கண்ணைப் பறித்த தீபாவளிப் பட்டாசு

கண்ணைப் பறித்த தீபாவளிப் பட்டாசு

ட்டாசு வெடித்து தீப்புண், காயம். தீப்பிடித்தது போன்ற செய்திகளை முன்பெல்லாம் தீபாவளிக்கு, தீபாவளி நகர்புறச் செய்திகளில்தான் பார்ப்போம். பின்னர் அதுவே கிராமப்புறங்களுக்கும் பரவியது. இப்போது அது பழங்குடி கிராமங்களுக்கும் தாவிப் பாய்ந்திருக்கிறது.

பேருந்து செல்லாத, காட்டுப் பகுதி மலைகிராமம் ஒன்றில் தீபாவளி கொண்டாடி பட்டாசு வெடித்ததில் பழங்குடி இளைஞர் ஒருவரின் வலது கண் பறிபோயுள்ள சோகம் ஒன்று நடந்துள்ளது.

அந்த இளைஞரின் பெயர் மலையன். 22 வயது. ‘சோளகனை’ என்ற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த சோளகனைக்கு செல்வதென்றால் ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து பர்கூர் குருசனம்பாளையம் என்ற ஊருக்கு பஸ்ஸில் சென்று அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள் செல்ல வேண்டும். அந்தியூர் டூ குருசனம்பாளையம் வரை சுமார் 50 கிலோமீட்டர் முழுக்க முழுக்க மலைக்காடுகள்தான். அதிலும் சோளகனைக்கு செல்லும் இந்த 10 கிலோமீட்டர் பாங்காடு.

இந்த ஊருக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை ரேசன் பொருட்கள் முதற்கொண்டு தலைச்சுமையாக நடந்துதான் கொண்டு போனார்கள். பிறகு இங்கு வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் குறுகிய தார்ச்சாலை போட்டார்கள். அத்தனையும் சில மாதங்களிலேயே தூர்ந்து மெட்டல் கற்கள் எழும்பி விட்டன. அதற்குப் பிறகு இதில் கார்கள் செல்வது கூட கஷ்ட நிலை ஆகி விட்டது. ஜீப்பும், டூவீலர்களும் குதித்துக் குதித்தே செல்ல முடியும். 10 கிலோமீட்டரும் குன்றும், மலையும் இப்படியே செல்வது எவ்வளவு சிக்கல், எனவே இப்போதெல்லாம் பெரும்பாலும் நடந்தே செல்கிறார்கள்.

ஒரே ஒரு ஜீப் ஊர்க்காரர் ஒருவர் வாங்கி விட்டிருக்கிறார். ஒரே ஒரு ட்ரிப் சென்று வரும். அதற்கு தலைக்கு ரூ. 30 கட்டணம். 12 பேர் ஏற்றவேண்டிய ஜீப்பில் 30 பேர் வரை ஏறிக் கொண்டு தொங்கிக் கொண்டேதான் செல்ல வேண்டும். இந்தக் கிராமத்தைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டுமென்றால் வீரப்பன் நடமாடிய கிராமம். அதிரடிப்படை இங்குள்ளவர்களை பிடித்துக் கொண்டு போய் டார்ச்சர் கேம்பில் வைத்து துள்ளத்துடிக்க சித்ரவதைகள் செய்தும் உள்ளது. அந்தக்கதைகள் இங்கு நிறைய உள்ளது.

அப்படிப்பட்ட ரொம்பவும் ரிமோட் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் மண் வீடுகள் எழுப்பி குடியிருந்து வருகின்றன. ராகி, சோளம், பயிறு வகைகள் மட்டுமே விவசாயம். மூங்கில் வெட்டி அதில் முறம் செய்கிறார்கள். இப்படியான கிராமத்தில் போய்ப் பார்த்தால் மூலைக்கு மூலை பட்டாசு வெடித்ததன் அடையாளங்களாக நிறைய பட்டாசுக் காகிதங்கள் காட்டுக்குள் சிதறிக் கிடக்கின்றன. அதில்தான் மலையனும் பட்டாசு வெடித்திருக்கிறார். அது முகத்திலேயே வெடித்து கண்ணில் பாய்ந்திருக்கிறது.

அதில் வலது கண்ணும் பறிபோயிருக்கிறது. பாதிக்கப்பட்ட இந்தக் கண்ணின் நரம்பு அடுத்த கண்ணுக்கும் செல்கிறது. அந்த நரம்பு மூலம் அடுத்த கண்ணுக்கும் பாதிப்பு வரக்கூடும் என்பதை மருத்துவர்கள் சோதித்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். மலையனுடன் பேசினோம். ஒரு கண் இருந்த இடம் குழிந்து போயிருக்க, இன்னொரு கண்ணிலும் கண்ணீர் வடிய பேசினார்.

‘‘கோரைக்கு வேலைக்குப் போறேன். உட்கார்ந்துட்டு லட்சுமி வெடியத்தான் வச்சேன். அது எழுந்திருக்கிறதுக்குள்ளே வெடிச்சிருச்சு சாரே. அதுல மருந்தும் கல்லும் வெடிச்சு, அதுல ஒண்ணு எங் கண்ணுக்குள்ளே விழுந்தது. அது பட்ட உடனே கண்ணுக்குள்ளே ஒரு பார்வை இருக்கும்ல சார். அது அப்படியே பொலபொலன்னு தண்ணியாக் கொட்டிப் போச்சு சார். கண்ணு ஒழுகினதையே என்னால தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அப்பவே என் தம்பி காரைப் புடிச்சு பெருந்துறை ஆஸ்பத்திரி கூட்டீட்டுப் போனாங்க. அங்கே என்னன்னவோ சொன்னாங்க. பயந்துட்டு திரும்பி வந்துட்டோம். அடுத்தநாள் ஆம்புலன்ஸ்ல அந்தியூர் ஆஸ்பத்திரி போய், அங்கே முடியாம கோயமுத்தூர் ஆஸ்பத்திரி அனுப்பினாங்க. அங்கேதான் ஆபரேசன் பண்ணினாங்க. எட்டு நாள் அங்கேயே இருந்தேன். ஒரு கண்ணுல கண்ணே இல்லைன்னு சொல்லீட்டாங்க. மருந்து எழுதிக் கொடுத்து பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரியிலயே பார்த்துக்குங்கன்னு அனுப்பீட்டாங்க சார். இப்ப பட்டாசு ஏண்டா வெடிச்சோம்ன்னு இருக்கு சார்!’’ என்றார்.

