கனிமொழி உங்கள் இலக்கிய வாரிசா? | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
கனிமொழி உங்கள் இலக்கிய வாரிசா? | கலைஞர் 100

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

கல்கி பத்திரிகையின் மீது எப்போது தனி மரியாதை கொண்டவர் கலைஞர். அவர் முதலமைச்சராக இருந்த போதும் சரி, இல்லாத நேரத்திலும் சரி, அவரிடம் பேட்டிக்காக கல்கி அணுகிய தருணங்களில் அவர் உடனடியாக நேரம் கொடுத்துவிடுவார். பேட்டியின்போது எப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளானாலும் தனக்கே உரிய நகைச்சுவையுடன் எதிர்கொண்டு பதில் அளிப்பார்.

பேட்டி சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கல்கியின் பிரியன், ஏக்நாத் இருவருக்கும் கலைஞர் அளித்த பேட்டி 19 ஜனவரி 2003 கல்கி இதழில் கவர் ஸ்டோரியாக வெளியாகி இருந்தது. அதன் முதல் பகுதியைப் பார்த்தோம். இதோ அதன் இரண்டாம் பகுதி :

கனிமொழி உங்கள் இலக்கிய வாரிசா?

கலைஞர் நேர் முகம்

கல்கி: எழுத்து, சொல், அதிகாரங்களை கலைஞர் தொட்டிருக்க மாட்டார் என்று தமிழறிஞர்களின் மத்தியில் ஒரு பேச்சு இருந்ததே!

கலைஞர்: எதைச் சொன்னாலும் மனத்தில் நிற்பது போலச் சொல்ல வேண்டுமென்பது என் நோக்கம். நல்ல தமிழில், பின்னிப் பின்னி வார்த்தைகள் அமைத்துச் சொன்னா்ல, படிப்பதற்கும் மனப்பாடம் செய்வதற்கும் எளிமையாக இருக்கும். இந்த அடிப்படையில் சங்கத் தமிழில் நான் எழுதிய கவிதையை, மேடைகளில் சிவாஜி, சிவகுமார், மனோரமா ஆகியோர் உணர்ச்சிக் குவியலுடன் சொல்லிக் காட்டியிருக்கிறார்கள். (கலைஞரும் ஒரே மூச்சாக அதைச் சொல்கிறார்) தொல்காப்பியத்தில் நான் ஆழ்ந்திருக்கும்போது, பலர் ‘காதலைப் பற்றித்தான் எழுதுவார்’ என்றுகூடச் சொல்லியிருக்கிறார்கள்.

மூன்று அதிகாரங்களில் உள்ள நூற்பாக்களையும் நான் எடுத்துக் கையாண்டிருக்கிறேன். உதாரணமாக, தமிழ் எழுத்துக்களில் உள்ள ஆயுத எழுத்து பற்றி நான் எழுதியுள்ளதைச் சொல்ல விரும்புகிறேன். கையில் கம்புடன் புதுமையான ஒரு எழுத்துருவம், தொல்காப்பியர் முன்னால் தோன்றி உரையாடுவதைப் போல வர்ணனை அமைந்திருக்கிறேன்.

நீ ஆயுதமேந்திஆய் எழுத்தாக வந்தால்

நான் அஞ்சி நடுங்கி உன்னை முதல்

முப்பது எழுத்துக்களின் வரிசையில்

நிற்க வைத்து விடுவேன் என்று நினைப்பா?”

இது தொல்காப்பியர்.

“அய்யனே” என்னைத் தங்கள் விருப்பம் போல அமர வைக்கலாம். முதல் எழுத்து வரிசையில் இடமளிக்காவிடினும், தேவைப்படும் முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன்” – இப்படிச் சொன்னது ஆயுத எழுத்து.

உடனே தொல்காப்பியர் “நீ எனக்கு உதவிட வருகிறேன்” என்கிறாய், நல்ல வேடிக்கை”

என்று புன்னகை புரிந்தவாறு கூறுகிறார்.

உடனே ஆயுத எழுத்து

“தாங்கள் எழுதிய முதல் நூற்பாவியிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டீர்களே; என் திறமையைப் பார்த்தீர்களா?” என்றது துள்ளிக் குதித்தவாறு.

தொல்காப்பியர் அவர் எழுதியதை எடுத்து, மீண்டும் படித்து பார்க்கிறார்.

“எழுத்தெனப்படுப

அகர முதல் னகர யிறுவாய்

முப்பஃதென்ப

சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே

“முப்பஃதென்ப” என்பதில் ஆய்த எழுத்து வந்து அமர்ந்துகொண்டதை தொல்காப்பியரும் வியப்புடன் நோக்கி, நிறைவான மகிழ்ச்சி கொள்கிறார்.

