கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு சிறுகதைப் போட்டி 2025 - இரண்டாம் பரிசுக் கதை: "ப்ளாஸ்டிக்… ப்ளாஸ்டிக்…"

Plastic seller
Plastic seller
Published on
ஜெயபிரகாஷ் சுகவனம்
ஜெயபிரகாஷ் சுகவனம்

முத்து சைக்கிளை மெதுவாக அழுத்தி போய்க் கொண்டிருந்தான். வெயிலில் தெரு காய்ந்து இருந்தது. சைக்கிள் ‘கீச் கீச்’ என்று ஒலி எழுப்பியது. முன்னாடி, பின்னாடி கட்டியிருந்த வண்ண வண்ண ப்ளாஸ்டிக் குடம், பக்கெட், பானை, பாத்திரம் எல்லாம் ஆடிக்குலுங்கின. சிவப்பு, பச்சை, நீலம், ஆரஞ்சு எனப் பல வண்ணங்கள் சூரியனில் ஒளிர்வைத்ததுபோல்.

ஒரு காலத்தில், பிள்ளைங்க அவனப் பார்த்தாலே, “ப்ளாஸ்டிக் அண்ணா வந்தாச்சு!”ன்னு கூப்பிடுவாங்க. இப்போ யாரும் திரும்பிப் பார்ப்பதே இல்லை.

“ப்ளாஸ்டிக்… ப்ளாஸ்டிக்… டம்ளர், பக்கெட்… நூறு ரூவா தாங்க!”ன்னு கூவினான் பழக்கம் காரணம்தான். 15 வருஷம் ஆகுது, தூத்துக்குடி பக்கத்தில ஊருவிட்டு வந்தப்போ. மூணாவது தடவையும் மழை வரல. நிலம் பிளந்து தூசிதான் பறந்தது.

படிச்ச பிளஸ் 2 சான்றிதழ் கையில், விவசாயக் காயம் கைகளில், நகரத்துக்கு வந்தான். முதலில் ஒரு பள்ளியில், பிறகு கல்லூரி லேபில் வேலை. ஆனா ஆசான், ப்ரொஃபசர் நடுவே நிக்கிறப்போ, “படிச்சது பத்தலை”ன்னு நினைவு தினமும் குத்தியது.

அதனால தன்னம்பிக்கை சைக்கிளில்தான்னு முடிவு பண்ணினான். ₹1200க்கு வாங்கிய சைக்கிளே அவனோட கடை, வாழ்க்கை, அடையாளம். ப்ளாஸ்டிக் விற்குற வேலை சுதந்திரம் தந்துச்சு. எஜமானமுமில்லை, மணி அடிச்சு அழைச்சலுமில்லை.

அந்தக் காலத்துல தெருவுக்கே சத்தம் இருந்துச்சு. பால் பைகள் எடுப்பவங்க, கத்தியை கூரிடுபவர்கள், தையல் இயந்திரத்தை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டே சென்று துணி தைப்பவர்கள், அம்மி கல் கொத்துபவர்கள், பை மற்றும் செருப்பு தைக்கும் வியாபாரிகள், சைக்கிளில் இட்லி விற்கறவங்க — முத்து அவங்க எல்லாருடனும் சேர்ந்து வாழ்ந்தான்.

மதியத்துக்கு அந்த ஏரியாவில் இருக்கும் ஆந்திரா ஹோட்டல்ல சாம்பாரும் கதையுமாகச் சாப்பிடுவாங்க. அந்த மெஸ்த்தான் எல்லாமுமே அவர்களுக்குக் கடன் கொடுத்து கடன் வாங்கும் பேங்க், மனவருத்தம் ஆற்றும் மருத்துவமனை, சோகங்களையும் துக்கங்களையும் சக வியாபாரிகளுடன் பகிர்ந்துகொள்ளும் சங்கம் எல்லாமுமே அந்த இடம்தான் இப்போ? ஹோட்டல் மவுனம்.

