இரவும் பகலும் போன் அடித்துக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு முறையும் அவளையே எடுக்கச் சொன்னான்.“அவர் வீட்டில் இல்லை... வெளிய போயிருக்கார்... எங்கேன்னு தெரியாது... வீட்டுக்கு வந்ததும் பேசச் சொல்றேன்...” அவளையும் நிறைய பொய் சொல்ல வைத்தான் அவன். எதிர்முறையில் பேசிய அசிங்கமான வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் அவளது கண்கள் கலங்கிற்று.வீடு தேடியும் பலர் வந்தனர். அவர்களது தோற்றமே அச்சமூட்டியது. அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லக்கூட முடியாமல் நாக்கு மேலே ஒட்டிக்கொண்டது. உடல் நடுங்கியது. கைக்குழந்தை வீறிட்டழுதது.“இன்னும் பத்துநாள் டைம் தரோம். அதுக்குள்ள அசலும் வட்டியுமா பணம் வரலைன்னா......! அசிங்கப்பட்டுப் போவீங்க!” அவர்கள் கண்ணை உருட்டி மிரட்டிவிட்டுப் போனார்கள். “உங்களுக்கே இதெல்லாம் நல்லார்க்கா? நீங்க செய்த தவறுக்கு என்னை இப்டி கடன்காரர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வைக்கறீங்களே? கடன் வாங்கினப்போ நீங்க மட்டும்தானே போனீங்க? இப்போ எதுக்கு என்னை இதுல இழுத்து விடறீங்க”?“நான் லட்ச லட்சமா சம்பாதிச்சா நல்லா அனுபவிக்கறல்ல? அதேமாதிரி கஷ்டம் வந்தாலும் அனுபவிக்கத்தான் வேணும்.“பணம் வந்தப்போ அனுபவிச்சேனா? அதுசரி… முதல் ரெண்டு படத்துல கிடைச்ச பணத்துல எனக்குன்னு எவ்ளோ கொடுத்தீங்கன்னு கணக்கு சொல்லுங்களேன் கேப்போம். அப்பறம் இந்த கஷ்டம் எங்களாலயா வந்துச்சு?”“ஆமா உங்களாலதான். இதோ இந்தக் குட்டிப்பிசாசு பொறந்த நேரம்தான் என்னை நஷ்டத்தில் தள்ளிடுச்சு” என்றவனின் குற்ற உணர்வு குழந்தையின் மீது ஆத்திரமாய் மாறி பழி சுமத்திற்று. அவள் அதிர்ச்சியும் அறுவருப்புமாய் அவனைப் பார்த்தாள். “ஆமாம் உங்களைக் கல்யாணம் கட்டிக்கிட்டதுலயிருந்து என் நேரமும் நல்லாத்தான் இல்ல” என்றாள் எரிச்சலுடன். அடுத்த வினாடி அவனது கரம் பளாரென அவள் கன்னத்தில் இறங்கியது. வேறெதுவும் பேசாமல் போனான். அரைமணி கழித்து வாசற்கதவு அறைந்து சார்த்தப்பட்ட பிறகுதான் அவன் வீட்டிலிருந்து வெளியேறியது அவளுக்குத் தெரிந்தது. அவள் வாசலுக்கு வந்து பார்ப்பதற்குள் கார் சீறிப் பறந்து சென்று மறைந்தது.சற்றுநேரத்தில் போன் அடித்தது. பயந்துகொண்டே எடுத்தாள்.எதிர்முனையில் மாமனாரின் குரல்.“என்னம்மா நடக்குது அங்க?