கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு சிறுகதைப் போட்டி 2025 - ஆறுதல் பரிசுக் கதை 3 - ருத்ர தாண்டவம்!

Family
Family
Published on
அனுராதா ஜெய்ஷங்கர்
அனுராதா ஜெய்ஷங்கர்

இனிய மாலை. ரஞ்சனி தலையை உயர்த்தி தன்னைச் சுற்றிலும் நோக்கினாள். எதிரில் அடர்ந்த கருப்புத் திரை விரிந்திருந்தது. திரை விலக இன்றைக்கு நிச்சயம் நடனம் இருக்கும் என்று தோன்றியது. அவள் நினைப்பை உறுதிப்படுத்துவதுபோல் திடும் திடும் என்கிற மேளச்சத்தம் கேட்டது. கண்ணைக் கூச வைக்கிற விளக்குகள் மின்னி மறைந்தன. ஆயத்தங்கள் பலம்தான்.

இன்று என்னவாக இருக்கும்? ‘குற்றாலக் குறவஞ்சி?’, ‘ருத்ர தாண்டவம்?’ அல்லது ‘ஆழிக்கூத்து?’ ரஞ்சனி யோசித்துக்கொண்டே நின்றாள். ஏதோ நினைத்துக்கொண்டவள்போல் உடனே அலைபேசியை எடுத்து தன் கணவன் விக்ரமிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அதற்குள் லேசாக ஒன்றிரண்டு தூறல் விழ, மனதில் உருவாகிக்கொண்டிருந்த கவிதையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தெருவில் விளையாடும் தன் குழந்தைகளைக் கூப்பிட எண்ணினாள்.

"அம்...மா..." மகன் வருணின் குரல். குரலில் இருந்த கோபமும் ஆங்காரமும் அவன் வாசல் கதவை உதைத்துத் திறக்கிற வேகத்தில் வெளிப்பட கடவுளே, இருவரில் யார் அடி எதுவும் பட்டுக்கொண்டார்களோ என்று பதட்டத்துடன் வாசலுக்கு ஓடினாள். வருண், வர்ஷனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நுழைந்தான்.

"வருண்... என்னப்பா ஆச்சு?" கோபத்தில் எட்டு வயது வருணின் முகம் சிவந்து கிடந்தது. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்றான். அப்போதுதான் அவன் வர்ஷனின் கையை இறுகப் பிடித்து இருப்பதையும் கை கன்றிப்போகும் வலிகூட தெரியாமல் வர்ஷன் புன்னகை மாறாமல் நிற்பதையும் கவனித்தாள்.

ரஞ்சனிக்கு மனதைப் பிசைந்தது. அவன் கையை மெல்ல வருணிடமிருந்து விடுவித்தாள்.

"அம்மா... இவனை என்னோட விளையாட அனுப்பாதீங்கன்னு சொல்றேன்ல, இவனுக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது. நான் சொல்றதை கேட்காம, நான் ஒளிஞ்சு இருக்கிற இடத்தை காட்டிக் கொடுத்துட்டான்."

இரட்டைக் குழந்தைகளில் ஒருவனை அதீத அறிவுடனும் இன்னொருவனை எப்போதுமே மனதளவில் குழந்தையாகவே இருக்கும்படியும் படைத்துவிட்ட இறைவனை மனதில் நினைத்தபடியே மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டாள். அதற்குள் சப்தம் கேட்டு அவள் மகள் பன்னிரெண்டு வயது தாரா வெளியே வந்தாள்.

"தாரா, கொஞ்சம் வர்ஷனை உள்ளே கூட்டிட்டு போடா. கண்ணா, அக்காவோட உள்ளே போய் விளையாடு" என்றாள்.

தனக்கென்று எதுவும் தெரியாமல், இயலாமல் மற்றவரைச் சார்ந்து இயங்கும் குழந்தையான வர்ஷன், தாராவோடு உள்ளே சென்றான். வருண் பக்கம் திரும்பினாள்.

