கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு சிறுகதைப் போட்டி 2025 - ஆறுதல் பரிசுக் கதை 1 - எங்கிருந்தோ வந்தான்!

2 Men
2 Men
Published on
ப்ரஸன்னா வெங்கடேஷ்
ப்ரஸன்னா வெங்கடேஷ்

“டிஷ்யூம், ஹா ஹா ஹா.. டிஷ்யூம்” என்று சத்தம் போட்டபடி நடு ஹாலில் நின்று கொண்டு முப்பதுகளில் இருந்த ஒரு இளைஞன் கைகால்களை ஆட்டிக்கொண்டிருந்தான். அந்த வீட்டின் சுவர்கள் பல வருடங்களாக பெயிண்ட் அடிக்கப்படாமல் நிறம் மங்கிக் காணப்பட்டன. அங்கங்கு ஒட்டடை தொங்கியபடி இருந்தது.

அதோ அந்த சிமெண்ட் மேடையின் மீதுதான் காலையிலும் மாலையிலும் கணக்கு ட்யூஷன் நடக்கும். ஹாலின் ஒரு பக்கச் சுவரில் மாட்டப்பட்டிருந்த மாசிலாமணி சார் ‘நல்லாசிரியர் விருது’ வாங்கும் புகைப்படம், இப்போது புழுதி படிந்து காட்சியளித்தது. சுந்தர் அவனிடமிருந்த டிஷ்யூ பேப்பரால் மெல்ல அந்தத் தூசியைத் துடைத்தான். சுவரின் மேற்புறத்தில் குருவி கூடு கட்டியிருந்தது. அதன் இறகுகள் தரையில் அங்கங்கே தென்பட்டன. சுந்தர் அவரிடம் கணக்கு கற்றுக்கொண்டிருந்த நாட்களில், மாசிலாமணி சாரின் மனைவி பானுமதி வீட்டை ஒரு கோயிலைப்போல் பராமரிப்பாள்.

பொருளாதார வசதி குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு மாசிலாமணி சார் இலவசமாக ட்யூஷன் எடுத்து வந்தார். காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை இரண்டு மணி நேரம் ட்யூஷன் இருக்கும். அவர் மகன் சதீஷுக்கு அப்போது எட்டு வயது இருக்கும். ட்யூஷன் முடியும்போது, மாசிலாமணி சாரின் மனைவி எல்லோருக்கும் கேழ்வரகு கஞ்சியைக் கொடுப்பாள். பசி வேளைக்கு அது அமிர்தமாக இருக்கும்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்ட சுந்தர் தயங்கியபடி, “மாசிலாமணி சார் இருக்காரா? நீ... அவர் பையன் சதீஷ்தானே?” என்று கேட்டவுடன், அந்த இளைஞன், “ஸைலன்ஸ். ஹீரோயின் வந்தாச்சு” என்று சொன்னான்.

அதற்குள், மாசிலாமணி வீட்டின் உள்ளேயிருந்து வந்தார். அதே கம்பீரம், அதே மிடுக்கு… ஆனால், நடையில் அந்த வேகம் இல்லை. சுந்தர், தான் கொண்டுவந்த பழங்களையும் வேட்டி - சட்டை வைத்திருந்த பையையும் அவரிடம் தந்தான்.

ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்த மாசிலாமணியிடம், “சார், நான் சுந்தர். உங்களிடம் படித்த மாணவன்” என்று அறிமுகம் செய்துகொண்டான்.

கண்களைச் சுருக்கிப் பார்த்தவர், அவனை அடையாளம் தெரிந்துகொண்ட பாவனையில் புன்னகைத்தார். “ஓ.. சுந்தர்! ப்ளஸ் டூ பரீட்சையில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினியே. எப்படி இருக்க? அதுக்கு அப்புறம் நீங்க எல்லாரும் மதுரைக்குப் போயிட்டீங்களே” என்று கேட்டார். அவர் குரலில் மட்டும் கொஞ்சம் நடுக்கம் வந்திருந்தது. முதுமை யாரைத்தான் விட்டு வைக்கிறது?

“சார், நான் ரொம்ப நல்லா இருக்கேன். மதுரைல காலேஜ் படிப்பை ஸ்காலர்ஷிப்லதான் சார் முடிச்சேன். இப்ப டில்லில ஒரு பெரிய கம்பெனில மேனேஜிங் டைரக்டரா இருக்கேன். எல்லாமே உங்களாலதான் சார்” என்று அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.

“நல்லா இருப்பா. என்கிட்ட படிச்ச மாணவன் வாழ்க்கைல நல்ல நிலைமைக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்” என்று அவனை வாழ்த்தியவர், “உட்காருப்பா” என்று சொன்னார்.

“சார், அது உங்க மகன் சதீஷ்தானே?” என்று அந்த இளைஞனைக் காட்டி சுந்தர் கேட்டான்.