“தெரியல மாமா. யார் யாரோ வீட்டுக்கு வராங்க. எல்லார்க்கும் நான் பதில் சொல்லிட்டுருக்கேன்”“ஆனந்த் எங்கிட்ட பேசினான். பணம் கேட்டான். சொத்துக்களைப் பிரிச்சு கொடுத்தபிறகு உன் கடனுக்கு நாங்க பொறுப்பேற்க முடியாதுன்னுட்டேன். ஏற்கெனவே இதுகுறித்து எல்லா நாளிதழ்களிலும் அறிவிப்பும் செய்திருக்கேனே மறந்துட்டயான்னு கேட்டேன். சரி சொத்துக்களையெல்லாம் விற்று கடனை அடைச்சுக்கறேன்னு சொன்னான். என்னமோ செய்துக்கன்னுட்டேன்… தடுக்கி விழுந்தவன் தானா எழுந்து நிற்கட்டும்னுதான் அவனிடம் கடுமையா பேசினேன். அதுக்காக உன்னையும் குழந்தைகளையும் கைவிட்டுட்டோம்னு நினைக்காதே மைதிலி. உங்களை ஒருபோதும் நாங்க விட்டுக்கொடுக்க மாட்டோம். நிலைமை சீக்கிரமே சரியாய்டும். கவலைப்படாம இரு சரியா?”“வேணாம் மாமா. ஏற்கெனவே நீங்க நிறைய செய்துட்டீங்க. சின்னக் குழந்தை தவறு செய்தா தாங்கிப்பிடிக்கலாம். தெரிந்தே புதைகுழியில் விழுகிறவரை ஒன்றும் செய்யமுடியாது. என்னுடைய தலைவிதியை நான் அனுபவித்துதான் ஆகணும். மேலும் மேலும் உதவிகள் செய்து என்னை பலவீனப்படுத்திடாதீங்க பிளீஸ்.”“இது உன்னை பலவீனப்படுத்த இல்லம்மா. என் மகன் காரணமா கஷ்டப்படும் உங்களைப் பார்த்துக்கொள்ளும் கடமை எனக்கிருக்கு. நீ உடனே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிளம்பி இங்க வந்துடு. கடன் கொடுத்தவர்கள் கோபமா வந்துட்டு போகும் சூழலில் நீ அங்கிருப்பது நல்லதல்ல.”“இல்ல மாமா இனி நான் எங்கப்பாவுக்கும் சரி உங்களுக்கும் சரி எந்த விதத்திலும் பாரமா இருக்க விரும்பல… என் குழந்தைகளுக்காகவாவது நான் கண்டிப்பா ஒரு வேலை தேடிக்கணும்னு அவருக்கே தெரியாம வங்கித் தேர்வு எழுதியிருக்கேன். பார்ப்போம். கடவுள் நல்ல வழி காட்டுவார்னு நம்பறேன். அதுவரை என்ன கஷ்டம் வந்தாலும் நானே சமாளிச்சுக்கறேன். உங்களோட மாரல் சப்போர்ட் மட்டும்தான் எனக்கு வேணும்””அது என்னிக்கும் இருக்கும்மா. உன் தன்மானத்தை நான் மதிக்கறேன். எப்போ என்ன வேணாலும் உதவி கேளு”அவர் போனை வைத்தார்.மைதிலி சற்றுநேரம் பிரமை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள். அன்றிரவு முழுக்க அவன் வரவில்லை. மறுநாள் வருவான் என்று நினைத்தாள். ஒவ்வொரு நாளும் அவன் வராமலே கழிய, ஒருமாதம் ஓடிற்று. வயிற்றில் பயம் பரவியது. மாமனாரை அழைத்து விஷயத்தைச் சொன்னாள்.“கடன்காரனுக்கு பயந்து தலைமறைவாகியிருப்பான். அல்லது சொத்துக்களை விற்று பணம் கொண்டுவரப் போயிருப்பான். வந்துருவான். தயவுசெய்து நான் சொல்றதைக் கேளு மைதிலி. வீட்டைப் பூட்டிக்கிட்டு இங்க வந்துரு. தனியா இருக்காதே. அவன் வந்ததும் திரும்பிப்போ. அதுவரை இங்க இரு. இங்க வந்து உன்னை யாரும் மிரட்ட முடியாது. உனக்கும் அவன் வாங்கின கடன்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நீ ரெடியா இரு. நானே வந்து உங்களைக் கூட்டிட்டு வரேன். உன் தன்மானத்தை கொஞ்சம் விட்டுக்கொடு” மாமனார் போனை வைத்தார்.