பிரதான சாலையில் பேருந்து நிற்குமிடத்திற்குப் பின்னால் கொஞ்சம் மறைவாக இருக்கும் “அசோகா ப்ளை & லேமினேட்ஸ்” வாசலில் உள்ள நீண்ட பெஞ்சியில் பெரிய கட்டம் போட்ட நீல லுங்கி, சிகப்பு முண்டா பனியன், தலையில் முண்டாசு என்று குத்தவைத்து வீற்றிருப்பவர்தான் கனகாசாரி. மெலிந்த தேகம் என்பதால் 55 வயதுக்கு சுறுசுறுப்பாகவே இருப்பார். சீர் செய்யப்படாமல் கோணல் மாணலாக மீசை தாடி. இரண்டு காதுகளிலும் அரைப்பென்சில்கள் செருகியிருக்கும். அடிக்கடி வாயில் வைத்துப் புகைக்காவிட்டாலும் பெரும்பாலான நேரங்களில் கையில் ஒரு பீடி புகைந்துகொண்டே இருக்கும். இடது தோளில் ஒரு பெரிய வெட்டுத்தழும்பு. எதற்காகவோ அடிக்கடி அதைத் தடவிக்கொடுப்பார். காலை 10 மணிக்கு மேல்தான் கடை திறக்கும். கொஞ்சம் முன்னதாகவே கனகாசாரி வந்து பக்கத்து சந்துக்குள் ஈ.பி பெட்டிக்குப் பின்னால் வைத்திருக்கும் சீமாரைக் கொண்டுவந்து கடை வாசலை மேலாக அப்படி இப்படி ஒரு பெருக்கு பெருக்கிவிட்டுக் காத்திருப்பார். முதலாளி அசோகன் ஐயா வந்து கடையை திறந்ததும் இவரும் உள்ளே போய் முதலில் பெஞ்சைக் கொண்டுவந்து வெளியே வைப்பார். தனது உபகரண சாக்குப் பை, ஒன்றிரண்டு ரம்பங்கள், ஃபெவிகால் டப்பா போன்றவற்றை பெஞ்சின் கீழே இருக்கும் பலகையில் வைத்துவிட்டு முதலாளிக்கும் அவருக்குமாக செம்பில் டீ வாங்கி வருவார். டீ குடித்தபின் தனது யதாஸ்தானமான பெஞ்சு மூலையில் குத்தவைத்துவிடுவார். “கனகு... நம்ம தனகோடி சார் ஊட்ல கதவு சாஞ்சு போச்சாமா. போய் என்னன்னு பாரு. அவிக ஊட்ல போன் இருக்குது. சாமான் கீது வேணுமின்னா போன் பண்ணு. முருகன்கிட்ட குடுத்து உடறேன்” “ந்ந்தா...கெளம்பீட்டனுங்” என்றபடி தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு சைக்கிளில் கிளம்பிவிடுவார். இப்படி அவ்வப்போது வரும் சிறு வேலைகளுக்குப் போனாலும் அவருக்கு ஒரு முழு வீட்டுக்கான தச்சுவேலை செய்வதில்தான் ஆர்வம் அதிகம். வீட்டுக்காரருடன் அமர்ந்து பேசி, தனது யோசனைகளையும் சொல்லி, ஒரு நோட்டுப் புத்தகத்தில் படங்கள் வரைந்து அளவுகள் குறித்து, ஒரு “எஷ்டிம்டு” சொல்வதில் அலாதி ஆசை.. எல்லாம் கூடி வந்து வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டுவிட்டால் கால் தரையில் பாவாது. “ம்ம்ம்.. பெரிய வேலை வந்துருச்சு. வர அம்மாசிக்கு வேல ஆரம்பிக்கோணும். எஸ்வி புரம் போகோணும். ஒரு மாசம் பெண்டு நிமுந்துரும்” என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார். “அய்யா... நம்ம கடைல வாக ப்ரேம் கட்ட ஆர்டர் போட்ருங்க. அப்பறம் அந்த யானப்படம் போட்ட ப்ளைவுட்டு வெள்ளிகிளமைக்குள்ள வந்துருமா? ஊட்டுக்கார அய்யா வேற அல்லாத்துக்கும் பித்தளைக் கைப்பிடிதான் வேணுமின்னு கண்டீசன் பண்ணீட்டாரு. கொஞ்சம் அதையும்...” “சரியப்பா... சரி. அல்லாம் வந்துரும். அடாடாடா... ஒரு வேலை வந்தாலும் வந்தது... நம்ம தலைய உருட்டிப்போடுவயே” என்று முதலாளி சிரிப்பார். கனகாசாரி வெட்கத்துடன் தலையை சொறிந்தபடி