தேவமனோகரி – 20

தேவமனோகரி – 20
Published on

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

றுநாள் மாணவர்களுடன் மனோகரி சென்னைக்குப் புறப்பட்டபோது வழியனுப்ப வந்திருந்தார் சிவநேசன்.

இனியாவையும் நிர்மலாவையும் அழைத்துக் கொண்டு டாக்ஸியில் போக திட்டமிட்டிருந்தாள் மனோகரி.

ஹோட்டல் ரிஸப்ஷனில் பணம் கட்டிவிட்டுத் திரும்பியபோதுதான் அங்கிருந்த சோபாவில் சிவநேசன் உட்கார்ந்திருந்ததைக் கவனித்தாள்.

"இந்த மூன்று நாட்களும் நீங்கள் இங்கே தங்கியிருந்ததும்,  நாம் பேசிக்கொண்டிருந்ததும் நல்ல அனுபவமாய் இருந்தது. தேங்க்யூ தேவா."

"எனக்கும் ஒரு மாறுதலாகத்தான் இருந்தது."

இனியாவும் நிர்மலாவும் லக்கேஜை டாக்ஸியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

போர்டிகோவை நோக்கி மெல்ல நடந்து கொண்டிருந்த போதுதான் சிவநேசன் தன்னையே கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் மனோகரி.

"இந்தப் புடைவையில் ரொம்ப அழகாயிருக்கீங்க தேவா." என்று அவரையும் மீறி வார்த்தைகள் வெளிவந்திக்க வேண்டும். "இவள் என்ன நினைத்துக் கொள்வாளோ" என்ற பதட்டமும் முகத்தில் பிரதிபலித்தது.

மனோகரியின் முகம் மலரவில்லை. சுருங்கவும் இல்லை. ஒட்டாததுபோல் ஒரு சாதாரணப் பார்வை பார்த்துவிட்டு டாக்ஸியில் ஏறினாள். டாக்ஸி நகர்ந்தது.

வழியில் இனியாவும் நிர்மலாவும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு வந்தார்கள். மனோகரியின் காதில் எதுவும் விழவில்லை. நீண்ட மௌனத்தில் ஆழந்திருந்தாள் அவள்.

மறுநாள் தொலைபேசியில் சிவநேசன் அழைத்தபோது அந்த அழைப்பை தவிர்க்க வேண்டும் என்று ஏனோ அவளுக்குத் தோன்றியது.

நான்கைந்து முறை கூவிவிட்டு ஓய்ந்தது செல்போன்.

***  ***  ***

விடுமுறை முடிந்து கல்லூரி திறந்தாகிவிட்டது. புதிய உற்சாகத்துடன் புறப்பட்டாள் மனோகரி.

இனியாவின் தீஸிஸை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கும் வேலையும் முடிந்துவிட்டது.

"இன்னும் இரண்டு மூணு மாசம் காத்திருக்கணும் இனியா. நீ இங்கே சென்னையில் என்ன செய்யப்போறே? கிராமத்துக்குப் போய் உன் அப்பா அம்மாவுடன் இருந்துட்டு வாயேன்."

இனியாவுக்கு இந்த ஆலோசனை பிடிக்கவில்லை.

"அங்கே போனா எங்க அப்பா மாப்பிள்ளை பார்க்கணும்னு மறுபடியும் ஆரம்பிச்சுடுவாரு மேடம். நான் இங்கேயே இருக்கேன்."

"நோ இனியா,  ஒரு மாசமாவது நீ போய் அவங்களோட இருக்கறதுதான் நியாயம்" என்று சொல்லி வற்புறுத்தி அவளை அனுப்பி வைத்தாள் மனோகரி.

அட்மிஷன் முடிந்து வகுப்புகள் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஹாஸ்டல் மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு பெரிதாயிற்று.  வகுப்புகள் புறக்கணிக்கப்பட்டன.