தமிழ் எழுத்துக்கள் ‘அ’ முதல் ‘ன’வரை முப்பது எழுத்துக்கள். சார்பு எழுத்துக்களான குறுகிய ஒலியுடைய ‘இ’கரம், குறுகிய ஒலியுடைய ‘உ’கரம், ஆய்த எழுத்து ஆகிய மூன்றும் இல்லாமல் முப்பது எழுத்துக்கள்.

அதே எழுத்ததிகாரத்தில்,

‘அஃறிணை விரவும் பெயர்

இயல்பு மாருளவே’ என்ற இலக்கண சூத்திரம் இருக்கிறது. உயர்தினை, அஃறிணை மாறுபாட்டை விளக்கும். இதை ஒரு பாட்டியும் சிறுவனும் பேசுவதுபோல் அமைத்திருக்கிறேன்.

பாட்டி “என்னை அழைத்துப் போக சோழன் வரும்” என்று சொல்லி, “சோழன் என்பது உயர்திணையா அல்லது அஃறிணையா? என்று கேட்கிறாள்.

உடனே சிறுவன் “சோழன் உன் மகனாகவோ, பேரனாகவோ இருந்தால், உயர்திணை அல்லது, ‘சோழன் பேருந்தாக’ இருந்தால் அஃறிணை” என்கிறான். “அதாவது இரு திணைக்கும் உரிய பெயரை பொதுப் பெயர் என்பார். அதனால்

நான் சொல்வது பொருந்துகிறது. ஆண் பால் உயர்திணையான சோழன், அஃறிணையாவது இப்போது இயல்பு” என்று சூத்திரத்திற்கு விளக்கமும் அளிக்கிறான் சிறுவன்.

சொல்லதிகாரத்தில் வேற்றுமை மயங்கியல். நூற்பா பதினொன்றை விளக்கும்போது, “எனது, எனக்கு” ஆகிய சொற்களை உபயோகப்படுத்துவதைப் பற்றி அச்சக முதலாளிக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் நடக்கும் உரையாடலைப் போல அமைத்திருக்கிறேன். ‘எனது மகன்’ என்று எழுதக் கூடாது. ‘எனக்கு’ மகன் என்றுதான் எழுத வேண்டும்.

ஏனென்றால், எனது மகன் என்று எழுதும்போது, உயர்திணையுடன் “அது” என்ற ஆறாம் வேற்றுமை உருபுக்குப் பதிலாக, நான்காம் வேற்றுமையாகிய ‘கு’ உருபு வருதல் வேண்டும். இல்லையேல், ‘எனது’ என்று குறித்திடும்போது, திணை தவறாகி விடும். எனவே “கு” உருபை இணைத்து “எனக்கு” மகன் என்பதே சரியாகும்.

பொருளாதிகாரத்தைப் பார்க்கலாமா? தம்பதிகளுக்கு நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லை.

“இல்லை குறையேதுமென இனிய வாழ்க்கை இருந்தாலும்

பிள்ளை ஒன்றில்லை எனக் குறை உனக்குண்டேயென்று

கிள்ளை மொழிப் பாவையிடம் கேட்டு வைத்தான் அவன்

கேள்விக்கு பதில் சொன்னாள் அவள் ஒரு விரலைக் காட்டி

“நில் அங்கே!” எனை மிரட்டுகிறாயா?

என்றான்; கேலியாக.

நின்று ஒரு மாதம் ஆகின்றதென்றாள்.

கல்கி: சொல்லோவியம் எழுத எடுத்துக்கொண்ட கால அவகாசம்?

கலைஞர்: பத்து நாட்கள் கோவா வாசம். தனிமைச் சிறைபோல அடைபட்டு எழுதினேன். அதன்பிறகு சென்னையில் பதினைந்து நாட்கள். இடையில் பங்களூரில் அது சம்பந்தமான புத்தகங்களை மீண்டும் ஒருமுறை படித்து, நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டேன்.

கல்கி: தொல்காப்பியக் காலம் எது? சங்க இலக்கியங்களுக்கு முன்னதா? சந்தேகங்கள் இருக்கின்றனவே?

கலைஞர்: தமிழர்களின் வரலாறே சந்தேகத்துக்குரியதாக மாற்றப்பட்டு வருகிறதே! தொல்காப்பியம் இலக்கணம். எனவே அது சங்க இலக்கியத்திற்கு முற்பட்ட காலம்தான். தொல்காப்பியம்தான் முதல் நூல் என்றும் சொல்ல முடியாது. அந்தக் கட்டத்தில் பல நூல்கள் வந்திருக்கலாம்.

கல்கி: தொல்காப்பியத்திற்கு முன்பு ‘அகத்தியம்...!’

