தேவமனோகரி – 24

தேவமனோகரி – 24
Published on

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

முதலில் திவ்யாவிடம்தான் பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள் மனோகரி. ஆனால், அவளே எதிர்பாராத விதமாக மீனாட்சி தன் போக்கில் எதையோ சொல்லி ஒரு புதிய பலத்தைத் தந்திருக்கிறாள்.

இனி திவ்யாவிடம் பேசிவிட வேண்டியதுதான். நேரில் பேசுவதைவிட அலைபேசியில் பேசுவது வசதியாக இருந்தது. உணர்வுகள் வெளிப்படாத வகையில் ஒரு சாதாரண விஷயத்தைப் போல் சொல்ல முடிந்தது.

மறுமுனையில் இருந்த திவ்யாவுக்கு இனிய அதிர்ச்சிதான்.

"அப்படியா ஆன்ட்டி! நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. அவரே சொன்னது போல நீங்க நிறைய டைம் எடுத்துக்கோங்க ஆன்ட்டி. எந்த முடிவாக இருந்தாலும் யோசிச்சு எடுத்தாதான் சரியாக இருக்கும்."

"நீ என்ன நினைக்கிறேன்னு சொல்லவே இல்லையே திவ்யா?"

மனோகரியின் இந்தக் கேள்வி திவ்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்படிக் கேட்பது ஆன்ட்டியின் இயல்பு கிடையாதே.

"நீங்கள் மட்டும் சம்மதம் தெரிவித்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ஆன்ட்டி." என்ற திவ்யாவின் குரலில் உற்சாகம் பொங்கியது.

"நான் எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை திவ்யா. ஏதோ உன்னிடம் பகிர்ந்து கொள்ளணும்னு தோணுச்சு. அவ்வளவுதான்."

திவ்யாவுக்கு சிரிப்பு  மூண்டது.

"புரியுது ஆன்ட்டி. நீங்க முடிவெடுக்கிற வரைக்கும் நான் யாரிடமும் சொல்லமாட்டேன்."

*******

றுநாள் இனியாவுக்கு ஃபோன் செய்து தன் ஆபீசுக்கு வரச்சொன்னாள் திவ்யா.

அவளிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னாள்.

இனியாவின் கண்கள் விரிந்தது.

"நிஜமாகவா அக்கா? மேடம் ஒத்துக்க மாட்டாங்களே?"

"எனக்கென்னவோ அவங்க அரை மனசா இருக்காங்கன்னு தோணுது. கொஞ்சம் யாராவது பேசிப் பார்த்தா சம்மதிச்சிடுவாங்க."

திவ்யா நவீனுக்குப் ஃபோன் செய்தாள். விஷயத்தைப் பக்குவமாகச் சொன்னாள்.

"என் எதிரில் இனியாவும் இருக்கா. அவரைப் பற்றி ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா அவளிடம் கேட்டுப்பாரு நவீன். என்னைவிட அவளுக்கு நிறைய தெரியும். அவருடைய வீட்டுக்குக் கூட போயிருக்கா."

"வெயிட்…வெயிட்…  லிஸின் திவ்யா. முடிவை அம்மாதான் எடுக்கணும். இந்த விஷயத்தில் அவர் யாரு, எப்படின்னெல்லாம் நான் தெரிஞ்சுக்க வேண்டியது அவசியமேயில்லை. இது முழுக்க முழுக்க அம்மாவுடைய பர்ஸனல் மேட்டர்."

"சரி தெரிஞ்சுக்க வேணாம். ஆனா அம்மாகிட்டே உன் கருத்தை சொன்னா அவங்க ஒரு நல்ல முடிவா எடுப்பாங்க தானே?"

"நோ சான்ஸ். ஏற்கெனவே நான் நிறைய கருத்தெல்லாம் சொல்லியாச்சு. நௌ த பால் இஸ் இன் ஹெர் கோர்ட். நான் இதுல தலையிட விரும்பலை. ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் திவ்யா."

