
கைக் கடிகாரமும்...
சுவர்க் கடிகாரமும்...
விநாடிகளை நிமிடங்களாக்கி...
நிமிடங்களை மணிகளாக்கி...
வாழ்நாளைச் சுருக்குவதில்
வருத்தமின்றிச் செயலாற்றுகின்றன!
தினசரி நாட்காட்டி...
ஒவ்வொரு நாளையும் உதிர்த்து...
தானும் மெலிதாகி...
நம் வாழ்வையும் குறைவாக்கி
சுவரிலிருந்தபடியே
எச்சரிக்கிறது தினமும்!
மாத நாட்காட்டியோ...
முப்பது...முப்பத்தொரு நாட்களை
ஒட்டு மொத்தமாய்...
ஒவ்வொரு சமயமும்...
நம் கண்ணில் காட்டி...
அபாயத்தை அறிவிக்கிறது!
மேஜையில் உள்ள
பஞ்சாங்கப் புத்தகமோ...
ஆண்டு ஒன்று அகல்வதை...
விரிவாய்... விளக்கமாய்...
நமக்கு அறிவுறுத்தி...
அமைதி காக்கிறது!
ஒவ்வொன்றும் நமது வாழ்நாள்...
கொஞ்சங் கொஞ்சமாய்
குறைந்து வருவதை
சூசகமாய் நமக்கு
அறிவிப்பு செய்யும்
சாதனங்கள்... அறிக!
இவைகளைப் பார்க்கையில்...
நேரம் நமக்கு
நெருங்கிக்கொண்டிருப்பதை...
உணர்ந்தே நாமும்...
உறுதிகொண்டே
உழைத்திட வேணும்!
ஒவ்வொரு விநாடியும்
உயர்வென்று உணர்த்தும்...
கடிகாரம்...தினசரி நாட்காட்டி...
மாத நாட்காட்டி...பஞ்சாங்கம்...
அத்தனையும் வாழ்வைச் செப்பனிடும்
வழிகாட்டிகள்! உணரவேண்டும்!