மலையன் இதற்கு முன்பு தீபாவளி என்றாலும் எப்போதாவதுதான் பட்டாசு வெடித்துள்ளார். அதேபோல். தீபாவளிக்கு இந்தக் காட்டுக்குள் பட்டாசு வாங்கி வந்து வெடிப்பவர்கள் மிகவும் அபூர்வம்தானாம். இந்த முறை டவுனுக்குச் சென்றவர்கள் பட்டாசு வெடிக்க, அதைப் பார்த்து இவரும் வெடிக்க வந்திருக்கிறது இந்த வினை. விளைவு ஒரு கண்ணே பறிபோய் விட்டது. மலையன் குடும்பத்திற்கு மருத்துவச் செலவுக்கு வசதியில்லை. பெற்றோர் காட்டு வேலைக்குச் செல்பவர்கள். இவர் கூலி வேலைக்கு செல்கிறார். எனவே இவருக்கான மருத்துவ உதவிகளை பழங்குடியினர் சங்கத்தைச் சேர்ந்தவர்களே செய்துள்ளனர். அச்சங்கத்தின் தலைவர் வி.பி.குணசேகரனிடம் பேசினோம்.

‘‘பழங்குடிகளுக்கு தீபாவளி என்றால் என்னவென்றே தெரியாது. பட்டாசு வெடிப்பது வனப்பகுதிகளில் உள்ள பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் தொந்தரவு தரும் என்று பட்டாசு கூட பழங்குடிகள் காட்டுக்குள் வெடிக்க மாட்டார்கள். யானை மற்றும் வன மிருகங்களை விரட்டக்கூட தாரை தப்பட்டைகளைப் பயன்படுத்துவார்கள், ஓங்கிய குரலெடுத்து சத்தமெழுப்புவார்களே ஒழிய தப்பித் தவறிக்கூட அதற்கு வேட்டு வைக்கும் விதமாக பட்டாசு போட மாட்டார்கள். அதையெல்லாம் செய்வது நம் கீழ் நாட்டுக்காரர்கள்தான். அப்படியான பாங்காட்டுப் பகுதியிலேயே இப்போதெல்லாம் தீபாவளி வந்து விட்டது. பட்டாசு வந்து விட்டது.

இந்த சோளகனை கிராமத்திற்கு நான் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளாக வந்து செல்கிறேன். இந்த மக்களுக்கான பிரச்சனைகளிலும் பங்கெடுக்கிறேன். ஒரு போதும் இந்தக் காட்டுக்குள் பட்டாசுக் காகிதங்களை நான் பார்த்ததில்லை. இந்த இரண்டு மூணு வருஷமாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்க்கிறேன். இந்தப் பையனுக்குக்கூட பட்டாசு எப்படி வெடிப்பது என்று கூட தெரியாது போல. அதுதான் உட்கார்ந்து கொண்டு பட்டாசு பற்ற வைத்திருக்கிறான். அது இவன் எழுவதற்குள் வெடித்து கண்ணையே பறித்து விட்டது. காட்டில் வாழ்பவர்களின் வாழ்வியல் முறையே வேறு. அவர்களை அவர்கள் பாட்டுக்கு இயங்க வைத்தாலே அவர்கள் மகிழ்ச்சியாக இருந்து கொள்வார்கள். காடழிவும் காப்பாற்றப்படும்.

அப்படியல்லாமல் கீழ்நாட்டிலிருந்து செல்பவர்கள்தான் கஞ்சா பயிர் செய்வது, சாராயம் காய்ச்சப் பழக்குவது, சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துவது என செய்கிறார்கள். அதுபோலத்தான் நகரத்திலிருந்து செல்லும் ஒவ்வொரு பழக்கமும் அவர்களுக்கு எதிரியாகிறது. நாம் பெரு நகரப்பகுதிகளிலேயே பட்டாசு வெடிப்பதை தடை செய்யச் சொல்லி வருகிறோம். தீபாவளிப் பட்டாசு வெடிப்பதற்குக்கூட கால நேரம் குறிக்கிறது நகர நிர்வாகம். அதற்கு முன்பு தீபாவளியே ஆனாலும் இப்படி காட்டுக்குள் பட்டாசு போவதை தடை செய்யலாம். அப்படி மட்டும் நடந்திருந்தால் இந்த பையனின் கண் பறிபோயிருக்காது. இனியாவது இந்த விஷயத்தில் எல்லோரும் விழித்துக்கொள்ள வேண்டும்!’’ என்றார்.

பண்டிகை என்றாலே குதூகலம்தான். அதிலும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அதை இப்படி கண்ணை இழந்துதான் கொண்டாட வேண்டுமா? என்றால் நிச்சயம் இல்லை. மலையனுக்கு நடந்த சம்பவம் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்பதே நாம் இந்த செய்தியின் மூலம் சொல்லும் சேதி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com