பிரின்ஸிபால் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டாம் நிலை பேராசிரியர் என்ற வகையில் மனோகரியும் கலந்துகொண்டாள்.

ஏரியா போலீஸ் அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர். மாணவர்களை சமாளிப்பதில் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை அவர்கள் பேசினார்கள்.

நிலைமையை கட்டுப்படுத்த ஆளாளுக்கு ஒரு ஆலோசனையைச் சொன்னார்கள்.

போலீஸ் மீட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தாள் மனோகரி.

பிரபலமான உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து மாணவர்கள் மத்தியில் பேசினால் நல்லது என்ற அவளது யோசனை வந்திருந்த காவல்துறை அதிகாரிகளுக்குப் பிடித்துப்போனது.

அடுத்தவாரமே அரங்கம் நிறைந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேராசிரியர்கள் சார்பில் தன் அனுபவத்தை பேசினாள் மனோகரி.

"போன வருஷம் ஒரு பழைய மாணவன் வந்து என்னை சந்தித்தான். அவன் கதை பரிதாபமானது. அவனுக்கு துபாயில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்தபோதுதான் தன் பெயரில் வழக்கு பதிவாகியிருப்பது அவனுக்கே தெரியவந்தது.  அவன் இங்கே படித்துக் கொண்டிருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவனுக்கே மறந்துபோன அந்த  சம்பவம் அவன் எதிர்காலத்தையே பாழாக்கிவிட்டது."

தொடர்ந்து பேசிய உயர் போலீஸ் அதிகாரி இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் தவறு செய்யும் எவரும் தப்பிக்க முடியாது என்பதைப் புரியவைத்தார். விளையாட்டு வினையாக முடிந்த சில உதாரணங்களைச் சொன்னார்.

அரங்கம் அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தது. விசில் சத்தம் இல்லாமல் நடந்த இந்தக் கூட்டம் எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது.

"மனோகரி மேடம், உங்க ஆலோசனைக்கு ரொம்ப தேங்க்ஸ். புதுசா சேர்ந்திருக்கிற மாணவர்களுக்கு ஆரம்பத்திலேயே ஒரு விழிப்புணர்வு கிடைச்சிருக்கு" என்றார் பிரின்ஸிபால்.

"ஒவ்வொரு வருஷமும் இதை நாம செய்யணும் ஸார். விளைவு தெரியாமதான் நம்ப பசங்க நிறையப் பேர் மாட்டிகிட்டு கஷ்டப்படறாங்க."

***  ***  ***

சிவநேசனின் தொலைபேசி அழைப்பை தொடர்ந்து புறக்கணிக்க முடியவில்லை.

"என்மேல ஏதாவது கோபமா? ஏன் பேச மாட்டேங்கிறீங்க தேவா?"

"ஸாரி, கல்லூரி தொடங்கினதுலேர்ந்து நிறைய வேலை. அதுதான் பேசமுடியலை."

"சமாளிக்காதீங்க. உங்க புடைவை நல்லா இருக்குன்னு நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கலை. அதுதானே காரணம்?"

"ஆமாம். ஒரு சராசரி ஆணைப்போல நீங்க பேசினது சுத்தமா பிடிக்கலை."

"புரியுது. இனிமே அப்படி காம்ப்ளிமென்ட் பண்ணமாட்டேன். அதுசரி, காலேஜ் எப்படிப் போயிட்டிருக்கு?"

"நல்லாதான் போயிட்டிருக்கு."

"ஒரு விஷயம் தேவா. புடைவை நல்லா இல்லைன்னா அதை சொல்லலாம் இல்லையா? அது காம்ப்ளிமென்ட் ஆகாது. கமென்ட். கமென்ட் பண்ணினா எடுத்துக்குவீங்கதானே?"

கடுப்புடன் தொடர்பைத் துண்டித்தாள் மனோகரி.

கொஞ்சம் யோசித்தபோது கோபம் அடங்கியது. உண்மையில் வாய்விட்டு சிரிக்க வேண்டிய அற்ப விஷயமில்லையோ இது! சிரிக்க முயற்சி செய்தாள் மனோகரி.

***  ***  ***

ற்கெனவே நவீனிடம் சிவநேசன் எழுதிய புத்தகத்தைப் பற்றி பேசியிருக்கிறாள் மனோகரி.

சிவநேசனுக்கும் தனக்கும் தொடர்ந்து நடக்கும் விவாதத்தை இப்போது அவள் சொன்னபோது சுவாரசியத்துடன் கேட்டுக்கொண்டான் நவீன்.

"அம்மா, நீங்க சொல்றதுதான் சரி. பெரிய ஸ்காலர்னு பேர் வாங்கறதைவிட நல்ல டீச்சரா இருக்கிறதுதான் முக்கியம்."

"நீ எப்போ வருவே நவீன்?"

"டிசம்பர்ல வருவேன்னு தோணுது. எங்கே உங்க ஸ்டூடன்ட் ஸ்வீட்டி?"

"ஸ்வீட்டி?"

"அதுதான்மா,அந்த இனியா. இனியான்னா ஸ்வீட்டின்னுதானே அர்த்தம்?"

மனோகரிக்கு சிரிப்பு பொங்கியது.

"இதை என்கிட்டே சொன்னதோட நிறுத்திக்க. அவகிட்டே சொன்னா கோபத்துல சீறுவா. ஜாக்கிரதை நவீன்."

இந்தப் பிள்ளையின் குறும்புத்தனம் சில சமயம் எல்லை மீறிப் போகிறது என்று நினைத்துக் கொண்டாள் மனோகரி.

***  ***  ***

டுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் பார்ஸலைக் கொடுத்துவிட்டு வராந்தாவில் வந்து கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

அங்கே தனியாகப் பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமியைப் பார்த்தான்.

காலுக்கருகே வந்த பந்தை குனிந்து எடுத்து சிறுமியிடம் நீட்டினான்.

அவன் பார்வையும்,  அவனிடமிருந்து வந்த மெல்லிய சாராய நெடியும் சிறுமியை அச்சுறுத்தியது. சட்டென்று பாய்ந்து வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்தித் தாளிட்டுக் கொண்டாள்.

கதவுக் கம்பிகளின் நடுவில் தன் முகத்தை பதித்து அவளைக் கண்களால் ஊடுருவினான் அந்த இளைஞன்.

அச்சத்தில் மேலும் உள்ளே நகர்ந்தாள் சிறுமி.

"ஏய் பாப்பா,  மரியாதையா கதவைத் திற. இந்தப் பந்தை வாங்கிக்க." என்று மிரட்டினான்.

சிறுமிக்கு பயம் பிடித்துக் கொண்டது.

"எனக்கு பந்து வேணாம். நீ போ."

"இப்ப கதவைத் திறக்கப்போறியா இல்லையா?"

அவனையறியாமல் அவன் குரல் உயர்ந்து ஒலித்தது. வராந்தாவின் மறுமுனையில் மூச்சுவாங்கப் படியேறி நின்ற மீனாட்சியின் காதிலும் விழுந்தது.

இந்த இரண்டாம் தளத்தில் அவளுக்கு எவரையும் அதிகம் பரிச்சயமில்லை. இவள் இருப்பது மூன்றாம் தளம். லிப்ட் ரிப்பேர் என்பதால் படியேறிக் கொண்டிருந்தாள்.

"யாருப்பா நீ? யாரை மிரட்டறே?" என்று குரல் கொடுத்துக் கொண்டே இரண்டடி எடுத்து வைத்தாள்.

சட்டென்று பந்தை கீழே நழுவவிட்டு விட்டு மீனாட்சியை விடுவிடுவென்று கடந்து படிகளில் இறங்கி மறைந்துபோனான் அவன்.

