கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு சிறுகதைப் போட்டி 2025 - முன்றாம் பரிசுக் கதை: ரசிக்கும் சீமானே!
பாலு தன் அப்பா சுந்தரமூர்த்தியுடன், பிரம்மாண்டமான அந்த வீட்டின் காம்பௌண்டில் நுழையும் முன்பே நடிகர் ராஜாவின் கட் அவுட் அவர்களை வரவேற்றது. ராஜா ஒரு கையில் துப்பாக்கியுடனும் மறு கையில் இரும்பு சங்கிலியுடனும் ஆக்ரோஷத்தோடு நடந்து வரும் கட் அவுட் அது. அடிக்கின்ற வெயிலில் குழந்தையோடு பெண் ஒருத்தி கட் அவுட் தந்த நிழலில் நின்றிருந்தாள்.
அதை பார்த்த பாலு தன் அப்பாவிடம், "டாட். என் தலைவன் இருக்கிற கட் அவுட் கூட ஒரு பெண்ணுக்கும் அவள் குழந்தைக்கும் நிழல் தருது பாருங்க..." என்றான் சிரித்துக்கொண்டே.
அவனை முறைத்தபடி, "உனக்கே இது கேவலமா தெரியலியா?" என்றார் சுந்தரமூர்த்தி.
"பார்க்கிறதுக்கு அழைச்சிட்டு வந்த நீங்களே கிண்டலடிச்சா எப்படிப்பா?" என்றான் சலிப்பாக.
"உனக்கு கொடுத்த வாக்குக்கு அழைச்சிட்டு வந்திருக்கேன். அதுக்காக நீ பண்ற கோணங்கிதனத்தையெல்லாம் சகிச்சிக்க முடியுமா" பாலு முறைத்தபடி அவரை பின் தொடர்ந்தான். ரசிகர்கள் கூட்டத்தைப் பொறுமையாய் அப்பா கடந்து வர பாலுவுக்கு அந்தப் பொறுமை இல்லாததால் வேக நடை போட்டான்.
பாலு கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவன். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ராஜாவின் தீவிர ரசிகன். ராஜாவின் படம் ரிலீசாகும் போதெல்லாம் அன்று முழுக்க தியேட்டரே பழி என்று கிடப்பான். ஒரு முறை படப்பிடிப்பில் சண்டை காட்சியில் ராஜாவுக்கு கையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுவிட, செய்தியை கேட்டு பாலுவும் தன் கையை உடைத்துக்கொண்டான்.
"என் தலைவன் பட்ட வலி நானும் உணரணும்" என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டான். வீட்டில் கீழே விழுந்துவிட்டேன் என்று பொய் சொன்னான். பெற்றோருக்கு அவன் பொய் சொல்கிறான் என்பது டிவியில் செய்திகள் பார்த்தபோதே தெரிந்துவிட்டது. அவனது அம்மா அடி வெளுத்துவிட, அப்பா தலையில் அடித்துக்கொண்டார்.
தன் தலைவன் நடித்த படம் எவ்வளவு கலெக்ஷன் ஆச்சு என்பதை கணக்கெடுக்க நேரத்தை செலவிட்டானே தவிர, தனது படிப்பில் கவனம் செலுத்தாததால் அரியர்ஸ் வரிசை கட்டி நின்றது.
இதை முடிவுக்குக் கொண்டு வர திட்டமிட்ட சுந்தரமூர்த்தி "நீ அரியர்ஸ் எல்லாம் இந்த செமஸ்டர்ல படிச்சு பாஸ் பண்ணு. நடிகர் ராஜாகிட்டே உன்னை அழைச்சிட்டுப் போறேன்" என்றார்.
"பொய் சொல்லாதீங்க உங்களால எப்படி முடியும்?" என்றான்.
"ராஜாவோட பி.ஆர்.ஓ மணி எனக்கு பிரெண்ட். நீ பாஸ் பண்ணு. கண்டிப்பா அழைச்சிட்டுப் போறேன்" என்றார். கூடவே தன் நண்பரோடு எடுத்துக்கொண்ட படங்களையும் காண்பித்தார்.