முத்து மூலையிலே உட்கார்ந்தான். பக்கத்தில பிராண்டட் டி-ஷர்ட் போட்ட டெலிவரி பாய்ஸ் ஆங்கிலத்துல சிரிச்சுக்கிட்டிருந்தாங்க. அவனோட சக வியாபார நண்பர்கள் மெதுவாகக் காணாமல் போனார்கள் வாழ்க்கை சக்கரத்தில். ஸ்விக்கி எல்லாம் வந்த பிறகு இட்லி கடைக்காரர் இருந்த இடம் தெரியவில்லை.

எல்லாமுமே ஆன்லைன் என்று ஆன பிறகு துணி தைப்பதுகூடக் குறைந்துபோனது. சுலபத்தில் புது துணிகள் சல்லிசு விலையில் கிடைக்க தையல்காரர் மனம் கிழிந்து எங்கோ போய்விட்டார். மாவு பாக்கெட் அம்மி கல் கொத்துபவரை டம்மி ஆக்கிவிட்டது அவரும் எங்கோ போய்விட்டார். இப்படி பலரும் சொல்லாமல் கொள்ளாமல் சினிமா படத்தில் மறைபவரைப்போல காணாமல் போய்விட்டனர்.

முத்துவிற்குப் போகக்கூட ஒரு போக்கிடம் இல்லை, சென்னை வாழ்க்கையே சிறை ஆகிப்போனது அவனுக்கு. முத்து சாம்பாரோட சாதம் சாப்பிட்டான். உப்பே இல்லாத மாதிரி. ஆனா மனசுல வலிதான் அதிகம். பழைய நினைவுகளில் மீண்டும் மூழ்கினான்.

முன்னாடி வசந்தி மேடம் அபார்ட்மெண்ட் கடந்துபோனால் காபி குடிக்க வச்சவங்க. பேரனுக்காக டிபன் பாக்ஸ் வாங்கினவங்க. இப்போ கண்டும் காணாமல் செல்கிறார்கள். கதவு பூட்டியிருக்குது. வாசல் முன்னாடி டெலிவரி பைக் நிற்குது. மக்கள் வெளியே வரமாட்டாங்க. போன்ல ஆர்டர் பண்ணுறாங்க.

“வா முத்து, காபி குடிச்சிட்டு போடா. இந்த நிறம் எல்லாம் பார்த்தா மனசு சந்தோஷமா இருக்கு”ன்னு அவங்க சொன்ன கடந்த காலங்களை நினைத்தான். வசந்தி மேடம் மட்டும் அல்ல, அரசு அதிகாரி மதன் சார், காலேஜ் பேராசிரியர் கணேசன் இன்னும் இவர்களைப்போல பலர் முகம் பார்த்தும் பாராமல் விலகிப்போகும் தருணங்கள் மனதில் நிழலாடியது இப்போ முகத்தைத் திருப்பிக்கிறாங்க.

இன்றைய வருமானம்? ₹300. லாபம்? சுமார் 60 ரூவா. நேரம் 1 மணிக்குமேல். ஏதோ இன்னும் சில ஏழை மக்கள், குப்பத்து மக்கள் கடைக்குப் போகாமல் ஸ்மார்ட் ஃபோன் மூலம் ஆன்லைன் போகாமல் இவனிடம் வாங்குகிறார்கள். அதுவும் பல சமயங்களில் கடனுக்குக் கடன்கள் சைக்கிளைவிட கனமாக இருக்கு. மகள் பள்ளிக்கட்டணம், வீட்டு வாடகை, அம்மா மருத்துவம். சைக்கிள் டயர் பஞ்சராப் போயிருச்சு. ‘ஒட்டிக்கொள்றேன். புதுசா வாங்கணும்னு பணமே இல்ல'ன்னு நினைச்சான். ‘இதுவே எனக்கு வியாபாரம்… சைக்கிள்லே பெருமையா வாழுவேன்'னு நினைச்சிருந்தான். ஆனா அந்தப் பெருமையே மாறிப்போச்சு.

