
"எனக்குப் பிடித்த முக மாதிரியை மனத்தில் உருவாக்கிவிட்டேன். இதோ இப்படி.." என் அலைபேசியை அவள் பக்கம் திருப்பிக் காட்டினேன்.
"உனக்கு இதில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா?"
"முதலில் ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொண்டபின் என் எதிர்பார்ப்பைச் சொல்கிறேனே...!"
அந்தப் பல்நோக்கு மருத்துவமனையின் ஒன்பதாவது மாடியில் ஒரு மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அறையின் முன்னே நானும் என் மனைவி மீராவும் அமர்ந்திருந்தோம். மொத்தமே நான்கு சோஃபாக்கள் மட்டுமே போடப்பட்டிருந்த அந்த அறையில் நடுவில் இருந்த மேசையில் புத்தகங்கள். எல்லாமே விதம் விதமான குழந்தைகளின் படம் போடப்பட்டிருந்த புத்தகங்கள்! சுவற்றில் குழந்தைகள் மற்றும் பிரபலமானவர்களின் புகைப்படங்கள்.
எதிர் சோஃபாவில் அமர்ந்திருந்தவர்கள் எங்களைப் பார்த்து லேசாகச் சிரித்தார்கள்.
“உங்களுக்கு எத்தனையாவது குழந்தை?” என்றார் அந்த ஆண்மகன்.
“இதுதான் முதல் குழந்தை” என்றேன்.
அவர், “எங்களுக்கு இது இரண்டாவது குழந்தை. இந்தக் குழந்தை ஒரு இசை மேதையாக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்” என்றார். அவர் மனைவியும் ஒப்புதலாக புன்முறுவல் செய்தாள்.
“இல்லை, எங்களுக்கு அப்படிப்பட்ட ஆசை எதுவும் இல்லை” என்றேன்.
“பின் எதற்காக இங்கு வந்தீர்கள்?” என்ற அவர் கேள்விக்கு நான் பதில் சொல்லும் முன், அவர்களுக்கு அழைப்பு வர, அந்தத் தம்பதி உள்ளே சென்றார்கள்.
கண்ணாடி போலிருந்த பளிங்குத் தரையைப் பார்த்து லேசாகக் கலைந்திருந்த என் தலையைச் சரிசெய்து கொண்டேன். குதிகால் உயர்ந்த காலணிகள் சீராக சந்திக்க அந்தப் பெண் உள்ளே வந்தாள். அவளுடைய அங்கங்கள் அளவெடுத்துச் செய்யப்பட்டவைபோல் அழகாக இருக்க, குட்டைப் பாவாடைக்குக் கீழே தொடைகள் பளீரிட்டன. அவள் நேராக எங்கள் எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த தம்பதியரிடம் சென்றாள்.
"மிஸஸ் ஹில்லாரி! நீங்கள் டாக்டர் ஃபெர்னாண்டோவைச் சந்திக்க வேண்டிய நேரம். தயவு செய்து உள்ளே செல்லுங்கள்" அழகான உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் இனிமையாகச் சொன்னவள் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்.." என்று மீரா அழைக்க, அவள் திரும்பி "சோபியா" என்று தன் பெயரைக் கூறியவள் தொடர்ந்து, "நான் எந்த வகையில் உங்களுக்கு உதவட்டும்?" என்று இனிமையாகக் கேட்டாள்.
"நாங்கள் டாக்டர் எலிஸாவைப் பார்க்க வேண்டும். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"
"அவர் இன்னொரு தம்பதியரைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் 23 நிமிடங்களில் உங்களை அழைப்பார்" என்று கூறிவிட்டுச் சென்றாள்.
"அவளை ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள் பாரி?" என்று மீரா முகத்தில் பொய்க் கோபத்துடன் கேட்டாள்.
"அது AI ரோபோவா அல்லது உண்மையான பெண்ணா என்று பார்த்தேன்"
"தெரிந்துகொண்டீர்களா?"
