கல்கி பத்திரிகையின் 1947 சுதந்திர மலர்... அருமையான ஆவணம்!

77வது ஆண்டு இந்திய சுதந்திர தினம்
கல்கி பத்திரிகையின் 1947 சுதந்திர மலர்... அருமையான ஆவணம்!
Published on

வாரம் நாலணா விலையில் (இன்றைய 25 காசுகள்) வெளிவந்து கொண்டிருந்த கல்கி இதழ் கூடுதல் பக்கங்களோடு ஒரு சிறப்பு மலரை எட்டணா விலையில் வெளியிட்டது. இது தேசம் விடுதலை பெற்ற நாளில்தான்.

1957 ஏப்ரல் மாதத்தில் 'நயா பைசா' என்ற பெயரில் புதிய நாணய முறை அறிமுகமானபோதுதான் அது முப்பது காசு என்று உயர்ந்தது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்றைய தேதிகளில் வருகிற கல்கி அந்த வாரம் மட்டும் தேசம் சுதந்திரம் பெற்ற நாளான 15.8.1947 அன்று இரண்டு நாள் முன்கூட்டிய வெள்ளிக்கிழமை தேதியிலேயே வெளிவந்தது. அட்டைப் படமாக நீல நிற அசோக சக்கரத்தோடுகூடிய தேசியக்கொடி இடம் பெற்றது. அட்டைப்பட விளக்கமாக என்று சொல்லத்தக்க வகையில் 'நீலச் சக்கரம்' என்ற தலைப்பிலான ஒரு பக்கக் கட்டுரையை, 'சுந்தா' எழுதியிருந்தார்.

பிற்காலத்தில் அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாறைப் 'பொன்னியின் புதல்வர்' என்ற தலைப்பில் சுவை மிகுந்த ஒரு நாவலைப் போலவே இரண்டு ஆண்டுகள் தொடராக எழுதும் பேறு பெற்ற அதே, 'சுந்தா' அவர்கள்தான்.

மகுடமாக அமைந்தது 'வாழ்க சுதந்திரம்! வாழ்க நிரந்தரம்!'என்ற தலைப்பில் சுதந்திர ஜனனத்தைக் கல்கி அவர்கள் வரவேற்றுக் கொண்டாடிய  கட்டுரைதான். கட்டுரைத் தலைப்பையே  தேசியக்கொடியைப் போல் நீலச் சக்கரத்தோடு வரைந்திருந்தார் ஓவியர்.

2001ஆம் ஆண்டில், அமரர் கல்கி எழுதிய முக்கியமான 76 தலையங்கங்கள், கட்டுரைகள் தொகுப்பாக வெளியானபோது இந்தக் கட்டுரையே அதன் மகுடமானது! அதன் முன்னுரையில் கல்கி ராஜேந்திரன் அவர்கள்,  '...இதுவரை ஒரு பத்திரிகை ஆசிரியரின் தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றதாக எனக்குத் தெரியவில்லை...' என்று பதிவு செய்தார்.

'பேரிகை கொட்டுங்கள்... முரசம் முழங்குங்கள்! சங்கம் ஊதுங்கள்! கொடி உயர்த்துங்கள்... வந்தே மாதரம் என்று வணங்குங்கள்!..." என்று சத்திய ஆவேசத்தோடு தொடங்குகிற இந்தக் கட்டுரையின் இறுதி வரிகளில் மிகுந்த பொறுப்புணர்வோடு பதிவுசெய்திருப்பதன் தேவை இன்றைக்கும் நாளைக்கும்கூட நினைவூட்டவேண்டிய ஒன்றாகவே இருப்பது நம் கடமை என்றே சொல்ல வேண்டும்.

'....நமது சொந்த சுயநலங்களை மறந்து, நாட்டின் பொதுநலமே பெரிதென அறிந்து, தலைவர்களின் கஷ்டங்களை உணர்ந்து கட்டுப்பாட்டுடன் நடப்பதென்று பிரதிக்ஞை செய்வோம்!'

மொழி வளர்ச்சியிலும் பழம்பெருமைகளைப் பேணிக்காப்பதிலும், பின்னால் வந்த பலருக்கும் முன்னோடியாக விளங்கியவர் கல்கி என்பதைப் புரிந்துகொள்ள அந்த இதழின் 'என்ன சேதி?' பத்தியில் 'பெயர்களுக்கும் சுதந்திரம்' என்ற தலைப்பில் வெளியான இந்தச் சிந்தனைகளே பொருத்தமான உரைகல்லாக விளங்கும்..!

