கல்யாணம் என்றாலே அநேக குடும்பங்களுக்கு பலவிதமான சிரமங்கள் ஏற்படுகின்றன. நமக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். நமக்கு உள்ள ஒரு ஆண் பிள்ளைக்காவது வரதட்சணை வாங்கினால் அதைக் கொண்டு ஓரளவு பெண் கல்யாணத்தை சமாளிக்கலாம் என்று நினைக்கிறார்கள் . சிலபேர் வரதட்சணை வேண்டாம் என்றால் பிள்ளைக்கு ஏதோ என்று கதை கட்டி விடுவார்கள் என்று தயங்குகிறார்கள். அந்த பிள்ளைக்கு இவ்வளவு வந்திருக்கும்போது நம்முடைய பிள்ளைக்கு என்ன குறைவு என்று நினைப்பவர்களும் உண்டு .
ஆனால், வரதட்சனை வாங்கவே கூடாது என்று காஞ்சி பெரியவர் தனது கனிமொழிகள் என்ற நூலில் குறிப்பிட்ட விஷயங்களை இப்பதிவில் காண்போம்.
நான்கு பெண்கள் பிறந்து விட்டால் பெற்றவர்கள், ஏதோ படிக்க வைத்து விடுவோம், அப்புறம் அவர்கள் இஷ்டப்படி நடக்கட்டும், வேலைக்கு போகட்டும், முடிந்தால் கல்யாணம் செய்து கொள்ளட்டும், இல்லாவிட்டால் எப்படியோ மானம் கௌரவத்தை சாதுரியமாக காப்பாற்றி கொள்ளட்டும் என்று நினைக்கிற நிலைமை வளர்ந்துவிட்டது.
முன்பு பிள்ளைகள் அதிகமாக பிறந்தார்கள், அதனால் பெண்களுக்கு கொண்டு போய் பணத்தை கொடுத்து கல்யாணம் செய்து கொண்டு வந்தார்கள். இப்போது பெண் குழந்தைகள் அதிகமாக பிறக்கின்றன. அதனால் பிள்ளைகளுக்கு வரதட்சனை கொடுப்பது, சீர் செய்வது என்று செலவுகள் வளர்ந்து விட்டன.
நல்ல பிள்ளை தானா? நன்றாக படித்திருக்கிறானா? நன்றாக வேலை பார்ப்பானா? என்று பெண்ணை பெற்றவர்கள் தேடி அலைவதைப் போல, பெண் நல்ல குணம் உள்ளவளா? அவளை நல்ல பண்புகளுடன் வளர்த்திருக்கிறார்களா? நன்றாக குடித்தனம் செய்வாளா? என்பதை மாத்திரம் பிள்ளையைப் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டு, 'சரி நீங்கள் செய்வதை செய்யுங்கள் வீண் செலவு செய்து சிரமப்படாதீர்கள்' என்று சொல்லி பிள்ளைக்கு கல்யாணம் செய்து கொள்ள முன்வர வேண்டும். நம்முடைய மனப்பான்மை இப்படி மாறினால் தான் நம்முடைய எதிர்கால சமுதாயத்துக்கு நன்மை கிடைக்கும்.
கல்யாணத்தை பொருளாதார பிரச்சினையாக மாற்றி இருப்பதற்கு அக்கிரமம் என்ற வார்த்தையைதான் சொல்லிக் கொள்ள வேண்டும். அவரவரும் ஆணோடு பெண்ணோடு பிறந்தவர்கள் தானே. நமக்கும் பெண்கள் இருக்கிறார்கள்.
அப்படி இருக்க பிள்ளையாத்துகாரன் என்று ஆனவுடன் வரதட்சணை, கொண்டா பாத்திரத்தைக் கொண்டா நகையை கொண்டா பட்டு வாங்கு என்று ஷைலக் மாதிரி கண்டிஷன் போட்டு பெண் குழந்தைகளை கல்யாணம் ஆகாமல் கண்ணை கசக்கும்படியாக பண்ணுவதை மன்னிக்ககூடியதே இல்லை.
இதுவரை மற்றவர் பண்ணின தப்பை அக்கிரமத்தை ஏன் நாம் பாலோ பண்ண வேண்டும், இனிமேலும் மற்றவர்கள் நம்மை பாலோ பண்ணும் படியாக இப்போது நாம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் இதுவல்லவோ நமக்கு பெருமை இப்படிப்பட்ட உணர்ச்சி தாய்க்குலத்துக்கு உண்டாக வேண்டும்.