நான் பதில் சொல்வதற்கு முன், "நான் ரகு. டாக்டர் ஃபெர்னாண்டோ இன்று எங்களுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தார். அவரை நாங்கள் எப்போது பார்க்கலாம்?" என்று வரவேற்பாளரிடம் கேட்டுக்கொண்டிருந்த பழக்கமான குரல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
"உள்ளே ஒரு தம்பதி போயிருக்கிறார்கள். இன்னும் இருபத்தைந்து நிமிடங்களில் அவர்கள் வெளியே வந்தவுடன் நீங்கள் போகலாம். அதுவரை அங்கே உட்காருங்கள்" என்று எங்களுக்கு எதிரே இருந்த சோபாவைக் காட்டினாள். அந்தத் தம்பதியர் எங்களுக்கெதிரே வந்தமர்ந்து சுற்றிலும் கண்களை ஓட்டினார்கள்.
"ஹேய்... பாரி! வாட் எ சர்ப்ரைஸ்! நீ எங்கே இங்கே? ஆப்ட் கிட்?"
"அதேதான்! உனக்கும் இப்போதுதான் முதல் குழந்தையா?"
"இல்லை. இது இரண்டாவது... இவள் என் மனைவி நளினி!" அந்த அழகான நளினி என்னையும் மீராவையும் பார்த்து புன்னகையுடன் "ஹாய்" என்றாள்.
"டாட், மாம்! யூ ஆர் ஹியர்...!" என்றபடி ஒரு ஐந்து வயது குழந்தை ரகு தம்பதியிடம் வந்தது.
"நாமெல்லாம் சேர்ந்துதானே லிப்ட்டுக்குள்ளே வந்தோம்? நீ மட்டும் மீண்டும் ஏன் வெளியே சென்றாய்?"
"என்னுடைய பந்து வெளியே உருண்டோடிவிட்டது. அதை எடுக்கத்தான் போனேன். அதற்குள் லிஃப்ட் மேலே சென்றுவிட்டது. நான் மறுபடியும் லிஃப்ட்டில் மேலே வந்தேன்" என்றான் ஆங்கிலத்தில்.
"இது யார் ரகு? குழந்தை அப்படியே 30 வருடங்களுக்கு முன் மறைந்த பிரபல பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் மினியேச்சர் மாதிரியே இருக்கே?"
நான் நம்பமுடியாமல் அந்தக் குட்டி மைக்கேல் ஜாக்சனையே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
"பாரி! இவன்தான் எங்களின் முதல் குழந்தை. சிவராமன் என்று என் அப்பா பெயர் வைத்திருக்கிறோம். மைக்கேல் ஜாக்சன் என் அப்பா மூலமாக எனக்கும் எவ்வளவு பிடிக்கும் என்று உனக்குத்தான் தெரியுமே! அதனால் என் முதல் குழந்தையை அவரைப் போலவே வேண்டும் என்று பெற்றுக்கொண்டோம். மைக்! இவர் என் நண்பர் பாரி. வணக்கம் சொல்லு."
"வணக்கம் அங்கிள்!"
"வணக்கம் மைக்! தமிழ் தெரியுமா?"
"ஏன், பாரி! நாங்க தமிழர்கள்தானே? வீட்டில் தமிழ்தான் பேசுகிறோம். இவன் எங்கள் குழந்தைதானே?"
தமிழ் பேசும் மைக்கேல் ஜாக்சன்! ரகு சத்தியம் செய்தால் ஒழிய இது அவனுடைய குழந்தை என்று யாரும் நம்பமாட்டார்கள்.
"இப்போது...?"
"இப்போது இது இரண்டாவது குழந்தை!"
"இந்தக் குழந்தை யார் மாதிரி...?"
"இது பெண் குழந்தை. உருவம் அந்த உலக அழகியைப் போலவும், இசையிலும் நடனத்திலும் இப்போது பிரபலமாக இருப்பவர்களைப் போலவும் இருக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது."