"நேத்திக்கு விளையாடும்போது ஒரு சூப்பர் ஈஸி கேட்ச். அதுகூட அவனுக்கு பிடிக்க வரல. இவனால் நான் எப்பவும் ஜெயிக்கவே முடியல. எனக்கு அவனைப் பிடிக்கலை. அவனை தாத்தா ஊருக்கு அனுப்பிடுங்க." கத்தியபடி வருண் கோபத்தில் பக்கத்தில் இருந்த பூந்தொட்டியை காலால் உதைத்தான்.

ரஞ்சனி பாய்ந்து அவனை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டாள். வியர்த்துக் கிடந்த அவன் முகத்தை தன் துப்பட்டாவால் துடைத்தாள்.

"வருண் தங்கம், அம்மாக்குப் புரியுது. நாளைக்கு நீ மட்டும் விளையாடப் போ. நான் வர்ஷனைப் பார்த்துக்கிறேன். சரியா?" என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

அவள் குரலும் ஸ்பரிசமும் வருணின் கோபத்தை அழுகையாக மாற்ற "நீ, நான், அப்பா, அக்கா மட்டும் இங்கே இருக்கலாம், வர்ஷன் வேண்டாம்" என்றான்.

போன வருடம் வரையிலும் எங்கு விளையாடப் போனாலும் வர்ஷனையும் கூட்டிக் கொண்டுதான் போவான். அன்பாக, நன்றாகப் பார்த்துக்கொள்வான். இப்போது கொஞ்ச நாளாகத்தான் இப்படி.

ரஞ்சனிக்கு அவன் கோபம் புரிந்தது. ரஞ்சனி அப்போது அவனைச் சமாதானப்படுத்தினாலும், கணவனிடம் இதைப் பற்றி பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

"வருண், மழை வருதுன்னு எங்கம்மா வீட்டுக்குள்ள விளையாட சொல்றாங்க. கேரம் ஆட வரியா?" என்று அவனது நண்பன் வந்து கேட்க, தற்காலிகமாக அழுகையை நிறுத்தி, முகத்தை அம்மாவின் உடையில் துடைத்துக்கொண்டு ஓடிப்போனான் வருண்.

எல்லோரும் இரவு உணவு சாப்பிடுகையில் வருண் ஆரம்பித்தான். "அம்மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல பிடிஏ இருக்கு".

"தெரியும் கண்ணா. நாளைக்கு அப்பா ஆபீஸ் போகணும். அம்மா வர்ஷன் ஸ்பீச்தெரபி கிளாஸ் முடிச்சுட்டு அப்படியே ஸ்கூலுக்கு வரேன்."

"இல்லை... வர்ஷன் ஸ்கூலுக்கு வரக்கூடாது. நீ, அப்பா ரெண்டு பேரும் வரணும்."

ரஞ்சனி கணவனைச் சங்கடத்துடன் நோக்கினாள். அவன், “அவளை அமைதியாக இரு, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சாடையில் சொல்லும்போதே தாரா குறுக்கிட்டாள்.

"டேய் வருண், ஏன்டா இப்படி பண்ற... அவன் நம்ம தம்பிதானே, நாளைக்கு எனக்கும் ஸ்கூல் இருக்கு, அவன் எங்கே இருப்பான்? சொல்லு..."

"எனக்குத் தெரியாது. அவனுக்கு டாக்டர் பார்க்க மட்டும் அப்பா, அம்மா ரெண்டு பேரும் போறீங்க. எனக்கு மட்டும் ஒருத்தர் வருவீங்களா? அந்தத் தெரபி, இந்தத் தெரபி கிளாஸ்ன்னு அவனைத்தான் எப்பவும் ஸ்பெஷலா கவனிக்கிறீங்க." வேகமாக கத்தினான்.

அப்போது வர்ஷன் தன் தட்டில் இருந்த தோசை தீர்ந்துவிடவே பக்கத்தில் வருண் தட்டில் இருந்து தோசையை எடுத்தான். அவ்வளவுதான். வருண் கோபத்தில் தன் தட்டை அவனை நோக்கித் தள்ளினான்.

