
படங்கள்: ஸ்ரீஹரி
அமரர் கல்கி அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழாவும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் விருது வழங்கும் விழாவும், கல்கி அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 9, 2025 அன்று மயிலாப்பூரில் உள்ள ராகசுதா அரங்கத்தில் இனிதே நடந்தேறியது.
வருடா வருடம் வளர்ந்து வரும் கர்நாடக இசைக் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை விருது வழங்கி கௌரவிக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, இந்த வருடம் ஹரிகதை கலைஞரான வர்ஷா புவனேஷ்வரி அவர்களுக்கு இந்த விருந்தினை வழங்கி சிறப்பித்தது. விழாவிற்குத் தலைமை தாங்கிய கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி கிரீஷ் அவர்கள் வர்ஷா புவனேஷ்வரி அவர்களுக்கு இந்த விருதினை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக சிறுவன் அனிருத் ராம்குமார் அவர்கள் விநாயகர் மீதான இறைவணக்கப் பாடலைப் பாடினார். நிகழ்ச்சியில் தொடர்ந்து முனைவர் பாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
அமரர் கல்கி சிறு வயதிலேயே ஹரிகதை நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தப் பின், வீட்டில் அதே கதையை எவ்வாறு திண்ணையில் வழங்குவார் என்று கூறி, அவருக்கு ஹரிகதையின் மீதிருந்த ஈர்ப்பு குறித்துப் பகிர்ந்து கொண்டார். அந்தக் காலத்தில் ஹரிகதையை நிகழ்த்தி வந்த சரஸ்வதி பாய் குறித்து, கல்கி கட்டுரைகள் எழுதியதையும், மேலும் கலைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவித்ததையும் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காயத்ரி கிரீஷை அறிமுகப்படுத்தினார். காயத்ரி கிரீஷ் அவர்கள் 6 வயது முதல் கர்நாடக சங்கீதம் கற்று, கர்நாடக இசை கச்சேரிகளை உலகெங்கும் நடத்தி வருகிறார் என்பதையும், அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கிருதிகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பதையும் தெரிவித்தார்.
விருது பெற்ற வர்ஷா புவனேஷ்வரி 6 வயது முதல் தஞ்சாவூர் கமலா மூர்த்தியிடம் ஹரிகதை பயிலத் தொடங்கியவர் இன்று வழக்குரைஞராகப் பட்டம் பெற்றவர் எனவும் கூறினார். தொடர்ந்து ஹரிகதை நிகழ்ச்சிகளை நேரடியாகவும், யூடியூப் வாயிலாகவும் நடத்தி, ஹரிகதைக் கலைக்கு வர்ஷா புவனேஷ்வரி பங்களித்து வருகிறார் எனக் குறிப்பிட்டார்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வளர்ந்து வரும் கர்நாடக இசைக்கலைஞர்களுக்கு விருது வழங்குவது மட்டுமன்றி, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி வருடா வருடம் வழங்கி வருகிறது எனவும், இந்த வருடம் 17 இலட்சம் ரூபாய் இதற்கு வழங்கியுள்ளதையும் குறிப்பிட்டார்.
பின்னர், தலைமையுரையாற்றிய காயத்ரி கிரீஷ், அமரர் கல்கியைப் பற்றித் தாமே இயற்றிய ஒரு பாடலுடன் உரையைத் துவங்கினார். சிறுவயதில் கல்கியின் அண்டை வீட்டுக்காரர் அய்யாசாமி ஐயர் கல்கியையும், அவரது அண்ணனையும் பல்வேறு ஹரிகதை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்ற போது, அடுத்த நாள் அவர்கள் இருவரும் வீட்டில் ஹரிகதை நிகழ்ச்சிகளை நடத்தியதைப் பகிர்ந்தார். தஞ்சாவூர் கிருஷ்ணன பாகவதர் ஹரிகதையின் முன்னோடி எனக் குறிப்பிட்டார்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி திரு.வி. க. அவர்களின் நவசக்தி பத்திரிகையில் அகஸ்தியர் மற்றும் தமிழ்த்தேனீ என்ற பெயர்களில் எழுதியதைக் கூறினார். அகஸ்தியர் என்பது கல்கியின் ஆசானான அய்யாசாமி ஐயர் வழங்கிய பெயர் என்று குறிப்பிட்டார். நவசக்தியிலிருந்து விலகி, பின்னர் மதுஒழிப்பிற்காக விமோசனம் என்ற பத்திரிகையில் கல்கி பணியாற்றி, இராஜாஜிக்கு உதவியதையும் அதன் பிறகு ஆனந்த விகடனில் ஆசிரியராக கல்கி பணியாற்றியதையும் குறிப்பிட்டார். 1941 இல் கல்கி பத்திரிகையை தனது நண்பர் சதாசிவத்துடன் கல்கி தொடங்கியபோது முதலீடு தேவைப்படவே, எம்.எஸ். சுப்புலட்சுமி சாவித்திரி என்ற திரைப்படத்தில் நாரதர் வேடத்தில் நடித்து, சன்மானம் பெற்று உதவியதைக் குறிப்பிட்டார்.
