
-கிருஷ்ணா
யாரோ தன்னை கவனிப்பதாய் உணர்ந்தாள் தீபா.
கல்யாண மண்டப அமளியில் யார் தன்னை உறுத்துப் பார்க்கப் போகிறார்கள்?
கேள்விக்குறியுடன் சுற்றுமுற்றும் நோக்கினாள்.
அவனைக் கண்டதும் திகைத்தாள்.
பாலாஜி!
கையிலிருந்த குங்குமச் சிமிழ் தடுமாறிக் கீழே விழுந்தது. தரையெங்கும் குங்குமம் சிதறியது.
"குங்குமம் கொட்டினா கல்யாணம்பாங்க. சரியாப் போச்சு பார்த்தீங்களா?"
'யாரோ 'கடி'த்தார்கள். அதற்குச் சிலர் சிரித்தார்கள்.
மீண்டும் ஒருமுறை தீபாவின் பார்வை அவனிடம் சென்று மீண்டது.
மனசுக்குள் ஏதோ ஒரு அடைப்பு திறந்துகொண்டு அவளைச் சுழலில் அமிழ்த்தியது.
"இந்தா, இந்த குங்குமச் சிமிழ் மூலம் எல்லோக்கும் கொடு.''
மதுரை அத்தை நீட்ட வாங்கிக் கொண்டாள்.
சித்தி பெண் கல்யாணம். வந்த இடத்தில் பாலாஜியின் சந்திப்பு.
ஓரக் கண்ணால் மீண்டும் பார்த்தாள்.
அவன் இன்னும் தன்னையே கவனித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
சங்கடமாயிருந்தது அவன் பார்வை. இன்னும் ஏழெட்டுப் பெண்களுக்குக் குங்குமம் கொடுத்தாள்.
நாதஸ்வரம் 'குறையொன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா'வில் இழைந்து கொண்டிருந்தது.
மூன்று வருடம் இருக்குமா அவனை கடைசியாய்ப் பார்த்து?
ஆள் கொஞ்சம் சதை போட்டிருக்கிறான். கட்டை மீசை அவன் முகத்துக்கு எடுப்பாய் இருக்கிறதே.
சேச்சே! என்ன நினைப்பு இது. கூடாது! அவன் எப்படியிருந்தால் என்ன?
கமல்ஹாசனையோ, அஜீத்தையோ டீ.வியில் பார்த்தால் கமெண்ட் அடிப்பதில்லையா, அது போலத்தான் இதுவும்.
மனசு, இரண்டாய்ப் பிரிந்து பட்டிமன்றம் நடத்தியது.
அஜீத் வேறு, இவன் வேறு! இவன் உன் முன்னாள் காதலன்!
காதலன்! மனசுக்குள் அந்த வார்த்தை தோன்றியதும் திடுக்கிட்டுப் போனாள்.
காதல்! பாலாஜிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று யாரோ சொன்னார்களே?
மனசு குறுகுறுத்தது.
"மனைவின்னா நீதான். வேறு யாரையும் நான் ஏத்துக்க மாட்டேன்."
இன்னமும் தன்னை நினைத்தே ஏங்கி, திருமணத்தை மறுக்கிறானோ?
பாலாஜி இருக்கும் பக்கம் இயல்பாய் பார்வையைச் சுழற்றினாள்.
அவன் கொஞ்சம் இடம் பெயர்ந்து தன்னை கவனிப்பதற்கு வசதியாய் நிற்பது தெரிந்தது.
அவன் மேல் கோபம் வந்தது. எதற்கு இப்படிப் பார்க்கிறான்? என்ன எதிர்பார்க்கிறான் தன்னிடம்? போய்ப் பேசலாமா?
சேச்சே, வேண்டாம்! தங்கள் காதல் அரசல், புரசலாய் இங்குள்ள பலருக்குத் தெரியும்.
வேறு வினையே வேண்டாம்! ஊர் வாய் பொல்லாதது.
"என்ன தீபா பிசியா? தங்கை கல்யாணமாச்சே? உன் வீட்டுக்காரர் வந்திருக்காரா?"
தூரத்து சொந்தம். மாமி முறை வேண்டும்.
''அவரும் வந்திருக்கார். இங்கேதானே இருந்தார்?"
கணவனைத் தேடினாள். காணோம். சிகரெட் பிடிக்க வெளியே சென்றிருப்பாரோ?
"சிகரெட்!"
பாலாஜியின் முகத்தில் அவள் பார்வை நிலைத்தது.
இவன் தனக்காக சிகரெட் பிடிப்பதை விட்டானே! இப்போதும் அது நீடிக்கிறதா? இல்லை, காதல் தோல்வியில் மறுபடியும் ஆரம்பித்து விட்டானா?
ஆளைப் பார்த்தால் 'பம்' மென்றுதான் இருக்கிறான். இந்த மூன்று வருடத்தில் சகஜ நிலைக்கு வந்திருப்பான்.
ச்சே! என்ன இது, எங்கு சுற்றியும் ரங்கனை சேவி என்பது போல பாலாஜியை சுற்றியே நினைப்பு ஓடுகிறது.
