

சப்தகிரி இரயில் வண்டி சப்தம் ஒன்றை எழுப்பி, தனது பயணத்தை அறிவித்துவிட்டு அரக்கோணத்திலிருந்து மீண்டும் தொடங்கியது.
தலைமுடிக்கு முழுக்கிட்டுவிட்டு எல்லா பாவங்களையும் முழுக்கிவிட்ட திருப்தியுடன் பக்தர்களின் கூட்டம் பயணிக்க,
லக்கேஜ் வேனுடன் ஒட்டியிருந்த 40 பெயர் கொள்ளக் கூடிய அந்த சிறிய பதிவு செய்யப்படாத பெட்டி மக்கள் கூட்டத்தில் முழி பிதுங்கிக் கொண்டிருந்தது.
உள்ளே இறங்கிய சரக்கு மெள்ள, மெள்ள சுருதி ஏற்ற,
தலையை உசுப்பியவனாய், சுற்றும் முற்றும் பார்த்தான் பிச்சாண்டி.
அருகிலிருந்தவரிடம், ”சார்.. ம.. மணி என்ன சார்?” என்று வினவியவன்,
அவன் வாயில் இருந்து வந்த பட்டை மணத்தில் தடுமாறிய அவர்
“எல்லாம் என் நேரம்..” என்று தலையில் அடித்துக்கொண்டு கூறிவிட்டு,
“இவனை எல்லாம் எப்படி அனுமதிக்கறாங்க? ஒரே நாத்தம் தாங்க முடியலை. இதில டயம் வேற ஒரு கேடு இவனுக்கு,” என எதிரில் இருந்தவரிடம் முணுமுணுத்து விட்டு,
முகத்தை ஜன்னலில் புதைத்துக் கொண்டார்.