முகத்தில் விரக்தி நிறைந்த சிரிப்புடன், “ஆமாம்ப்பா சதீஷ்தான்... சினிமால சேரணும்னு ஊர விட்டுப் போனான். சரி, அவன் மனசுக்குப் பிடிச்சத செய்யட்டும்னு அனுப்பிச்சு வெச்சேன். மாசத்துக்கு ஒரு லெட்டர் போடுவான். ரெண்டு வருஷம் கழிச்சு, ஒரு நாள் ராத்திரி கொட்டற மழைல நனைஞ்சுகிட்டு வந்து கதவைத் தட்டினான். இளைச்சுப் போய் தாடியும் மீசையுமா இருந்தான். என்ன ஏதுன்னு எவ்வளவோ கேட்டும் சதீஷ் ஒன்னும் சொல்லலை. அதுக்கப்புறம் இப்படித்தான் தனக்குத்தானே பேசறதும், பாடறதும்... சித்தப்பிரமைன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. என்ன செய்யறது? நம்ம தலையெழுத்துத்தான் எல்லாம்” என்று வருத்தத்துடன் சொன்னார்.

ஓ... தன் வாழ்க்கையை ஒளிமயமாக்கிய ஆசிரியரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா? என்று சுந்தர் நினைத்தான்.

“சார், உங்க மனைவி எப்படி இருக்காங்க?” என்று மெதுவாகக் கேட்டான்.

“பெத்த பிள்ளையை இந்த நிலைமைல பார்க்கிறதாலயோ என்னவோ அவளுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகுது. ஏதோ நடைபிணமா இருக்கா” என்று மாசிலாமணி சார் குரல் கம்மச் சொன்னார்.

சுந்தரின் அப்பாவுக்கு பாத்திர வியாபாரம்தான் தொழில். சைக்கிளில் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு தெருத் தெருவாக வெயில், மழை பாராமல் நாள் பூராவும் சுற்றுவார். பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். சுந்தர் ஒன்பதாம் வகுப்புப் பரீட்சையில் கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. வீட்டுக்குப் போனால் அப்பா அடித்துத் துவைத்துவிடுவார் என்று பயந்துகொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ஒளிந்துகொண்டிருந்தான்.

இரவு ஏழு மணி ஆகிவிட்டது. அப்போது எங்கோ வெளியில் போய்விட்டு அந்தப் பக்கமாய் வந்த மாசிலாமணி சார் சுந்தரைப் பார்த்துவிட்டார். “ஏன்டா இங்க உட்கார்ந்துக்கிட்டு இருக்க? எழுந்து வீட்டுக்குப் போ” என்றதும் சுந்தர்.

“என்னால முடியாது சார். நான் ஃபெயில் ஆனது தெரிஞ்சா, எங்கப்பா என்னை பெல்ட்டாலயே அடிச்சுக் கொன்னுடுவாரு. நான் எங்கியாவது ஓடிப் போயிரப் போறேன்” என்று அழுதபடி சொன்னான்.

“ஏன்டா, இந்தப் பயம் பரீட்சைக்கு முன்னால இருக்க வேண்டாம்? பிரச்னையைப் பாத்து பயந்து ஓடினா, வேற பிரச்னை வராதா? என்கூட வா. உங்கப்பாவோட நான் பேசறேன். இப்ப வீணாப் போனது ஒரு வருஷம்தான். ஆனா, நீ ஓடிப் போனா, உன் வாழ்க்கையே வீணாப் போயிடும். நாளைலேர்ந்து மரியாதையா என்கிட்ட ட்யூஷனுக்கு வா” என்று சொல்லி, சுந்தரை வலுக்கட்டாயமாய் அவன் வீட்டுக்கு இழுத்துப் போனார்.

சுந்தரின் அப்பாவிடம் பதமாகப் பேசி, “உங்கப் பையனை உருப்பட வைக்கிறது என் பொறுப்பு” என்று சொல்லி சமாதானப்படுத்தினார்.

அதற்குப் பிறகுதான் சுந்தர், மாசிலாமணி சார் என்னும் மாமனிதரின் வழிகாட்டுதலால் வாழ்க்கையில் சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கினான். இன்று அவன் அடைந்த உச்சத்துக்கு அஸ்திவாரம் மாசிலாமணி சார் போட்டதுதான்.

“சுந்தர், கொஞ்சம் இருப்பா. யாரோ வாசலில் வந்திருக்காங்க” என்று சொல்லியபடி மாசிலாமணி சார் எழுந்து வாசலுக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த மாசிலாமணி, “தெரிஞ்சவங்கதான். அதான் பேசிட்டு வந்தேன். கருப்பட்டி காபி கலந்து தரட்டா?” என்று கேட்டார்.

“இல்ல சார், நான் கிளம்பணும். உங்களைப் பார்த்ததே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சார். நீங்க மட்டும் அன்னிக்கு என்கிட்ட பேசி, எங்கப்பாவையும் சமாதானப்படுத்தாம இருந்திருந்தா என் வாழ்க்கை எப்படியோ போயிருக்கும் சார். மறுபடியும் அதுக்கு நன்றி” என்று சொன்னபடி சுந்தர் எழுந்தான். அதுவரை சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றுவிட்டது.

