இந்திய அரசால் தற்போது பரவலாகப் பேசப்படும், ‘மேக்ஸ் இன் இந்தியா’ கோஷத்தை முதன்முதலாக ஆரம்பித்தவர் மகாகவி பாரதியார்தான். தன்னுடைய ‘இந்தியா’ பத்திரிகையில் 1909ம் ஆண்டு இதை வலியுறுத்தி கட்டுரை வெளியிட்டார். சென்னை டி. ஏஞ்சல்ஸ் ஹோட்டல் நிர்வாகி டி.ஏஞ்சலிஸ் முதன்முதலாக சென்னையில் வடிவமைத்த விமானத்தை பற்றி 1910ம் ஆண்டு தனது பத்திரிகையில் வெளியிட்டார் பாரதி.
பதினெட்டு வயது சிறுமியாக இருந்த நந்தினி சத்பதியிடம், 1949ல் பெண்கள் சமூக சேவைக்கு நிதி திரட்ட சென்றபோது, தனது கைகளில் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். அதிலிருந்து அவர் வளையல்களை அணிவதே கிடையாது. இவர்தான் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர். ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக ஆனவர்.
‘மால்குடி டேஸ்’ போன்ற ஆங்கில நாவல்களை எழுதி புகழ் பெற்றவர் ஆர்.கே.நாராயணன். இவர் ஆரம்பத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். வேலை பிடிக்கவில்லை, விட்டுவிட்டார். அவர் ஆசிரியராக வேலை பார்த்தது மொத்தமே 3 நாட்கள்.
தகழி சிவசங்கரப் பிள்ளை சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர். திருவனந்தபுரம் கல்லூரியில் சட்டம் படித்து தேறியவர். ஆனால், ஒரு நாள் கூட நீதிமன்றம் சென்று வழக்காடியது இல்லை. பதினைந்தாம் வயதில் கதை எழுத ஆரம்பித்தார். பின்னால் அதுவே அவர் வாழ்க்கையாகி விட்டது.
தமிழ் நாடக வரலாற்றில் ஒரு முன்னோடிக் கலைஞர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. இவர் நாடகங்களில் பெண்களுக்கு இடமில்லை. இவர்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடிகைகள் இல்லாமல் சினிமா தயாரித்தவர். அந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதுதான் ‘பக்த ராமதாஸ்’ திரைப்படம். அதற்குப் பிறகு யாரும் நடிகைகள் இல்லாமல் தமிழில் திரைப்படத்தை துணிந்து தயாரிக்கவில்லை. நாடகங்களில் தந்திரக் காட்சிகளை அறிமுகம் செய்தவர் இவர்தான்.
கண்டெழுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் - இவையெல்லாம் புகழ் பெற்ற ஒரு கவிஞரின் புனைப் பெயர்கள். அவர் யார் தெரியுமா? ‘தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’ என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான, ‘பாவேந்தர் பாரதிதாசன்’தான்.
இங்கிலாந்தை 64 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தபோதும் விக்டோரியா மகாராணியால் ஆங்கில மொழியை சரியாகப் பேச எப்போதும் முடிந்ததில்லை. காரணம், அவரது தாய்மொழி ஆங்கிலமல்ல, ஜெர்மன். ஜெர்மனியப் பிரபுவின் மகளாக அவரது தாய் வீட்டில் ஜெர்மன் மொழியில்தான் பேசுவார். அதே பழக்கம்தான் விக்டோரியா மகாராணிக்கும் இருந்தது.
மைக்கேல் ஏஞ்சலோ எல்லா காலத்திலும் சிறந்த கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஓவியம், சிற்பம் மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றில் புகழ் பெற்ற இத்தாலிக்காரர். வாடிகன் சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையில் உள்ள ஓவியங்கள் அவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானவை. முதன் முதலாக வேலைக்காக ‘ஓவர் டைம்’ வாங்கியவர் இவர்தான். வாடிகனில் இவர் ஓவியம் தீட்டும்போது மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வேலை செய்யும்போது இரட்டிப்பு சம்பளம் வாங்கினாராம்.
‘அவர் காதுகளைப் பாருங்களேன். டாக்ஸியின் இரண்டு பக்கக் கதவுகளையும் திறந்து வைத்தது போல!’ என்று ஒரு பெரும் அமெரிக்க கோடீஸ்வர தயாரிப்பாளர் அந்த நடிகருக்கு சான்ஸ் கொடுக்க மறுத்து விட்டார்! அந்த நடிகர் யார் தெரியுமா? கிளார்க் கேபிள்! ஹாலிவுட் திரைப்பட உலகில் முதன் முறையாக 10 ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘கான் வித் த விண்ட்’ படக் கதாநாயகன்.