மகேஷ் குமார்.'ட்ரிப்ளிகேன்' என்று அன்புடன் அழைக்கப்பெறும் திருவல்லிக்கேணியில் ஒரு நல்ல அறை கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்த காலம்.."தோ… இங்கதான்… பார்ஸாதி நாய்டு தெரு… சந்து உள்ள மாமி மெஸ். பக்கத்துலயே ரூம். விஜய் சார் அங்கதான் இருப்பார். கூட்டிவரச்சொன்னார். போன வாரம் பாத்தபோது ஒரு ஆளுக்கு இடம் இருக்குன்னாரு" என்றான் நண்பன் தாணு..சந்துக்குள் நுழையும்போதே ஒரு சைக்கிளின் மேல் உட்கார்ந்து இருந்தார். 30 வயது இருக்கலாம். நீலக்கலரில் கதர் ஜிப்பா. ஜீன்ஸ். சீரமைக்கப்பட்ட தாடி மீசை. கண்ணாடி. பின்பக்கமாக படிய வாரிய தலை. சின்னதாக ஒரு குதிரைவால் குடுமி ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கியது. சராசரியைவிட உயரம். ஒல்லி. கையில் ஏரியல் நீட்டிய ஒரு சின்ன டிரான்ஸிஸ்டர்..என்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திவைத்துவிட்டு வேறு வேலை இருப்பதாகச் சொல்லி தாணு போய்விட்டான்.."வா… உள்ள போலாம். ரூமைக் காட்டறேன். நாங்க 3 பேரு இருந்தோம். சுரேஷ் ஊருக்கே போயிட்டான். நானும் ரமணியும் இருக்கோம். ரெண்டு பேர்தான் அலவ்டு. ஆனா நான் அப்பப்பதான் வந்து போவேன். அதனால மேனேஜ் பண்ணிக்கலாம். ரமணிக்கும் ஓகேன்னா நீ வரலாம்.".அறை பேச்சிலர்கள் அறையின் இலக்கணம் வழுவாமல் இருந்தது. ஓடு வேய்ந்த அறை. சுவற்றில் மேலே லாஃப்ட் போல இருந்த ஒரு நீண்ட மரப்பலகை மேல் செய்தித்தாள்களும் புத்தகங்களும் அடுக்கியிருந்தன. கீழே இரண்டு தகரப்பெட்டிகள். ஒன்றில் 'ரமணி CA" என்று கிறுக்கலாக எழுதியிருந்தது. மற்றதில் "வி.நா".."நான் விஜய் நாக். அஸிஸ்டென்ட் டைரக்டர். பாதி நாள் சாலிகிராமத்துல இருப்பேன். இப்ப 3 படத்துக்கு வேலை செய்யறேன். தூர்தர்ஷன் செவ்வாய்க்கிழமை டிராமாவுல என் பேரைப் பாத்திருப்பியே" என்றார்..தூர்தர்ஷன் செவ்வாய் இரவு 1 மணிநேர நாடகம் பற்றிய ஜோக்குகள் எல்லாம் நினைவுக்கு வந்தாலும் அதைக் கலைத்துவிட்டு "சில நாடகங்கள் பார்த்திருக்கேன். ஆனா, உங்க பேர் பார்த்த நினைவு இல்லை. பார்த்திருக்கலாம்" என்றேன்.."சரி சரி… நடிக்க வேண்டாம். நான் ஒன்ணும் அலட்டிக்கமாட்டேன். அடுத்த தடவை சொல்றேன். மறக்காமப் பாரு" என்று சிரித்தார்.."சரிங்க. ரமணி சார் இருக்காரா? எப்ப வருவார்? அவரும் சரின்னா இன்னிக்கே வந்துடட்டுமா? வாடகை எவ்வளவு? அட்வான்ஸ் எத்தனை?"