கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு சிறுகதைப் போட்டி 2025 - முதல் பரிசுக் கதை: சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

Old man and Orphanage
Old man and Orphanage
Published on
மாலா மாதவன்
மாலா மாதவன்

“குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்..” ஆராவமுதன் நெற்றிக்கு நிறைவாய் திருமண் இட்டுக்கொண்டு அவர் அகத்தின் தோட்டத்தில் திருத்துழாய் சேகரித்துக்கொண்டிருந்தார். வாய் அதன் பாட்டுக்கு அன்றைய திருப்பாவையை ஸ்வீகரித்துக் கொண்டிருந்தது.

“தாத்தா! தாத்தா! நானும் கொஞ்சம் பறிக்கட்டுமா?” எட்டு வயதுக் குழந்தை மாயா பட்டுப்பாவாடை சரசரக்க கொஞ்சும் கொலுசொலியில் ஓடோடி வந்தாள்.

“மாயாம்மா! பறிக்கவான்னு சொல்லலாமா? சேகரிக்கவான்னு தன்மையாக் கேட்கணும். திருத்துழாய் எனப்படும் பிருந்தை கண்ணனுக்கு அதி பிரியமானவள். கண்ணனுக்குப் பிடித்தவரெல்லாம் நமக்கும் பிடித்தவர்தானே. சொல்லு! மாயாவை யாருக்கெல்லாம் பிடிக்கும்?”

“எல்லோருக்கும் பிடிக்கும்!”

“எல்லோருக்கும் உன்னைப் பிடிக்க நீ என்ன செய்த?”

“பிடிக்கற மாதிரி அன்பா இருந்தேன்!”

“அதே அன்போட திருத்துழாயைச் சேகரிச்சின்னா அந்தக் கண்ணனும் அட! நம் பிரியமானவளைப் பிரியமாய்க் கொண்டாடும் இந்த மாயா குழந்தையும் நமக்கு ரொம்பப் பிரியமானவள்னு உன்னைத் தூக்கித் தன் ஹ்ருதயத்தில் வச்சுப்பான்.”

“அப்படியா தாத்தா! அப்படின்னா.. நான் தடவித் தடவி ஆத்மார்த்தமா அதோட பேசி உன்னை நான் கொஞ்சம் சேகரிச்சுக்கட்டுமான்னு கேட்டு இதோ இந்தக் குடலை முழுக்க சேகரிச்சுண்டு வரேன்... நீ போய் உன் கண்ணனை ஆராதிச்சுண்டு இரு!”

மாயா தன் தாத்தா ஆராவமுதனுக்கு விடை கொடுத்து உள்ளே அனுப்பினாள்.

தினமும் காலை எழுந்ததும் நீராடி நித்ய அனுஷ்டானமாய் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் முடித்து கண்ணனுக்குத் திருவாராதனம் செய்த பின்தான் பச்சைத் தண்ணீர் பல்லில் காட்டுவார் தாத்தா. அதுவரை பட்டினிதான். அதற்காகத்தான் மாயா அவ்வப்போது இப்படி குறுக்கிட்டு வேலையைப் பறித்துக்கொள்வது.

ஆராவமுதனுக்கு அனைத்தும் கிருஷ்ணன்தான். நின்றால் கண்ணன்! நடந்தால் கண்ணன்! உட்கார்ந்தால் கண்ணன்! காணும் இடமெல்லாம் கிருஷ்ண ஸ்வரூபம் என்பார். பேரனை எதிர்பார்த்து கிருஷ்ணன் என்ற பெயரோடு காத்திருக்க பேத்தி என்றாக மாயா என ஆசையாய்ப் பெயரிட்டார்.

“மாமா! கிருஷ்ணன் பிறக்கலையேன்னு குறையில்லையா உங்களுக்கு?” என ஊரார் கேட்டபோது... “நப்பின்னையே பேத்தியா வந்து பிறந்திருக்காளே! இவதானே புருஷகாரம்! நமக்கும் கண்ணனுக்கும் இடை நின்று பரிந்துரைப்பவள். கண்ணன் வந்தால் என்ன? மாயா வந்தால் என்ன? இவள் மூலம் பக்தியெனும் படகேறி கண்ணனை அடைந்துவிடுவேன் நான்!” என்பார் ஆராவமுதன்.

ஆராவமுதன் அரசு வேலையில் இருந்தார். ரிடையராக இன்னும் சில மாதங்களே இருக்க இன்று ஒரு கருணை இல்லத்துக்கு அதன் வசதிகளைச் சரிபார்த்து அனுமதி கொடுக்க வேண்டி நேரில் சென்று சூழ்நிலையைச் சரிபார்க்க வேண்டி இருந்தது.

