Director Kamalakannan Interview
Director Kamalakannan Interview

சிறுவர்களுக்கான படத்துடன் சிவகார்த்திகேயனை அணுகியது ஏன்? – ‘குரங்கு பெடல்’ கமலக்கண்ணன் விளக்கம்!

கமர்ஷியல் சூறாவளிகளுக்கு மத்தியில், தென்றலென ஒரு சிறந்த தமிழ்த் திரைப்படம் கடந்த வாரம் வந்துள்ளது. குழந்தைகளும் பார்த்து மகிழக்கூடிய நல்ல படம். படத்தின் டைரக்டர் கமலக்கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ‘குரங்கு பெடல்’. ராசி. அழகப்பன் எழுதிய சைக்கிள் என்ற சிறுகதையை மையமாக வைத்து ‘குரங்கு பெடல்’ படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். அடிப்படையில் விஸ்காம் மாணவரான இவர் சில வருடங்களுக்கு முன்பு ‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ படங்களை இயக்கியவர். பாராட்டுகளுக்கு மத்தியில் நமது கல்கி ஆன்லைன் தளத்திற்காக அளித்த பேட்டி.

Q

இப்படியொரு குழந்தைகள் படத்தை உருவாக்கும் எண்ணம் வந்தது எப்படி?

A

நான் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் விஸ்காம் படிக்கும் போதும், அதன் பின்பும், சினிமா ஆர்வலர்களுடன் இணைந்து 'சினிமா கிளப் ஆப் கோயம்பத்தூர்' என்ற பிலிம் சொசைட்டி ஒன்றை நடத்தி வந்தேன். இதன் ஒரு பகுதியாக பல பள்ளிகளுக்குச் சென்று 'சில்ரன் ஆப் ஹெவன்', 'கலர் பாரடைஸ்' போன்ற குழந்தைகள் படங்களைத் திரையிடுவேன். இப்படங்களை அந்தப் பள்ளி குழந்தைகள் கொண்டாடி மகிழ்வதைப் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற குழந்தைகள் படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே என் மனதில் உருவாகி விட்டது. பொதுவாக குழந்தைகள் படம் என்று நாம் சொல்வதெல்லாம் பெரும்பாலும் அனிமேஷன் படங்களே. இன்னும் சொல்லப் போனால், ‘குரங்கு பெடல்’ படம்தான் என் முதல் முயற்சி. படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் கழித்து, இந்தக் குழந்தைகள் படம் எடுக்க எனக்கு பக்குவம் இல்லை என்று புரிந்துகொண்டு, 'மதுபானக்கடை' பக்கம் என் கவனத்தைத் திருப்பினேன். ராசி.அழகப்பனின் சைக்கிள் என்ற சிறுகதையை படித்தபோது குழந்தைகளுக்கான கதை கிடைத்து விட்டதாக உணர்ந்து, மீண்டும் இம்முயற்சியில் இறங்கினேன்.

Q

உங்கள் படம் வெளியான நாளில் அரண்மனை 4 படமும் வெளியாகி உள்ளது. இந்த வாரமும் புதிய படங்கள் வருகின்றன. உங்கள் படத்தை இந்தச் சூழ்நிலையில் வெளியிட்டது சரியா?

A

கமர்சியல் படங்களின் வெற்றி என்பது இதுபோன்ற சிறு படங்களின் வெற்றிக்கும் முக்கியமானது. கமர்சியல் படங்கள்தான் தியேட்டரை வாழ வைக்கின்றன. கமர்சியல் படங்களைப் பார்க்க வருபவர்களில் பத்து சதவிகிதம்தான் எங்கள் டார்கெட் ஆடியன்ஸ். ‘குரங்கு பெடல்’ படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இது கோடை விடுமுறையில் நடக்கும் கதை. இந்தப் படத்தை இந்தக் கோடை விடுமுறை நாட்களில் வெளியிடுவதுதான் சரியாக இருக்கும்.

Sivakarthikeyan
Sivakarthikeyan
Q

நீங்கள் சிறப்பாக படம் எடுத்திருந்தாலும்கூட படத்தைக் கொண்டு சேர்க்க கமர்சியல் ஹீரோ சிவகார்த்திகேயனை அணுகியது ஏன்?