நம்முடைய உயர்ந்த ஸ்திரீ தர்மத்தை காப்பாற்ற நாம் கொஞ்சம் பண இஷ்டம் படக்கூடாதா? சௌந்தர்யலஹரி சொல்கிறோம் அபிராமி அந்தாதி சொல்கிறோம் என்று பல பெண்கள் என்னிடம் வந்து ஆசீர்வாதம் கேட்கிறார்கள் நல்ல காரியம் தான் ஆசீர்வாதம் பண்ணுகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் விட அதிகமாக அம்பாளுடைய ப்ரீத்தியை சம்பாதித்து கொள்ள வேண்டுமானால் இவர்கள் வரதட்சணை வைரத்தோடு செனத்தி என்ற கண்டிஷன் இல்லாமல் நான் சொன்ன மாதிரி கல்யாணங்களுக்கு மனம் பூர்வமாக சம்மதித்தால் தான் முடியும்.
தங்கள் மாதிரியான பெண்கள் வயசு வந்தும் கல்யாணம் ஆகாமல் இருப்பது அதனால் மனோ விகாரப்படுவது. மானபங்கப்படுவது, அப்புறம் மான உணர்ச்சியும் மறுத்துப் போய் விடுவது என்று இப்படி ஆகி இருக்கிற நிலைமையை மாற்றுவதற்கு இவர்களுக்கு மனசு இறங்கினால் இவர்களிடம் அம்பாளின் மனசு தானாகவே இருக்கும்.
நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனை கொடுக்கிறோம் என்று ஸ்வச்சையாக வந்தால் தான் வாங்கிக் கொண்டோம் என்று சொல்வது கூட தப்பு. ஏனென்றால் ஒருத்தர் பண்ணுவதிலிருந்து இன்னொருத்தர் என்று இது செயின் மாதிரி போய்க் கொண்டிருக்கிற வழக்கம்.
கட்டாயப்படுத்தாமலே ஒருத்தர் வரதட்சனை கொடுத்தாலும் இதனால் அவர் தன் பிள்ளைக்கும் கல்யாணம் பண்ணும் போது வரதட்சனை எதிர்பார்க்கத்தான் செய்வார். அதனால் அவர்களாகவே கொடுத்தாலும் கூட வேண்டாம் என்று சொல்கிற உயர்ந்த மனோபாவம் வரவேண்டும் .
பெண் வீட்டாருக்கு மிதமிஞ்சி என்று பணம் இருந்தால் கூட எங்களுக்கு பணம் தராதீர்கள், உங்கள் பெண்ணுக்கு சீதனமாக போட்டு வையுங்கள் என்று சொல்ல வேண்டும். பிள்ளை வீட்டுக்காரர் செலவுக்கு அதாவது பிள்ளையின் உறவுகளுக்கு துணி வாங்குவது இவர்கள் கல்யாணத்துக்கு போகிற பிரயாணச் செலவு முதலானதுகளுக்கு பெண் வீட்டாரே செலவு செய்ய வேண்டும் என்பது துளி கூட நியாயமே இல்லை. நம் பிள்ளைக்கு தானே கல்யாணம் நாமே அதற்கு செலவழிக்க கூடாது. எவனோ கொடுக்கிற பணத்தில் நாம் டிரஸ் வாங்கிக் கொள்வது அவமானம்தான். நமக்கு வக்கில்லை என்று தான் அர்த்தம். இதையே பிள்ளைகளுக்கு சம்பந்தி என்று பெரிய பெயரில் தங்கள் ரைட் மாதிரி மிரட்டி உருட்டி செய்து வருகிறோம்.
வரதட்சணை தாமாக கேட்டாலும் சரி அவர்களாக கொடுத்தாலும் சரி, திருட்டுச் சொத்து மாதிரி என்ற பயம் வேண்டும். இத்தனை பட்டுப் புடவைகள் வாங்க வேண்டும். வைரத்தோடு போட வேண்டும் என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தி அனேக பெண்ணை கல்யாணம் ஆகாது நிறுத்தி வைக்கும்படி பண்ணுகிறது பாவம். இந்த வரதட்சணை இரண்டு தரப்போடு நிற்காமல் Vicious Circle விஷம் வட்டமாக சமூகத்தையே பாதிப்பதால் எப்படியாவது இதை ஸமாப்தி பண்ண வேண்டும்.
(காஞ்சி பெரியவரின் கனிமொழிகள் என்ற நூலில் இருந்து...)