வேலைக்கும் இதே பஞ்சகச்சம், திருமண், ஸ்ரீசூர்ணத்துடன்தான் கிளம்புவார் அவர். வணக்கம் என்பதற்கு பதிலாக கிருஷ்ண! கிருஷ்ண! என்பார். அவரை அறிந்தவருக்கு அவர் மேல் இளக்காரம் இல்லை. அவரை அறியாதோரின் இளக்காரம் பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை.

மாயா குடுகுடுவென்று குடலை நிறைய திருத்துழாய் மணக்க மணக்க வந்தாள். நித்ய திருவாதாரணம் நடைபெற துளசி தீர்த்தம் உட்கொண்டு அன்றைய நாளை கிருஷ்ணார்ப்பணம் செய்து துவக்கினார்.

“சீக்கிரம் கிளம்பணுமா தாத்தா?” மாயா கேட்டாள்.

“ஆமாம்மா! ஒரு கருணை இல்லம் இன்ஸ்பெக்ஷன்!”

“கருணை இல்லம்ன்னா கருணை கிடைக்கும் இடமா? இல்ல கருணை கொட்டப்படும் இடமா?”

“எதுன்னு நீ நினைக்கிற?”

“கேட்டாத்தானே எதுவும் கிடைக்கும்ன்னு நீ சொல்வ தாத்தா! ஆக அது கருணை கொட்டப்படும் இடமாகத்தான் இருக்கும். ஆமா தாத்தா! கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா! அப்படின்னு பாடுவியே அப்போ அவனும் கருணை மிக்கவன்தானே!” மாயா வேண்டுமென்றே கிருஷ்ணனைப் பேச்சுக்குள் இழுத்தாள்.

“போக்கிரிப் பொண்ணே! எங்குச் சுற்றினாலும் நான் கண்ணனைச் சேவிப்பேன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கே. அதனாலதானே இப்படி கேள்வி கேட்கற? கருணாகரனாச்சே அவன்! அவனோட அனுக்கிரகம் இல்லன்னா இந்தப் பூமிதான் ஏது? சரி! நான் கிளம்பறேன். வாசலில் மாதய்யன் காரோட வந்துட்டான் பார்!”

ஆராவமுதன் மாதய்யனோடு கருணை இல்லம் நோக்கிப் பயணமானார்.

“ஆராவமுதன் சார்! இந்த இல்லம் கொஞ்சம் பேஜாரு புடிச்சது சார். ஒரு வயசான தம்பதி எங்கிருந்து வந்தாங்கன்னு தெரியல. ஒரு ஓட்டு வீட்டுல பத்து பிள்ளைகளை வச்சுக்கிட்டு இல்லம் நடத்தறாங்க. அதுக்கு அனுமதி வேணும்ன்னு ஒரு மனு. பிள்ளைக போதாதுன்னு நாய், பூனை, கோழின்னு ஒரே வளர்ப்பு பிராணிகள் கூட்டம் வேற.”

“நேர போய்ப் பார்ப்போம் மாதய்யா!”

“அடச் சை! நமக்குன்னு வந்து சேருது பாருங்க இந்த மழை! பலக்க பெய்யுது சார். நம்ம வீட்டுக்குத் திரும்பிடலாமா?”

“இல்ல மாதய்யா. இதான் அந்த வீட்டின் தகுதியைச் சோதனை செய்ய சரியான நேரம். இல்லம் நடத்த தேவையான வசதி இருக்கான்னு பார்க்கணும்ன்னு புறப்பட்டாச்சு. முன்வச்ச காலை பின்வைக்க வேண்டாம். போகலாம்!”

கார் ஜன்னல் கதவை முழுக்க மேலேற்றிய ஆராவமுதன் சீட்டில் சாய்ந்துகொண்டார். தகுதியை நிர்ணயம் செய்பவனா நான்? ஒவ்வொருவனுக்கான தகுதியை நிர்ணயம் செய்பவன் அந்தக் கண்ணன் அல்லவா? இவன் நல்லவன், இவன் கெட்டவன், இவன் சமத்தன், இவன் திருடன் என ஒவ்வொரு மனதுள்ளும் அவரவர் பூர்வ ஜன்மத் தொடர்பின் சங்கிலியாக நிறைந்திருப்பவன் கண்ணன் அல்லவா? அவனல்லவா அவரவர் வாழ்வை நிர்ணயிக்கிறான். மாதய்யாவின் கவனம் முழுக்க நீர் தேங்கிய சாலையில் இருந்தது.

“பலத்த மழை சார். தெருவே தாழ்வான தெருபோல. எல்லா வீட்டிற்குள்ளயும் தண்ணி நிக்குது!”

“இந்தத் தெருவிலதான் அந்தக் கருணை இல்லம் இருக்கா?"

