கவிதை - கோடைக்காலக்காற்றே!

Kavithai image
Kavithai imageImage credit - pixabay.com
செ. கலைவாணி

செ.கலைவாணி ஓய்வுபெற்ற தமிழாசிரியை 'சிதறிய பரல்கள் கவிதை நூல்' அடர்வன மின்மினி துளிப்பா நூல் கலையும்கைவண்ணமும் கைவினை நூல் இம்மூன்று நூல்களை வெளியிட்டுள்ளேன் என் கவிதைகள் தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன முன்னணி பெண்கள் மாத வார மின்னிதழ்களில் முன்னணி செய்தித்தாள்களில் எனது கைவேலைகள் குறித்து செய்திகள் வந்துள்ளன. துளிப்பா பேரிகை விருது கவிப்பறவை விருது சதகக்கவிஞர் விருது கவித்தென்றல் விருது போன்று பலவிருதுகள் வாங்கியுள்ளேன். என் மூச்சுக் காற்றே தமிழன்னை தான் வாழ்நாள் முழுவதும் தமிழன்னைக்குக் கவிதையாரம் சூட்டுவதே என்பணி.

Updated on: 

கோடைக் கால அனல் காற்றே!

கார் முகிலை அழைத்து வந்திடு.

உழைப்போரின் வாட்டம்

தன்னைப் போக்கிட 

உவகை பொங்க மழைக்காற்றோடு வா.

மண்மகளின் பசும்புல்

மேலாடைக் காய்ந்தே 

மஞ்சள் வண்ணத்தோடு

வறண்டு போகுதே.

ஆறோடும் பாதையில்

ஆறின்றி பிளவு.

ஆற்றாமையால் மக்கள் நாளும் தவிப்பு.

மாலைநேரக் காற்றுக்காய்

மயக்கத்தோடு 

ஏழை மக்கள்.

உடலைக் குளிர்விக்க

மரநிழலில் அடைக்கலம்.

இயற்கையை விடுத்து

செயற்கை காற்று தேடல்.

உன் வருகையால்

உன்மத்தமான மாம்பூக்கள்!

உவந்து ஆடியே

உலர்ந்து வீழ்ந்திட

வேம்பூவின் மணம்

விரைந்து பரவுதே.

விரையும் தேனீக்கள்

நறவினைத் தேடுதே.

மகரந்தத்தூளில் ஆடுதே

மகிழ்ந்து அவை.

கோடைக்காலக்காற்றே

கொண்டாட்டம் தருவாய்

சிறார்கட்கே!

உன்னால் நாங்கள்

உயிர்ப்புடன் வாழ்கிறோம்!

நன்றி நவில்கிறோம்

நாளும் உனக்கே!

logo
Kalki Online
kalkionline.com