''காமராஜர் திட்டம்'' அறிமுகப்படுத்தப்பட்ட நாள்! (10-8-1963)

''காமராஜர் திட்டம்'' அறிமுகப்படுத்தப்பட்ட நாள்! (10-8-1963)
Published on

1962ல்  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றதன் தொடர்ச்சியாக காமராஜர் தமிழக முதல்வராக  விளங்கிய காலகட்டம் அது. எனினும், தான் அங்கமாக உள்ள  காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல தனது வீரியத்தை இழந்து வருகிறது என்பதை உணர்ந்தார் காமராஜர்.  இந்த போக்கை மாற்றி அந்த கட்சிக்கு ஏற்றத்தைக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தார்.

 'மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.  காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கு தங்கள் முழு ஆற்றலையும் செலவிட வேண்டும்'.  இப்படி அவர் முன்வைத்த யோசனைதான் காமராஜர் திட்டம் என்று பரவலாக அறியப்பட்டது.  அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் இந்த திட்டத்தை பரிந்துரைத்தார் காமராஜர்.

இதன்மூலம் இளையவர்களும் தலைமைப் பதவியேற்க வழி கிடைக்கும் என்றும் காமராஜர் நம்பினார்.

இந்த திட்டம் நேருவாலும் கட்சியாலும் ஏற்கப்பட்டது.  மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், காந்தி ஜெய​ந்தியான அக்டோபர் 2, 1963 அன்று தனது முதல்வர் பதவியிலிருந்து,  ராஜினாமா செய்தார் காமராஜர்.  இதைத் தொடர்ந்து ஆறு மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். அவர்கள் லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், பிஜு பட்நாயக், எஸ்.கே.பாட்டில், சஞ்சீவ ரெட்டி, ஆகியோர்.  ஆறு முதல்வர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களில் உத்தரபிரதேச முதல்வர் சம்பூர்ணானந்த், ஒரிசா முதல்வர் பிஜு பட்நாயக் ஆகியோரும் உண்டு.

 இது ஒரு மிக வித்தியாசமான திட்டம்.  அதிகார மோகம் கொண்டவர்களை அசைத்துப் பார்த்த திட்டம்.  காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புத்துணர்வு இதனால் ஏற்பட்டது எனலாம்.

காமராஜரின் மதியூகத்தால் பெரிதும்  ஈர்க்கப்பட்ட பிரதமர் நேரு அவரை தேசிய அளவிலான யோசனைகள் கேட்கத் தொடங்கினார்.  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1963 அக்டோபர் 9 அன்று காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964ல் ஜவஹர்லால் நேருவின் மரணத்துக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனதிலும்,  அவர் மறைவுக்கு பிறகு 1966ல்  இந்திரா காந்தி பிரதமரானதிலும் காமராஜருக்கு பெரும்பங்கு உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com