அரைமணி நேரத்தில் காரை எடுத்துக்கொண்டு வந்து அவளையும் குழந்தைகளையும் அழைத்துச் சென்றார். **************************புகுந்த வீடு காட்டிய அன்பில் துயரங்களைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்க முடிந்தது. “இத்தனை நல்லவர்கள் இருக்கும் வீட்டில் அவன் மட்டும் ஏன் இப்படி” என்ற வேதனையும் எழும்பியது. அதுவும் “குட்டிப்பிசாசு பிறந்தநேரம்” என்று அவன் ரிஷியின் பிறப்பைக் குறிப்பிட்டதுதான் தாங்கமுடியாத ரணத்தை ஏற்படுத்தியிருந்தது.மேலும் இரண்டு மாதங்கள் சென்றது… அவன் வந்தானா இல்லையா என்றே தெரியவில்லை. இரண்டு நாளைக்கொருமுறை போன் செய்தும் பதிலில்லை. திடீரென போன் இணைப்பே செத்திருந்தது. ஒருவேளை பில் கட்டாத காரணத்தால் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றாள் அண்ணி.“நா ஒருமுறை வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு வந்துடவா. பசங்க இங்க இருக்கட்டும். ஒரு மணிநேரத்துல வந்துடறேன்” என்றபடி கிளம்பினாள். ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தாள். வீடு பூட்டியிருந்தது. காரையும் காணவில்லை. கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனாள். ஒருவேளை வாசற்பக்கம் பூட்டியிருக்க பின்புறமாகக்கூட அவன் வருவதற்கு வாய்ப்புள்ளது. அவனிடமும் ஒரு சாவி உண்டு. அப்படி வந்திருந்தால் உள்ளேதான் இருப்பான். ஒருவேளை கடனுக்காக காரை விற்றுவிட்டானோ என்னவோ.அவள் அவனது அறைப்பக்கம் சென்றாள். கதவு திறந்துதானிருந்தது. அவன் வந்து சென்ற சுவடே தெரியவில்லை. அவள் யோசித்தபடி தன் தனியறைக்கு வந்தாள். உள்ளே நுழைந்ததுமே திகைத்து நின்றாள். பீரோவிலேயே சாவி தொங்கிக் கொண்டிருந்தது. அன்று கிளம்பிய அவசரத்தில் அதை எடுத்துச்செல்ல மறந்திருந்தாள். சரி வந்ததற்கு இன்னும் இரண்டு மூன்று புடைவைகளும், குழந்தைகளுக்கு மாற்றுடைகளும் எடுத்துக்கொள்வோம் என்று பீரோவைத் திறந்தாள். உள்ளே எல்லாம் கலைந்திருந்தது. நிச்சயம் அவள் இப்படி வைத்திருக்கவில்லை. ஏதோ சந்தேகம் தோன்ற, லாக்கரைத் திறந்தாள். கிருஹப்பிரவேசத்திற்காக வங்கி லாக்கரிலிருந்து எடுத்து வந்து அணிந்துகொண்டு, மீண்டும் வங்கி லாக்கரில் வைக்க நேரமில்லாமல் பீரோ லாக்கரில் வைத்திருந்த நகைகளைப் பெட்டியோடு காணவில்லை. நாற்பது சவரன் நகைகள். நிச்சயம் இதை வெளியிலிருந்து எந்தத் திருடனும் வந்து எடுத்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் மற்றவையெல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கிறது. நிச்சயம் இது ஆனந்தின் வேலைதான். அவன் வந்து சென்ற அடையாளமாக பீரோவில் கீழே புகைத்து வீசப்பட்ட அவனது பிராண்ட் சிகரெட் மிச்சங்கள். சொந்த வீட்டிலேயே திருடிச்செல்லும் அளவுக்குத் தரம் குறைந்து போய்விட்டானா? நேராக அவளிடமே வந்து கேட்டிருந்தால் கட்டிக்கொண்ட பாவத்திற்கு தலைவிதியென்று அவளே அவற்றை வீசியெறிந்திருப்பாள்.