"எல்லாம் நீயே எடுத்துக்கோ. அம்மா, அப்பா, அக்காவையும் நீயே எடுத்துக்கோ. எனக்கு யாரும் வேண்டாம்" என்று கத்தியபடியே வெளியே ஓடினான்.

ஒரு வினாடி எல்லோரும் திகைத்து நிற்க, விக்ரம் எழுந்து அவன் பின்னால் சென்றான். தாரா அதிர்ச்சியில் கண்களில் நீர் கட்ட உட்கார்ந்து இருக்க, வர்ஷன் மட்டும் அமைதியாக தோசையை சாப்பிட்டு முடித்து இருந்தான்.

ரஞ்சனி மெளனமாக மேசையை சுத்தம் செய்ய, தாரா எழுந்து தானும் கை அலம்பி தம்பிக்கும் உதவினாள்.

"அம்மா... நீங்க சாப்பிடுங்க..."

தாரா தட்டில் உணவை வைத்து அம்மாவிடம் கொடுத்து அவள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

"அம்மா, சாப்பிடு" வர்ஷன் இயந்திரக் குரலில் சொல்ல, ரஞ்சனி உள்ளே உடைந்தாள்.

"நான் பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடுறேன்" என்றபடி தாராவையும் வர்ஷனையும் இரு பக்கங்களிலும் உட்கார வைத்துக்கொண்டாள்.

"தாரா, உனக்கும் அம்மா, அப்பா உனக்காக நேரம் செலவழிக்கலேன்னு வருத்தமா இருக்கா?" ரஞ்சனி மெல்ல கேட்டாள்.

தாரா தலையை குனிந்துகொண்டு மெல்ல பேசினாள். "எப்பவாவது இருக்கும். ஆனா அவன் நம்ம தம்பிதானே. அவனுக்கு ஹெல்ப் வேணும்னு நினைச்சுப்பேன்."

"அம்மாக்கும் அப்பாக்கும் நீங்க மூணு பேருமே ஸ்பெஷல்தான்டா. ஆனா இப்போ வர்ஷனுக்கு இந்த ஹெல்ப் பண்ணினாத்தான் நாளைக்கு அவனா தன்னைத்தானே கொஞ்சம் பாத்துக்க முடியும் இல்லையா? வருணுக்கும் கோபமில்லை. அவனுக்கு எல்லோர் மாதிரியும் தம்பி இல்லை. தனக்கு தனியா நிறைய நேரம் கிடைக்கலைன்னு வருத்தம், துக்கம். சின்னப்பையன்தானே, எப்படி வெளிக்காட்டுவதுன்னு தெரியாம கத்திட்டுப் போறான். புரிய வச்சா புரிஞ்சுப்பான்" என்றபடி இருவரையும் அணைத்துக்கொண்டாள்.

அப்போது விக்ரம், வருணை முதுகில் உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு உள்ளே வர, வருண் வெட்கத்துடன் அப்பாவிடமிருந்து இறங்கிக்கொண்டான். அம்மாவிடம் வந்து ‘சாரிமா’ என்று மெல்லச் சொன்னான். வர்ஷன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான்.

"ரஞ்சனி, நாளைக்கு நாம ரெண்டு பேரும் வருண் ஸ்கூலுக்குப் போறோம், ஓகே" என்றபடி அவனுக்குத் தெரியாமல் பின்புறமிருந்து கட்டை விரலை உயர்த்தி காட்டினான் விக்ரம்.

சற்று நேரத்தில் குழந்தைகள் உறங்கியவுடன் விக்ரமும் ரஞ்சனியும் வெளியே வந்து புல்வெளியில் இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டார்கள். வானம் நட்சத்திரங்கள் இல்லாமல் இருளாக இருந்தது. சற்று நேரம் மெளனமாக கழிந்தது.

"அவன்கிட்ட என்ன சொன்னீங்க?"