."ஹலோ… இத்தனை கொஸ்டின்ஸ் ஒரே மூச்சுல கேட்டா பாடி தாங்காது. மெதுவா… மெதுவா… "."இல்ல சார். ரூம் கிடைக்காம அங்க இங்கன்னு ரெண்டு நாளைக்கு ஒரு தரம் பொட்டி படுக்கையோட அலையறேன். அலுப்பா இருக்கு"."போன மாசம் மெட்ராஸ் வந்துட்டு அதுக்குள்ள அலுப்பா? அம்மன் கோயில் தீ மிதி மாதிரி இந்த ஊர்ல கால் மாத்தி கால்தான் நின்னாகணும். இல்லேன்னா கஷ்டம்பா… ஆமா எங்க வேலை உனக்கு?"."வேலைன்னு இல்லை. அப்ரண்டிஸ் ட்ரைனிங். மணலி ரிஃபைனரி. பஸ் இங்க ஸ்டேடியம் பக்கத்துல கார்த்தால 6.30 மணிக்கு வரும். திரும்ப சாயங்காலம் 6 மணிக்கு மேல ஆயிடும். ஒரு வருஷம் ட்ரைனிங். ஸ்டைபண்ட் தராங்க. டிஃபனும் லஞ்சும் அங்க கேண்டீன்லயே… சனி ஞாயிறு லீவு"."ஓ… அப்ப பிரச்னையே இருக்காது. சனி ஞாயிறுதான் நான் ரொம்ப பிஸி".பிறகு அன்று ரமணியும் வந்தபின் பார்த்துப் பேசி ஓகே சொன்னதால் அன்று இரவே இடம் பெயர்ந்துவிட்டேன். விஜய் நாக் அன்று இரவு வரவில்லை.."நானும் அவனும் கும்பகோணத்துல ஸ்கூல்மேட்ஸ். நான் இப்ப சிஏ ஃபைனல் பண்றேன். பாஸ் பண்ணிட்டுதான் வேலைக்கு போகணும். விஜய் பெரிய்ய அஸிஸ்டண்ட் டைரக்டர்னு சொல்லியிருப்பானே… சங்கர் நாக், அனந்த் நாக் மாதிரி சௌகர்யமா விஜய் நாகராஜன்கற பேரை 'விஜய் நாக்'னு மாத்திக்கிட்டான். அவனும் அலை அலைன்னு அலையறான். ப்ரேக் ஒண்ணும் கிடைக்கல. கிடைச்சுரும். பாவம் ரொம்ப நல்லவன்… அவனுக்கு இங்க மெஸ்ல போடற அடை அவியல் ரொம்பப் பிடிக்கும். அதான் அவனுக்கு 'அடை'ன்னு ஒரு டைட்டில் நான் குடுத்தேன். ஆனா, அவன் அதை அஸிஸ்டண்ட் டைரக்டர்னு சொல்லிப்பான்" என்று ரமணி சிரிக்க நானும் சேர்ந்து சிரித்தேன்..விஜய் அவ்வப்போது திடீரென வருவார். ஏதேதோ பேரெல்லாம் சொல்வார். பேனர், நாட், சினாப்ஸிஸ், க்ளான்ஸ் என்று சில வார்த்தைகள் அடிக்கடி விழும்.."உக்காரு. டைம் இருக்கில்ல? எங்கயும் போகலைல்ல? அடுத்த தூர்தர்ஷன் டிராமாக்கு ஒரு ஸ்க்ரிப்ட் பண்ணிட்டேன். நாளைக்கு மீட்டிங்… சொல்றேன் கேளு…." என்று ஆரம்பித்தால் சீன் சீனாக அடுத்த 2 மணி நேரம் சொல்வார். கதை சொல்லும்போது மட்டும் இடையில் நமக்கு போர் அடித்து கொட்டாவி விட்டாலோ, மணியைப் பார்த்தாலோ வருமே ஒரு கோவம் !! ஆஹா !! டீ குடிக்கலாம் என்றால் மட்டும் வேண்டாவெறுப்பாக கூட வருவார். ஆனால் கதை தொடர்ந்துகொண்டேயிருக்கும்..நிலைய வித்வான்கள் போல இருந்த அன்றைய தூர்தர்ஷன் டிராமா நட்சத்திரங்களான உமா, கம்பர் ஜெயராமன், மாஸ்டர் ஸ்ரீதர், எ.