
சின்ன வயசிலிருந்தே கருப்பட்டிப் பிரியன். இந்தக் காலத்திலே காஜூ கத்லி, திருநெல்வேலி அல்வா, கிருஷ்ணா மைசூர்பா, சாத்தூர் சேவு பிரியர்கள் போல.... அப்பல்லாம் நடுத்தர மக்கள் வீடுகள்ல எப்போதும் இருப்பு இருக்கும் இனிப்பு இது ஒண்ணுதான். அம்மா எங்கு ஒளிச்சு வச்சாலும் எறும்பு போலக் கருப்பட்டி இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதில் சேகர் கில்லாடி. சுருக்கமா சொன்னால்... கிருஷ்ண பரமாத்மாவுக்கு வெண்ணெய்... சேகருக்குக் கருப்பட்டி.
காலைல பழைய கஞ்சிக்கு எல்லோரும் சின்ன வெங்காயம், புளித் துவையல், தேங்காய்த் துவையல்னு விரும்பிச் சாப்பிடும் வீட்டில், சேகருக்குக் கருப்பட்டி இருந்தால் போதும். நிறைய பழங்கஞ்சி குடிச்சிடுவான். இரவு புளிக்குழம்பு, சாம்பார் இருந்தாலும் காய்கறிக்குப் பதில் கருப்பட்டித் துண்டுதான்.
ஒவ்வொரு கவளம் சோறு வலது உள்ளங்கையிலிருந்து உருண்டையாய் வாய்க்குள் போட்டவுடன் இத்துனூண்டு கருப்பட்டித் துண்டின் ஓரம் எச்சக்கையால் முன்னிரண்டு பற்களால் அணில் கடிப்பதுபோல கடித்துக்கொள்வான். என்ன... அணில்போல சத்தம் கொடுக்கமாட்டான்.
ஏதோ தங்கத்தை மிகத் துல்லியமா எடை போடுவதுபோல இத்துனூண்டு அளவு. அளவாத்தான் கடிப்பான். லேசா ஓரத்தில் நக்கினாலே அவனுக்குச் சொர்க்கலோகம் அதுதான். அதவச்சு நிறைய சோறு சாப்பிட்டு விடுவான். ஒவ்வொரு கடிக்கும் பிறகும் தட்டுப் பக்கத்திலிருக்கும் சின்ன ஏனத்திலே வச்சிடுவான். அம்மா தருவதே தங்கத்தைத் தருவதுபோல சின்னக் கட்டிதான். அதை நூறு மடங்காக்கிடுவான் கற்பனையிலேயே.
அன்று மதியம் தக்கலை சேது டாக்கீஸில் ‘ஊட்டி வரை உறவு’ படம் பார்த்துட்டு வந்த அம்மா சாயந்தரம் கடுங்காப்பி போடக் கருப்பட்டிச் சருவத்தைத் திறந்துப் பார்த்தால்... ஒரு பெரிய கருப்புக்கட்டியைக் காணோம். வீட்ல பகல் நேரம் எட்டு வயசு சேகரும், 5 வயசு தம்பி வெற்றியும் மற்றும் ஆச்சியுந்தான் இருந்தனர்.
ஆச்சியோ வெற்றிலைப் பிரியை... அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ரெண்டு வெற்றிலை மெல்லாட்டா ஒன்னும் ஓடாது. சாப்பாடு இருக்கோ இல்லியோ... வெற்றிலை கண்டிப்பா வேணும். காலியாப் போச்சுன்னா வெட்ட வெயில்னாலும் சரி, வெறுங்கால்ல கால் கிலோமீட்டர் நடந்து மேட்டுக்கடையில் சேகர்தான் வெத்திலையை வாங்கிட்டு வரணும். தம்பி சின்னப் பையன். அவனுக்கும் திருடுற பக்குவமின்னும் வரல.
தான் சினிமாக்குப் போன நேரத்திலேதான் சேகர்தான் திருடியிருக்கணும்னு முடிவுக்கு வந்தார் அம்மாக்காரி. தான் நினைச்சதுதான் சரின்னு நினைக்கிற ஜென்மம். வெளியே சேக்காளிகூட புளிய மரத்துல ஏறி புளியங்காய், குருத்து புளிய இலைன்னு மேஞ்சுட்டு வந்த சேகர் வீட்டுக்குள் நுழைஞ்சதுந்தான் தாமதம்... கைலிருந்த சொளவால தலைல நாலு போட்டாள் அம்மாக்காரி. சொளவு பிஞ்சதுதான் மிச்சம். என்னன்னு தெரியாம முளிச்சான் சேகர்.