"சின்னதா ஒரு விளையாட்டு விளையாடினேன். அதன் மூலமா அவனுக்கு நமக்கு சுலபமா வர விஷயத்தைவிட, நமக்கு எது கஷ்டமோ அதுக்கு கூடுதலான நேரமும் உழைப்பும் தேவைங்கிறதை சொன்னேன். ஓரளவு புரிஞ்சுக்கிட்டான். ஆனா இந்த நிமிஷம் அவனுக்கு நம் மேல நம்பிக்கை வரணும். அதனால என் வேலையை ஒத்தி வச்சுட்டு நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரேன்னு சொல்லி இருக்கேன். அவனே வேண்டாம்னுதான் சொன்னான். ஆனா அவனும் நமக்கு முக்கியம்தான்னு அவன் புரிஞ்சுக்க, நம்ப, இப்பொழுது இதைப் பண்றது அவசியம்".

"வருண், வர்ஷனை ஏத்துக்கணும். அதே சமயம் முடிந்தவரை வர்ஷன் தனியே இயங்கத் தயார்படுத்தணும்."

"இது நீளப் பயணம் ரஞ்சனி. பொறுமையா, தைரியமா இருக்கணும். கவலைப்படாதே. சரி, ராத்திரி எனக்கு ஒரு கவிதை சொல்றேன்னு மெசேஜ் அனுப்பினியே... சொல்லு."

"ஆமா, இப்போ கவிதை எழுதறதுதான் எனக்குக் குறைச்சல். இது மாதிரி நான் நினைக்கிறதுகூட எனக்கு சமயத்துல குற்ற உணர்ச்சியாய் இருக்கு. அந்த நேரத்தை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமோ, என்னோட விருப்பங்களை ஏன் யோசிக்கிறேன்னு கஷ்டமா இருக்கு."

குமையும் மனைவியை ஆதாரமாக அணைத்துக்கொண்டான்.

"என் பைத்தியமே, ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ. குழந்தைகளை பார்த்துக்க நீ நல்லா சாப்பிட்டு தூங்கி ஓய்வு எடுக்கிறது எவ்வளவு முக்கியமோ... அதே மாதிரி உன் மனசும் மூளையும் ஆரோக்கியமா இருக்குறதுக்கு உனக்காக நீ நேரம் எடுத்துக்கறதும், பிடித்த விஷயத்தை செய்யறதும் ரொம்ப முக்கியம். நம்மால் முடிஞ்ச வரை உண்மையாகவும் அன்பாகவும் குழந்தைகளுக்கு எல்லாம் பண்றோம். அதைத் தாண்டியும் நமக்குன்னும் கொஞ்ச நேரம் எடுத்துக்கிறது ரொம்ப அவசியம்மா."

"ம்... ம்..."

"கவிதையைச் சொல்லு".

"நடந்த களேபரத்தில் அது மறந்துடுச்சு. ஆனா, நான் யோசிச்சதை சொல்றேன். சாயந்திரம் இருட்டிட்டு மழைவரும்போல இருந்தது. மழை மெல்லத் தொடங்கி ஒரு தாளலயத்தோடு அதிகமாகி பின் படிப்படியாக குறைந்தால் அது குற்றால குறவஞ்சி. ஆரம்பிக்கும்போதே வேகமா ஆரம்பிச்சு அடிச்சு ஊத்தி சட்டுனு நின்னுச்சுன்னா ருத்ரதாண்டவம். பயங்கர காத்தோட மரங்களெல்லாம் ஆடற பேய்மழைன்னா ஆழிக்கூத்து..."

"அம்மாடி, எப்படியெல்லாம் யோசிக்கிறே. இயற்கையின் நடனங்கள். கடைசியில் என்ன நடந்தது?"

"எதுவும் நடக்கல. உங்க பையன்தான் ருத்ர தாண்டவம் ஆடினான்."

விக்ரம் புன்னகையுடன் "இது மூணுமே கலந்ததுதான் வாழ்க்கைல்ல" என்று கேட்டுக்கொண்டே எழுந்து அவள் தோள்களை அணைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

வெளியே மழை சீராக ஒரு தாளலயத்தோடு பெய்ய ஆரம்பித்தது.

- அனுராதா ஜெய்ஷங்கர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com