ஆர்,எஸ். போன்றோர் தவிர மற்றவர்கள் அவருடைய ஸ்க்ரிப்டுக்குக் கொஞ்சமும் சரிப்பட மாட்டார்கள் என்பார். அவர் 'அடை'யாக வேலை செய்த பல நாடகங்களின் கதையை அவை ஒளிபரப்பாவதற்கு முன்பே எங்களுக்கு உற்சாகத்துடன் சொல்லியிருக்கிறார். என்ன… நாம்தான் குறுக்கே கேள்வி கேட்காமல் முழுவதும் கேட்கவேண்டும். அன்றைக்கெல்லாம் கேட்டதற்குக் கூலியாக ரத்னா கஃபேயில் வாளி சாம்பாருடன் இட்டிலிகளும் ரஸ்மலாயும் கிடைக்கும்..ஒருநாள் மாலை அறைக்கு வரும்போது துவைக்கும் கல் அருகில் தாடியை ட்ரிம் செய்தபடி நின்றிருந்தார். ஜிப்பா ஜீன்ஸ் இல்லாமல், விரித்த கூந்தலும்(!) ஒட்டிய வயிறுமாக… எனக்கே அடையாளம் தெரியவில்லை. அறைக்குள் வந்தபோது முகம் முழுவதும் வருத்தம் அப்பியிருந்தது. என்னைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.."என்னங்க ஆச்சு? என்னவோ போல இருக்கிங்க…".இடுப்பில் வெறும் துண்டோடு மூலையில் கால்நீட்டி உட்கார்ந்திருந்தவர் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் என்னை முறைத்தார். கொஞ்சம் பயமாகவே இருந்தது. அவரின் கோவமும் எனக்குத் தெரியுமாதலால் மெல்ல வெளியே நகர்ந்தேன். விருட்டென எழுந்துவந்து என் கையைப்பிடித்து நிறுத்தினார். விறுவிறுவெனப் போய் அவருடைய பெட்டியைத் திறந்தார். சின்னதும் பெரியதுமாக பைண்ட் செய்யப்பட்ட பல நோட்டுகள். 50 அல்லது 60 இருக்கலாம்.."எல்லாம் என் ஸ்க்ரிப்ட்ஸ். ஒண்ணு எடுத்துப்பாரு" என்று ஒன்றைக் கையில் கொடுத்தார்..முதல் பக்கத்தில் அழகிய கையெழுத்தில் கதையின் பெயரும் 'எழுத்தும் உரிமையும்: விஜய் நாக்' என்று இருந்தன. அடுத்த இரண்டு பக்கங்களில் தேதிவாரியாக நேரம், சந்தித்த நபர், பேனர், டைரக்டர் என்று சில விவரங்கள். நூலகப் புத்தகங்களில் இரவல் பெற்றவர்களின் பட்டியல் போல இருந்தது.."பாரு… எத்தனை பேருக்கு சொல்லியிருக்கேன். இது மாதிரி அத்தனை ஸ்க்ரிப்டும். ஒருத்தருக்கும் ரசனையே கிடையாது. பத்து தடவ அலையவிட்டுட்டு அப்பறமா அரைகுறையாக் கேட்டுட்டு அவனைப் போய்ப் பாரு; இவனைப் போய்க் கேளும்பாங்க. ஆனா ஒரு வருஷம் கழிச்சுப் பார்த்தா என்னோட சீன் ஒண்ணு அவம்படத்துல இருக்கும். திருட்டு….." அதற்கு மேல் தடித்தடியாக விழுந்த வார்த்தைகளை அள்ளி வெளியே கொட்ட ஒரு ஜேசிபி வேண்டியிருந்தது. எனக்கோ தர்மசங்கடமாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. சொன்னாலும் அவருக்குக் கோவம் அதிகம்தான் ஆகும் என்று தெரிந்தது..