சினிமாக்குப் போயிட்டு வந்தா சந்தோஷமால்ல வரும் இந்தம்மா... இன்னிக்கென்ன வாழ்வு வந்ததுன்னு... வெளில தப்பியோடிப் போனான். இனி அம்மாக்காரின்னால பிடிக்க ஏலாது.
கொல்லைக்குப் போயிட்டு வந்த ஆச்சி "ஏன்டி... ஏன் அடிச்சே அந்தப் பயல?"
"கருப்பட்டில ஒரு பெரிய துண்டக் காணோம்... ரெண்டு மணி நேரம் வெளிய போயிட்டு விறுவிறுன்னு வர்றதுக்குள்ளே இந்த சேகர் பய மேஞ்சுட்டான்."
"அட எடுபட்ட சிறுக்கி மவளே... அவன ஏன் அடிச்சே... ஏங்கிட்ட கேட்டா முத்தா உதுந்துடும்? இந்த மூனாம் வீட்டு மினுக்கித்தான் கருப்பட்டி காலியாப் போச்சுன்னு காப்பித் தண்ணீ போட கொஞ்சங் கடனா வாங்கிட்டுப் போனா... அது தெரியாம பச்சப்புள்ள தொலிய உரிச்சிட்டியேடி மூதேவி..."
அம்மா அப்படியே பால் தயிரான மாதிரி உறைஞ்சு நின்னா... விசாரிக்காம பெத்த மகனை அடிச்சுட்டோமே... பாவம்ல அவன்னு மனசுல அவனைப் பற்றிய எண்ணங்கள் ஒன்னொன்னா வர ஆரம்பித்தன.
தலையில் கையை சோகத்துடன் வைத்துக்கொண்டே மூலையில் உட்கார்ந்தாள். கண்களின் ஊரளவு சோகம் குவிந்துகிடந்தது. வீட்டுக்கு முன் முற்றத்தில் நின்று அமாவாசை அன்னிக்குக் காக்காவைத் தேடறாப்ல சுற்றிச்சுற்றிப் பார்த்தாள். சேகர் கண்லயே தென்படலை.
வீட்டுக்கு முன்னாடி சாலையைத் தாண்டி ஒரு தேவாலயம்; வலது பக்கம் ஒரு தேவாலயம். அங்கே போய் டெஸ்க்ல உக்காந்திருக்கானோ... நண்பர்களோடு விளையாடுகிறானோ தெரியவில்லை. இரவு ஏழு மணிக்கு மேலதான் பதுங்கி பதுங்கி வந்தான் சேகர். அப்பா வரும் நேரமாதலால் அம்மா அடக்கி வாசிக்கும் நேரமதுன்னு அவனுக்குத் தெரிந்ததுதான்.
ராத்திரி சாப்பாட்டுக்கு உக்காந்த சேகருக்கு தினம் கொடுப்பதைவிட கூட ஒரு சின்னத்துண்டு கருப்பட்டி கொடுத்தார் அம்மாக்காரி. சேகருக்கு வாயெல்லாம் பல்....
"அப்ப நெதமும் அடிச்சுட்டு கூட ஒரு கட்டி தருவீங்களாம்மா?"
சேகரைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள் அம்மா. இருவரும் இரு நிமிடங்கள் மௌனமாக அப்படியே இருந்தனர். இனி மகனை அடிக்கவே கூடாது என மனதுக்குள் சபதமெடுத்துக்கொண்டாள் அம்மா. இப்படியே நாளொரு மேனியும் பொழுதொரு கருப்பட்டித் துண்டோடு சேகர் வாழ்க்கை ஓடியது.
அதற்குப் பிறகு பொரிகடலை, காரச்சேவு, வடை, பக்கோடான்னு விதவிதமாக வந்தாலும் அந்தக் கருப்பட்டி ஆசை மட்டும் எந்த வயதிலும் குறையலை. வெல்லமோ, சீனியோ அவன் மனதில் இடம் பிடிக்க முடியாமல் வருத்தப்படவும் செய்தன.
தெற்கத்திய சீமையிலே இருக்கங்குடி மாரியம்மன் மிக சக்தி வாய்ந்த தெய்வம். அர்ச்சுனா நதிக்கும் வைப்பாறுக்கும் நடுவில் திருவரங்க ரங்கநாதர் போல தீவுக்கோயில். ஆனால், வருடத்துக்கு ஒரு நாளோ ரெண்டு நாளோ கடும் மழை நேரம் மட்டுமே ஆறுகளில் வெள்ளம் ஓடுவதால் எப்போதுமே அங்கு மணலாறுதான்.
வெள்ளிக்கிழமை தோறும் கன்னியாகுமரி வரை உள்ள தெற்கத்தியர்கள் வந்து குவிந்துவிடுவர். கிராம மக்களுக்கு திருப்பதி, காசி, இராமேஸ்வரம், காஞ்சி காமாட்சி எல்லாமே இருக்கங்குடி மாரியாத்தாதான்.