"ஏற்கனவே ஒரு பாப் கலைஞர். இப்போது ஓர் உலக அழகியா?"
"டாக்டர் ஃபெர்னாண்டோ இருக்கையில் எதுதான் நடக்காது? அவர் ஒரு பிரம்மா! அவரிடம் நம் விருப்பத்தைச் சொல்லிவிட்டால் போதும். வயிற்றிலிருக்கும் கரு நம் ஆசைப்படி வளர ஆரம்பித்துவிடும்."
"நீ சொல்வதைப் பார்த்தால் உன் மகள் எதிர்கால இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் கனவுக்கன்னி என்று தெரிகிறது."
"அதுமட்டுமா இசையிலும் நடனத்திலும் சிறந்து ஒரு கலையரசியாகவே இருப்பாள். நீங்கள் ஏன் இவ்வளவு தாமதமாக...?"
"மீராவும் நானும் வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்தோம். அதனால் குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட்டோம். இப்போது இங்கேயே எனக்கு மாற்றல் கிடைத்துவிட்டது."
"செயற்கைமுறையில் முயற்சி செய்யவில்லையா?"
"நாங்கள் இருவருமே நல்ல உடல் நிலையில் இருக்கும்போது எதற்கு செயற்கை முறை என்று விட்டுவிட்டோம்."
"நீங்கள் கொஞ்சம் முன்னாடியே முயற்சி செய்திருந்தால் எங்கள் மைக்போல உங்களுக்கும் ஒரு குழந்தை இருந்திருக்கும்."
அந்தக் குழந்தையைப் பார்த்தேன்.
"ரகு! இந்தக் குட்டி மைக் 'அந்த' மைக்கேல் ஜாக்சன்போல ஆடுவாரா?"
"நடனம் அவனுடைய ஜீன்ஸ்லேயே கலந்துவிட்ட ஒன்று. அவன் நடை பழகும்போதே மைக்கேல் ஜாக்சனின் நடன வீடியோவைப் போட்டுக் காட்டினேன். அதைப் பார்த்து மிகவும் சுலபமாக ஆட ஆரம்பித்துவிட்டான். அவருடைய பல பாடல்கள் இவனுக்கு இப்போது அத்துப்படி!" என்றான் பெருமையாக.
"ஆச்சரியமாக இருக்கிறதே!"
"அதுமட்டுமல்ல.. ஒரிஜினல் மைக்கேல் ஜாக்சன் கிட்டார் வைத்துப் பாடுவாரே... அதேபோல தனக்கும் நிஜமான கிட்டார் வேண்டும் என்று கேட்டான். நான் தயங்கிக்கொண்டே இவன் அளவுக்கு ஒரு சிறிய அளவில் கிட்டார் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அவ்வளவுதான் அதை வைத்துக்கொண்டு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே மைக்கேல் ஜாக்சன் போலவே கிட்டார் மீட்டிக்கொண்டே பாடி, ஆடினான். எல்லோருக்கும் ஆச்சரியம்! இதுவரை இவனுடைய பத்து மேடை நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. இந்தச் சனிக்கிழமைகூட அந்தப் பெரிய அரங்கில் இவனுடைய நிகழ்ச்சி இருக்கிறது. நீங்கள் இருவரும் அவசியம் வரவேண்டும்."
"கண்டிப்பாக..."
அப்போது சோபியா வந்து, "மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாரி! நீங்கள் டாக்டர் எலிஸாவைப் பார்க்க உள்ளே போகலாம்." என்று அழைக்க நாங்கள் இருவரும் எழுந்து, டாக்டரின் அறைக்குள் சென்றோம்.
"வெல்கம் பாரி, வெல்கம் மீரா!" என்று வரவேற்ற டாக்டர் ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாற்பது என்றுதான் பார்ப்பவர்கள் கூறுவார்கள்.
"உங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதற்கான அரசாங்க அனுமதி கிடைத்துவிட்டதா?"
