கலைஞர் கருணாநிதியின் சமயோசிதமும் நகைச்சுவையும்! | கலைஞர் 100

கலைஞர் கருணாநிதியின் சமயோசிதமும் நகைச்சுவையும்! | கலைஞர் 100
Nandhini G

தாளில் எழுதிவைத்துக்கொண்டோ அல்லது மனப்பாடம் செய்துகொண்டோ பேசும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மடைதிறந்த வெள்ளமாய் சமூகம், அரசியல் என அனைத்துவிதமான விஷயங்களையும் நகைச்சுவையாகவும் நருக்கெனவும் பேசுவதில் கலைஞர் கருணாநிதிக்கு நிகர் அவரேதான். சட்டமன்றமானாலும், பொது நிகழ்ச்சிகள் என்றாலும் அவரது சமயோசித பேச்சு அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாகக் கவர்வதோடு, யோசிக்கவும் வைக்கும். கேள்விகள் எதுவானாலும் அதற்கு அவர் தரும் பதில்கள், அவரை எதிர்ப்போரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா உலகமெங்கும் வாழும் தமிழர்களால் நாளை கொண்டாடப்படவிருக்கிறது.

கலைஞர் கருணாநிதியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பத்து கேள்விகளுக்கு அவர் தந்த நகைச்சுவை கலந்த, யோசிக்க வைக்கும் பதில்களைக் காண்போம்.

கேள்வி 1: ‘ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்துக்கு உள்ளே போகும்போது என்ன நினைப்பீர்கள்?'

பதில்: ‘கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று!'

கேள்வி 2: ‘செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே?'

பதில்: ‘செவ்வாயில் இருந்தால் அது உமிழ்நீர்; தண்ணீர் அல்ல!'

கேள்வி 3: `விவாதம் – வாக்குவாதம் - விதண்டாவாதம் இவை மூன்றும் எப்படி இருக்க வேண்டும்?'

பதில்: `விவாதம் - உண்மையாக இருக்க வேண்டும். வாக்குவாதம் - சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும். விதண்டாவாதம் – தவிர்க்கப்பட்டாக வேண்டும்!'

கேள்வி 4: ‘சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் உள்ள வித்தியாசம்?’

பதில்: ‘மனக்கணக்குக்கும் வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்!’

கேள்வி 5: ‘இளம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?'

பதில்: ‘இளம் வயதில் அரசியல் என்பது அத்தைப்பெண் போல. பேசலாம், பழகலாம், சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால், தொட்டு மட்டும் விடக்கூடாது!'

கேள்வி 6: ‘கோழி முதலா, முட்டை முதலா?'

பதில்: ‘முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல்!'

கேள்வி 7: ‘தலையில் முடி இல்லாதது குறித்து எப்போதாவது வருந்தி இருக்கிறீர்களா?'

பதில்: ‘இல்லை. அடிக்கடி முடி வெட்டிக்கொள்ளுவதற்கு ஆகும் செலவு மிச்சமென்று மகிழ்ந்துதான் இருக்கிறேன்!'

கேள்வி 8: ‘நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன் - ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?'

பதில்: ‘நினைவாற்றலுடன்கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் முக்கியம்!''

கேள்வி 9: ‘உங்கள் அமைச்சரவையில் உள்ளவர்களில் உங்கள் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப்படுத்துங்களேன்?'

பதில்: ‘மனதிலே இடம்பெற்ற பிறகுதானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்!’

கேள்வி 10: ‘கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் முதலைகள் விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா?'

பதில்: ‘ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் `முதலை' கூவம் ஆற்றில் போட்டிருக்கிறது!'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com