"சூப்பர்ப்பா" என்றவன் மகிழ்ச்சியில் அப்பாவை கட்டிப் பிடித்துக்கொண்டான். இதற்காகவே வெறிகொண்டு படிக்க ஆரம்பித்தான். என்னதான் படித்து தேர்வெழுதினாலும் பாஸ் மார்க்தான் வாங்க முடிந்தது. இரண்டு அரியர்ஸ் பேப்பர் தேங்கி நின்றது.
சுந்தரமூர்த்தி இந்த அளவுக்காவது படிக்க முயற்சி எடுத்திருக்கின்றானே என்பதால் அழைச்சிட்டுப் போறேன் என்று உறுதியளித்தார்.
இதோ நடிகர் ராஜாவின் அலுவலக அறை வாசலில் நிற்கிறார்கள். பி.ஆர்.ஓ மணி அவர்களைப் பார்த்துவிட "வாங்க... வாங்க..." இன்முகத்தோடு வரவேற்றார்.
"சார் இருக்காருல்ல?"
"ம். இருக்கார். நேத்து நைட் ஷூட்டிங் முடிச்சு வரதுக்கு 2 மணி ஆகிடுச்சு. தூங்கிட்டிருக்கார். உட்காருங்க" ஹாலில் இருந்த பெரிய சோபாவில் இருவரையும் அமர வைத்தார். தண்ணீர் பாட்டில் கொண்டுவந்து கொடுத்த வேலைக்காரரிடம் அவர்களுக்கு ஜூஸ் எடுத்துக்கொண்டு வரச் சொன்னார்.
பாலு பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான். எத்தனையோ திரைப்படங்களில் ராஜாவை பார்த்திருக்கிறான். ஆடியோ பங்க்சனில் தூரத்திலிருந்து மேடையில் பார்த்திருக்கிறான். வெளிப்புறப் படப்பிடிப்பு நடைபெறும்போது கூட்டத்தோடு கூட்டமாக ராஜாவை பார்த்து ரசித்திருக்கிறான். ஆனால், நேரில் அருகாமையில் பார்த்து பேசப்போவது இன்றுதான் முதல் முறை.
செல்போன் எடுத்து 'இன்று என் வாழ்க்கையில் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. காத்திருங்கள்' என்று ட்விட்டரில் பதிவிட்டான்.
அந்த வரவேற்பு ஹால் சுற்றிலும் ராஜா நடித்த படங்களின் வெற்றி விழா ஷீல்டுகள் இருந்தன. வேலைக்காரர் ஜூஸ் இருந்த ட்ரேயைக் கொண்டுவந்து நீட்ட இருவரும் எடுத்துக்கொண்டார்கள். அந்த ஜூஸ் கிளாசை செல்போனில் படம் எடுத்து கொண்ட பின் குடிக்க ஆரம்பித்தான்.
"எதுக்குடா இதெல்லாம் போட்டோ எடுக்கிறே" என்ற அப்பாவிடம்,
"தலைவர் வீட்டில் நான் குடித்த ஜூஸ்"னு இன்ஸ்டால போடணும் டாட். லைக்ஸ் அள்ளும்" என்றான்.
மீண்டும் தலையில் அடித்துக்கொண்டார் அவர்.
"டாடி உங்களுக்கு ரசனை இல்லேன்னா பரவாயில்ல. என்னை இரிடேட் பண்ணாதீங்க..." என்றான்.
வெளியில் காத்திருந்தவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்தார்கள். கல்யாணானமான ஜோடி ஒன்று வந்திருந்தது. காலேஜ் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ் பட்டாளம் ஒன்று காத்திருந்தது. டொனேஷன் கேட்டு ஒரு குழு வந்திருந்தது. தயாரிப்பாளர் ஒருவர் சென்ட் மணக்க உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்தார். பேர் வைக்கணும் என்று கைக்குழந்தையுடன் கணவன் மனைவி காத்திருந்தார்கள்.