'தேசத்துக்கு சுதந்திரம் வந்திருக்கும் இந்த சமயத்தில், நம்முடைய புராதனப் பெருமை வாய்ந்ததும், அழகிலும் அற்புதமுமான நதிகள், நகரங்கள், மலைகள் முதலியவற்றின் பெயர்களுக்கும் வெள்ளைக்காரர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்கப்போகிறது.!

புனிதமான நம்முடைய கங்கா நதியை 'காஞ்ஜஸ்' என்று கர்ண கடூரமாக அழைத்தார்கள். 'யமுனை' என்னும் அழகிய, காதுக்கு இனிமையான பெயர் வெள்ளைக்காரர்கள் வாயில் 'ஜம்னா'வாக ஆயிற்று. இப்போது ஐக்கிய மாகாண சர்க்கார் இந்தப் பெயர்களையெல்லாம் முன்பு இருந்ததைப் போலவே மாற்றியமைக்கப் போகிறார்களாம்....'

என்று தொடங்கிக் தென்னாட்டிலுள்ள 'டின்னவேலி' என்ற திருநெல்வேலி, அணுகுண்டுகள் தாக்கப்பட்டதுபோல 'நெகபட்டாம்' ஆன நாகப்பட்டினம் போன்ற  பெயர்களைக் குறிப்பிட்டு,

'சென்னை சர்க்காரும் இந்த நகரங்களின் பெயர்களை எல்லாம் முன்பு இருந்த நிலைக்குத் திருத்தி அமைக்கப் போகிறார்களாம்'

என்று அதில் பதிவு செய்திருக்கிறார் கல்கி.

இந்த முயற்சி படிப்படியாகத்தான் பலனளித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தின் அழகான 'ஆரல்வாய்மொழி' கூட திராவிட இயக்க ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறவரை 'ஆரம்பாலி'யாகவே இருந்தது. மாயவரம் 'மயிலாடுதுறை' ஆனதும் அண்மைக் காலத்தில்தான்.

இன்னும்கூடச் சில சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அழகாக சிறப்பு 'ழ'கரப் பெருமையோடு ஆங்கிலத்தில் 'THAMIZH NADU' என்றும் பெயர்மாற்றம் காணப்பட வேண்டாமா?

104 பக்கங்களில் வெளியான இந்த 'சுதந்திர மல'ரில் இருபது முழுப் பக்கங்களில் முக்கியமான முப்பதுக்கும் மேற்பட்ட தேச விடுதலைப் போராட்டக் தலைவர்களின் படங்களை வெளியிட்டிருந்தது அருமையான ஆவணப் பெருமைக்குரியது.

வித்தியாசமான பொருளடக்கப் பக்கத்தில் கொடியேந்திய 'இந்நாட்டு மன்னர்' களின் உற்சாகமான அணிவகுப்பைக் கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறார், இப்போது நூற்றாண்டு காணும் கல்கி ஓவியர் மணியம்!

18.8.1947 அன்று மயிலை சங்கீத சபாவில் முதல் சுதந்திர விழாக் கொண்டாட்டச் சிறப்பு நிகழ்ச்சியாக கல்கி அவர்களின் செல்வப் புதல்வி ஆனந்தி, கல்கியின் வாழ்நாள் நண்பர் சதாசிவம் அவர்களின் புதல்வி ராதாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி, இசையரசி எம்.எஸ். அம்மாவின் குரலினிமையோடு நடைபெறுவது பற்றிய அறிவிப்பு இந்த இதழில் வெளியாகியிருக்கிறது!

இவ்வளவு சென்னைக் கோலாகலங்களையும் நேரில் கண்டு அனுபவிப்பதைவிட மிகவும் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதையே பெருமிதமாகக் கருதி யிருக்கிறார் கல்கி. தம்முடைய அருமைத் தலைவர் ராஜாஜி அவர்கள் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்கும் மகத்தான வைபவத்தைக் கண்டுகளிப்பதற்காக  'ஆனந்த நகரம்' என்று வர்ணித்து மகிழ்ந்த கல்கத்தாவில் இருந்தார்!

இந்தக் கல்கி மலரின் பக்கங்களை சுதந்திரமடைந்து முக்கால் நூறு ஆண்டுக்குப் பிறகு வருடுகிறபோது ஏற்படுகிற நீலச் சக்கர ஆனந்தமும் பெருமிதமும்..... வருங்காலத் தலைமுறைகளுக்கும் புரியவேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாக இருக்கட்டும்!

இந்தப் பிரார்த்தனைக்கான முயற்சியாக கல்கி குழுமம் ஆகஸ்ட் 15, 1947 தேதியிட்ட கல்கி வார இதழின் சுதந்திர சிறப்பு மலரை டிஜிட்டல் இதழாக தனது இணைய தளத்தில் வெளியிட்டிருப்பது சிறப்பு. ‘களஞ்சிய’ இதழைப் படித்து மகிழுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com