இதற்குள் ரமணியும் வந்துவிட, கொஞ்சம் புருவம் உயர்த்தி என்னைப் பார்த்தவருக்குப் புரிந்துவிட்டது. 'நான் பாத்துக்கறேன்' என்று கண்ணாலேயே சொன்னார். கொஞ்ச நேரத்தில் புயல் கரையைக் கடந்தது..மறுநாள் ரமணியோடு கடற்கரைக்குப் போனபோதுதான் இது அடிக்கடி நிகழ்வது என்று தெரிந்தது..'அடை' பாக்கெட்டில் 20 ரூபாய்க்கு மேல் இருந்து பார்த்ததில்லை. இரண்டே சிகரெட்டுகள் உள்ள வில்ஸ் ஃபில்டர் சிகரெட் பாக்கெட்டும் இருக்கும். ஆனால் அவர் சிகரெட் பிடித்துப் பார்த்ததாக நினைவில்லை.."அடைக்கு எப்பவும் பணத்துக்கு முடைதான். அப்பப்ப 50,100 கேப்பான். நான்தான் குடுக்கறேன். ஆனா உன்கிட்டயும் கேட்டா தாட்சண்யம் பார்க்காம இல்லைன்னே சொல்லிடு. நான் குடுக்கறேன்னா எங்க கதை வேற. ஸ்க்ரிப்டு, கதை, கத்திரிக்காய்னே வருஷமா அலையறான். என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கறான். எம்.காம் படிச்சிருக்கான். செம இண்டெலிஜெண்ட். ரொம்பத் தள்ளாடினபோது எங்க அசோசியேட்ல வேலை வாங்கிக் குடுத்தேன். சிஏ ஆபிஸ்ல ஜிப்பாவும் போனி டெய்லும்!! மேட்ச் ஆகாத ப்ளவுஸ் பிட்டை பொம்மனாட்டிக ஒதுக்கற மாதிரி இவனை ஒதுக்கிட்டா. அவன் தலைல என்ன எழுதியிருக்கோ…" என்றார் ரமணி..ஒரு சனிக்கிழமை காலை வி.நா.விடம் ஷூட்டிங் பார்க்க முடியுமா என்று கேட்டேன். ப்பூ… இவ்வளவுதானே… என்று பஸ் பஸ்ஸாக மாறி வளசரவாக்கம் தாண்டி எங்கோ அழைத்துச்சென்றார். மெட்ராஸை விட்டே வெளியே வந்துவிட்டதுபோல இருந்தது. ஏதோ ஒரு பெரிய டிப்போவில் செட் போட்டு ஷூட்டிங்.."என் ஸ்க்ரிப்ட்தான். டயலாக்கும் நானேதான். ஃபர்ஸ்ட் ஷெட்யூல் போகுது. ஏப்ரல்ல ரிலீஸ்" என்று ஆரம்பித்து வழக்கம்போல உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே போனார். கேட்கும் நமக்கே காது வலிக்கிறதே.. இவருக்கு வாய் வலிக்காதா என்று ஆகிவிட்டது..யூனிட்டில் சாப்பாடெல்லாம் கூட அருமையாகக் கிடைத்தது. மாலை அங்கிருந்து இன்னும் தள்ளி ஏதோ ஒரு வீட்டுக்கு அழைத்துப்போனார். வெளியே போர்டில் "அகவிழி" என்று எழுதியிருந்தது..உள்ளே 5லிருந்து 15 வயது வரை 30க்கும் மேற்பட்ட குழந்தைகள். எல்லோரும் பார்வையிழந்தவர்கள் என்பது பிறகுதான் தெரிந்தது. அங்கிருந்த பெரியவரிடமும் வேறு ஒரு அம்மாளிடமும் ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு சில கட்டுகள் ரூபாய் நோட்டுகளை பேண்டிலிருந்து எடுத்துக் கொடுத்தார்.."