சேகருக்கு ஒரு முறை உடம்பு சரியில்லாத நேரம் கோயிலுக்கு வந்து மொட்டை போடுவதாக வேண்டியிருந்தனர். வெள்ளிக்கிழமை கூட்டமாக இருக்குமென்பதால் ஒரு ஞாயிற்றுக்கிழமை தக்கலைலருந்து பஸ் பிடிச்சு திருநெல்வேலி போய் அங்கிருந்து சாத்தூர்... அப்படியே சாத்தூரிலிருந்து எட்டு கிலோமீட்டர் டவுன்பஸ்ல அம்மா, அப்பா, ஆச்சி, தம்பி அனைவருடனும் குதியாட்டம் போட்டுக்கொண்டு போனான் சேகர்.
இவ்வளவு தூரம் பஸ்ல போறது இதுவே முதல் தடவைங்கிறதுனாலே சேகருக்கும் அவன் தம்பிக்கும் கொள்ளை ஆனந்தம். பஸ்லருந்து இறங்கி அர்ச்சுனா நதியின் மணலைக் காலால் அளந்து, அளைந்து, போற வழியிலே பதநீர் குடித்துக்கொண்டு மொட்டை போடச் சென்றனர். தலைல தண்ணி தெளிச்சவுடனே சேகர் கத்தின கத்து... வாயிலே ஒரு துண்டு கருப்பட்டியை வச்சு அடைச்சதும்தான் அந்த கத்தலும் அழுகையும் காணாமல் போச்சு.
ஆத்துல ஊத்து தோண்டி குளிக்கிறதுக்கு தண்ணி விக்கிறவங்ககிட்டே காசைக் கொடுத்து குளிச்சுட்டு புதுத் துணிகளை அணிந்துகொண்டு அம்மனை நிம்மதியா பத்து நிமிஷம் நின்னு குடும்பம் தழைக்க வேண்டிக்கொண்டு பிரகாரத்தை மூனு சுத்து சுத்திவிட்டு ஒரு இடத்திலே அஞ்சு நிமிஷம் உக்காந்து அம்மனை வேண்டிக்கொண்டிருந்தனர்.
எல்லாம் முடிஞ்சு மீண்டும் சாத்தூருக்குப் பேருந்தைப் பிடித்து சண்முகநாடார் மிட்டாய்க் கடை வந்து சேர்ந்தனர். சாத்தூர் பக்கம் பிரயாணம் பண்ணுபவர்கள் அந்தக் கடைல பிரசித்தி பெற்ற காரச்சேவு வாங்காம போறதில்லை. அரைக்கிலோ காரச்சேவு சொல்ற நேரம் சேகர் கண்ணுல கருப்பட்டி மிட்டாய் பட்டுது. ஏணி மிட்டாய்னும் சொல்லுவர் சிலர்.
வட்ட வட்டமா சுற்றி பெரிய உயரமான குதிர்போல கருப்பட்டிப் பாகு வைர நெக்லஸா ஜொலிக்க அடுக்கி வைத்திருப்பார். அதை சுடச்சுட சாப்பிட்டோர் தேவலோக அமிர்தம் தந்தால்கூட வேண்டாம் என்பர். ஜொள் வழிய நின்ன சேகரைப் பார்த்த அவன் அப்பா கருப்பட்டி மிட்டாய் சூடா அரை கிலோ வாங்கினார். அவருக்குமே அது மேலே ரொம்ப நாளா கண்ணு. ஐவரும் அங்கேயே நின்னு மனம் ததும்பும் மகிழ்ச்சியுடன் தின்றனர். இனிமே எப்போது இந்த மாதிரி அமிர்தம் வாய்க்கும் என அனைவரும் மனசுக்குள் நினைத்துக்கொண்டனர்.
பஸ்ல உக்காந்த பிறகும் சேகருக்கு அந்தக் கடைல உயரமா, வளையம் வளையமா நிறைய பழுப்பு நிற வளையல்களை உயரவாக்கில அடுக்கிய மாதிரி நின்ற கருப்பட்டி மிட்டாயே ஞாபகத்தில் நின்றது. அன்றிலிருந்து கருப்பட்டி மிட்டாயே உயிராக தோன்றியது சேகருக்கு. அப்பா வெளியூர் போய் வந்தா கருப்பட்டி மிட்டாய் மட்டும் தவறாது வாங்கி வரச் சொல்வான் அவன்.
அப்பாவும் மாசம் தவறாம கருப்பட்டி மிட்டாய் வாங்கித் தந்து பிள்ளைங்களை குஷிப் படுத்தினார். என்ன இருந்தாலும் கடையில் சூடாக சாப்பிடும் சுகமே தனிதான். அது வேற லெவலாச்சே.
