
“ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும். இன்பம் புது வெள்ளம்” உள்ளே நுழையும்முன்பே பாடல் வரிகள் ஈர்த்தன. அங்கே ஒரு சொர்க்கமே கீழே இறங்கி வந்ததுபோல இருந்தது. எங்கும் ஒளி வெள்ளம். அந்த ஒளி வெள்ளத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஜொலித்தனர். பட்டும் பட்டாடையும் ஆபரணங்களும் அணிந்து, ஒவ்வொருவர் முகமும் மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் திளைத்துக் கொண்டிருந்தன.
உள்ளே நுழைந்த நொடியில் அங்கிருந்த உற்சாகம் என்னிடமும் ஒட்டிக்கொண்டது. மனைவியின் உறவினர் வீட்டுத் திருமணம். சிறிது தூரத்து உறவினர்தான். இருந்தாலும் இரு வேளையும் வருமாறு மிகமிக வற்புறுத்தி அழைத்ததால், மாலை வரவேற்பிற்கு மனைவி வர முடியாத காரணத்தால், நான் மட்டும் வந்தேன்.
அந்தக் கொண்டாட்டத்திற்கு நடுவில், தெரிந்தவர் யார் முகமாவது தெரிகிறதா எனத் தேடத் தொடங்கினேன். நான் அதிகம் யாரிடமும் நெருங்கி பழகமாட்டேன். அதுவும் மனைவி பக்க உறவினர்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்க மாட்டார்கள். அதற்காக அடிக்கடி என் மனைவியிடம் திட்டும் வாங்குவேன்.
ஆனால், கூடவே பிறந்த குணம் திடீரென்று மாறுமா என்ன!! சுற்றும் முற்றும் பார்த்து சிறிது நேரம் தேடியபின், ஒரு நண்பரை அடையாளம் தெரிந்துகொண்டேன். அவரும் தனியாகத்தான் அமர்ந்திருந்தார். அவரும் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார். அவர் அருகில் போய் அமர்ந்துகொண்டேன்.
சம்பிரதாயத்திற்கு “மனைவி வரவில்லையா” அவரிடம் கேட்டேன்.
“வந்திருக்காங்க. அதோ அங்க அவங்க சொந்தக்காரங்களைப் பார்க்கப் போயிருக்காங்க” பதில் அளித்தார் அவர். ஏதோ அவரைப் பற்றி எல்லாம் தெரிந்தாற்போல சம்பிரதாய விசாரிப்புகளை தெளித்துக்கொண்டிருந்தேன்.
அதற்குள் அவர் “அதோ வந்துட்டாங்களே” என்று ஒரு பெண்மணியைக் காட்டி கூறினார். அவர்தான் அவர் மனைவி போல் இருக்கிறது.
“என்னங்க!! இங்க கொஞ்சம் வாங்களேன்.” அருகில் வருவதற்கு முன்பே அவர் மனைவி அழைத்துக்கொண்டே வந்தார்.
“என்ன வேணும் உனக்கு?” கேட்டுக்கொண்டே அவரிடம் சென்றார்.
பக்கத்தில் நெருங்கியதும், அவர் காதை நெருங்கி ஏதோ சொன்னார் அவர் மனைவி.
இவர் முகம் சிறிது மாறியது. “சரி! சரி! விடு. யாரோ ஏதோ சொன்னாங்க என்பதற்காக நீ ஏதேதோ புலம்பிக்கிட்டு இருக்காதே. அமைதியா வந்த வேலையைப் பாரு” என்று அவரை அடக்கினார் நண்பர்.
“இல்லைங்க!!” என்று தொடங்கிய மனைவியை கண் பார்வையினாலே மீண்டும் அமைதியாக இருக்கும்படி சொன்னார்.
தனித்து விடப்பட்ட நான் சுற்றி இருந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சிறிது தள்ளி ஒரு பாட்டியும் பேரனும் அமர்ந்து இருந்தனர். இந்தக் கல்யாணக் கொண்டாட்டங்களின் பிரதிபலிப்பு எதுவும் அவர்கள் முகங்களில் காணவில்லை.