1941 ஆகஸ்டு 1 ஆம் தேதி, கல்கிப் பத்திரிகை பாரத தேசத்தின் கொடியை அட்டைப்படமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. பாரதியாருக்கு நூல் நிலையம் அமைக்க விரும்பி கல்கி அவர்கள் பணம் திரட்டியபோது, அதிக பணம் சேர்ந்து, நூல் நிலைய திட்டம் மணி மண்டபமாக விரிவடைந்தது.
தமிழிசைச் சங்கத்திற்கு கல்கி கிருஷ்ணமூர்த்தி விரிவாகப் பங்களித்தது, காந்தி மண்டபம் சென்னையில் அமைய அவர் உழைத்தது என அமரர் கல்கியின் சாதனைகளை பிரமிப்பூட்டும்படி சுருக்கிச் சொன்னார்.
கல்கியின் தியாக பூமி திரைப்படமாக வந்தபோது, அதிலுள்ள சுதந்திரக்கருத்துக்களால் திரைப்படம் பிரிட்டிஷ் அரசால் தடையிடப்பட்ட போது, தடை உத்தரவு வரும் வரை, கெயிட்டி திரையரங்கில் தொடர்ந்து இலவசமாக திரையிடப்பட்டு, சுதந்திர வேட்கையை திரைப்படம் தூண்ட உதவியது என்று நினைவு கூர்ந்தார்.
பின்னர், வர்ஷா புவனேஷ்வரி ஹரிகதையை 6 வயது முதல் கற்றுக்கொண்டு வந்ததைக் குறிப்பிட்டார். அரிமா சங்கம், மும்பை சண்முகாநந்தா சபா போன்ற பல்வேறு சங்கங்களிலிருந்து வர்ஷா புவனேஷ்வரி பெற்ற விருதுகளை வரிசைப்படுத்தினார். வர்ஷா புவனேஷ்வரியின் திறமைகள் கருதி அவர் சட்டம் பயில்வதற்காக சாஸ்திரா பல்கலைக்கழகம் முழு கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்பித்தது என்றும் கூறினார்.
வர்ஷா புவனேஷ்வரியின் பெற்றோர் மற்றும் மிருதங்கம் வாசித்த பாளையங்கோட்டை குரு ராகவேந்திரா மற்றும் ஹார்மோனியம் வாசித்த மன்னார்குடி சங்கர்ராமன் போன்றோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்புரை வழங்கிய வர்ஷா புவனேஷ்வரி தாம் 6 வயது முதல் ஹரிகதை பயின்றதை நினைவு கூர்ந்தார். தமக்கு 8 வயதான போது, தமது குரு கலைமாமணி தஞ்சாவூர் கமலா மூர்த்தி அவர்களுக்கு 80 வயது என்று கூறி, எவ்வாறு சிறிய பெண்ணான தனக்கு ஏற்றவாறு வயதான கமலா மூர்த்தி சொல்லிக் கொடுத்தார் என்பதை நினைவு கூர்ந்தார். ஹரிகதை தமக்கு வாழ்க்கையில் உதவுகிறது என்று கூறினார். வள்ளி கல்யாணம் ஹரிகதையை தனது குரு கமலா மூர்த்தி அவர்கள் கல்கி நினைவு அறக்கட்டளைக்கு நிகழ்த்தியதைப் போலவே, தானும் இன்று நிகழ்த்தப் போவதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தாம் கல்லூரி காலத்தில் பொன்னியின் செல்வனை படித்து மகிழ்ந்ததைப் பகிர்ந்து கொண்டார். கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் விருது பெறும் முதல் ஹரிகதை கலைஞராக தான் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் வள்ளி கல்யாணம் என்ற தலைப்பில் வர்ஷா புவனேஷ்வரி ஹரிகதையை நிகழ்த்தினார். அருமையான பாடல்களுடன், கந்த புராணத்தின் அடைப்படையில் வள்ளி கல்யாணம் ஹரிகதையை நிகழ்த்தினார்.
புலவர் கீரன், கி.வ.ஜ, கிருபானந்த வாரியார் போன்ற ஜாம்பவான்களின் உரைகளை முன்னுதாரனமாக எடுத்துக்கூறி அவர் கதையை நகர்த்திச் சென்றது நிகழ்ச்சிக்கு வலிமை சேர்த்தது எனில், பேகடா, கமாஸ், ஜோன்புரி போன்ற ராகங்களை பழைமை மாறாத, துல்லியமும் பொலிவும் கமழும் வகையில் அவர் கையாண்டது அழகும் அருமையும் சேர்த்தது. தமது இதய பூர்வமான அணுகுமுறையால் பார்வையாளர்களின் இதயங்களிலும் பக்தியும் மகிழ்ச்சியும் ததும்பச் செய்தார் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருதுபெற்ற கலைஞர் வர்ஷா புவனேஷ்வரி.
அரங்கத்தில் நிரம்பி இருந்த ரசிகர்களின் மனங்கள் பக்தியில் நனைந்து நிறைந்தன!