அயர்ந்து போனாள் திவ்யா. "அம்மாவுக்கு இருக்கும் தெளிவைவிட பிள்ளைக்கு இருக்கும் தெளிவு அபாரமாய் இருக்கு இனியா" என்றாள்.

"இவன்தான் பல தடவை எனக்கு ஃபோன் செய்து இதைப் பற்றி பேசியிருக்கான். இப்போ ஒரு மனுஷன் நிஜமாகவே ப்ரபோஸ் பண்ணியிருக்கும்போது எப்படி நழுவுறான் பாரு."

"அவர் நழுவலைன்னு எனக்குத் தோணுது. அவங்க அம்மா குணம் அவருக்கு நல்லாத் தெரியும். தான் எதையாவது பேசி விஷயம் கெட்டுப் போகுமோன்னுதான் தயங்கறாரு."

"ஓ! நீ சொல்றது சரிதான் இனியா. இப்போ நாம என்ன செய்யலாம்? நான் வேற ஆன்ட்டிக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன். யாருகிட்டேயும் சொல்லமாட்டேன்னு. ஆனா விஷயம் மேற்கொண்டு நகரணும்னுதான் உனக்கும் நவீனுக்கும் தெரியப்படுத்தினேன்."

"நீங்க சொன்னதுல ஒரு தப்பும் இல்லை அக்கா. நாம கொஞ்சம் டைம் கொடுப்போம். அவங்களா ஒரு நல்ல முடிவை எடுக்கட்டும்." என்றாள் இனியா.

நாட்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. திவ்யாவும் சரத்தும் பெங்களுருக்கு குடிபெயர்ந்தார்கள்.

எப்போதும் மகள் விஷயத்தில் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும் மீனாட்சி நிதானத்துக்கு வந்திருந்தாள். அமைதியாக விடைகொடுத்தாள்.

ஸ்டேஷனுக்கு வந்திருந்த இனியாவுடன் திவ்யா தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

"நீ சொன்னது சரிதான் இனியா. நேற்றுகூட நவீன் ஃபோன் செய்தான். அவங்க அம்மா சம்மதிச்சிட்டாங்களான்னு ஆர்வமா கேட்டான். அவங்க மட்டும் சம்மதிச்சா சந்தோஷத்தில் துள்ளி குதிப்பான்."

*******

சிவநேசனிடமிருந்து மனோகரிக்கு ஒரு நினைவூட்டல் குறுஞ்செய்தி வந்திருந்தது.

மனோகரியின் மௌனம் தன்னை வதைத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார்.

அதேசமயம் எந்த முடிவுக்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மனோகரிக்கு சிரிப்பு வந்தது. எந்த முடிவுக்கும் தயாராக இருக்கும் ஒருவர் முடிவைத் தெரிந்து கொள்வதில் ஏன் அவசரம் காட்டவேண்டும்?

வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னாலும் கூட அவருடைய மனம் தன் மீது தீவிரமாக நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்கிறது என்பதை மனோகரி உணர்ந்திருந்தாள்.

தன்னுடைய "நோ" என்ற ஒற்றைச் சொல் அவரை வெகுவாக பாதிக்கும் என்று தோன்றியது. பாவம் அவர். வாழ்க்கையில் நிறைய அடிபட்டிருக்கிறார். ஆனால், அதற்காகவெல்லாம் சம்மதித்துவிட முடியுமா என்ன?

நவீனிடமிருந்து கூட ஒரு வாரமாக ஃபோன் வரவில்லை.

அவனுக்குத் தெரிந்தால் நிச்சயமாக சிவநேசனை ஆதரித்து ஒரு பிரசங்கம் செய்தாலும் செய்வான். அவன் ஃபோன் பேசாததே நல்லதற்குதான்.

இரண்டு நாள் கழித்து இவளிடம் புத்தகம் வாங்கிக் கொண்டு போக இனியா வந்திருந்தாள்.

பொதுவாக எதையோ பேசிக் கொண்டிருந்தாலும் அவள் முகத்தில் புதிதாக மிளிர்ந்த குறுகுறுப்பு ஒன்றை மனோகரி கவனிக்கத் தவறவில்லை.

