கண்ணே... நலமா...

கண்ணே... நலமா...

- டாக்டர். ரோஹிணி கிருஷ்ணா,

கண் மருத்துவர் முகநூல் பக்கத்திலிருந்து...

Conjunctivitis, madras eye, pink eye, red eye என பலவிதமாக அழைக்கப்படும் “கண் வலி” தொடங்கிவிட்டது.

கடந்த ஓரிரு வாரங்களுக்குள் குடும்பம் குடும்பமாக பலர் வருகின்றனர்.

இப்போது பரவிக் கொண்டிருப்பது adenoviral conjunctivitis. சமயத்தில் bacterial infectionம் overlap ஆகும்.

இது மதராஸ் மாகாணத்தில், எக்மோர் அரசு மருத்துவமனையில், முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் madras eye என காரணப் பெயர் பெற்றது.

இது மிகக் கடுமையாக இருக்கும். தண்ணீர் அதிகமாக வடியும். அழுக்கும் வரும். கண்கள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் சிவப்பு , வீக்கம், உறுத்தல், அரிப்போடு மிக அதிக வலி இருக்கும். குனிந்தால் கூட கண் விண்ணென்று வலிக்கிறது என பாதிப்புள்ளவர்கள் சொல்கிறார்கள்.

ஒற்றைக் கண்ணில் மட்டும் கூட சிலருக்கு வருகிறது.

காதுக்கு முன்னே நெறி கட்டிக் கொண்டு வலிக்கும். சமயத்தில் காய்ச்சலும் தொண்டைவலியும் கூட இருக்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகக் கடுமையாக இருக்கும். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு Membrane எனப்படும் ஜவ்வு படர்வதால் , கண்ணீருடன் மிக லேசாக ரத்தம் கூட வரும். பயப்படத் தேவை இல்லை.

நாம் புழங்கும் எல்லா பொது இடங்களிலும் இந்தக் கிருமி நிறைந்திருக்கும்.

எப்படித் தவிர்ப்பது..

1.பொது இடங்களில் கண்களைத் தொடாதீர்கள், தேய்க்காதீர்கள்.

2. தூசி விழுந்தால் கூட தண்ணீர் பாட்டில் வாங்கிக் கழுவுங்கள். ஏதாவது காரணத்தால் கண்ணை தேய்ப்பவர்களுக்குத்தான் கிருமி உள்ளே செல்கிறது..

3.வெளியில் சென்று வந்தவுடன் கை, முகம் சோப் போட்டு கழுவுங்கள்.

4.கண்வலி உள்ளவர்களைப் பார்ப்பதாலேயே ஒட்டிக் கொள்ளாது.

5. கண்வலி உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணை, துண்டு , சோப்பு, ரிமோட் போன்ற பொருட்கள் மூலமாக அவர்கள் கிருமித் தொற்றை பரப்பி விடுகிறார்கள்..

6.கண்வலி உள்ளவர்கள் கண்களை அடிக்கடி தொடவே கூடாது. அவ்வப்போது கழுவி சுத்தமான துண்டால் துடைக்கலாம். கையில் துணியோ, கர்சீஃபோ , tissue வோ வைத்து துடைத்துக் கொண்டே இருந்தால் கிருமி கருவிழியின் உள் வரை ஆழமாகப் பரவும். மேலும் அந்த துடைக்கும் பொருள் கிருமி குடோன் போன்று அடுத்தவர்களுக்கு கண்வலியை பரப்பும்.

6. கண்வலி உள்ளவர்களுக்கு மருந்து போடுபவர்கள் உடனே கை கழுவிக்கொள்ள வேண்டும்.

7. அந்த மருந்தை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் தனியே வைக்க வேண்டும். மற்ற மருந்துகள், பொருட்களுடன் வைக்காதீர்கள்.

8. கண்வலியைத் தடுக்க நினைத்து வருமுன்னர் எந்த மருந்தும் போட வேண்டாம். அதுவும் ஏற்கனவே கண்வலி உள்ளவர்கள் உபயோகப்படுத்தும் கண் சொட்டு மருந்தே கிருமியைக் கடத்தும். ஆகவே, அந்த மருந்தை preventive ஆக போட முயற்சித்தால் 100% கண்வலி வந்துவிடும்.

9. தயவு செய்து கண் டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

10. எப்படி டெங்கு , சிக்கன்குனியா, கொரோனா என வைரஸ்கள் அரக்க அவதாரம் எடுத்தனவோ அதேபோல கண்வலி வைரஸ்களும் பலசாலிகளாகிவிட்டன. மிளகாய்ப்பழ மருந்துகளை , கடையில் வாங்கும் மருந்துகளைப் போட்டு சுய வைத்தியம் செய்து கொண்டு complications ஐ இழுத்து விட்டுக் கொள்ள வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com