பேரன் கையில் ஒரு மொபைல் இருந்தது. அவனுடைய கவனம் முழுவதும் அதிலேயே இருந்தது. பாட்டி ஏதோ யோசனையிலேயே இருந்தார். அவர்கள் அருகில் சென்று “என்ன விஷயம்?” என்று கேட்கலாமா என்று நான் யோசிக்கும் முன்பே, “போலாமா?” என்று நண்பரின் குரல் கேட்டது.
“எல்லோரும் பரிசு கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமும் போகலாம் வாங்க!” என்று அவர் கூப்பிட்டார்.
நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். வரிசையில் நின்றபிறகும், அன்பரின் மனைவி முகத்தில் ஒரு சந்தேக ரேகை ஓடிக்கொண்டே இருந்தது. நண்பர் அவரிடம் பேச்சு கொடுப்பதைத் தவிர்த்தார். சம்பந்தமில்லாமல் என்னிடமே ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ஒருவழியாக பரிசை மணமக்களிடம் சேர்ப்பித்த பின்பு சாப்பிடச் சென்றோம்.
அந்தப் பாட்டியையும் பேரனையும் பார்த்தேன். கையில் மொபைலுடன் பேரன் அமர்ந்திருக்க பாட்டி வேகவேகமாக அவனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தார். பக்கத்தில் வந்த யாரையும் முகத்துக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்தார். சிறு புன்முறுவலுடன் திரும்பிக்கொண்டார்.
நான் அவரிடம் சென்று, “குட்டி பையனையே சாப்பிடச் சொல்லுங்களேன்” என்று கூறினேன்.
“இல்லை, நாங்கள் சீக்கிரமாக போக வேண்டும்” என்று பதில் அளித்து, அதற்கு மேல் பேச விரும்பவில்லை என்பதாக பதட்டத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
சாப்பிட்டு முடித்து இரவு வீட்டிற்கு வந்து சேர மிக நேரம் ஆகிவிட்டதால் இரவு மனைவியிடம் எதுவும் கேட்க முடியவில்லை. காலையிலும் முகூர்த்த நேரம் சீக்கிரமாக இருந்ததால் இருவரும் கிளம்பி மண்டபத்திற்குச் சென்றுவிட்டோம். நேற்று இருந்த சத்தமும் கொண்டாட்டமும் குறைந்து இன்று தெய்வீகம் நிறைந்து அமைதியாக இருந்தது மண்டபம். இன்று மனைவியுடன் வந்ததால் சிறிது ஆசுவாசமாக உணர்ந்தேன்.
உள்ளே சென்று அமர்ந்தவுடன் அந்தப் பாட்டியையும் பேரனையும் மட்டுமே என் கண்கள் தேடின. முதல் வரிசையில் இருவரும் இருந்தனர். இன்று பேரன் கையில் மொபைல் இல்லை. மேடையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். பாட்டி இன்று எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் முகமூடி அணிந்து அமர்ந்திருந்தார்.
“அவர்கள் யார்” என்று மனைவியிடம் கேட்டேன்.
அவளுக்கும் தெரியவில்லை. “யாராவது பெண் வீட்டுகாரர்களாக இருப்பார்கள்” என்று அவள் பதில் கூறினாள். மேடையில் அடுத்தடுத்து ஐயர் மந்திரங்கள் ஓத திருமண வைபவங்கள் நடந்துகொண்டிருந்தன. மனைவி யாரோ உறவினரை பார்க்கப் போய்விட்டாள்.
நான் வழக்கம்போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அப்போதுதான் கவனித்தேன். ஆங்காங்கு சில பேர் ஏதோ அவர்களுக்குள் ரகசியமாக முகத்தை ஒரு யோசனையுடன் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
நேற்று பார்த்த நண்பரும் அவர் மனைவியும்கூட யாரிடமோ ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். என்னை அவர்கள் கவனிக்கவே இல்லை. என்னவாக இருக்கும் திருமணத்தில் ஏதோ பிரச்னையோ. ஏன் இங்கிருக்கும் சிலர் முகத்தில் ஒரு பயம் தெரிகிறது.