A

குழந்தைகள் படம் எடுத்து முடித்துவிட்டேன். குழந்தைகளாக தனியாகப் படம் பார்க்க தியேட்டருக்கு வரமுடியாது. பெற்றோர்கள்தான் அழைத்து வர வேண்டும். குழந்தைகள் சினிமா என்பது இங்கே அதிகம் பரிச்சியம் இல்லாத ஜானர். குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பிடித்தமான ஹீரோ நம்ம சிவகார்த்திகேயன் சார்தான். எனவே, சிவா சார் பேனரில் இந்த படம் வெளியானால் சரியாக இருக்கும் என்று எண்ணி அணுகினேன். நேரில் சந்தித்து பேசிய போது மகிழ்வுடன் ஒப்புக் கொண்டார். அவருக்கு படம் மிகவும் பிடித்து போய் மூன்று முறை பார்த்தார்.

கடந்த வெள்ளியன்று காலை முதல் காட்சி வெளியானது. திருப்பூரில் ஒரு தாத்தா பேரனுடன் வந்திருந்தார். இந்தப் படம் பார்க்க வந்ததன் காரணம் என்ன என்று சிலர் கேட்டபோது, உண்மையில் நான் என் பேரனை அழைத்து வரவில்லை. பேரன்தான் என்னை ‘குரங்கு பெடல்’ படத்துக்கு அழைத்து வந்திருக்கிறான் என்றார். இந்த அளவுக்குப் படம் ரீச்சாக சிவகார்த்திகேயன் சாரின் SK நிறுவனம்மூலம் வெளியிட்டதுதான் காரணம் என்பதை மறுக்கமுடியாது.

Kurangu Pedal Movie Review
Kurangu Pedal Movie Review
Q

இந்தப் படத்தில் சிறுகதையைப் படமாக்கினீர்கள். உங்களின் அடுத்தடுத்த படங்கள் எழுத்தாளர்களின் கதைகள், நாவல்களைப் படமாக்குவீர்களா?

A

எந்தக் கதையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும், சினிமாவாக மாறும்போது இயக்குநர் திரையில் சொல்லும் மொழியில்தான் படம் பேசப்படும் என்று நம்புகிறேன். எனவே, எனக்குப் பிடித்த எழுத்து எதுவாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட எழுத்தாளர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்வதில் தயக்கம் கிடையாது.

Q

நீங்கள் விஸ்காம் படித்தவர். இந்தப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் சினிமாவில் விஸ்காம் படித்தவர்கள் அதிக அளவு வரவில்லையே ஏன் ?

A

முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். விஸ்காம் படிப்பு என்பது சினிமாவுக்கான பரந்து பட்ட அறிவைத் தரும் படிப்பல்ல. கார்ப்பரேட் பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தில் தொடர்பியலுக்கு (communication) சில நுட்பங்கள் தேவைப்பட்டன. இதைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதுதான் விஸ்காம் படிப்பு. விளம்பரம், கிராபிக்ஸ், அனிமேஷன் என பல காட்சி ஊடகங்களைப் பற்றி சொல்வதுதான் விஸ்காம் படிப்பு.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - குரங்கு பெடல் – குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!
Director Kamalakannan Interview
Q

உங்கள் முதல் படமான ‘மதுபானக்கடை’ இடதுசாரி சிந்தனையைப் பற்றி பேசியும்கூட, மக்களிடையே சரியாக சென்றடையாததற்குப் படத்தின் தலைப்புதான் காரணமா?

A

‘குணா’ திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் படத்தில் இடம் பெரும் கண்மணி அன்போட பாடலின் சாராம்சத்தை இப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம். இன்னமும் ‘குணா’ படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை நாம் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. ‘குணா’ படத்திற்கே இந்த நிலைமை என்றால், என் படம் எம்மாத்திரம்? என் ‘மதுபானக்கடை’யை புரிந்துகொள்ள இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

Q

உங்கள் அடுத்த படம் எப்படி அமையப் போகிறது?

A

வித்தியாசமான ஆக்ஷன் படத்தின் கதை ஒன்றை யோசித்து வைத்துள்ளேன். விரைவில் அறிவிப்பு வரும்.

Kurangu Pedal Movie
Kurangu Pedal Movie
Q

‘குரங்கு பெடல்’ படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப திட்டம் உள்ளதா?

A

‘குரங்கு பெடல்’ திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக திரையிடப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்பு பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் பள்ளி குழந்தைகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்து பள்ளி குழந்தைகளைப் பார்க்க வைத்தோம். குழந்தைகள் என்ஜாய் செய்து ரசித்தார்கள். தமிழ்நாட்டிலும் ஜூன் மாதத்திற்குப் பிறகு பள்ளி குழந்தைகளை அழைத்து சென்று தியேட்டர்களில் குரங்கு பெடலை காண்பிக்க திட்டம் வைத்துள்ளேன். திரைப்பட விழாக்களைவிட குழந்தைகளிடம் இப்படம் சென்று சேர்வதை முக்கியமாகக் கருதுகிறேன்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com