“யாராவது இருக்கீங்களா... கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொடுங்களேன்... நாக்கு வறண்டு போவுதுங்க... தயவுசெய்து ஒரே ஒரு கிளாஸ் தண்ணி குடுங்க...”மைதிலி தீனமான குரலில் அழைக்க, அந்தக் கிழவி திரும்பிப் பார்ப்பது தெரிந்தது. கிழவி ஒரு நிமிடம் யோசித்துவிட்டு பிறகு கதவை நோக்கி வந்தாள், மண் கூஜாவிலிருந்த நீரை அறையை ஒட்டியிருந்த கழிவறையில் அவசரமாகக் கொட்டினாள் மைதிலி.மீண்டும் சாவி துவாரம் வழியே பார்த்தாள். கிழவி ஹால் சுவரில் மாட்டியிருந்த சாவியை எடுத்து வந்து கதவைத் திறந்தாள். மைதிலி தரையில் மயங்கிய நிலையில் படுத்திருப்பது போல் கிடந்தாள். கிழவி அவளைக் கவலையோடு பார்த்தாள். “ஏம்மா எந்திரி... தண்ணி கேட்டாயே, இந்தா குடி...” ஒரு கை நீரை எடுத்து முகத்தில் தெளித்தாள். மைதிலி கண் விழித்து மடமடவென்று நீரை வாங்கி குடித்தவள், “என்னைக் காப்பாத்துங்க ஆயா....எனக்கு ரெண்டு சின்னக் குழந்தைங்க இருக்காங்க... உங்க மகளாட்டம் நினைச்சு எனக்கு உதவி பண்ணுங்க ஆயா... உங்களை என் கடவுளா நினைச்சு கேக்கறேன்... உதவுங்க ஆயா...”“ஏந்தாயி.. பாத்தா நல்ல குடும்பத்து பொண்ணாட்டம் இருக்கயே. இங்க வந்து மாட்டிக்கிட்டயே. உன் புருஷங்காரன் வந்து பணத்தைக் குடுக்காம உன்னைய அனுப்பமாட்டாங்களே. வழக்கமா இங்க பொண்ணுங்களைக் கூட்டியாந்தா, உடனே அவ புருஷங்காரன் ஒருமணிநேரத்துல அலறியடிச்சுக்கிட்டு எப்டியாச்சும் பணத்தோட ஓடியாருவான். உன் புருஷன் ஏன் இன்னும் வரலை?”“ஆயா தயவுசெய்து உதவுங்க ஆயா.. குழந்தைங்க என்னைக் காணாமல் கதறும். அதுங்களை விட்டுட்டு அவரால பணத்துக்கு எங்கேயும் அலைய முடியாது... அதான் இன்னும் வரலை. நாங்க யாரையும் ஏமாற்ற மாட்டோம். தயவுசெய்து என்னை வெளிய போகவிடுங்க... கண்டிப்பா பணத்தோட அவரை அனுப்பி வெக்கறேன்... உதவுங்க ஆயா...”“என்னால முடியாது... என்னைக் கொன்னே போடுவாங்கம்மா...” ஆயா சாவியோடு எழுந்தாள். வேறு வழியில்லை. மைதிலி சட்டென ஆயாவை இழுத்து கட்டிலில் தள்ளி அவள் புடைவைத் தலைப்பையே அவளது வாயில் அடைத்து புடைவையின் மறு நுனியால் அவள் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு கதவை வெளியில் தாளிட்டுவிட்டு அவசரமாக புடைவையை சுற்றிக்கொண்டு பதுங்கிப் பதுங்கி மெதுவாக வெளியில் வந்தாள். அவள் நல்லநேரம் வெளியில் யாருமில்லை. கும்மிருட்டில் சட்டென வீதியிலிறங்கினாள். வெளியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. புடைவைத் தலைப்பை தலையில் முக்காடிட்டவாறு ஒரு ஆட்டோவைப் பிடித்து ஏறினாள். *** *** *** ***“வந்துட்டயா” கதவைத் திறந்து அலட்சியமாகக் கேட்டவனை எரித்துவிடுவது போலப் பார்த்தவள், பீரோ திறந்து ஆட்டோவுக்குப் பணம் எடுத்துகொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தாள்.“மனுஷன்தானா நீங்க? நீங்க வாங்கின கடனுக்கு பெண்டாட்டிய ஒருத்தன் கடத்திக்கிட்டு போறான். கொஞ்சம் கூட பதட்டமோ சூடுசுரணையோ இல்லாம வந்துட்டயான்னு கேக்கறீங்க?”“இப்படி நடந்துடக் கூடாதுன்னுதான் உன்கிட்ட நகையைக் கேட்டேன். நீ என்னை நம்பல. நீ கொடுத்த பணம் பத்தலை. நா என்ன செய்ய?”