பள்ளி நாட்களில் லைப்ரரியில் ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது - வ.உ.சிதம்பரத்தின் கப்பல் நிறுவனம், நொடிந்தது ஆங்கிலேயர்களால் மட்டும் அல்ல, மக்கள் ஆங்கிலேயர் கப்பலின் மலிவு விலையை ஆதரித்ததால்தான் நசுக்கப்பட்டது என்று. சுதந்திரம் வந்தாலும் மக்கள் மனம் மாறவில்லை “இதே நாடு… ஆனா இன்னும் மலிவுதான் முக்கியம்,”ன்னு மனசுல சொன்னான். ஆனா சைக்கிள் கேள்வி கேக்கவே கேக்கல. சும்மா நின்னது.

மதியத்துக்கு அப்புறம் தெருவுக்குப் போனான். வெயில் இன்னும் காய்ச்சுது. சாலை வெறிச்சோடி இருந்தது. மூடிய ஜன்னல்கள், சத்தமிட்ட வண்டிகளின் ஊடே. வாய் வறண்டு இருந்தாலும் மீண்டும் கூவினான்: “ப்ளாஸ்டிக்… ப்ளாஸ்டிக்… டம்ப்ளர், பாக்ஸ், பக்கெட்… நூறு ரூவா தாங்கோ!” அவன் குரல் வியாபாரமில்ல... எதிர்ப்பா ஒலிச்சது.

உலகம் தாங்காத அவனை சைக்கிள்தான் தாங்கிக்கொண்டு போனது. அப்போ திடீர்னு, ஒரு இளம்பெண் கையை அசைத்தாள். குர்த்தா போட்டிருந்தாள். தோள்ல லேப்டாப் தொங்கிக் கொண்டிருந்தது.

“அண்ணா, ஓரு நிமிஷம்!”ன்னு கூவினாள்.

முத்து நின்றான். ஆச்சரியப்பட்டான். அவள் ஓடிக்கொண்டே வந்தாள். மூச்சிரைத்தது, தன் மகளைவிட ஒரு ஐந்து வயது மூத்தவளாய் இருப்பாள்போல இருந்தது.

“உங்களை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கு அண்ணா! நான் பள்ளில இருந்தப்போ நீங்க வந்தீங்க. ஒரு தடவை எனக்கு எக்ஸாம் போற நேரம் பணம் தொலைஞ்சு போச்சு. எக்ஸாம் வேற செம டென்ஷன்... நீங்க எனக்கு ஐம்பது ரூபா கொடுத்து ஆட்டோவும் பிடிச்சுக் கொடுத்தீங்க. அன்னிக்கு மட்டும் நான் எக்ஸாம் போகாம இருந்திருந்தா இன்னிக்கு இந்த நிலைமைக்கு வந்து இருக்கமாட்டேன் அண்ணா. இப்போ நான் பெரிய கம்பெனில வேலை செய்றேன் அண்ணா! நீங்க இன்னும் இதையே விற்கிறீங்களா? எங்க அம்மா எல்லா பக்கெட்டும் உங்ககிட்டேதான் முன்னாடியெல்லாம் வாங்குவாங்க,”ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாள்.

அவங்க அன்பு முத்துவுக்கு புதுசா இருந்தது. இதுவரை யாரும் அவனை நினைவில் வைக்கவே இல்லை சமீபகாலமாக. செடிகளெல்லாம் மறந்த பிறகு மலர் ஒன்று நினைவில் வைத்திருப்பதை நினைத்து உவமையாக புன்னகைத்தான். அதுவும் ஏதோ ஒரு நாள் உதவியதற்காக... ‘காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்...’ என வள்ளுவர் வேறு மனதில் வந்துவிட்டு போனார்.

“எனக்கு கொஞ்சம் ஸ்டோரேஜ் பாக்ஸ், டப்பா வேணும் அண்ணா,”ன்னு என்று ஏதோ உரிமையாய் எடுத்துக் கொண்டாள். ₹500 கொடுத்தாள் — முத்துவின் ஒரு நாள் வருமானத்தை விட அதிகம்.