பெஞ்சுக்குப் போய்விடுவார். “அய்யா... மச்சு ஊட்டு வேலைக்கி ஒத்தாசைக்கி நம்ம பசுபதியை கூப்டுக்கலாம்னு பாத்தா ஒரு வாரமா அவன ஆளைக் காணமே” “அவனில்லாட்டி என்ன? பொன்னுச்சாமி சும்மாத்தானெ இருக்கான்... அவன வச்சுக்கவேன்” “அவனொரு கொரக்காணி புடிச்சவனுங். பசுபதி ஊட்ல அவிக ஆத்தாளுக்கு மேலுக்கு சரியில்லீங்... வந்த்தான்னா கொஞ்சம் பணங்காசு கெடைக்குமல்ல?” “நீதான் அவனக் கொஞ்சுற. அவனென்றானா யாருக்கோ எதுவோ போச்சுன்னல்ல சுத்தறான்” “கொளந்தப் பையனுங்க. அதெல்லாம் நாஞ்சொன்னாக் கேட்டுக்குவானுங்” என்று சிரிப்பார். எப்படியோ பசுபதியை தேடிப்பிடித்துக் கூட்டிவந்து, ‘அம்மாசி’யும் வந்து மச்சு வீட்டு வேலையும் ஆரம்பிக்கும். கடையிலிருந்து பொருட்களை ஒரு லாரியில் ஏற்றிவிட்டு பசுபதியுடன் மனைக்குப் போய் இறக்கி ஓர் அறையில் ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, ‘சாங்கியத்துக்கு’ ஒரு கட்டையை எடுத்து கொஞ்சம் அறுத்து பக்கங்களை இழைப்புளியால் சீவி நடுவில் வைத்து சின்னதாக ஒரு பூசையும் போடுவார். மறுநாளிலிருந்து பரபரப்பாக வேலை ஓடும். பசுபதியும் கொஞ்சம் பொறுப்பற்றவன் என்றாலும் கனகாசாரியிடம் மட்டும் பெட்டிப்பாம்பாக அடங்கி வேலை செய்வான். வாரா வாரம் கணக்காக சம்பளம் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்பது ஒரு முக்கியக் காரணம். அவருடன் வேலை செய்யும்போதெல்லாம் சனிக்கிழமை மாலை கண்டிப்பாக ஏதாவது ஒரு சினிமாவுக்கு அவர் செலவில் கூட்டிப்போவார். அது இன்னொரு காரணம். “பசுபதி... இங்க வா. ந்தா பாரு.. . மொத்தம் 26 சன்னல் பலகை அறுக்கோணும். அளவெல்லாம் ந்தா... காய்தத்துல எளுதிருக்கு. அல்லாதுக்கும் நெம்பர் போட்டுருக்கேன். போய் ஒரு ஓரமா உக்காந்து நறுவிசா அறுத்து நெம்பரும் போட்டு வெப்பியாமா. நல்லா கோடுபோட்டு வீணாகிப் போடாம நைசா அறுக்கோணும். எஷ்டிம்டு போட்டது நானு. எச்சுப் பலகையெல்லாம் கெடையாது. போ...” போ என்று அவனைச் சொல்லிவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒருமுறை போய் ஒரு மெப்பு பார்த்துவிட்டுத்தான் வருவார். “என்றாது? நான் என்ன சொன்னேன் நீ என்ன செய்யிற? சொல்லும்போது ஊ..ஊன்ன? வாய் மட்டும் வக்கணையா வடக்கிபாளையம் வரைக்கும் பேசுது. ஆனா கோடெல்லாம் கோணவாய்க்கான்பாளையம் போகுது? அப்பவே ஐயா சொன்னாரு... இந்தப் பய எதுக்கு... பொன்னுச்சாமியக் கூப்புடுன்னு. போ... போய் டீயைக் குடிச்சுபோட்டு வந்து ஒளுக்கமா வேலையப் பாரு. ஆத்தாளுக்கு முடீலயல்ல... பணங்காசு வேண்டாம்?” “ந்தா பாரு... சாயிண்டு வெட்டும்போது உளியும் சுத்தியும் சும்மா செல செதுக்கறாப்ல நாசுக்கா இருக்கோணும். அப்பத்தேன் நம்ம வெரல் கோக்கற மாதிரி பொசுக்குனு உக்காரும். புரியுதா?” “மைக்கா சீட்டு ஒட்டும்போது பலகை, மைக்கா ரெண்டுலயுமு சும்மா தங்க ரேக்கு புடிச்சாப்ல பெவிகோல் பூசோணும். மொடக்கு மொடக்குனு ஊத்தி மொட்டு வரக்கூடாது. தொளில விசுக்குனு கத்துக்குவன்ன பாத்தா...