"டாடி... நீங்க வேணா பாருங்க. அவர் உங்ககிட்டே ‘பாலு என் கூடவே இருக்கட்டும்’னு சொல்லப்போறார்" என்றான். மீண்டும் தலையில் கை வைத்துக்கொண்டார் சுந்தரமூர்த்தி.
"உங்க தலைவர் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கியே... இதுல பாதியாவது அம்மாகிட்டேயும் என்கிட்டேயும் இருந்தா நல்லாருக்கும்."
"அதெல்லாம் இருக்கு டாடி" என்று சொல்லி அப்பாவை அணைத்துக்கொண்ட சில நிமிடங்களில் உள்ளிருந்து அழைப்பு வரவே எழுந்தார்கள். அறைக்குள் நுழைந்தார்கள்.
சோபாவில் கால் மேல் கால் போட்டபடி வேஷ்டி சட்டையில் அணிந்து அமர்ந்திருந்தான் ராஜா. மணி அருகே சென்று சொல்லவும், எழுந்து பாலுவின் தந்தையைப் பார்த்து கை கூப்பி அமர சொல்லிவிட்டு தானும் அமர்ந்தான் ராஜா.
சுந்தரமூர்த்தி அமர, பாலுவோ ராஜா காலில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தான். ராஜா கையால் எழுந்திரு என்று சைகை செய்தான். பாலு எழுந்தான். பொக்கேவை அவரிடம் நீட்டினான். ராஜா அதை இடதுகையால் வாங்கி வலதுகைக்கு மாற்றி தன் உதவியாளரிடம் கொடுத்தான்.
"உட்கார்" பாலு சீட் நுனியில் உட்கார்ந்தான்.
"என்ன படிக்கிறே?"
"பி.எஸ்சி செகண்ட் இயர்..."
"படிச்சிட்டு என்ன பண்ணப் போறே?"
"நீங்க சொல்லுங்க... உங்க வீட்டுக்கு வேலைக்காரனாக்கூட வந்திடுவேன்" என்றான்.
"அதுக்கு எதுக்கு உங்கப்பா உன்னைப் படிக்க வைக்கணும்?" என்றவர், சுந்தரமூர்த்தியிடம் கேட்டார். "நீங்க அவன் என்னவா ஆகணும்னு நினைக்கறீங்க"
"அரசாங்க உத்தியோகத்துல சேரணும்."
"நீ முதல்ல உங்கப்பா ஆசையை நிறைவேத்து."
மீண்டும் ஒரு முறை பாலுவுக்கு முகம் மாறியது.
"சரி போட்டோ எடுக்கணும்னா எடுத்துக்கங்க" ராஜா சொல்லவும் ராஜாவுக்கு பின்னே பாலு நிற்க, போட்டோகிராபர் போட்டோ எடுத்தார்.
பாலு மணியிடம் காதை கடிக்க "என்னவாம்?" என்றான் ராஜா.
"தோள்ல உங்க முகத்தை ‘டாட்டூ’ குத்தியிருக்கானாம். அதைக் காண்பித்து உங்க பக்கத்துல உட்கார்ந்து செல்ஃபி எடுத்துக்கணுமாம்..."
பாலு சட்டையைக் கழட்டப்போக,
"நோ... நோ... இதெல்லாம் வேண்டாம்" ராஜா அவசரமாக மறுத்தான்.
“நான் உன்கூட செல்ஃபி எடுக்கணும்னா... அதற்கு உண்டான தகுதி உன்கிட்ட இருக்கணுமே..." சாதாரணமாகத்தான் சொன்னான் ராஜா.
பாலுவுக்குக் சுருக்கென்றது.
"உங்க அப்பா, அம்மா ஆசைப்படற மாதிரி முன்னுக்கு வந்த பின்னே என்னை வந்து பாரு. எடுத்துக்க பர்மிஷன் தரேன்."
பாலு தலை குனிந்தான்.