நகைகளைக் காணாத அதிர்ச்சியில் உடல் சோர்ந்துபோக அப்படியே தலையில் கைவைத்தபடி கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவன் திருடிச்சென்றது அவளது அப்பாவின் பலவருட உழைப்பு என்பது கண்களில் நீராய் வழிந்தது. நல்லகாலம் வங்கி லாக்கர் சாவியை பீரோவில் வைக்கவில்லை. அது எப்போதுமே அவளது கைப்பையில்தான் இருக்கும். அவள் பெருமூச்சுவிட்டாள். இதை யாரிடமும் சொல்லக்கூட முடியாது. அவளுக்குதான் அசிங்கம். அண்ணி ஆரம்பத்திலேயே “ஜாக்கிரதையாக இரு… நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்” என்று சொல்லத்தான் செய்தாள். இவள்தான், “பீரோவில் பத்திரமாகத்தானே வைத்திருக்கிறோம், சாவியும் தன்னிடம்தானே இருக்கிறது” என்று அலட்சியமாய் இருந்துவிட்டாள். கிளம்பும்போது இருந்த சூழலில் சாவியை எடுத்துச்செல்ல மறந்தது இவள் தவறு. அவள் பெருமூச்சுவிட்டாள். என்னமோ செய்யட்டும். எல்லாம் தொலைந்த பிறகாவது அவன் திருந்தி புதுவாழ்வைத் துவங்கினால் போதுமென்றிருந்தது. அட்லீஸ்ட் அவன் பத்திரமாக எங்கோ இருக்கிறான் என்கிற நம்மதி.அவள் எழுந்தாள். அவன் மீண்டும் இங்கு வருவானா தெரியாது. வந்தாலும் எப்போது வருவானென்று தெரியாது. வரட்டும், அவனுக்கு அவள் தேவையென்று நினைத்தால், அவளைத் தேடிவரட்டும். அவள் கதவைப் பூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். வீட்டுக்குச் சென்றபிறகு யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.மேலும் நான்கு மாதம் அவனைப்பற்றி எவ்வித தகவலுமின்றி நகர்ந்தது. எல்லோரும் கவலைப்படுவார்களே என்று ஒரு போன் செய்தேனும் தான் எங்கிருக்கிறேன் என்று தெரிவிக்கக்கூடத் தோன்றவில்லை அவனுக்கு. அவனைக் காணவில்லையென்றதும் கடன் கொடுத்தவர்களின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்றும் புரியவில்லை. அவர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்களா அவனை? அல்லது அவர்களது பிடியில்தான் அவன் இருக்கிறானா? ஒருவேளை அவர்கள் அவனை ஏதேனும்? நினைப்பதற்குள் இரத்தம் உறைந்தது. இல்லை அப்படி எதுவுமிருக்காது. அவன் வந்துவிடுவான். வரவேண்டும். அவள் கண்களை மூடிப் பிரார்த்தித்தாள். ரிஷியின் முதலாவது பிறந்த நாளுக்கு இன்னும் ஒரே மாதம்தான் இருந்தது. அதற்குள்ளாவது அவன் வருவானா? இன்னும் எத்தனை நாள் இப்படி மற்றவர்களுக்கு சுமையாக இருப்பது? எல்லோரும் அன்பானவர்கள்தான் என்றாலும் அவர்களுக்குச் சுமையாக அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமுமே முள்ளாகக் குத்துவது போலிருந்தது. இந்நிலையில்தான் ஒருநாள் விடியற்காலை இருள் பிரியும் முன்பு அழைப்பு மணி ஒலிக்கக்கேட்டு மாமனார் கதவைத் திறந்தார். மைதிலி மாடியிலிருந்து எட்டிப்பார்த்தாள். (தொடரும்)