“ஆமா சார். பாருங்க ஒவ்வொரு வீட்டிலும் சட்டி பானை எல்லாம் வெளில வந்து மிதக்குது. இன்னும் கொஞ்சம் கனமழை பெய்ஞ்சா கஷ்டம்தான். இவங்க முதல்லயே பாதுகாப்பான இடத்துக்குப் போயிடறது நல்லது. அப்புறம் தப்பிக்கறதுக்கு ஆட்களை எதிர்பார்க்கணும்!”

“தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இனி களத்தில் இறங்கும் மாதய்யா! சாப்பாடு, போர்வை, மெழுகுவர்த்தின்னு சேகரிச்சுக் கொடுக்கப்படும் அல்லது பதுக்கப்படும்.”

“சரியாச் சொன்னீங்க சார். இந்த நிலைமைல அந்தக் கருணை இல்லத்து வீடு மட்டும் மூழ்காமயா இருக்கப்போகுது. இன்னொரு நாள் பார்த்துக்கலாமா சார்?”

“இல்லை மாதய்யா. இப்பவே பார்த்துடலாம். தண்ணீர் பாவம் அறியாதது. உயிர் கொடுப்பதும் அதுதான். மித மிஞ்சிப்போனால் உயிர் எடுப்பதும் அதுதான். எங்கில்லை இந்தத் தண்ணீர்? கருவறையில் நம்மைச் சுற்றிப் பனிக்குடமாய் தண்ணீர். பிறந்து உயிர் தாகம் தணிக்கத் தண்ணீர். உடல் சுத்திக்குத் தண்ணீர். மந்திரம், யாகம், மரணம் என ஒவ்வொன்றிலும் இந்த நீர்தான் ஒவ்வொரு பெயராக மாறி முக்கிய இடம் வகிக்கிறது. அப்படி இருக்க மழைத் தண்ணீரை மட்டும் பழிப்பானேன். பழிப்பதென்றால் மழைத் தண்ணீரை நிலமுறிஞ்ச விடாது. அதன்மேல் கான்கிரீட் கட்டடங்கள் கட்டிக் காசு பார்க்கும் மனிதர்களைத்தான் பழிக்க வேண்டும்.”

“உண்மைதான் சார்! யாரையும் பழிக்க முடியாதுன்னுதான் இயற்கையின் சீதனமான மழையைப் பழிச்சுட்டுப் போயிடறாங்க!” என்ற மாதய்யா காரை நிறுத்திவிட்டு இறங்கினார்.

“இதோ இந்த வீடுதான் சார்! திறந்தே கிடக்கு. பார்த்து கால் வச்சு வாங்க. மின்சார வயர் ஏதும் கிடக்கப் போகுது.”

மாதய்யாவை பின் தொடர்ந்த ஆராவமுதனின் கண்ணில் அந்த அழகிய காட்சி பட்டது. ஒழுகும் கூரையின் தண்ணீர் தங்கள் தலை மேல் விழாதபடி பெரிய குடையைப் பிடித்துக்கொண்டு தேஜசாய் ஒரு முதியவர் கட்டிலில் அமர்ந்திருக்க அவர் பக்கத்தில் அவரது மனைவி. அவர்கள் தலை மேலும் கால் மேலும் சிறு குழந்தைகள் தொத்திக்கொண்டிருக்க படுக்கை முழுவதும் அவர்களது பண்ட பாத்திரங்களோடு ஆடு, கோழிகளும் அமர்ந்துகொண்டிருந்தன. அவர்களின் கட்டிலுக்குக் கீழெல்லாம் மழைத் தண்ணீர்.

“குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்” ஆராவமுதன் முணுமுணுத்தார்.

“இதுவா கருணை இல்லம்?” கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தார். இப்போது அம்முதியவர் ஆராவமுதன் கண்ணுக்குக் கண்ணனாகத் தெரிந்தார்.

“ஆ! கோவர்த்தன கிரிதாரி!” ஆராவமுதன் கை கூப்பினார்.

“மாதய்யா!

“என்ன சார்?”

கருணையே உருவான இவருக்கு கருணை இல்லம் வைக்க அனுமதி கொடுத்துடலாம். ஐயா! கையெழுத்திட்ட பேப்பரை நாளை வந்து வாங்கிக்கோங்க. என்னோட பழைய வீட்டை இந்த கருணை இல்லத்துக்காக தரேன். வாடகை வேண்டாம். சகல ஜீவராசியையும் ரட்சிக்கும் உங்களுக்கு என்னாலான அணில் உதவி.

“சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!” முதியவர் கை கூப்பினார். ஆராவமுதன் மனதுக்குள் காலையில் மாயா கேட்ட கேள்வி சுழன்றது. கருணை இல்லம்னா கருணை கிடைக்கும் இடமா? இல்லை கருணை கொட்டப்படும் இடமா? இரண்டும்தான் என்று நெகிழ்ந்தவரின் முன் மழைத் தண்ணீர் கடலென நின்றது. கிருஷ்ணனின் கருணையைப்போல.

- மாலா மாதவன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com