9000 நாட்களுக்குப் பிறகு சேகர் தன் மனைவியோடும் எட்டு வயது மகனோடும் சென்னைக்குக் குடி வந்தான். அப்பா அம்மால்லாம் ஊர்லயே சொந்த வீட்டிலேயே வசித்து வந்தனர். ஊருக்குள் வாடகை அதிகம் என்பதால் தாம்பரத்திற்கு தெற்கே சொந்த ஊருக்குப் போக வசதியா கூடுவாஞ்சேரியில் வாடகைக்கு ஒரு வீடும் வீட்டை ஒட்டி வலது பக்கம் தெருவை நோக்கி இருந்த அறை ஒன்றில் ஒரு பாத்திரக்கடையும் ஆரம்பித்தான். மனைவியும் கூடமாட ஒத்தாசை செய்தாள்.
சென்னைக்குப் போய் மொத்தச் சரக்கு வாங்கி வரும் நாளில் சேகர் மனைவியே கடையைப் பார்த்துக்கொள்வாள். நல்ல வியாபாரம், அதனுடன் தீபாவளி பாத்திரச் சீட்டு எல்லாம் நடத்தி ஓரளவு வாழ்க்கையில் முன்னேறினான். பக்கத்து வீட்டார் எல்லாம் நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.
மீண்டும் சொந்த ஊர் போகும் ஆசை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. சேகர் மகனுக்குப் பத்து வயசாச்சு. கூடுவாஞ்சேரியிலேயே அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டனர். அவனையாவது டாக்டர், இன்ஜினியர் ஆக்கணும்னு நடுத்தர மக்கள் நினைப்பதுபோல சேகரும் ஆசை கொண்டிருந்தான். மகனும் அப்பா நினைச்சபடியே நல்லா படிச்சிட்டிருந்தான்.
சேகர் தெனமும் 12 மணி வாக்கில கூடுவாஞ்சேரியிலுள்ள ஆலம்பட்டியான் கருப்பட்டிக் காப்பிக் கடைல காப்பி குடிக்கத் தவறுவதில்லை. கருப்பட்டியும் கருப்பட்டிக் காப்பியும் அவன் வாழ்க்கையில் மொபைலும் இடது கையும் போல இணைந்தே இருந்தன.
ஒரு ஞாயிற்றுக்கிழமை கடைக்கு அடைப்பு போட்டு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் என சுற்றினர். தரிசனம் முடித்துவிட்டு கோயில் பக்கத்துலயே நல்ல ஓட்டலாகப் பார்த்து மதிய உணவுக்கு உட்கார்ந்தனர். சேகர் மகனுக்கு பரம சந்தோஷம். நாளைக் காலையில் பள்ளிக்கூடத்திலே நண்பர்களிடம் பேசுவதற்கு அவனுக்கு நிறைய விஷயங்கள் சேர்ந்துவிட்டன.
ஒரு பெரிய மிட்டாய் கடையில காரமும் இனிப்பும் வாங்கப் போனார்கள். கண்ணாடி ஷோகேஸூக்குப் பின்னாடி விதவிதமான வகை காரங்கள், இனிப்பு வகைகள் விலைக் குறிப்புடன் தனித்தனியாக இருந்தன.
ஒவ்வொன்றின் விலையைப் பார்த்ததும், சேகர் மனைவி "என்னங்க... எல்லாமே இம்புட்டு விலையா இருக்கு... ஒரு கிலோ இனிப்பு வாங்குற காசுல மாசத்துக்குக் காய்கறியே வாங்கிப்புடுவேனே... நாம கூடுவாஞ்சேரியிலேயே வாங்கிக்கிடுவோமுங்க..." என நீட்டி முழக்கினாள்.
இருந்தாலும் ஒரு தடவ வாங்குவோம்னு பையனிடம் "எந்த பர்ஃபிடா வேணும்"னு கேட்டான் சேகர். கையைக் காட்டினான் பையன் தயக்கத்துடன். விலை அதிகமாத்தான் இருந்தது. மூவருக்குமே மயக்கம் வர்ற அளவு விலை அந்த பெயர் பெற்ற கடையிலே.
"வேணான்டா... அது ரொம்ப விலை... ஆயிரத்துக்கு மேலே போட்டிருக்கு"ன்னு பதறினாள் சேகர் மனைவி. அவள் கவலை அவளுக்கு.
சிரிச்சுக்கிட்டே மவன் காட்டிய காஸ்ட்லி கருப்பட்டி காஜூ கத்லியை அரை கிலோ போடச் சொன்னான் சேகரு. சிரிப்புடனே அவன் கண்களில் ஏனோ ஒரு துளி ஆனந்தக் கண்ணீரும் எட்டிப் பார்த்தது.
- தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்