"ஆமாம்!" என் அலைபேசி நினைவில் இருந்த ஒரு கடிதத்தை அவரிடம் காண்பிக்க, அதைப் படித்த அவர், "சரி! இதை என்னுடைய மெயில் ஐ.டிக்கு அனுப்பி விடுங்கள். இயற்கை முறையில் கர்ப்பமா? இல்லை, செயற்கை முறையிலா?"
“இயற்கையான கர்ப்பம்தான்.”
"நல்லது! வாழ்த்துகள்! உங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும்?"
"இந்தக் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி முடிவெடுக்கலாம் என்று இருந்தோம் டாக்டர்."
"ஆண் குழந்தைதான்!"
"அடுத்த வாரம் வந்து எங்கள் விருப்பத்தைக் கூறுகிறோம் டாக்டர்"
சனிக்கிழமை நாங்கள் இருவரும் அந்தப் பெரிய அரங்கிற்குச் சென்றோம். அரங்கின் முகப்பில் குட்டி மைக்கேல் ஜாக்சனின் பல நடனத் தோற்றங்கள் ஹாலோ கிராம் வடிவங்களில் பிரம்மாண்டமாக மாறி மாறித் தோன்றின. அரங்கத்தினுள் நுழைந்தோம். நுழைவு வாயிலில் ரகுவும் நளினியும் வரவேற்றனர். குட்டி மைக்கேல் ஜாக்சன் உடன் இருந்தான். யாரோ முதுகைத் தட்டினார்கள்.
"நீ பாண்டியன் மகன் பாரிதானே?"
"ஆமாம். நீங்க...?"
"என்னைத் தெரியவில்லையா? நான் உங்கப்பாவின் நண்பன் கருணாகரன்."
"ஓ.! அங்கிள்.. நீங்களா? எனக்குச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை. என்னை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?"
"என்ன சிரமம்? நீதான் அப்படியே உங்க அப்பா போலவே இருக்கிறாயே!" என்றவர் பேசிக்கொண்டிருந்துவிட்டு, "இது யார்?" என்று குழந்தை மைக்கேல் ஜாக்சனைப் பார்த்துக் கேட்டார்.
"என் பையன்.. சிவராமன்."
"அப்படியா? இவன் உன்னைப்போல் இல்லை, அம்மா மாதிரியும் தெரியவில்லை... வித்தியாசமாக இருக்கிறான். ஆப்ட் பேபியா?"
"ஆமாம்.." என்று கூறிய ரகுவுக்குத் தன் மகனின் அடையாளத்தைத் தான் அழித்துவிட்டோமோ என்று ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.!
"அப்படியானால் என் அப்பா யார்? என்னைப் போலவே இருக்கும் மைக்கேல் ஜாக்சனா?" என்று கேட்டான் சிவராமன்.
அடுத்த வாரம் டாக்டர் ஃபெர்னாண்டோ முன் அமர்ந்திருந்தோம்.
"உங்கள் கரு ஆரோக்கியமாக இருக்கிறது. சொல்லுங்கள்... உங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும்?"
"எங்கள் குழந்தை இயல்பாக அப்படியே வளரட்டும் டாக்டர். எங்கள் குழந்தைக்கு எந்தவிதமான மரபணு மாற்றமும் தேவையில்லை. டாக்டர், உங்களை ஒன்று கேட்கலாமா?"
"கேளுங்கள்" "உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?"
"ஒரே மகன்!"
"உங்கள் மகன் யார் மாதிரி?"
"என் மகன் என்னைப்போலவே இருப்பான்."
"உங்கள் மகனுக்கு மரபணு மாற்றம் செய்யவில்லையா?"
"இல்லை. அவனுடைய அடையாளத்தை மாற்றவோ அழிக்கவோ எனக்கு விருப்பமில்லை. என் குழந்தை வேறொருவர் போலிருப்பதில் எனக்கென்ன பெருமை?" நாங்கள் விடைபெற்றோம்.