இது தப்பு! இப்போது நான் திருமதி தீபா பிரசாத். அன்னிய ஆடவன் நினைப்பு கூடாது.
அவள் குடியிருந்த அதே தெருவில்தான் பாலாஜியின் குடும்பமும் வசித்தது. சுற்றி வளைத்த சொந்தம்.
"காதலுக்கு பணம் தேவையில்லாம இருக்கலாம். திருமண வாழ்க்கைக்குக் காசுதான் ஆதாரம். சரியான வேலையிலே இல்லாத பயலுக்கு உன்னைக் கொடுக்க மாட்டேன்."
அப்பாவின் தீர்மானமான முடிவுக்கு வீட்டில் அப்பீல் கிடையாது. இவளின் உண்ணாவிரதம், அழுகையெல்லாம் வியர்த்தமாகிப் போனது, அப்பாவின் முன்னே.
"இப்ப என்னிடம் காசு இல்லே. நீ இருக்கே. ஆனால் பின்னாடி என்னிடமும் பணம் இருக்கும். ஆனால், ஆனால்..."
பாலாஜி முகம் கலங்கி, உடல் தளர்ந்து, குரல் கமறச் சொன்ன காட்சி, 'ரீப்ளே' ஆனது உள்ளே.
உண்மைதான்! அவன் சொன்னதுபோல ஆகிவிட்டான்! பிசினசில் கொழிக்கிறானாம். இப்போது அவனிடம் பணமிருக்கிறது. ஆனால் அவன் காதலித்த பெண் கைமாறிப் போய்விட்டாள்.
அவன் மேல் பிறந்த பச்சாதாப உணர்வை நிறுத்த வழியின்றித் தவித்தாள், திகைத்தாள் தீபா.
"கூந்தலை வெட்டினுட்டியா? நீ காலேஜ்ல படிக்கறச்சே எவ்வளவு நீளம் தொங்கும்?"
மாமா பெண் சுமதி அருகில் வந்து தோளில் கைவைத்தாள். கூந்தலைக் கையிலெடுத்து நுனியால், தீபாவின் முகத்தில் செல்லமாய்த் தட்டினாள்.
அனிச்சையாய் தீபாவின் பார்வை பாலாஜியிடம் சென்று மீண்டது.
அவன் பார்வை இப்போது தன் கூந்தலிலேயே பதிந்திருப்பது கண்டாள்.
'இணைந்த கைகள்' சினிமா பார்த்தது மனசில் ஓடியது. இவள் முன் சீட். சரியாய் நேர்பின்னால்
பாலாஜி இவளின் பெரிய கூந்தலை படம் முடியும் வரை தன் கைகளுக்குள் அவன் பொத்தி வைத்திருந்தது அப்புறம்தான் தெரிந்தது.
படம் முடிந்து எழும்போது, தலை பின்னுக்கு இழுபட, சடாரென சீட்டில் சாய்ந்தாள்.
"முடி மாட்டிக்கிட்டது சேரில்" இவளுக்கு மட்டும் தெரியும்படி கண்ணடித்தபடி, முடியை எடுத்துவிட்டான்.
“உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான். அப்பா பக்கத்திலேயிருக்கும்போதே குறும்பு பண்றீங்களே'' என்றாள் அடுத்தநாள் சந்திப்பில்
"உன் கூந்தலை கைக்குள்ள பொத்தி வைச்சிருந்தப்ப, உன்னையே கையிலே மூடி வைச்சுக்கிட்ட சிலிர்ப்பு எனக்குள்ளே தெரியுமா?"
''உங்க கைக்குள்ளே அடங்குற சின்ன பாப்பாவா நான்?" என்றாள் குறும்பு மின்னும் கண்களுடன்.
"எனக்குள்ள அடங்கறியோ, என்னவோ, ஆனால் என் மனசுக்குள்ளே நிறைஞ்சிருக்கற பெரிய பாப்பா நீ மட்டும்தான்."
அவன் குரலில் வழிந்த காதலில், உருகிப் போய் நின்றாள் தீபா.
"கெட்டி மேளம், கெட்டி மேளம்!''
டம,டமவென்ற மேளச் சத்தத்தில் திடுக்கிட்டு நினைவு கலைந்தாள்.
ம்ஹும்! இங்கிருக்கக் கூடாது. திமிரும் குதிரையாய், மனசை திசை திருப்ப முயன்றாலும், தோற்றுப் போய், மீண்டும், மீண்டும் பாலாஜியை நோக்கியே ஒடுகிறது.
மனசளவில் செய்தாலும், இது துரோகம்! கூடாது. பழையன கழிந்து, புதியன புகுந்துவிட்டது. பழைய குப்பைகள் எதற்கு இனியும்?
குப்பையா உன் காதல்? எட்டாவது வகுப்புப் புத்தகம், பத்தாவது வகுப்புக்குப் போன பிறகு பயன்படாத பொருள்தானே? என்ன இது குப்பை, எட்டாவது, பத்தாவது என்று?
