‘கல்கி’யின் அலை ஓசை – தொய்வில்லா நவரச விருந்து!

ஓவியர் சந்திரா
ஓவியர் சந்திரா

நான் ‘கல்கி’யின் 'அலை ஓசை' படித்து ஏறத்தாழ இருபது வருடங்கள் ஆன நிலையில், நந்தனம் புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகத்தை இவ்வாண்டு வாங்கினேன். நாவலின் முன்னுரையில் 'அலை ஓசை' பற்றி ஆசிரியர் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகள்:

 நான் எழுதிய நூல்களுக்குள்ளே ஏதாவது ஒன்று ஐம்பது அல்லது நூறு வருஷம் நிலைத்து நிற்கத் தகுதியுடையதென்றால், அது  'அலை ஓசை'தான் என்ற எண்ணம் படிக்கும்போதே உள்ளத்தில் தானாக உதயமாயிற்று.

அலை ஓசையை நான் எழுதியதாகவே எண்ணக் கூடவில்லை, லலிதாவும், சீதாவும், தாரிணியும், சூரியாவும், சௌந்தரராகவனும், பட்டாபிராமனும் சேர்ந்து பேசிக்கொண்டு அவரவர்களுடைய அந்தரங்க ஆபாசங்களையும், உள்ளக் கிளர்ச்சிகளையும் வெளியிட்டு அலை ஓசையை எழுதியிருக்கிறார்கள். என் பணிகளுக்குள்ளே இதுவே தலைசிறந்தது என்று நம்பி தமிழ்நாட்டு ரசிகப் பெருமக்களுக்கு இந்த நூலை அர்ப்பணம் செய்கிறேன்.

ஓவியர் சந்திரா
ஓவியர் சந்திரா

அவரது முன்னுரையைப் படித்தபிறகு அலை ஓசையை மீண்டும் படிக்க ஆசை அதிகமாயிற்று. இந்தக் கதையைப் புரிந்து, ரசிப்பதற்கான மனமுதிர்ச்சி இப்போது வந்துவிட்டது என்று நினைக்கிறேன், ஏனெனில் சுமார் 1000 பக்கங்களுக்கு மேல், நான்கு பாகங்களாக எழுதப்பட்ட இந்த புதினத்தை ஒரே வாரத்தில் படித்துவிட்டேன். கதையின் ஓட்டத்தைப் பற்றி என்னவென்று சொல்ல? எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல், கதையோடு சேர்ந்து நகைச்சுவையையும் விட்டுவிடாமல் கல்கி வாசகர்களுக்கு நவரச விருந்து படைத்துள்ளார். இந்தக் கதை எழுதி எழுபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றால் என்னால் நம்ப முடியவில்லை.

தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் வந்ததற்கு மூலக் காரணம் கல்கி அவர்களின் எழுத்து. எனது 20 வயதில் பொன்னியின் செல்வன் துவங்கி அவரது அனைத்து சரித்திர நாவல்களையும் படித்து, அவற்றின் ஒரு பிரதியும் வாங்கி வைத்துக்கொண்டேன்.

அலை ஓசை, அவர் எழுதிய சாகித்திய அகாடெமி விருது பெற்ற சமூக நாவல். அதை நான் முதன்முதலில் கண்டது லெண்டிங் லைப்ரரியில். 1930 – 47வரை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலம். காந்தி மகாத்மாவின் ஆத்மசக்தியால் கோடானு கோடி இந்தியர்களைச் சுதந்திர வேள்விக்குள் ஈர்த்த தருணம் அது. அந்தச் சம்பவங்களைப்ற பின்னணியாகக் கொண்டு அமைந்திருந்தது இக்கதை.

நான் முதல் முறை இந்தக் கதையைப் படித்தபோது நிறைய விஷயங்கள் எனக்குச் சரிவர விளங்கவில்லை . ஆழ்வார்க்கடியானையும், வந்தியத்தேவனையும் ரசித்த என்னால் இந்தக் கதையின் கதாபாத்திரங்களை ரசிக்க இயலவில்லை.

எப்படி ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையை இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு பிணைத்து, அப்போது பிரபலமாக இருந்த அரசியல் கொள்கைகளையும், முரண்பாடுகளையும், பொது ஜன சிந்தனைகளையும் இணைத்து, கதையின் ஓட்டத்தோடு ஹரிப்புரா காங்கிரஸ் சந்திப்பு, சோஷியலிச கொள்கைகள், காங்கிரஸ் மிதவாதம், சுதேச சமஸ்தானங்கள், கல்கத்தா கலவரங்கள், இந்திய பிரிவினை என்று இன்றைய வாசகர்கள் பலருக்குத் தெரிந்த, தெரியாத பல சம்பவங்களைக் கதையின் ஓட்டத்தோடு சேர்த்து, கடைசியில் மகாத்மா காந்தியின் மரணத்தில் அவர் கதையை முடித்துள்ளார் என்று நினைக்க நினைக்க ஆச்சரியமாக உள்ளது. இக்கதையில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அப்போது இந்திய அரசியலில் நிலவிய பல பிரச்னைகள் இன்றளவும் சரியாகாமல் இருப்பதுதான்.