பால்கனித் தோட்டம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

"என்ன ஆச்சு மேடம் உங்களுக்கு? இதையெல்லாம் கவனிக்க நேரமில்லையா?"

கேட்டுக்கொண்டே காய்ந்த இலைகளையெல்லாம் அகற்றினாள் இனியா.

"காக்கா கொண்டு வந்து போட்டிருக்கும் போலிருக்கு. அவரை விதை ஒண்ணு முளைச்சு வந்திருக்கு மேடம்."

"ஓ! நான் கவனிக்கவே இல்லை."

"இந்தச் செடியெல்லாம் எவ்வளவு அதிசயம் மேடம். முதல்ல விதை மண்ணுக்குள்ள விழுது. பிறகு முளைவிட்டு மண்ணுல வேர் பிடிக்குது. அதுவரைக்கும் அது வளரப்போகுதுன்னு நமக்குத் தெரியவே தெரியாது."

"அதுல என்ன தத்துவத்தைப் பாக்கறே இனியா?"

"வெளியில தெரியறதுக்கு முன்னாடி ஒவ்வொரு எண்ணமும் நம்ம மனசுக்குள்ள நம்மையறியாமலே வேர் பிடிச்சுக்குது. பிறகுதான் பச்சையா பூத்து கண்ணுக்குத் தெரியுது."

"ஆமாம், நீ சொல்றது சரிதான். வேர் பிடிக்கிற வரைக்கும் எதுவும் வெளியில தெரியாதுதான்."

இனியா புறப்பட்டுப் போய் வெகுநேரமாகியும் மனோகரி பால்கனித் தோட்டத்தை விட்டு நகரவில்லை.

சிவநேசன் விதைத்தது அவளுக்கே தெரியாமல் வேர் பிடித்துக் கொண்டிருக்கிறதோ! அப்படிதான் இருக்க வேண்டும்.

மீனாட்சி இவள் மறுமணம் பற்றிப் பேசியபோது மனசு சிறகடித்துப் பறக்கத்தானே செய்தது!

திவ்யா ஒரு சின்னப்பெண். அவளுடைய கருத்து முக்கியம் என்று ஏன் கேட்கத் தோன்றியது?

முதலிலேயே இவள் மனசு திடமாக இருந்திருந்தால் இப்படிக் குழம்பித் தவிக்கவே வேண்டாமே?

"வேண்டாம். ஆனால் வேண்டும்…" என்ற ஆழ்மனதின் இரட்டைநிலை மெல்ல புரிபட்டது.

மனோகரிக்கு ஏனோ அழுகை வந்தது. அவள் விசித்து விசித்து அழுதாள்.

மாலையில் நடைபயிற்சிக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தபோது மனசு அமைதியாயிற்று.

மனோகரி எத்தனை தெளிவாக இருந்தாள்! தன் வாழ்க்கையைக் குறித்த தெளிவு!

எதிர்காலத்தில் என்ன செய்வதென்று கூட தீர்மானித்திருந்தாள். இப்போது திடீரென்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு மாற்றி யோசிக்க வேண்டியிருக்கிறதே!

யோசித்து யோசித்து ஆயாசத்தில் உறங்கிப் போனாள்.

மறுநாள் கல்லூரியில் இனியா மனோகரியிடம் தயங்கிக்கொண்டே பேசினாள்.

"ஊரில் அப்பா ஏதோ மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் போலிருக்கிறது மேடம். உடனே கிளம்பி ஊருக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறார். எனக்கு இரண்டு நாள் லீவு வேண்டும்." இனியாவின் முகம் இறுகியிருந்தது.

"இங்கிருந்து போகும்போதே எதிர்மறையாக யோசிக்காதே இனியா. ஒருவேளை உனக்குப் பொருத்தமான பையனாக இருந்தாலும் இருக்கலாம்." என்றாள் மனோகரி.