“அப்போ இப்டி நடக்கும்னு தெரிஞ்சுதான் அளவுக்கு மீறி கடன் வாங்கியிருக்கீங்க?”“சினிமான்னா லாபம் நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக எல்லாரும் படம் எடுக்காமயா இருக்காங்க?”“உங்க தாத்தாவும்தான் படம் எடுத்தார். உங்க பாட்டியை இப்படித்தானா புடைவையில்லாம...........?” அவள் அவமானமும் வேதனையும் தாங்காமல் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தாள். அவன் கொஞ்சம்கூடக் குற்ற உணர்வின்றி தன் அறையில் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான். குழந்தைகளுக்கு இருப்பதை சாப்பிடக் கொடுத்து அவர்களோடு அவளும் தன் அறையில் குழந்தைகளோடு சென்று கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டாள். “தன்னைக் காணாமல் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார்களோ” என்று நடுங்கினாள். அப்படி வந்தால் போலீசை அழைக்க வேண்டியதுதான் என்று நினைத்தாள். ஆனால் யாரும் வரவில்லை. வெளியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அவள் கிச்சனுக்குச் சென்று பாலைக் காய்ச்சி இரவு உணவுக்கு கோதுமை தோசையும் சட்டினியும் செய்தாள். அறைக்கதவைத் தட்டி அவனை சாப்பிட அழைத்தாள். கொஞ்சம்கூட வெட்கமின்றி வந்து வயிறு நிறைய சாப்பிட்டான். பிறகு அவள் ஆற்றிக் கொடுத்த ஒரு கிளாஸ் பாலையும் குடித்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றான்.அவள் தன் அறைக்கு வந்தாள். சரியாக ஒருமணிநேரம் கழித்து அவனது அறைக்கு வந்தாள். பாலில் அவள் அளவோடு கலந்து கொடுத்திருந்த தூக்க மாத்திரைகளின் தயவில் அவன் அடித்துப் போட்டாற்போல தூங்கிக் கொண்டிருந்தான். அவள் அவனது பீரோவைத் திறந்தாள். உள்ளேயிருந்த பணத்தை எடுத்துக்கொண்டாள். அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவள் தன் சூட்கேஸ், மற்றும் ஒரு பெரிய பையோடு, குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து வாசற்கதவை வெளியில் பூட்டி சாவியை ஜன்னல் வழியே உள்ளே எறிந்தாள். தெருமுனைக்கு வரும் வழியில் சாலையோரம் இருந்த ஒரு போஸ்ட் பாக்ஸில் கடிதமொன்றைப் போட்டுவிட்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து பேருந்து நிலையம் வந்தாள். கிளம்பத் தயாராக இருந்த ஒரு பேருந்தில் குழந்தைகளோடு ஏறினாள்.*********************மைதிலி அக்காவின் மடியில் சாய்ந்து கேவிக்கேவி அழுதாள். அவள் உடல் குலுங்கியது. “இதுக்குப் பிறகும் அவரோட நான் எப்படி வாழ முடியும்க்கா? எவனோ ஒருத்தன் கடத்திக் கொண்டுபோய் புடைவையை உருவிட்டு ஒரு அறையில் அடைத்து வைக்கறான். பணத்தை வசூல் பண்ண என்னைப் பகடைக்காயாக உபயோகித்துக் கொள்கிறான். தாலி கட்டின புருஷனோ என் மான அவமானத்தைப் பத்தி கவலைப்படாம, என்னை மீட்க எந்த ஏற்பாடும் செய்யாம, நானா தப்பிச்சு வீட்டுக்கு போனபிறகு, எதுவுமே நடக்காத மாதிரி, “வந்துட்டயா”ன்னு சர்வசாதாரணமா கேக்கறான், இவனோட இனி எந்த நம்பிக்கையில் என்னால சேர்ந்து வாழ முடியும்னு நினைக்கற? இன்னிக்கு எனக்கு நடந்தது நாளைக்கு என் பெண்ணுக்கும் நடக்காதுன்னு என்ன நிச்சயம்?”அக்காவால் எதுவும் பேசமுடியவில்லை. அவளது கரம் மைதிலியின் முதுகை ஆறுதலாகத் தடவிக்கொடுத்தது. தங்கைக்கு நேர்ந்த அவலம் தெரிந்தபிறகு அதிர்ச்சியும் துக்கமும் சேர அவளும் அழுதாள்.