.06.1998 இதழிலிருந்து
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி