பாடகர் விக்னேஷ் ஈஸ்வருக்கு கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது! திருவிழா கோலம் பூண்ட கச்சேரி மேடை...

கச்சேரி மேடைகளைத் திருவிழாவாக்கி வரும் பாடகர் விக்னேஷ் ஈஸ்வருக்கு கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது (2026) வழங்கினார் சங்கீத கலாநிதி விதுஷி பாம்பே ஜெயஸ்ரீ!
கல்கி விருது - Kalki Award 2026
கர்நாடக இசைப் பாடகர் வித்வான் விக்னேஷ் ஈஸ்வருக்கு கல்கி விருது புகைப்படங்கள்; ஸ்ரீஹரி
Updated on
Kalki Strip
Kalki Strip

கச்சேரி மேடைகளைத் திருவிழாவாக்கி வரும் பாடகர் விக்னேஷ் ஈஸ்வருக்கு கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது (2026) வழங்கினார் சங்கீத கலாநிதி விதுஷி பாம்பே ஜெயஸ்ரீ!

01.08.2026 அன்று மாலை 6 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள ராகசுதா அரங்கத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பில் வளர்ந்து வரும் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. சங்கீத கலாநிதி, விதுஷி பாம்பே ஜெயஸ்ரீ விழாவிற்கு தலைமை தாங்கி கல்கி விருது வழங்கினார். இளம் கர்நாடக இசைப் பாடகர் வித்வான் விக்னேஷ் ஈஸ்வர் விருதினை பெற்றுக்கொண்டார்.‌

நிகழ்ச்சியின் தொடக்கமாக இறைவணக்கம் சஹானா அவர்களால் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் லட்சுமி நடராஜன் வரவேற்புரை நல்கினார்.

கல்கி விருது - Kalki Award 2026
இறைவணக்கம் சஹானாபுகைப்படங்கள்; ஸ்ரீஹரி

நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கும் பாம்பே ஜெயஸ்ரீ அவர்களும், இவ்வாண்டு விருது பெறும் வித்வான் விக்னேஷ் ஈஸ்வரின் குருநாதர் டி.எம் கிருஷ்ணா அவர்களும் முன்பு இதே விருதைப் பெற்றவர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.‌

நாட்டு விடுதலைக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பள்ளிப் படிப்பை துறக்க நேர்ந்தது என்றும், அவரது பெயரால் இயங்கும் நினைவு அறக்கட்டளை வாயிலாக இந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கு 18 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படவுள்ள நற்செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீதா ரவி அறிமுக உரை வழங்கினார். கிபி 1999 ஆம் ஆண்டு கல்கி அவர்களின் நூற்றாண்டு விழா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்கி ராஜேந்திரன் அவர்களால் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டார்.

கல்கி விருது - Kalki Award 2026
வரவேற்புரை லட்சுமி நடராஜன் - அறிமுக உரை சீதா ரவிபுகைப்படங்கள்; ஸ்ரீஹரி

பின்னர் அறிமுக உரையை கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையைச் சேர்ந்த திருமதி. சீதா ரவி அவர்கள் வழங்கினார். கிபி 1999 ஆம் ஆண்டு கல்கி அவர்களின் நூற்றாண்டு விழா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்கி ராஜேந்திரன் அவர்களால் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டார். சென்னையில் நடந்த விழாவில் எம்.எஸ், செம்மங்குடி, டி.கே. பட்டம்மாள், லால்குடி ஜெயராமன் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.‌ அதில் 'மறவேன் மறவேன்' என்ற சிவகாமியின் சபதத்தில் வரக்கூடிய பாடலை பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடியதையும், பொன்னியின் செல்வன் புதினத்தில் ஓடக்காரப் பெண் பூங்குழலி பாடும் 'அலைக்கடலும் ஓய்ந்திருக்க' என்ற கவிதையைப் பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் மனப்பாடம் செய்து, உணர்ச்சி மேலிட மொழிந்ததையும் பூங்குழலியின் உணர்வுகளை அருமையாக பிரதிபலித்ததையும் குறிப்பிட்டார்.

பின்னர், விருது பெறும் வித்வான் விக்னேஷ் ஈஸ்வர் அவர்களை அறிமுகப்படுத்தினார்.‌ இளம் வயதிலேயே மும்பையில் அனந்தராம பாகவதரிடம் 17 ஆண்டுகள் விக்னேஷ் ஈஸ்வர் பயின்ற பின், சென்னையில் டி.எம் கிருஷ்ணா அவர்களின் சிஷ்யராக சேர்ந்து தன்னை மெருகூட்டிக் கொண்டதைக் குறிப்பிட்டார். விக்னேஷ் ஈஸ்வர், இசையை ஆவணப்படுத்தவும், உலக இசையின் பாதுகாப்பிற்காக செய்து வரும் பணிகளையும் சிலாகித்து பகிர்ந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது.‌ பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருதினை வழங்க, விக்னேஷ் ஈஸ்வர் பெற்றுக் கொண்டார். விருது பத்திரம் வாசிக்கப்பட்டு, ரூபாய் 50,000 காசோலையுடன் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தலைமை விருந்தினர் பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கும், பக்கவாத்தியக் கலைஞர்களான ராஜீவ் முகுந்தன் (வயலின்), என்.சி பரத்வாஜ் (மிருதங்கம்), சுனில் குமார் (கஞ்சிரா) ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்கி விருது - Kalki Award 2026
தலைமை உரையாற்றினார் பாம்பே ஜெயஸ்ரீபுகைப்படங்கள்; ஸ்ரீஹரி

இதனைத் தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் தலைமை உரையாற்றினார். கல்கி அவர்கள் தமிழ் இலக்கியம், சுதந்திரப் போராட்டம் என பல்வேறு தளங்களில் பங்களித்ததைக் குறிப்பிட்டார்.

உலகத்தில் தர்மத்தை நிலை நாட்ட இறைவன் கல்கி அவதாரம் எடுக்க வருவார் என்ற நம்பிக்கையின் வழியில் கல்கி அவர்கள் தனது சிந்தனைகள் மூலம் தர்மத்தை நிலைநாட்ட பாடுபட்டார்; கல்கி அவர்கள் நவசக்தி பத்திரிகையில் திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் அவர்களிடமிருந்து பத்திரிகை சார்ந்த பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டார்; கல்யாணசுந்தரம் என்பதில் உள்ள 'கல்' என்ற முதல் இரண்டு எழுத்துக்கள் மற்றும் தனது பெயரான கிருஷ்ணமூர்த்தி என்பதில் உள்ள 'கி' என்ற முதல் எழுத்தையும் சேர்த்து 'கல்கி' என்ற பெயரை எடுத்துக்கொண்டார்; தனது எழுத்தை சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆயுதமாக பயன்படுத்தினார் என்பன போன்ற சுவாரசியத் தகவல்களை பகிர்ந்து கொண்டார் பாம்பே ஜெயஸ்ரீ.

மேலும் , தமிழிசை இயக்கத்தில் கல்கி அவர்களின் பெரும் பங்களிப்பினைக் குறிப்பிட்டார். 1940 ஆம் ஆண்டு வரை கர்நாடக இசையில் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், எம். எஸ் அவர்களை மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களைக் பாடச் செய்து, தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர் கல்கி.

கல்கி, 'கர்நாடகம்' என்ற பெயரில் இசை விமர்சனங்களை அச்சமின்றி எழுதியதையும், ராஜா சர் அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து தமிழிசை இயக்கத்திற்கு பெரும் பங்காற்றியதையும் குறிப்பிட்டார். கலை நல்ல சமூகத்தை உருவாக்கும் என்ற கல்கி அவர்களின் கருத்தினை மேற்கோள் காட்டி, நாம் தமிழை நேசிப்பதற்கும், தமிழிசையை பாதுகாப்பதற்கும் பங்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

கல்கி விருது - Kalki Award 2026
விக்னேஷ் ஈஸ்வர் ஏற்புரை புகைப்படங்கள்; ஸ்ரீஹரி

ஏற்புரை வழங்கிய வித்வான் விக்னேஷ் ஈஸ்வர் தான் சிறு வயது முதலே பம்பாயிலிருந்து தனது கலைப் பயணத்தைத் தொடங்கியதைக் குறிப்பிட்டு, அதே பம்பாயிலிருந்து தன் கலைப்பயணத்தைத் தொடங்கிய பாம்பே ஜெயஸ்ரீரிடம் இந்த விருது பெறுவது மிகவும் மகிழ்ச்சியானது என்று மகிழ்ந்தார்.

தனது குரு டி. எம். கிருஷ்ணா அவர்களும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது பெற்றதைக் குறிப்பிட்டு தானும் இந்த விருது பெறுவதைக் கூறி, தன்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு முதல் தான் டி.எம். கிருஷ்ணாவின் கீழ் சங்கீதம் பயில்வதையும், பல்வேறு பாடங்கள் கற்றதையும் நன்றியுடன் குறிப்பிட்டார்.

மேலும், தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் டி.எம். கிருஷ்ணா, சங்கீதா சிவகுமார் மற்றும் டி.எம். கிருஷ்ணாவின் சக சிஷ்யர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கல்கி விருது - Kalki Award 2026
இசைக் கச்சேரிபுகைப்படங்கள்; ஸ்ரீஹரி

விக்னேஷ் ஈஸ்வரின் ஏற்புரையைத் தொடர்ந்து, அவரது இசைக் கச்சேரி நடந்தேறியது. நிகழ்ச்சிக்கு திரளாக வந்திருந்த கல்கி அன்பர்களும், இசைக்க கலைஞர்களும், ரசிகர்களும் கச்சேரியை ரசித்து மகிழ்ந்தனர்.

கச்சேரி மேடை திருவிழா கோலம் பூண்டது. ரசிகர்களின் கவனத்தை முற்றிலும் கட்டிப் போடும் விதமாய் ஒன்றே முக்கால் மணி நேரம் விக்னேஷ் ஈஸ்வர் பாடி செவிகளுக்கு விருந்தளித்து மனங்களை நிரப்பினார். ஹரிகாம்போதி, ஆனந்த பைரவி, பேகடை ஆகிய  ராகங்களை ஆழமாகவும் அழகாகவும் வழங்கினார். கல்கியின் வண்டாடும் சோலை, பூங்குயில் கூவும் உள்பட மூன்று தமிழ் பாடல்கள் இடம்பெற்றதால் ரசிகர்கள் பரம திருப்தி அடைந்தனர்.

ஏராளமான வித்வான்கள் கச்சேரி கேட்டு ரசித்ததில் மேடையில் இருந்த கலைஞர்களுக்கு கோலாகலமாக இருந்தது. வயலின் ஆலாபனை, ஸ்வரங்களை ராஜீவ் முகுந்தன் அற்புதமாக பொழிய, பரத்வாஜும் சுனில் குமாரும் மிருதங்கம் கஞ்சிராவில் இணைந்து வாசிக்க, கூட்டு முயற்சி, கச்சேரியின் தரத்தை ஓஹோ என்று உயர்த்திவிட்டது.  தனியாவர்த்தனம் அட்டகாசம். கச்சேரி முடிந்ததும் இசைத்த கலைஞர்களைப் பாராட்ட சூழ்ந்தது கூட்டம். 

இளம் கர்நாடக இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் இந்த முயற்சி, மேன்மேலும் தொடரட்டும். 

logo
Kalki Online
kalkionline.com