ஓவியர் சந்திரா
ஓவியர் சந்திரா

கதையின் அனேக கதாப்பாத்திரங்கள் பற்றி நான் எழுதப் போவதில்லை. ஆனால் சீதாவைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. அவள் மீது முதன் முறை ஏற்பட்ட கோபம் குறையவில்லை, ஆனால், இத்தனை தீர்க்கமான ஒரு கதாப்பாத்திர படைப்பு பிரமிக்க வைக்கிறது. இத்தனைக்கும் சீதா ஒரு ஃப்ளாடு (flawed) கதாப்பாத்திரம். ஒரு ஆணாக இருந்து சீதாவின் மனதின் அந்தரங்கத்தை அவர் எழுதி இருக்கும் விதத்திற்கு ஈடு இணை கிடையாது.

 ஆசிரியர் செதுக்கிய ஒவ்வொரு கதாபாத்திரமும், அவர்கள் உரையாடல்களும், அவர்கள் எண்ண ஒட்டங்களும்… எழுத்து வடிவில் படிக்க படிக்க, கண் முன்னே நிதர்சனமாக, காட்சிகளாக எழுகி்ன்றன. அந்நாளில் எழுதிய ஒரு புதினமாகவே எனக்கு அக்கதை எங்கும் புலப்படவில்லை, அவரது வரிகளில் கூற வேண்டும் என்றால் ‘லவலேசமும் தோன்றவில்லை.’

இத்தனை ஆண்டுகள் கடந்து, கல்கி அவரது எழுத்துகள் இன்றும் பேசப்பட்டு வருவதற்கு சான்று 'அலை ஓசை'. அவர் காலத்தை ஒத்த ஆசிரியர்களின் சிந்தனை ஒரு கோடு போட்டு அதில் பயணித்தால், கல்கியின் சிந்தனையோ ஒரு 100 வருட காலம் முன்னோக்கி பயணிக்கிறது. காலத்தை கடந்த ஓர் எழுத்தாளர் அவர்.

 பெரும்பாலான கதைகளில் ஒரு கதாப்பாத்திரம், அல்லது உறவு, அல்லது சமூகப் பார்வை இவையெல்லாம் வெகுவாக யூகிக்கக்கூடிய வண்ணம் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு, அம்மா என்றால் அன்பின் உருவம் என்ற பிம்பத்தை கூறாத கதைகள் கிடையாது. அதேபோல கெட்டவர்கள், கொடியவர்கள் என்றால் முற்றிலும் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால், உண்மையில் மனிதர்கள் அனைவருமே சில நேரங்களில் நல்லவர்கள் மற்றும் சில நேரங்களில் கெட்டவர்கள்.

கொலை செய்பவன் மட்டும் கொடூரன் அல்ல, கொலை செய்ய நினைக்கும் ஆசாமி கூட ஒரு வகையில் கொடூரமானவன்தான். இந்த புரிதல் அவரது கதாப்பாத்திரங்களை நாம் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஏற்படும்.  

இதையும் படியுங்கள்:
பற்பல நன்மைகள் தரும் பருப்புக் கீரை!
ஓவியர் சந்திரா

அந்தக் கூற்றின் அடிப்படையில், கல்கியின் வெவ்வேறு பாத்திரப்படைப்பும் விந்தையாக உள்ளது. நமது எண்ணங்களுக்கு ஏற்ப அந்தப் பாத்திரங்களுடன் நமக்கு ஒரு புரிதல் ஏற்படுகிறது.

ஓவியர் சந்திரா
ஓவியர் சந்திரா

அந்த வகையில் என்னை ஈர்த்த மற்றொரு பாத்திரம் சுண்டு என்கிற ஷ்யாம் சுந்தர். கதை உணர்ச்சிகரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் கல்கி ஷ்யாம் சுந்தரின் சினிமா ஆசையை வெளிப்படுத்தி என்னை சிரிக்க வைத்துவிட்டார். இப்படி ஒரு தருணத்தில் இதுபோல ஹாஸ்யமாக எழுத முடியுமானால், அவரது கதை சொல்லும் பாங்கை என்னவென்று சொல்வது?

பணம், பதவி மீது ஆசை இல்லை, ஆனால், புகழுக்கு மட்டும் ஆசை உள்ளது என்று பட்டாபிராமனும், சீதாவும் வெவ்வேறு இடத்தில் கதையில் கூறுவது ஆத்ம விசாரணையைத் தூண்டியது. புகழுக்கு அடிமையாகாதவர்கள் இருக்கிறார்களா என்ன?

 ‘கல்கி’ படைத்த கதாப்பாத்திரங்களையும், அவர்களது உரையாடல்களையும் படிக்க, படிக்க, இப்படியும் மனித மனம் குரங்குபோல் மாறுமா? என்று நினைத்து சிரிக்கவும், எழுதுவதற்கு ஐயம் ஏற்பட்டால் ஒரு அகராதியைப்போல பயன்படுத்தவும், மனச் சோர்வு ஏற்பட்டால் புத்துணர்ச்சி பானம் பருகுவது போலவும்  நான் மீண்டும் மீண்டும் அமரர் கல்கியின் 'அலை ஓசையை' படிப்பேன் என்பதில் சந்தேகமே இல்லை. 

அமரர் கல்கியின் தலைசிறந்த படைப்பு – அழியா காவியம் ‘அலை ஓசை’ 28.03.1948 தேதியிட்ட கல்கி வார இதழில் தொடர்கதையாக வரத் தொடங்கியது, ஓவியர் சந்திராவின் உயிரூட்டும் ஓவியங்களுடன். அன்பர்களே! இந்த முதல் பிரதியிலிருந்து ஒவ்வொரு வாரமும் வெளியான இத்தொடரை (மாபெரும் படைப்பை) நீங்கள் அச்சு அசல் ஓவியங்களுடன் படித்து மகிழ ‘கல்கி களஞ்சியம்’ வாங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com