“நீ செய்தது சரிதான் மைதிலி. வேணாம். இனி நீ அந்த துஷ்டனோட சேர்ந்து வாழவே வேணாம். எங்களாலதானே உனக்கிந்த கஷ்டம்.? கல்யாணம் வேணாம், வேலைக்குப் போறேனேன்னு சொன்ன உன்னை நாங்கதானே.....”.“நமக்கென்ன ஞான திருஷ்டியா இருக்குக்கா? சிலநேரம் நம்ம கணிப்பு தவறிப்போயிடுது என்ன செய்ய? இந்த விஷயம் உன் மனசோட இருக்கட்டும்க்கா. தயவுசெய்து யாரிடமும் சொல்லிக்க வேண்டாம். அப்பா அம்மா, எங்க மாமனார், அண்ணிகள் யாராலயும் இதைத் தாங்க முடியாது. எங்க மாமனார் அவரை ஜெயிலுக்கு அனுப்பக்கூடத் தயங்கமாட்டார். என் மானம் கோர்ட் படியேற வேணாம்னு நினைக்கறேன். அவரை மட்டும்தான் நான் வேணாம்னு வந்திருக்கேன். மற்ற உறவுகளை என்னால வெறுக்கவோ ஒதுக்கவோ முடியாது. அதனால, நான் வாழ்க்கையில் ஜெயிச்சு நல்ல நிலைக்கு வந்தபிறகு கண்டிப்பா எல்லாரையும் சந்திக்க வருவேன்னு மட்டும் சொல்லிவை... அது போதும். எங்க இருந்தாலும் நான் உன்னோட தொடர்பு கொள்வேன். என் வளர்ச்சியை உனக்குத் தெரிவிப்பேன். சரியா? அப்பறம்.... ஆனந்தனைப்பற்றி எந்த விஷயத்தையும் எனக்குச் சொல்லவேண்டாம். இனி என் வாழ்க்கையில் அவரைப் பற்றிய செய்திகளுக்குக்கூட இடமில்லை.”“சொல்லமாட்டேன். நீ நிம்மதியா இரு. இனி உனக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்பது மட்டும்தான் என் பிரார்த்தனையா இருக்கும். என்னால முடிஞ்சப்போ எல்லாம் உன்னை வந்து பார்க்கறேன். உனக்கும் என்ன உதவி வேணும்னாலும் உடனே ஒரு போன் பண்ணு.”மறுநாள் அவள் வங்கிப்பணியில் சேர்ந்தாள். அவர்களோடு மேலும் நான்கு நாட்கள் அங்கிருந்துவிட்டு அக்கா ஊருக்குக் கிளம்பினாள். ************************* 2013கிரகங்களைப் பிடிக்கும் கிரகணங்கள் நிரந்தரமில்லை என்பது போலத்தான் மனிதர்களை ஆட்டுவிக்கும் கஷ்டமும் நிரந்தரமில்லை. அவையும் மெல்ல விலகும். அதற்கு மனித முயற்சியும் முடிவெடுக்கும் வல்லமையும் கூடவே தேவைப்படும். மைதிலி சரியான முடிவுகளை எடுத்திருந்தாள். தாலிகட்டி விடுவதால் மட்டுமே ஒருவன் ஒரு பெண்ணுக்குப் புருஷனாகிவிட முடியாது. அவளது பாதுகாப்புக்கும் அவன் உத்தரவாதமாக இருக்கவேண்டும். தன் தவறுகள் மூலம் மனைவியின் மானத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குபவனின் ஆண்மை சந்தேகத்திற்கு உரியதாகும். அப்படிப்பட்டவனோடு சேர்ந்து வாழ்ந்து, “தானொரு கற்புக்கரசி” என்று பெயரெடுக்க அவள் விரும்பவில்லை. வேலையில் சேருவதற்கு முதல்நாளே அக்காவோடு சென்று, தன் கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறைக் கழற்றி மாமாங்கக் குளத்தில் வீசியெறிந்து, தலைமுழுகிவிட்டு எழுந்தாள். திருமாங்கல்யத்தை உருக்கி விற்று தனக்கொரு ஸ்கூட்டர் வாங்கிக் கொண்டாள். குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமானாள். குழந்தைகள், அவர்களது எதிர்காலம் மட்டுமே அவளது சிந்தனையில் நிறைந்திருந்தது. அவர்களுக்காகவே உழைத்தாள்.குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தாள். இருவரும் நன்கு படித்தார்கள். மாயா பள்ளிப்படிப்பில் முதலாவதாக மதிப்பெண் எடுத்து தேறி, ஐஐடி நுழைவுத் தேர்விலும் வென்று அவளது உயர் படிப்பைத் தொடர்ந்தால். அதற்கு சில வருடங்கள் கழித்து ரிஷியும் பள்ளிப்படிப்பில் முதல் மதிப்பெண் எடுத்து இந்தியாவின் மிகப் பெரிய கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தான். நடுவில் ஒருமுறை மாமியாரின் நகைகளை அடமானம் வைத்த வங்கிக்குச்சென்று அசலும் வட்டியும் முழமையாகக் கட்டி நகைகளை மீட்டுக் கொண்டு வந்தாள். அதன் பிறகு மகன் மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு அப்பா அம்மாவையும், புகுந்த வீட்டினரையும் காணச்சென்றாள்.பரஸ்பரம் அனைவரும் உகுத்த கண்ணீரே அவர்களது மொழியாயிற்று. குழந்தைகள் தாத்தா பாட்டியை நமஸ்கரித்து ஆசி பெற்றார்கள். அண்ணிகள் அன்பைப் பொழிந்தார்கள். மாயாவையும் ரிஷியையும் உச்சி முகர்ந்து மகிழ்ந்தார்கள். மாமனார் அவளிடம் ஒரு பத்திரத்தை நீட்டினார்.“எனக்கு எதுவும் வேணாம் மாமா. உங்களை அவமதிப்பதா நினைக்கக் கூடாது. என் குழந்தைகள் தன்னுடைய உழைப்பில் உயரணும்னு நினைக்கறேன். உங்கள் ஆசிகளும் அன்பும் மட்டும் அவர்களுக்குப் போதும். நாங்க நல்ல நிலைக்கு வந்த பிறகுதான் உங்களை வந்து பார்க்கணும்னு நினைச்சேன். என்னிடம் நீங்க ஒப்படைத்திருந்த என் மாமியாரின் நகைகளை மட்டும் எப்டியோ மீட்டுக் கொண்டு வந்துட்டேன். உங்க கையாலயே நீங்க அதை என் பெண்ணுக்கும் பையனுக்கும் கொடுத்து ஆசீர்வதிங்க. உங்க எல்லோரையும் நான் நினைக்காத நாளில்லை. என்னிடம் நீங்க எல்லாரும் காட்டும் பேரன்புதான் எப்பவுமே என்னை வழி நடத்திக் கொண்டிருக்கும். முடியும்போதெல்லாம் வந்து உங்க எல்லாரையும் பார்க்கறேன். நீங்களும் எங்களோட வந்து இருங்க” அவள் அவர்களை நமஸ்கரித்து விடைபெற்றாள். ஆனந்தனைப்பற்றி அவள் எதுவும் கேட்க விரும்பவில்லையென்பது புரிய அவர்களும் அவனைப்பற்றி எதுவும் பேசவில்லை. அவள் கழுத்தில் தாலியில்லாததே அனைத்தையும் புரிய வைத்தது. ****************2020 (மைதிலி இப்போது)மாயா, ரிஷி இருவருக்கும் திருமணமாகி, மாயா நியூயார்க்கில் நல்ல வேலை, கணவன், இரண்டு பெண் குழந்தைகள் என்று சௌக்கியமாக இருக்கிறாள். ரிஷி ஜெர்மனியில் உயர் பதவியில் இருக்கிறான். மனைவி ஒரு மகன் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். மைதிலி பணி ஓய்வு பெற்று, ஆறுமாதம் அமெரிக்காவில், ஆறு மாதம் ஜெர்மனியில், இடையில் ஓரிரு மாதங்கள் இந்தியாவில் கோவில் குளம் என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுகிறாள். அவள் அமெரிக்கா சென்றாலும் சரி, ஜெர்மனி சென்றாலும் சரி, பெண்ணும், மருமகளும் அவளை ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பது வழக்கமாயிற்று. இந்தியாவில் இருக்கும்போது கண்டிப்பாக பத்து நாட்களேனும் வரலட்சுமி சேவா இல்லத்தில் தங்குவது வழக்கம். ஜம்புலிங்கம் ஐயாவும், மீனாக்ஷியம்மாவும் தற்போது உயிருடன் இல்லை, ஐயாவின் நினைவுநாளை எல்லோருடனும் அங்கு விமரிசையாகக் கொண்டாடுவது அவள் வழக்கம். அன்பு, அன்பு, அன்பு மட்டுமே அவளை எல்லோருடனும் பிணைத்து வைத்திருக்கிறது. அதனிடையே குன்றென நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள்.(நிறைந்தது)