என்னுடைய மனம் யோசிக்க ஆரம்பித்தது. திரும்பி வந்த மனைவியிடம் கேட்டேன். “அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் உங்க கற்பனை” என்று முற்றுப்புள்ளி வைத்தாள் அவள்.
ஆனாலும் என் மனம் சமாதானம் அடையவில்லை. திருமணத்தின் கடைசி கட்ட வைபவங்கள் ஆரம்பித்தன. ஒரு பெண் திருமாங்கல்யத்தை அனைவரின் ஆசீர்வாதத்திற்காக எடுத்து வந்தாள். கல்யாண பெண்ணின் தங்கைபோல் இருந்தாள். அவள் முகத்தையும் கலவர மேகம் சூழ்ந்ததுபோல் இருந்தது எனக்கு.
“சும்மா இரு. நன்றாக நடக்க இருக்கும் திருமணத்தை உன்னுடைய யோசனைகளால் கெடுத்துவிடாதே; எல்லாம் நல்லபடியாக முடியட்டும் என்று நினை.” என் மனதை நானே திட்டிக்கொண்டேன்.
மேடையில் தாலி கட்டும் நேரம் நெருங்கியது. மணமகன் திடீரென்று எழுந்து நின்றான். மேடையில் இருந்த எல்லோர் முகத்திலும் பயம் தெரிந்தது. சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மணமகன் கீழே இருந்த அந்த குட்டிப் பையனைச் சைகையால் அழைத்தான். பயந்துபோன அந்தப் பையன் தன் பாட்டியின் முகத்தை திரும்பிப் பார்த்தான். என்ன நினைத்தார்களோ அந்த பாட்டி “சரி போ” என்று அனுமதி கொடுக்க, பையன் மேடை ஏறினான்.
“என்ன இது!! தாலி கட்டும் நேரத்தில் நாம் நினைத்த மாதிரியே ஏதோ நடக்கிறதே. நம் உள்ளுணர்வு சரிதான் போல இருக்கிறது” என்று எனக்கு நானே பாராட்டிக்கொண்டிருக்க, சடார் என்று மணமகன் அந்தப் பையனை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டார்.
‘யார் இந்தப் பையன். தாலி கட்டும் நேரத்தில் அவன் எதற்கு மடியில்?’ என்று அனைவரும் கலவரத்துடன் பார்க்க, எதைப் பற்றியும் கவலைப்படாமல் “இப்பொழுது கொடுங்கள் தாலியை” என்று கேட்டு வாங்கி மணமகளின் கழுத்தில் அணிவித்தார். அத்துடன் நில்லாமல் குனிந்து அந்தப் பையனை முத்தமிட்டு, தான் புதிதாக தாலி கட்டிய மனைவிக்கும் ஒரு முத்தத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த மணமகனை வைத்த விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்க, அவரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் மந்திரம் ஓதிக்கொண்டிருந்த ஐயரிடம் இருந்து மைக்கை வாங்கி, “இங்கிருக்கும் அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இதோ இந்தப் பையன் எங்களது முதல் மகன். இங்கிருக்கும் எத்தனை பேருக்கு என் மனைவிக்கு இது இரண்டாவது திருமணம் என்று தெரியும் என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் இப்பொழுது சொல்கின்றேன். இங்கிருக்கும் யாரும் இனி பயந்து பயந்து ரகசியமாக இந்த விஷயத்தைப் பற்றி பேச வேண்டாம். மீண்டும் சொல்கின்றேன், இவன் எங்களது முதல் மகன்” என்று கூறி அந்த குட்டிப் பையனை கட்டி அணைத்து மீண்டும் ஒரு முத்தம் இட்டார்.
நான் உடனடியாக அந்தப் பாட்டியைத்தான் திரும்பி பார்த்தேன். அவர் மிக மிகச் சந்தோஷமாக எழுந்து சென்று, மேடையை அடைந்து அந்த மணமகனை கட்டி அணைத்து மனதார வாழ்த்தினார்.
- கௌரி கோபாலகிருஷ்ணன்