குடகனாறு அணையும்... ஒரு ஜோடி புது செருப்பும்...!

குடகனாறு அணையும்... ஒரு ஜோடி புது செருப்பும்...!

முதல் மரியாதை என்றொரு திரைச் சித்திரம் பாரதிராஜா இயக்கம். சிவாஜி, ராதா, வடிவுக்கரசி நடிப்பு. அந்தத் திரைச் சித்திரத்தின் முழுவதிலுமே எந்த இடத்திலும் கால்களில் செருப்பு இல்லாமலே உலா வந்து வாழ்ந்திருப்பார் சிவாஜி.

ஒரு கட்டத்தில் சிவாஜியின் தாய்மாமன், சிவாஜியோடக் கால்களைப் பிடித்து முறையிடுவார். “தன்னோட மகள் (வடிவுக்கரசி) பருவத்தில் “வழி” தவறிப் போய்ட்டா. மாப்ளே நீ தான் என்னோட மகளுக்கு ஒரு உன்னதமான வாழ்வை தரணும்னு.” சிவாஜியோடக் காலில் விழுந்து மன்றாடுவார். சிவாஜி வடிவுக்கரசியைக் கல்யாணம் செய்து கொள்வார். தாய்மாமன் தன்னோடக் காலைத் தொட்டுக் கும்பிட்டுக்  கேட்டுட்டாரேனு, சிவாஜி தன்னோட ஆயுள் வரைக்கும் காலுக்குச் செருப்பு போட்டுக்காமலே வாழ்ந்திடுவார்.

அதாவது சினிமான்னு சொல்லலாம்.

நமக்குத் தெரிஞ்சு ஒரு கிராமத்துல அண்ணன் தம்பிக்குள்ளே கடுமையான சண்டை. அண்ணனைப் பார்த்து தம்பி, “உன்னையச் செருப்பாலே அடிப்பேன்.”னு சொல்லிடுறாரு. கிராமத்து ஜனங்களே ஒன்னு சேர்ந்து தம்பிய கண்டித்துப் பேசி, அந்தத் தம்பிகிட்டே சண்டைக்கு போய்ட்டாங்க. வயசுல மூத்தவரு அவரை நீ எப்பிடி செருப்பாலே அடிப்பேன்னு திட்டலாம்னு. அந்தத் தம்பி அன்றைக்கு செருப்பைக் கழட்டி போட்டவர்தான். அதற்கு அப்புறம் அவர் செருப்பு போடவே இல்லை.    

எதற்கு இவ்வளவு விபரம்னு கேட்கலாம். தமிழ்நாட்டில் அப்படித்தான் நிஜமாகவே ஒருவர், மக்களோட பொதுவான ஒரு கோரிக்கைக்காக தன்னோடக் கால்களில் செருப்பு போடாமல் வாழ்ந்தார். ரொம்ப ஆண்டுகள் கடந்து கடைசியா அந்தப் பகுதி பொதுக்கூட்டத்தில், அந்த மனிதர்க்கு கலைஞர்தான் தன்னோடக் கைகளால் புது செருப்பு அணிந்து அழகு பார்த்துள்ளார்.

அது ஒரு கடந்த கால வரலாற்றுப் பதிவு.

திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஓடி வருகிறது குடகனாறு. அங்கிருந்து ஆத்தூர், திண்டுக்கல், வேடசந்தூர், கரூர் மாவட்டம அரவாக்குறிச்சி வழியாக ஓடி வந்து மூலப்பட்டி எனும் ஊரில் அமராவதி ஆற்றில் கலக்கிறது குடகனாறு.

கரூர் மாவட்டம் திருமலைநாதன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. திமுகழகத்தின் பெருந்தொண்டர். பொதுப் பிரச்னைகளில் அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர். அவர் வசிக்கும் பகுதியில் வாய்க்காலோ நீர் ஆதாரமோ இல்லை எனும் கவலை அவருக்கு. இது குறித்து அப்போதைய குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் (1957) கலைஞரிடம் நேரில் சந்தித்து முறையிடுகிறார் கோவிந்தசாமி. அரசியலில் கலைஞர் முதன்முதலாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற தொகுதியாகும் குளித்தலை. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசு. இது குறித்து தான் சட்ட மன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் கொண்டு வருகிறேன் என்று கோவிந்தசாமியிடம் உறுதியளிக்கிறார் கலைஞர்.

196௦ல் தமிழக சட்ட மன்றத்தில் இது குறித்துப் பேசுகிறார் கலைஞர். குடகனாறு அணை திட்டத்தின் கீழ் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கர் வயல்கள் பாசன வசதி பெரும் என்று புள்ளி விபரங்களுடன் எடுத்து உரைக்கிறார் கலைஞர். இருப்பினும் அந்தத் திட்டம் ஏனோ  கொண்டு வரப்படாமலே இருந்தது.

இந்த நிலையில் திமுக பெருந்தொண்டர் கோவிந்தசாமி, “குடகனாறு அணைத் திட்டம் செயலுக்கு வரும் வரை தனது கால்களில் செருப்பு எதுவும் அணிவதில்லை என்று பொதுமக்கள் முன்பாக சபதம் செய்கிறார். அன்றிலிருந்து அவர் செருப்பும் அணிவதில்லை. வெறும் காலுடனே நடக்கத் தொடங்கி விடுகிறார். அந்தக் காலத்தில் அந்தப் பகுதியில் இது பெரும் பேச்சாகவே அலை மோதியது.

கலைஞர் முதல்வரானதும் 1973ல் குடகனாறு அணைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அந்தத் திட்டத்தினை நிறைவேற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழியே ஓடி வரும் குடகனாற்றில், அழகாபுரி எனுமிடத்தில் 27 அடி உயரத்துக்கு குடகனாறு அணை கட்டப்படுகிறது.  அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 3663 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில் 5339 ஏக்கரும் ஆக மொத்தம் 9௦௦௦ ஏக்கர் வயல்களுக்குப் பாசன வசதிகள் கிடைக்கப் பெற்றன. ஆனாலும், குடகனாறு அணைத் திட்டம் நிறைவேறி அது செயல்பாட்டுக்கு வந்து விளைநிலங்கள் பயன் அடைந்த போதிலும், ஏனோ கோவிந்தசாமி தனது கால்களில் செருப்பு அணியாமல் வெறும் காலுடனே நடந்து கொண்டிருந்தார். இது 1996 வரை நீடித்தது. ஆம்.

அந்தப் பகுதியில் 1996 தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் கலைஞர். கட்சிக்காரர்களால் இந்த விஷயம் அப்போது கலைஞரிடம் தெரிவிக்கப் படுகிறது. ஆச்சர்யத்தில் வியந்து போகிறார் கலைஞர். பெருந்தொண்டர் கோவிந்தசாமிக்கு கால்களில் செருப்பு அணிவிக்கும் நிகழ்வினைப் பொது விழாவாக நடத்த விரும்புகிறார். அவரது கால் அளவுக்கு புது ஒரு ஜோடி செருப்புகள் வாங்கி வரப்படுகின்றன. பொது மேடையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில், பெருந்தொண்டர் கோவிந்தசாமியின் கால்களுக்கு தானே அந்தப் புது செருப்பினை அணிவித்து மகிழ்கிறார் கலைஞர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com