குமரியில் கழகம் வளர்த்து கருணாநிதியின் அன்பை பெற்ற க.அ. இராசப்பா! | கலைஞர் 100

குமரியில் கழகம் வளர்த்து கருணாநிதியின் அன்பை பெற்ற க.அ. இராசப்பா! | கலைஞர் 100

லைஞர்...

கற்றவரும் மற்றவரும் புகழும் காவியம், கலை ஓவியம்

கடந்த வருடங்களின் வானவில்

இன்னும் பல நூறாண்டுகளுக்கு ஆணிவேர்.

கழகத் தலைவர்,

தமிழகத்தின், தமிழினத்தின் தலைவர்,

என் தந்தை இராசப்பாவின் தலைவர்...!

திமுகவின் முரசொலி நாளிதழில் கலைஞரின் உடன்பிறப்புக்கான கடிதத்தை வாசித்த பின்னரே வீட்டை யோசிப்பார் என் அப்பா. அந்த அளவுக்கு திமுவின் மீது கலைஞர் கருணாநிதியின் மீது அளவற்ற பற்றும் அன்பும் கொண்டவர். பன்முக திறமைகள் கொண்ட கருணாநிதியை கௌரவிக்க கொடுக்கப்பட்டதுதான் கலைஞர் எனும் அடைமொழி ஆனால், என் அப்பாவின் முன் கலைஞர் என சொன்னால் கடும் பார்வை கனல் போல் எங்கள் மீது வீசும்..

ஆம்..

தலைவர் என்று மாத்திரமே மந்திரமாய் சொல்லும் கழக கண்மணிகளின் காலம் அது. என் அப்பாவின் கனல் வீசும் பார்வைக்கான அர்த்தம் கலைஞர்... இல்லை.. இல்லை தலைவர் கருணாநிதி மறைந்த அன்றுதான் எங்களுக்கு எல்லாம் புரிந்தது. தலைவர் கருணாநிதி மறைந்தபோது இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் ’ஒரு முறை அப்பா என அழைத்துக்கொள்ளட்டுமா’ என்ற இரங்கல் கடிதத்தை படித்தபோதுதான் தெரிந்துகொண்டேன் என் தந்தையையே தலைவராக சுமந்து சுகித்த, முதல்வரின் பாசத்தை கூட பதப்படுத்தி வைத்திருந்த தலைவர் எனும் பற்றுதான்.

அவ்வாறே பற்றுள்ள தொண்டர்களில் ஒருவராக, மிசா Maintenance of Internal Security Act (MISA) கைதியாக ஓராண்டு சிறைவாசம் கொண்டவர்தான் என் தந்தை க.அ. இராசப்பா.சென்னை கிண்டியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் குமரி மாவட்டத்தை சார்ந்த மொழி காவலர்கள் பட்டியலில் புகைப்படமாக நிலைத்திருக்கிறது அப்பாவின் புகைப்படம். கன்னியாகுமரியில் கழகத்தை வளர்க்கத் தொடங்கிய காலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு அது "நெல்லை நமது எல்லை...

குமரி நமக்கு இல்லை.." எனும் வாக்கியம்.

ஆனால் என் தந்தை இராசப்பா போன்ற கழகத்தினர் கழகத்திற்கு எந்த எல்லையும் இல்லை. தமிழர்கள் வாழும் இடமெல்லாம் கழகத்தின் வாசம் வீசும் என்று குமரி மாவட்டத்தில் திமுகவை வளர்க்க புறப்பட்டனர். இதற்காக சென்னையில் பிரபல தொழிற்சாலையான பின்னி மில் தொழிற்சாலையில் தான் பார்த்துவந்த வேலையை விட்டு விட்டு, சொந்த ஊரான குமரிக்கு மின்னல் வேகப் பயணமானார் என் தந்தை. வீட்டில் இருந்த அனைத்தையும் விற்று பத்மநாபபுரம் தொகுதியில் களம் கண்டார். குடும்ப கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், தேர்தலில் நின்றே ஆகவேண்டும் என்ற தந்தையின் நோக்கம் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதில்லை.. தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்ற கழகம் களத்தில் இருக்கிறது என்பதை வாக்காளர்கள் மனதில் பதியவைக்கவேண்டும் என்பதுதான். களத்தில் இல்லாமல் போவது திராவிட வீரர்களுக்கு இழுக்காகுமே என்பதுதான் என் தந்தையின் மனதில் இருந்த ஒரே எண்ணம்.

தோற்றாலும், தோழமை கழகத்தோடுதான் என்று உடன்பிறப்புகளை உயிரென காத்தவர் கலைஞர்.“கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே, மக்கள் உள்ளம் குடிகொண்ட உண்மை தலைவர் வாழ்கவே” என்கிற நாகூர் ஹனிபா அவர்களின் காந்தக் குரல் இன்றும் எங்கும் ஒலித்திடும். அந்த உண்மைத் தலைவரின் பெயரையே அன்பாய் என் தந்தை, தனது கடைசி மகளான எனக்கு சூட்டினார். கலைஞரின் பால் கொண்ட அன்பின் உச்சத்தில் வீட்டின் கடைசி பெண் குழந்தையான எனக்கு கருணாநிதியின் பெயரின் பாதியான கருணா என்பதை எனக்கு பெயராக சூட்டியதில் என் தந்தைக்கு அளவற்ற மகிழ்ச்சி.. எனக்கும் அப்படித்தான்.

