கவிதை - ஒரு வந்தனம்!

ஓவியம்: S.A.V. இளையபாரதி
ஓவியம்: S.A.V. இளையபாரதி

-ரவி சுப்பிரமணியன்

தொடுவானில் செவ்வரக்கு மேகங்கள்

ஒளி மறைத்து விளையாட

மதிற்சுவர் பிளந்த அரச மரத்தில்

பறவைகள் ஓசையின்றி அமர்ந்திருக்க

கற்கோபுரச் சிலைகள் பார்க்க

மெலிதாய் ஒதுவார் குரல் ஒலிக்க

பிராகார மண்டபத்திலிருந்து

விரவிப் பரவுகிறது நாதஸ்வர சுநாதம்

சஹானாவின குழைவுகளில்

துடிதுடிக்கும் சன்னிதிச் சுடர்கள்

பித்தேறிய உணர்வெல்லாம்

பேசுகிறது சங்கதிகளில்

பெருகிய நாதவெளியை

எல்லோரும் கடந்து போகிறார்கள்

பேச்சுக்கும் சிரிப்புக்கும் குறைவில்லை

கண் மூடிக் கிறங்கி வாசித்தவர்

கண் திறக்கையில் சிற்பத்திலிருந்து

வெளிவந்த பதுமையென

மலர்ச்சாத்தின் சுகந்தம் வீச

மண்டபத்தூணில் சாய்ந்தபடி

எதிரே அமர்ந்திருந்தாள் ஒருத்தி

இசை பயிலும் அவள்

வாசிப்பின் முடிவில்

பிரமாதமென சைகை காட்டி

கருணை நலுங்கும் கண்களோடு

நாதஸ்வரக்காரரைப் பார்த்துப்

பணிந்து ஒரு வந்தனம் செய்தாள்

நெகிழ்வில் பேச்சற்று வணங்கிய அவருக்கு

ஒரு மாதத்துக்குப் போதுமானதாய் இருந்தது அது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com