குளிர் காலத்துக்குகந்த கடலை!

குளிர் காலத்துக்குகந்த கடலை!
Published on

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

 குளிர்காலத்தில் அதிகம் விளையும் பயிர் வேர்க்கடலை. குளிர் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன்மைகள் கிடைக்கும். 

 உடலை உஷ்ணமாக வைத்திருக்கும்:

வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெதுவெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாக குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும். 

 கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும்:

வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பைத் தரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் பித்த கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது. 

 சர்க்கரை அளவைச் சரி செய்யும்:

வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீர்படுத்தக்கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21 சதவீதம் வரை குறையும் என்று தெரிய வந்துள்ளது. 

சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்:

வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும். இதனால் குளிர் காலத்தில் நமது தோல் வறண்டு போவதைத் தடுக்கலாம். மேலும், வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் சி சத்துக்கள் தோலின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தைத் தரக்கூடியது. 

 - இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

 ஆரோக்கியத்தின் நண்பன்

வேர்க்கடலையை வறுத்துக்கொண்டே, அந்தக் கரண்டியை வைத்து சத்தமும் எழுப்பிக்கொண்டே வரும் வண்டி… வேர்க்கடலை வறுபடும் வாசம். நம் நாசிக்குள் சென்று ஏதோ ஒரு புதியதோர் உலகத்துக்கு நம்மை அழைத்துச்செல்லும். வால்நட் மற்றும் பாதாம் போன்ற மரக்கொட்டைகளைப் போலவே சுவையிலும் ஊட்டசத்துகளும் நிறைந்த ஒன்று வேர்க்கடலை.  அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்றும் கூறுவர். தென்னார்க்காடு மாவட்டத்தில் வேர்க்கடலையில் மல்லாட்டை என்று சொல்வார்கள். எங்க ஊர் பக்கம் எந்தச் சமையல் செய்தாலும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையைச் சேர்த்துத்தான்   செய்வோம்.  இதோ சில வித்தியாசமான ரெசிபிகள் உங்களுக்காக…

வேர்க்கடலை பால்ஸ்

தேவையான பொருட்கள்: உலர்ந்த தோல் நீக்கிய வேர்க்கடலை, புழுங்கல் அரிசி, பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு- தலா 200 கிராம், வெல்லம் - முக்கால் கிலோ, ஏலக்காய் தூள்- இரண்டு டீஸ்பூன், பல்லு பல்லாகக் கீறிய தேங்காய் (ஒரு மூடி )- ஒரு கப்.

செய்முறை: வெறும் வாணலியில் அரிசி, பருப்பு வகைகளைச் சிவக்க வறுத்து நைசாக அரைக்கவும். வெல்லத்தில் முக்கால் கப்நீர் விட்டு பாகு காய்ச்சவும். பாகில் வேர்க்கடலை, தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து பாகு உருண்டை பதம் வரும் வரை நன்கு கிளறவும்.  அகலமான தட்டில் அரைத்த மாவைக் கொட்டி, பாகை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலந்து, குட்டி குட்டி உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையில் அசத்தும் இந்த வேர்க்கடலை பால்ஸ்.

வேர்க்கடலை போளி

தேவையான பொருட்கள்: பச்சை வேர்க்கடலை - 200 கிராம், உருளைக்கிழங்கு, கேரட் - தலா 2,  பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மல்லித்தழை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன் மைதா மாவு - இரண்டு ஆழாக்கு, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், தனி மிளகாய்த் தூள், எலுமிச்சை ஜூஸ் - தலா 2 டீஸ்பூன்,  உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, கேரட் மூன்றையும் நன்கு குழைய வேகவிட்டு மசிக்கவும். இத்துடன் பெருங்காயம், உப்பு, தனி மிளகாய்த் தூள், பொடியாக நறுக்கிய மல்லி தழை, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து, கடுகையும் தாளித்துக் கொட்டி, சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மைதா மாவில் சிறிதளவு தண்ணீர், தேவையான உப்பு, சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் விட்டு, தளர பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, அதனுள்ளே ஒரு வேர்க்கடலை உருண்டையை வைத்து மூடிவிடவும். பிறகு மைதா உருண்டையை பிளாஸ்டிக் கவரின் மீது போளியாக தட்டி தவாவில் பொரித்தெடுக்க 'ஹாட் மசாலா வேர்க்கடலை போளி' சுடச் சுட ரெடி.

வேர்க்கடலை பிட்லை

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 50 கிராம்,  பிஞ்சு கத்திரிக்காய்- 4,  தக்காளி – இரண்டு, காய்ந்த மிளகாய் – எட்டு,  தனியா - ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு- 10,  வெந்தயம் - கால் டீஸ்பூன், கசகசா -ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்,  பச்சை வேர்க்கடலை, புளிக்கரைசல் - தலா மூன்று டேபிள் ஸ்பூன், உப்பு, கடுகு, பெருங்காயம், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலை, துவரம் பருப்பைத் தனித்தனியாக வேகவைக்கவும். எண்ணெயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், கசகசா ஆகியவற்றை வறுக்கவும். வேகவைத்த வேர்க்கடலை + வறுத்த மசாலா சாமான் + ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைக்கவும். இரண்டு தம்ளர் நீரில் கத்தரி மற்றும் தக்காளியை உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்தபின் புளி கரைசலை விடவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து வெந்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, தேங்காய் துருவல் தாளித்துக் கொட்ட, வேர்க்கடலை பிட்லை கமகமவென்று ரெடியாகிவிடும்.

வேர்க்கடலை தேன்குழல்

தேவையான பொருட்கள்:  பச்சை வேர்க்கடலை – அரை ஆழாக்கு, பச்சரிசி மாவு- ஒரு ஆழாக்கு, கடலை மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய்- 3,  பெருங்காயம், சிறிதளவு வெண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: பச்சரிசியை 20 நிமிடம் ஊறவைத்து, நீரை வடித்து, லேசாக காயவிட்டு மிக்ஸியில் பொடித்து சலித்துக்கொள்ளவும். வேர்க்கடலையை வேகவிட்டு நன்கு மசித்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் மூன்றையும் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். பச்சரிசி மாவுடன் மசித்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் ஜூஸ், வெண்ணெய், கடலை மாவு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து மாவை தேன்குழல் அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிய வாசமான வேர்க்கடலை தேன்குழல் ரெடி.

கத்தரி முருங்கை வேர்க்கடலை கிரேவி

தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - ¼ கிலோ, முருங்கை – இரண்டு,  பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,வெங்காயம், தக்காளி – தலா 2,  பூண்டு- 20 பல், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த் தூள்  - மூன்று டீஸ்பூன்.

தாளிக்க: குழம்பு வடகம் மற்றும் கருவேப்பிலை.

அடி கனமான வாணலியில் எண்ணெய்விட்டு வடகம், கருவேப்பிலை தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு, சேர்த்து வதக்கி, நீள நீளமாக நறுக்கிய கத்தரி மற்றும் முருங்கைத் துண்டுகள், வேர்க்கடலை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி, தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு மூடிவிடவும் எல்லாம் சேர்ந்து கிரேவியாக வரும்போது இறக்கிப் பரிமாறவும். தண்ணி சாம்பாருக்குத் தொட்டுக்கொள்ள சுவையில் அள்ளும் இந்த க்ரேவி.

தினப்படி வேர்க்கடலையை ஏதாவது ஒரு ரூபத்தில் நம் உணவில் சேர்த்துக்கொள்ள ஆரோக்கியத்திற்கு 100% கியாரண்டி.

 - ஆதிரை வேணுகோபால்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com