“அண்ணா எவ்ளோ ஆச்சுன்னு எனக்குத் தெரியலை... பட் நீங்க விலை சொல்லாதீங்க. ஜாஸ்தியா இருந்தா வீட்ல பசங்களுக்கு எதாவது வாங்கிக் கொடுங்க அண்ணா” என்றாள்.

பொருளை அடுக்கிக் கொடுத்துக்கொண்டிருக்கும்போது அவள் சொன்னாள்: “அண்ணா, ஆன்லைன்ல விற்க நினைச்சீங்களா? வாட்ஸ்அப் குழு மாதிரி. என் ஆபீஸ் டீமுக்கு எப்பவும் இப்படி சின்ன சின்னப் பொருட்கள் தேவை. நான் உதவி பண்ணுறேன்.”

முத்து மலைத்தான். “ஆன்லைனா?” அந்த வார்த்தை அப்படியே வேறு உலகம்போலத் தோன்றியது.

“ஆமா! ஒன்றுமே மாறவேண்டியதில்லை. பொருளோட போட்டோ போட்டுவைங்க. மக்கள் ஆர்டர் பண்ணுவாங்க. நீங்க சைக்கிள்லேயே டெலிவரி பண்ணுங்க. அதே வேலையா இருக்கும், ஆனா அதிகமானவர்களை அடையலாம். இருங்க... உங்ககிட்டே ஸ்மார்ட் ஃபோன் இல்ல. நான் போட்டோ எடுத்து போடறேன். உங்க நம்பர் கொடுக்கறேன். ஏதாவது போன் வந்தா அவங்க ஏரியால போய் கொடுங்க. என் நம்பர் நோட் பண்ணிக்குங்க. என்கிட்டே ஒரு பழைய ஸ்மார்ட் ஃபோன் இருக்கு. அதை உங்களுக்குத் தரேன். போட்டோ எடுக்கவும் சொல்லித் தரேன்...” என்று மடமடவென காரியத்தில் இறங்கினாள்.

முத்துவுக்கு இது கனவா நினைவா என்று ஒன்றும் புரியவில்லை.

மின்னல் வேகமாக இருந்தாள் அவள். ஒரு சீட்டில் நம்பரை எழுதிக்கொடுத்தாள். அவள் பழைய போன் லேப்டாப் பையிலிருந்து எடுத்து சிம் மாற்றி ஏதேதோ செய்து வாட்ஸ்அப் என்று சொல்லி, போட்டோ எடுத்து அதில் போட்டாள்.

இவனுக்கு வெக்கமாக இருந்தது.

இவன் போட்டோவும் எடுத்து, போன் நம்பர் கூட... அதில் பதிவேற்றினாள் ‘இப்படிப்பட்ட நண்பர்களுக்கு உதவுங்கள் நண்பர்களே’ என்று.

என்ன ஆச்சரியம்... உடனே ஒரு கால் வந்தது. “நாளை நான்கு பக்கெட் பக்கத்து ஏரியாவில் அருண்குமார் என்பவருக்குக் கொடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார். பல மாதங்களுக்குப் பிறகு முத்துவின் மனசு லேசானது.

மகள் எப்பவும் “ஸ்மார்ட்போன் வாங்கிக்கோங்க”ன்னு வற்புறுத்தினாளே - இதுக்காகத்தான்போல. மீண்டும் சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சான்.

இந்த முறை குரல் எதிர்ப்பாக இல்ல... புதுசா ஆரம்பிக்கிற குரலாக ஒலிச்சது. “ப்ளாஸ்டிக்… ப்ளாஸ்டிக்… டம்ளர், பாக்ஸ், பக்கெட்…!” இந்த முறை பக்கத்து பிள்ளைகள் சிரிச்சபடி கூப்பிட்டாங்க: “ப்ளாஸ்டிக் அண்ணா…!”

முத்து புன்னகைத்தான். ஏனெனில், ஒரு படிச்ச இளைய தலைமுறை இப்படிப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு உதவினால், இவர்கள் வாழ்க்கையே மாறிவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

- ஜெயபிரகாஷ் சுகவனம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com