"முன் பின் தெரியாத ஒருவரைப் பற்றி அப்படி நினைக்க முடியலை மேடம். கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டாமா? பேசிப் பழகியிருக்க வேண்டாமா?"

"உண்மைதான். சில விஷயங்கள் பொருந்தி வந்தால் பேசிப் பழகிப் பார்த்துவிட்டு பிறகு தீர்மானம் செய்யலாமே."

"திடீர்னு இப்ப கல்யாணம் செஞ்சுக்கிறதைப் பத்தியே எனக்கு தயக்கமிருக்கு. ஐ நீட் சம் டைம்."

"வாழ்க்கையில் சில தருணங்கள் ரொம்ப முக்கியம் இனியா. அந்தந்த தருணத்தை அப்படியே ஏத்துக்கிறதுக்கும் மனசைப் பக்குவமா வெச்சிருக்கணும்."

யோசனையில் ஆழ்ந்தபடி அகன்றாள் இனியா.

இனியாவுக்கு சொன்ன விஷயம் தனக்கும்தானே பொருந்தும் என்று மனோகரிக்குத் தோன்றியது.

சிவநேசனிடம் தனது தயக்கங்கள் குறித்து ஒருமுறை நேரில் பேசிப் பார்த்தால் என்ன?

அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் பெசன்ட் நகர் பீச்சில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

சிவநேசனின் முகத்தில் ஆர்வம் பரபரத்தது.

மனோகரி தயங்கிக் கொண்டே பேச ஆரம்பித்தாள்.

"இன்னும் கூட என்னால முடிவெடுக்க முடியலை."

"அதனால் என்ன தேவா? தேவையான அவகாசம் எடுத்துக்கங்க. நான் காத்திருப்பேன்."

"எனக்குன்னு சில லட்சியங்கள் இருக்கு. ரிடையர்மென்டுக்குப் பிறகு சோஷல் சர்வீஸ் பண்ணனும்னு நினைச்சிருக்கேன். திடீர்னு வேற மாதிரி யோசிக்க முடியலை."

"ஸோ வாட்? உங்க சோஷல் சர்வீஸ்ல நானும் இணைஞ்சிருப்பேன்."

மனோகரிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"நீங்க எதையும் மாத்திக்க வேணாம். உங்க வேலை, உங்க குடியிருப்பு எதையுமே மாத்திக்க வேணாம். ரிடையர் ஆகிற வரைக்கும் வீக் எண்டில் நான் அங்கே வர்றேன். நீங்களும் இங்கே வரலாம். நம்ம வாழ்க்கையை இயல்பா ஆரம்பிக்கணும்னு நான் நினைக்கிறேன்."

மனோகரியின் மௌனம் நீடித்தது.

"கல்யாணங்கிற வார்த்தை உங்களை சங்கடப்படுத்துதுன்னு நினைக்கிறேன். அந்த ஏற்பாடு சமூகத்துக்காகதான். முதல்ல நல்ல நண்பர்களா இணைவோம் தேவா. உங்களுக்கு என்னால் எந்த நிர்ப்பந்தமும் இருக்காது."

"உங்க வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையைத் தருது."

"குட்!  நம்ம நட்பின் எல்லையில் ஒரு காதல் வாழ்வு காத்திருக்கும்னு நான் நம்பறேன் தேவா."

சிவநேசனின் மென்சிரிப்பில் குறும்பு கலந்திருந்தது.

தயக்கமும் வெட்கமும் கலந்த ஒரு உணர்ச்சிபாவம் மனோகரியின் முகத்தில் மின்னியது.

இப்படி ஒரு உணர்ச்சிபாவத்தை முதல் முறையாக அவளிடம் கவனித்தார் சிவநேசன்.

ஒரு புதிய நம்பிக்கை காற்றில் கலந்து வந்து இருவரையுமே சிலிர்க்க வைத்தது.

மனோகரியின் பால்கனித் தோட்டத்தில் அவளுக்கே தெரியாமல் மற்றொரு சம்பங்கிச் செடியும் அரும்பு கட்டியிருந்தது.

(முற்றும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com