கலைஞர்: அதெல்லாம் பொய்க்கூற்று என்பது என் கருத்து. நிறைய கால வித்தியாசம் மற்றும் முரண்பாடுகள் உள்ளன. தொல்காப்பியத்தில் நான் பார்த்த மற்றொரு அம்சம். அதில் கடவுள் வாழ்த்து கிடையாது. திருக்குறளில்கூட கடவுள் வாழ்த்து உண்டு. ஆனால் தொல்காப்பியம், தொல்காப்பியரின் வகுப்புத் தோழரான பழம்பாடனார் என்பவரின் பாயிரத்தோடுதான் துவங்குகிறது.

கல்கி: பின் நவீனத்துவம், மேஜிகல் ரியலிசம் போன்ற புதிய ‘இஸ’ங்கள் தமிழில் முளைத்திருக்கி்ன்றன. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலைஞர்: பார்வைக்கு வரும் எல்லாவற்றையும் படித்துக்கொண்டு தானிருக்கிறேன். சிறந்த நவீனங்கள் பல வருகின்றன. ஆனால் சிலவற்றை அகம் வாட, முகம் சுளித்துக்கொண்டு படிக்க வேண்டியிருக்கிறது.

கல்கி: நவீன எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்திருக்கிறீர்களா?

கலைஞர்: படிக்கிறேன். எதையும் ஒதுக்குவதில்லை. கருத்து மாறுபாடு உடைய எழுத்துக்கள் வந்தாலும், நாம் ஒதுக்கக் கூடாது. சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

கல்கி: ‘தலித் இலக்கியம்’ என்று தனியாக சிலாகித்துப் பேசப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து?

கலைஞர்: ‘தலித்’ என்பதைத் தனித்துக் காட்டிப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்களது உரிமைகள், நலன்கள், தனித்து கவனிக்கப்பட்டுப் பொதுவில் வைக்கப்பட வேண்டும்.

கல்கி: தி.மு.க.வில் இப்போது படைப்பாளிகளும் குறைந்து விட்டார்கள். படிப்பாளிகளும் குறைந்து விட்டார்களே!

கலைஞர்: இளைய தலைமுறை என்று அல்ல! ஏற்கெனவே ஆர்வம் காட்டியவர்களுக்கும் அந்த ஆர்வம் குறைந்துவிட்டது. சமீபத்தில் எனது கடிதத்திலும்கூட இது பற்றிச் சொல்லியிருந்தேன். இந்த வகையில் உற்சாகம் ஏற்படத்தான், இலக்கிய அணி போன்ற அமைப்பை வைத்திருக்கிறோம். அடிக்கடி ஆய்வுக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

கல்கி: உங்கள் இலக்கிய வாரிசாக மகள் கனிமொழியைச் சொல்லலாமா?

கலைஞர்: இலக்கிய வாரிசு என்று சொல்ல வேண்டாம். அவுங்க நல்லா கவிதை எழுதுவாங்க.

கல்கி: உங்களிடம் ஆலோசனை கேட்பதுண்டா?

கலைஞர்: நான் எழுதற கவிதைகளைப் படிச்சாலே போதும் (சிரிக்கிறார்) விவாதம் செய்வது கிடையாது. கருத்துக்களுக்கிடையில் விவாதம் வரும். எழுத்துக்களைப் பற்றிய விவாதம் வராது.

கல்கி: இப்போது வாழ்க்கைப் பிரச்னையே பெரிய விவகாரம் ஆகிய நிலையில், இலக்கியங்கள் எந்த அளவுக்கு, ஒரு தமிழனைத் தொடும்?

கலைஞர்: பொருள் தேடி அலையும் தமிழர்கள், அப்படியே பொருளதிகாரத்தையும் தேடி அலைய வேண்டுமென்பதற்காகத்தான் இலக்கியங்களை எளிதாக்கிக் காட்டுகிறேன்.

கல்கி: உங்களுடைய எழுத்துக்களில் நையாண்டி, நகைச்சுவை இருக்கும். ஆனால் இப்போது நகைச்சுவை எழுத்துக்கள் அரிதாகி வருகிறதே!

கலைஞர்: அன்றாட வாழ்க்கையில் நகைச்சவை குறைந்து போனதன் எதிரொலிதான் அது.

கல்கி: இனி தொல்காப்பியத்திற்கு அடுத்து...

கலைஞர்: அதிலேயே இன்னமும் எழுத வேண்டியது நிறைய இருக்கிறதே! இளம்பூரணர் தவிர மற்றவர்கள் பகுதி, பகுதியாகத்தானே எழுதியிருக்கிறார்கள்.

கல்கி: அப்போ தொல்காப்பியப் பூங்கா பாகம் இரண்டு படிக்க எங்களுக்கு வாய்ப்பு இருக்கு!

கலைஞர்: (எனக்கு) வயது இருக்கணுமே? (சிரிப்பு)

ப்ரியன், ஏக்நாத்

அட்டை, படங்கள்: யோகா

கல்கி 19.01.2003 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com