ஒரு கணம் திகைத்தாள் மீனாட்சி. தாளிட்டிருந்த கதவருகில் போனபோது உள்ளிருந்த சிறுமி அவளைப் பார்த்தவுடன் அழ ஆரம்பித்தாள்.

"ஆன்ட்டி,  நல்ல நேரத்துக்கு இங்கே வந்தீங்க. அந்த ஆளு கதவைத் திறக்கச் சொல்லி என்னை மிரட்டிகிட்டிருந்தான். "

பயத்தில் உடல் நடுங்க நின்று கொண்டிருந்த சுஜாவை மெல்ல அணைத்துக் கொண்டாள் மீனாட்சி.

"உன் அம்மா எங்கே போயிருக்காங்க?"

"அவங்க வேலையிலேர்ந்து வர்றதுக்கு ஆறு மணி ஆயிடும் ஆன்ட்டி. அதுவரைக்கும் நான் தனியாதான் இருப்பேன். கதவையே திறக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. பந்து விளையாட வெளியே போனேன். அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க"  கேவினாள் சுஜா.

மீனாட்சிக்குப் புரிந்தது. இன்றைக்கு நிறைய வீடுகளில் இதுதான் நிலைமை. கொஞ்சம் ஏமாந்திருந்தால் எத்தகைய விபரீதம் நேர்ந்திருக்கும்? நல்லவேளையாக சுஜா சட்டென்று கதவைத் தாளிட்டுக் கொண்டிருக்கிறாள்.

சுஜாவின் அம்மா வரும் வரையில் அங்கேயே காத்திருந்தாள் மீனாட்சி.  நடந்த விஷயத்தைக் கேட்டுப் பதறினாள் அவள் அம்மா.

"நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? இனிமே சுஜா தனியா இருக்க வேண்டாம். ஸ்கூல்லேர்ந்து நேரா எங்க ஃப்ளாட்டுக்கு வந்துரட்டும். நீங்க வர்ற வரையில் நான் பார்த்துக்கறேன்."

"உங்களுக்கு சிரமமா இருக்காதா?"

"இதிலென்ன சிரமம்? எனக்கு ஒரு பேத்தி  இருந்தா செய்யமாட்டேனா?"

"உங்க ஹஸ்பண்ட்………"

"அவர் ஒண்ணும் சொல்லமாட்டாரு. அவரும் குழந்தைங்ககிட்டே பாசமாதான் இருப்பாரு. இப்பகூட எதிர் போர்ஷன்ல இருக்கிற குழந்தை பாதி நேரம் எங்க வீட்டுலதான் இருக்கான்."

சுஜாவின் அம்மாவுக்கு நெகிழ்ச்சியில் கண் கலங்கியது.

***  ***  ***

"சொல்லுங்க ஸார், நான் உங்களுக்கு என்ன செஞ்சு தரணும்?" என்று கேட்டாள் திவ்யா.

"ஐ ஆம் டாக்டர் சிவநேசன். எனக்கு அனிமேஷனும், சில தொழில்நுட்பங்களும் தேவைப்படுது."

"என்ன ப்ராஜெக்ட் ஸார்?"

"ஸ்போகன் இங்கிலீஷ். இதுதான் மெட்டீரியல்."

அவர் கொடுத்ததை வாங்கிப் பார்த்தாள் திவ்யா.

"யாருக்கு? சின்ன குழந்தைங்களுக்கா?"

"இல்லை. காலேஜ் ஸ்டூடன்ஸ்க்கு."

"ஆனா ரொம்ப ஸிம்பிளா இருக்கே?"

"ஸிம்பிளாதான் இருக்கணும். தனசேகரன் கல்லூரி மாணவர்களுக்காக தயார் செய்திருக்கேன்."

"தனசேகரன் கல்லூரி" என்றவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள் திவ்யா.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com