

ஒரு வழியாக எப்படியோ தட்டுத் தடுமாறி பல பேரிடம் வழி கேட்டு, ஏவிஎம் ஸ்டூடியோ நுழை வாயிலுக்கு வந்தான் அவன்!அவனுக்கு முன்பாகவே அங்கே ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். சென்னையில் வந்து இறங்கியதும் பஸ் ஸ்டாண்டில் வந்து அழைத்துக் கொள்வதாகச் சொல்லியிருந்த நண்பன் ஏனோ வரவில்லை. கையில் பெரிதாகக் காசு ஏதும் இல்லை.
ஒவ்வொரு மாடர்ன் காரும் உள்ளே நுழைகையில் ஓரமாக நிற்பவர்கள் காரை நோக்கி ஓடுவதும், அவர்களைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அந்தக் கார்கள் உள்ளே செல்வதுமாக, ஒரு சிறு விளையாடல் நடந்து கொண்டிருந்தது. அவனும் விளையாட்டில் பங்கேற்க ஆரம்பித்தான்.
ஊரிலிருந்து சினிமா ஆசையில் ஓடி வருபவர்கள், பெரிய இயக்குனர்களையோ, பிரபல நடிகர்களையோ வீட்டில் சந்தித்து சான்ஸ் கேட்க முடியாத சூழலில், இந்த வாசலில் நின்று, அவர்கள் கார் உள்ளே நுழையும்போது கெஞ்சிக் கூத்தாடி சான்ஸ் கேட்பதுண்டு. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவன் கையில் அகப்பட்டதை இறுக்கிப் பிடித்துக் கொள்ள முயல்வதைப் போல, இதுவும் ஒருவித முயற்சிதான்! ஆன மட்டும் முயல்வோமே என்ற ஓர் ஆசை.