அப்பப்ப ஒரு புது டைரக்டர் மாட்டுவான். என் ஸ்க்ரிப்டுல இருந்து ஒண்ணு ரெண்டு சீன் சொல்லி பைசா கறந்துடுவேன். என்னை மாதிரி ஆளுகள ப்ரட்யூசர்க மதிக்க மாட்டாங்க. டைரக்டருகளுக்கு தலை மேல நாலு கொம்பு. முட்டி மோதிப் பார்த்துட்டு வெறுத்துப்போயிட்டேன். இப்ப சீன் வித்து சம்பாதிக்கிறேன். அன்னிக்கு நான் கோவமா இருந்தேனே… அந்த சீனுக்கு 10000 குடுக்கணும். ஆனா ஏமாத்திட்டான். அது இந்தக் குழந்தைகளுக்கு 1 மாசம் போல வரும். எனக்கு வேணுங்கறதுக்கு ரமணி இருக்கான். குடுப்பான். இந்தக் குழந்தைகளுக்கு யார் குடுப்பாங்க? கொஞ்ச வருஷம் முன்னால இதே மாதிரி ஒரு ஷூட்டிங் வரும்போதுதான் இப்படி ஒரு இடம் இருக்கறரு தெரிஞ்சுது. என்னவோ அன்னிக்கு சட்டுனு தோணுச்சு. வேற யோசிக்கவேயில்ல. அன்னிலேர்ந்து நான் டேக் ஓவர் பண்ணிட்டேன். எனக்கு அப்பா அம்மா கிடையாது. நான் கல்யாணமும் பண்ணிக்கப் போறதில்லை. இவங்களைக் கொஞ்சம் படிக்க வைக்கிறேன். சினிமால நடிக்க வைக்கிறேன். ரெண்டு மூணு பேர் ரெகுலராவே நடிக்கிறாங்க. என்னால அவ்வளவுதான் பண்ணமுடிஞ்சது…" என்று சொல்லியபடி வேறெதுவும் பேசாமல் ஆற்காடு சாலை வரை நடந்தே வந்தோம். அன்றுதான் அவர் சிகரெட் புகைத்துப் பார்த்தேன்..அதன் பிறகு வி.நா.வுடன் சில முறை அங்கு சென்றுவந்தேன். ஆனால் அங்கு வரும்போதெல்லாம் அவர் அமைதியாகிவிடுவதைக் கவனித்தேன். ரமணியையும் அழைத்தேன். ஏனோ அவர் ஒருமுறை கூட வரவில்லை..மணலி ஆலையில் பயிற்சிக்காலம் முடிந்தபின் எங்களில் வெகு சிலரையே நிரந்தரமாக வேலைக்கு வைத்துக்கொண்டார்கள். வேறு வழியின்றி நானும் ஊருக்குத் திரும்பிவிட்டேன். வி.நா.வை பார்த்து விடைபெற முடியவில்லை. அவர் அறைக்கும் வரவில்லை. "அகவிழி"யிலும் பார்க்க முடியவில்லை..ஓரிரு வருடங்கள் கழிந்து மீண்டும் சென்னை வந்தபோது ரமணியைத்தான் அவரது அலுவலகத்தில் பார்க்க முடிந்தது. வி.நா. பற்றிக் கேட்டேன்.."அவன் எங்க போனான்னே தெரியல. ஏதோ அவுட்டோர் ஷூட்டிங்னு போனவந்தான். திரும்ப வரவேயில்ல. இன்னி வரைக்கும் ஒரு தகவலும் இல்ல. இன்னும் விசாரிச்சுண்டுதான் இருக்கேன். எங்க மாயமாப் போனானோ… "."அய்யோ…. அப்ப 'அகவிழி'?."அது இப்ப நான் பாத்துக்கறேன்" என்றார் ரமணி..(தொடரும்)