ம்ம்... சரியில்லையே.” அதையும் இதையும் சொல்லி எப்படியோ வேலைவாங்கிவிடுவார். மாலை வேளையில் பசுபதி அவனை அவர் ரொம்பவும் திட்டுவதாகச் சொல்லி வருத்தப்படுவான். “கண்ணு... நம்மள தச்சர்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? டைலர் துணி தெக்கிற மாதிரி நாம மரம் தெக்கிறோம். ஆசாரின்னு சொல்லுவாங்க. மரத்த தங்கமாட்ட கொஞ்சம் கோட வீணாக்காம தெக்கோணும். மரம் தெக்கிறதுங்கறது வெறும் வேலை இல்ல கண்ணு. டைலர் தெக்கிற துணி தோச்சுத் தோச்சு நஞ்சு போயிரும். ஆளு வளர வளர வேற துணி வாங்கோணும். ஆனா ஊடு அப்பிடியில்ல. ஆயிரம் மரம் இருந்தாலும் வாக, வேங்க, கடம்ப, தேக்குன்னு நாம போய் பாத்துப் பாத்து எடுத்துட்டு வந்து நெலவு சன்னலுன்னு செவுரோட செவுரா வெச்சு அதுவும் ஊடாயிரும். ஊடு நம்மளாட்ட நெதமும் வளராது. அது சட்டையில்ல கண்ணு. ஒடம்பு மாதிரி... அதனாலதான் வீணாக்காம வேல செய்யின்னு சொல்றது” பசுபதி பாதி புரிந்து பாதி புரியாமல் சும்மாவாவது தலையை ஆட்டி வைப்பான். சொல்லிவிட்டு கனகாசாரி மல்லாந்து படுத்தாரென்றால் அடுத்த நிமிடம் குறட்டை ஊரை எழுப்பிவிடும். “ஏய்... பசுபதி... பீடிக்கட்டு தீந்து போச்சு... விசுக்குனு போய் ஒரு கணேஸ் பீடிக்கட்டு வாங்கீட்டு ஓடியா பாப்போம்...” “ஏன் ஆசாரி? நானும் வெகுநாளாக் கேக்கணும் கேக்கணும்னு இருக்கேன்... அதென்ன பீடி பத்தவெச்சு ஊதறதில்ல.. ஆனா எப்பப்பாரு அதைப் புடிச்சுக்கிட்டே வேலை? வேண்டாம்னா விட்டெறிஞ்சு போடலாமால்ல?” சட்டென வேலையை நிறுத்திவிட்டு அவனை நிதானமாகப் பார்த்தார். முகமும் கொஞ்சம் இறுகி விட்டிருந்தது. “வா... இப்பிடி ஒக்காரு. ஒரு காலத்துல நானும் உன்னிய மாரிதான்... சுத்தீட்டுத் திரிஞ்சேன். தங்கவேலுன்னு ஒரு ஆசாரி இருந்தாரு. என்ற வாத்தியாருன்னு வெச்சுக்கவேன். எனக்கு மரமுந் தெரியாது... பலகையுந் தெரியாது. ஊட்ல அய்யன், ஆத்தா ரெண்டு பேரும் ஒரே நாள்ல கொள்ள நோய் கொண்டு போச்சு. பெரியாசாரியுமு அய்யனுமு ஈயும் பீயுமாட்ட ஒண்ணாவே இருப்பகளாமா. அய்யனை காட்டுக்குக் கொண்டு போகைல என்னிய கட்டிப்புடிச்சுக்கிட்டு அளுதாரு. அவுருதான் எனக்கு தொளில் கத்துக் குடுத்தது. நெம்ப பீடி குடிப்பாரு. இரும்பிக்கிட்டே இருந்தாரு. நெஞ்சு கெட்டுப்போச்சுன்னு கோயம்தூர் கொண்டு போனாக. போனவரு வரவே இல்ல. போயே போயிட்டாரு. அடிச்சுப் புடிச்சு நானும் ஓடுனேன் காட்டுக்கு. அவுரு மூஞ்சியை கடேசியாப் பாத்தப்பக் கூட ‘பீடி கொண்டாடா’ன்னு கேக்கற மாதிரியே இருந்துச்சு. அதான் ஒரு பீடியப் பத்தவெச்சு கைல வெச்சுக்குவேன். அவுரு எங்கோடவே இருக்கற மாதிரி இருக்கு. என்ற கை வேலை நல்லா இருக்குன்னு அல்லாரும் சொல்றாங்கன்னா அது தங்கவேலு ஆசாரியோட கை. என்றதல்ல..” “ஓஹோ. ஆச்சரியமாவல்ல இருக்குது?” “எனக்கென்னமோ அப்பிடித் தோணுச்சு. அதுக்காக நீயும் இந்த பீடி கருமாந்தரமெல்லாம் புடிக்காத. என்ற காலமெல்லாம் போயாச்சு. தொளில கெட்டியாப் புடிச்சு மேல வா. ஆத்தாளுக்கு 3 வேளையும் கஞ்சியூத்து. அது போதும்”(தொடரும்)