“என்ன தீபா, தனக்குத்தானே பேசிக்கறே?“
கேட்டபடியே அருகில் வந்த கணவனைக் கண்டதும், வெளிறிப் போனாள்.
குற்ற உணர்வா, உறுத்தலா என்று புரியாத உணர்வில் அவன் கையை கெட்டியாய் பிடித்துக்கொண்டாள். ஆறுதலாயிருந்தது.
"நாம சாப்பிட்டுட்டுக் கிளம்பலாமா? கல்யாணம்தான் முடிஞ்சு போச்சே."
வியப்புடன் அவளை நோக்கினான் பிரசாத்.
''நானும் கூட சீக்கிரம் போகலாமான்னு கேட்க நினைச்சேன். 'மேட் ஃபார் ஈச் அதர்' நாமதான்."
தீபாவுக்கு சுருக்கென்றது.
முக்கிய அவசர வேலை இருப்பதாய் சொல்லி, தாம்பூலப் பை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.
பேருந்தும் உடனே கிடைத்தது. ஒரு மணி நேரப் பிரயாணம். வசதியான இருக்கை.
“என்னங்க” என்றாள் பத்து நிமிட பயணத்தில்
"என்னடா?”
ஒருவர் அறியாத ரகசியம் மற்றவரிடம் கிடையாது இருவருக்குள்ளும். எந்தத் தரமாக இருந்தாலும் வெளிப்படையாய்ப் பகிர்ந்து கொள்ளும் பக்குவம்.
"நான்... இவ்வளவு அவசரமாய் கிளம்பி வந்ததை ஏன்னு கேட்கலியே..."
அவன் சிரித்தபடி நோக்கினான்.
"என்னாலே அங்கே இருக்க முடியாதபடி சங்கடம்."
குரல் தழைந்து போய் ஒலித்தது தீபாவுக்கு.
"பாலாஜி வந்திருந்தார்."
அவன் சற்று திரும்பி அமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.
"மனசுல பழைய நினைவாகவே ஓடிச்சு. அதை ஏத்துக்கவும் முடியலே. தடுக்கவும் முடியலே. கட்டுப்பாடு இழந்த வண்டி மாதிரி நினைவுகள் ஓட ஆரம்பிச்சுடுச்சு."
அவள் விசும்பினாள்.
''உங்களுக்குத் துரோகம் பண்ற மாதிரி உறுத்தல். இன்னமும் அவனை மறக்கலியா இந்த மனசுன்னு வியப்பும், கோபமும். என் மேலேயே எனக்கு... எனக்கு ஆத்திரம். ஆதர்ச தம்பதியா நாம வாழறதாய் பெருமைப் பட்டுக்கிட்டு இருக்கேனே, அது பொய்யோன்னு குமுறல். மண்டபத்தை விட்டு வெளியே வந்தப்புறம்தான் தப்பிச்சுட்ட நிம்மதி. நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்?"
குற்ற உணர்வோடு தழுதழுத்தவளின் விரல்களைப் பிரித்து கோத்துக் கொண்டான் பிரசாத்.
"அசடு. கண்ணைத் துடை" என்றான் பிரியமாய்.
"நான் தப்பு செஞ்சுட்டேன்."
"நீ எந்தத் தவறும் செய்யலே தீபா."
"அப்ப ஏன் என் மனசுல பாலாஜியைப் பற்றிய நினைவுகள், நிகழ்வுகள் ஓடணும்?"
பிரசாத் அவளை உற்றுப் பார்த்தபடி சொன்னான்.
"காவிரி பாலத்துல நீ நடந்திருக்கேதானே?"
''ரொம்ப பிடிச்ச விஷயமாச்சே, அப்படி நடக்கறது. ஏன்?"
"நாம பாலத்துல நடந்து போறப்ப. பஸ்ஸோ, லாரியோ நம்மை கடந்து போறப்ப என்ன நடக்கும்?"
"பாலம் அதிரும். நான் கூட உங்களை இது பற்றிக் கேட்டிருக்கேனே. பாலத்தோட அமைப்பு அப்படி. அதனாலே பாலம், பல வீனமானதுன்னு அர்த்தமில்லேன்னு சொன்னீங்களே?"
"கரெக்ட்! அதே மாதிரியான அதிர்வுகள்தான் உன் மனசுல உண்டாகியிருக்கு. மனசோட அமைப்பு, இயல்பு அப்படி. அது இயற்கையானதும்கூட. பஸ் கடந்துபோன பின்னாடி அதிர்வு இல்லாத மாதிரி, இப்ப உன் மனசும் தெளிஞ்சிருக்குமே?"
தீபா கண்மூடி யோசித்தாள். தலையசைத்தாள். கண் திறந்து வியப்புடன் கணவனைப் பார்த்தாள்.
“எப்படி, எப்படி இவ்வளவு அழகாய், சரியாய் இதை புரிஞ்சுக்கிட்டீங்க."
"கல்யாண மண்டபத்திலே நான் வந்தனாவைப் பார்த்தேன்" என்றான் பிரசாத்.
வந்தனா, அவன் காதலித்த அத்தை பெண்!
பின்குறிப்பு:-
கல்கி 08.09.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்