“அப்பப்ப இங்க கரண்ட் கட் ஆகுது. சரிப்பா... என்கிட்ட படிச்சவங்க எல்லாருமே எனக்குப் பிள்ளைங்க மாதிரிதான். அடுத்த தடவை வந்தா கண்டிப்பா வாப்பா” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.

வாசல் கதவை வெளியில் தாளிட்டுவிட்டு, மாசிலாமணி அந்த ஊரின் பசையுள்ள ஆசாமியான சிங்காரத்தைப் பார்க்கச் சென்றார். அவரைப் பார்த்ததும் சிங்காரம், “வாங்க சார். நல்லா இருக்கீங்களா? என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.

மாசிலாமணி தயங்கியபடி, “உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன? எனக்கு வர்ற பென்ஷன் வீட்டுச்செலவுக்குச் சரியாப் போயிடுது. என் மனைவிக்கும் பையனுக்கும் மருந்து செலவே நிறைய ஆவுது. ஆறு மாசத்துக்கு முன்னால என் மனைவியை ஆஸ்பத்திரில சேர்த்தப்ப நம்ம சொக்கன்கிட்ட ஒரு இருபதாயிரம் ரூபாய் கடனா வாங்கியிருந்தேன். என்னால வட்டிகூட கட்ட முடியல. சொக்கன் வீட்டுக்கு வந்து கடனை உடனே திருப்பித் தரச் சொல்லி, ரொம்ப கெடுபிடி பண்றான். அதான், நீங்க கொஞ்சம் உதவினா சொக்கனுக்குக் கொஞ்சம் பணத்த தந்துட்டு, இ.பி. பில்லு கட்டுவேன். இல்லன்னா வீட்ல கரண்ட்டை கட் பண்ணிடுவேன்னு இ.பி. ஆபீஸ்லேந்து வந்து சொல்லிட்டுப் போனாங்க” என்று சொன்னார்.

சிங்காரம், “சார், உங்கக் கஷ்டம் தெரிஞ்சதாலதான் ஏற்கெனவே உங்களுக்குக் கொடுத்த பத்தாயிரம் ரூபாயை நா திருப்பிக் கேக்கல. இதுக்கு மேலயும் கடன் வாங்கினா உங்களுக்குத்தான் கஷ்டம். என்னை மன்னிச்சுக்குங்க...” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

தன் நிலையை எண்ணி மனம் வெதும்பியபடி மெல்ல நடந்து மாசிலாமணி தன் வீட்டையடைந்தார். அப்போது அங்கு வந்த மின்சார வாரிய ஊழியர், “சார், கரண்ட் பில் கட்டியாச்சு. மெயினை ஆன் பண்ணிட்டுப் போறேன்” என்று சொன்னார். மாசிலாமணி ஆச்சரியப்பட்டபடி வீட்டினுள் சென்றார்.

“அப்பா, ப்ரொட்யூசர் அடுத்தப் படத்துக்கு அட்வான்ஸ் குடுத்துட்டுப் போயிருக்கார்” என்று சொன்னபடி சதீஷ் அவரிடம் ஒரு கவரைத் தந்தான். மாசிலாமணி அந்தக் கவரைப் பிரித்தார். அதனுள் புத்தம்புது ஐநூறு ரூபாய் நோட்டுகளும் ஒரு கடிதமும் இருந்தன. கடிதத்தைப் பிரித்தவுடனேயே அது சுந்தரின் கையெழுத்து என்று அவருக்குத் தெரிந்துவிட்டது.

“வணக்கம் சார். முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் வாசலில் சென்று பேசிக்கொண்டிருந்தபோது நான் அதை ஒட்டுக் கேட்டுவிட்டேன். உங்களுக்குக் கடன் கொடுத்தவர் அதைக் கேட்டு நெருக்கடி செய்வது தெரிந்தது. மின்சார வாரியத்திலிருந்து வந்தவர், பணத்தைக் கட்டாவிட்டால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும் என்று சொன்னதையும் கேட்டேன். என் வாழ்க்கைக்கு நல்வழி காட்டிய நல்லாசிரியருக்கு இப்போதைக்கு என்னாலான காணிக்கை இது. தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்த முறை வந்து உங்களைச் சந்திக்கிறேன். வணக்கத்துடன், உங்கள் மாணவன், சுந்தர்” என்று எழுதியிருந்தான்.

“சுந்தர், நீ கணக்கில் மட்டும் இல்ல, பண்பிலும் நூத்துக்கு நூறு” என்று தன் கவலையைக் கழித்து நிம்மதியைக் கூட்டிப் பெருக்கிய தன் உன்னதமான மாணவனை நினைத்து மாசிலாமணி நெகிழ்ச்சி அடைந்தார்.

- ப்ரஸன்னா வெங்கடேஷ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com