சுந்தரமூர்த்திக்கு, ஒரு பக்கம் அவனுக்குப் புத்தி புகட்டப்படுவது ஏற்புடையதாக இருந்தாலும் தனக்கு எதிரில் மகன் அவமானப்படுவது கண்டு வேதனையாக இருந்தது.
ராஜா, "சரி. வெளில நிறைய பேர் வெயிட் பண்றாங்க. மீண்டும் சந்திக்கலாம்" என்று கை கூப்பவே சுந்தரமூர்த்தி தலையாட்டியபடி எழுந்தார்.
பாலு திடீரென்று ராஜா கை பற்றி குலுக்கி “நீங்க சொல்றபடி செய்யறேன்" என்றான்.
ராஜா கையை உதறிக்கொண்டு "என்னப்பா நீ... மேல எல்லாம் கை வைக்கிறே? என்ன மணி இதெல்லாம் சொல்லி அழைச்சிட்டு வரமாட்டீங்களா?" என்று கத்தினான்.
பாலு அதிர்ச்சி அடைந்தான்.
"முதல்ல கிளம்பு நீ. காலங்கார்த்தாலே மூடை அவுட் பண்ணிடுவே போலிருக்கு..." ராஜா கடுப்படிக்க,
பாலு தலை குனிந்தான். தலை நிமிராமலே வெளியேறினான். அவனால் இந்த அதிர்ச்சியை ஜீரணிக்கவே முடியவில்லை. மேடையிலும் படத்திலும் அவ்வளவு மென்மையாக பேசும் இவரா இப்படி பேசுகிறார். ஹாலை கடந்து வாசலுக்கு வந்தான். ராஜா சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க சிலையாய் சில நிமிடங்கள் நின்றிருந்தான்.
செக்யூரிட்டி “வேலை முடிஞ்சதுல்ல. கிளம்புங்க...” பாலுவிடம் சொல்லவே காம்பௌண்டுக்கு வெளியே வந்தான். வெயில் சுட்டெரிக்க, பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து தன் அப்பாவுக்கு போன் செய்தான்.
உள்ளே... "சார் ரொம்ப தேங்க்ஸ். உங்க மேல பைத்தியமா இருக்கான். அதிலிருந்து அவனை வெளியில் கொண்டுவரணும்னு நினைக்கிறேன். முடியல" கண் கலங்கினார் சுந்தரமூர்த்தி.
ராஜா அவர் கைகளை பிடித்துக்கொண்டு, "பசங்களுக்கு புத்திமதி சொன்னா கேட்கமாட்டாங்க. பி.ஆர்.ஓ மணி சொன்னார். எனக்கு அடிபட்டுச்சுன்னு தன் கையவே உடைச்சுகிட்டானாமே. இது தப்பு. நம்ம மேல ஒரு கெட்ட எண்ணத்தை உண்டு பண்ணனுங்கிறதுக்காகத்தான் இப்படி பேசினேன். பையன் கொஞ்சம் விரக்தி ஆகியிருக்காப்பிலே. நீங்க பார்த்துக்குங்க.”
மணியிடம் தலையாட்டி விடைபெற்று வெளியில் வரும்போது, சுந்தரமூர்த்தியின் செல்போன் அடித்தது. எடுத்தவர் "எங்க இருக்கே?" என்று கேட்டபடி சுற்றுமுற்றும் பார்த்தார்.
பாலு கட் அவுட்டின் கீழே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு "கட் அவுட்கிட்டதானே நிற்கிறே... இதோ வரேன்" என்றபடி செல் ஆஃப் செய்தபடி வெளியில் நடந்தார்.
செல்போனை காதிலிருந்து எடுத்த பாலு நிமிர்ந்து பார்த்தான். ராஜாவின் கட்அவுட் நிழலில் தான் நின்றிருப்பது தெரிய வர, கட் அவுட் நிழலிருந்து வெளிவந்து சுட்டெரிக்கும் வெயிலில் நின்றுகொண்டான்.
- ஆர்.வி.சரவணன்