திராவிடர் கழகம் மேற்கொண்ட மொழிபோர் போராட்டத்தின்போது என் தந்தைக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. உடல் நலனை கருத்தில் கொண்டு சிறை செல்லவேண்டாம் என வலியுறுத்தினார் தலைவர் கருணாநிதி. ஆனால், தமிழ் மொழி மீதான பற்றும் கழகத்தின் போராட்ட அறைகூவல் மீது என் தந்தைக்கு இருந்த கடமையும் அவரை மொழிபோர் போராட்டத்தில் ஈடுப்படச் செய்து ஓராண்டு சிறைவாசத்தை அனுபவவிக்கச் செய்தது.

உடல்நலன் குன்றியிருந்தபோதும் கழகத்திற்காக சிறைச் சென்றது என் தந்தைக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், வீட்டில் அம்மா ஜெயசீலிக்கும் பிள்ளைகள் ஆறு பேருக்கும் அப்பாவின் பார்க்கச் செல்லும்போதெல்லாம் கவலை தொற்றிக்கொள்ளும். ஆனால், அந்த தியாகத்தை மறவாத கழக தலைவர்கள் சென்னையில் உள்ள மொழிபோர் தியாகிகள் மணிமண்டபத்தில் என் தந்தை உட்பட இந்தி திணிப்புக்கு எதிரான போராடி சிறைச் சென்ற அனைவரையும் கௌரப்படுத்தி உள்ளனர். சமீபத்தில் மொழிபோர் தியாகிகள் மண்டபத்திற்கு சென்றிருந்தபோது... எங்களுடைய அப்பா இராசப்பாவின் படத்தை பார்த்தகணம் மனதின் அடி ஆழத்தில் இருந்து ஆனந்த கண்ணீரும்.. தற்போது அப்பா இல்லையே என்ற வருத்தமும் எங்கள் அனைவரையும் தொற்றிக்கொண்டது.

தந்தையின் மறைவுக்குப் பின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து எங்களை சந்தித்ததையும்... அந்நேரம் விபத்தினால் கால் பாதிக்கப்பட்ட சகோதரனை விசாரித்தையும்..... இரண்டொரு ஆண்டுகளில் அரியதாய் அறிவாலயம் சென்று வேலைக்காய் நின்ற பொழுதையும்..... கன்னியாகுமரியில் ராசப்பாவிற்கு யாரும் இல்லையா என வினவிய வார்த்தைகளையும் மறக்கமுடியுமா வாழ்வில்...!

தலைவர் எங்கள் வீட்டிற்கு வந்தபோது சிறுபிள்ளையாக இருந்த எனக்கு அன்று அவர் பேசிய பல விஷயங்கள் புரியாமல் இருந்த போதிலும் என் தந்தைக்காக கலைஞர் உருகி வார்த்தைகள் இன்னும் எங்கள் அனைவரின் நினைவில் வாசம் வீசுகிறது. கழகத்தின் குமரி மாவட்ட சீரணி தலைவராக என் தந்தை ராசப்பா இருந்த போதிலும் அவரின் எல்லா அரசியல் பணிகளிலும் உடன் நின்றவர் என் தாய் ஜெயசீலி ராஜப்பா.

தந்தையின் அரசியல் வாழ்வின் நெருக்கடியில் பலமாகவும் எங்களுக்கு எல்லாம் பாலமாகவும் இருந்தவர் என் தாய்தான். திமுகவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் முரசொலியில் வெளியாகும் கலைஞரின் எழுத்துகளை வாசிப்பின் வழியாக சுவாசித்தவர் என் தாய் தந்தை இறந்த பின், ஆளும் கட்சியாக கழகம் வலம்வந்தபோது நமக்கு உதவி தேவையாக

உள்ளது, ஆனபோதும் அது தலைமைக்கு எட்டவில்லை என்று நாங்கள் சற்று விசனப்பட்டபோதும், மாநிலத்தின் முதல்வருக்கு நம்மை காப்பது மட்டும்தான் வேலையா என்று அந்த எண்ணத்தை அங்கேயே உதறிவிட்டவர்... உடன்பிறப்பின் இணை ஆயிற்றே..

எழுதுகோல் ஏந்திய ஏகலைவனின் பெயரின் ஒரு பாதியை கொண்டதாலும் (கருணா) மறு பாதி (நிதி) இல்லாதிருந்த பொழுதும், வைராக்கியம் வாய்ந்த கழக குடும்பம் எங்களுடையது என கலைஞர் நூற்றாண்டில் இறுமாப்பாய் கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

உடன்பிறப்பின் உயிர்கொடி

கருணா இராசப்பா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com